சௌடையாவின் குரல்.

ஆரம்பப் பள்ளி படிக்கும் போது நீதிபோதனை என்றொரு வகுப்பிருந்தது. அதில் சிறிய கதைப் புத்தகங்களை வாசிக்கத் தருவார்கள். சில நேரம் கதையை ஆசிரியரே படித்துக் காட்டுவார். நாங்கள் கேட்பதுண்டு.

அழவள்ளியப்பா எழுதிய ஈசாப் கதைகளின் பாடல் வடிவம் மிகவும் பிரபலமானது. ஆசிரியர் அதை அழகாகப் பாடுவார். ஒட்டுமொத்த வகுப்பறையும் அந்தப் பாடலைப் பாடும்.

நீதிபோதனை வகுப்பு பெரும்பாலும் வெள்ளிக்கிழமை மதியம் தான் இருக்கும். ஆகவே அன்று பள்ளி முடிந்தபிறகும் மாணவர்கள் மைதானத்திலிருந்தபடியே இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருப்போம்.தப்பியோடிய முயலை பின்தொடர்ந்து நாங்களும் ஓடுவது போலநடிப்போம்.

இத்தனை வருஷங்களுக்குப் பிறகு இன்று அந்தப்பாடலை அச்சில் பார்க்கும் போது அதைப் பாடிய ஆசிரியர் சௌடையாவின் குரல் காதில் ஒலித்தது. அதுவும் அவர் அபிநயத்துடன் அந்தப் பாடலைப் பாடுவார்.

வகுப்பே ஒன்று சேர்ந்து பாடும் போது பரமசிவம் என்ற பையன் மட்டும் தனித்துப் பாடுவான். சில நேரம் நாங்கள் பாடி முடித்தபிறகு பரமசிவம் மட்டும் தனியே பாடிக் கொண்டிருப்பான். வகுப்பறையே அதைக் கண்டு சிரிக்கும்.

அந்தப் பரமசிவம் இப்போது எந்த ஊரில் என்னவாக இருக்கிறானோ தெரியாது.

ஒரு பாடல் பள்ளி வயதின் நினைவுகளை இத்தனை துல்லியமாக வெளிக்கொண்டுவர முடியுமா என ஆச்சரியமாகவே இருக்கிறது.

மாரல் வகுப்பு நடந்த வகுப்பறை. அங்கே மாட்டப்பட்டிருந்த காந்தி படம். சுவரில் எழுதிப் போடப்பட்டிருந்த விவேகானந்தரின் வாசகம். ஆசிரியரின் வகிடு எடுத்த தலை.  முக்கால்கை சட்டை. வேஷ்டி. கறுப்பு மை பேனா. ஜன்னல் வழியே தெரியும் வேப்பமரங்கள். ஊதா நிற துணிப்பை என  யாவும் கண்முன்னே வந்து போகின்றன.

உண்மையில் இந்தப் பாடலைப் பாடும் போது ஆசிரியரும் சேர்ந்து சிறுவனாகியது இப்போது புரிகிறது. சிங்கம் ஏமாந்து போனதைச் சொல்லும் போது முகத்தில் அவரது முகத்தில் சிரிப்பு வந்து போகும். மாணவர்கள் மீது சௌடையா காட்டிய அன்பு நிகரற்றது.

அழ. வள்ளியப்பா எவ்வளவு அழகாக ஈசாப் கதைகளை பாடலாக மாற்றியிருக்கிறார். சேர்ந்து பாடும் போது தான் எத்தனை உற்சாகம்.

சில ஆண்டுகளுக்கு முன்னதாக எப்போதே ஒரு நாள் இதே பாடல் நினைவிற்கு வந்தது. மனதிலிருந்து அப்படியே அதை எழுதினேன். ஒரு வார்த்தை மறக்கவில்லை. இன்று காலை அந்த நூலை இணையத்தில் வாசிக்க எடுத்த போது அந்தப் பாடல் சௌடையாவின் குரலை மனதில் ஒலிக்கச் செய்தது.

சின்னஞ்சிறிய கிராமத்தில், ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் படித்த பால்ய வயதின் நினைவுகள் நேற்று நடந்தது போலிருக்கிறது.

இன்றைக்கு ஈசாப் பாடலைப் படிக்கையில் ஏனோ ஏமாந்த சிங்கம் தான் பிடித்திருக்கிறது. இந்தச் சிங்கத்தைப் போலத் தானே பலரும் நடந்து கொண்டிருக்கிறோம்.

நமக்கு விருப்பமான ஆசிரியர்களின் குரல் நமக்குள் என்றும் கேட்டுக் கொண்டுதான் இருக்கும் போலும்.

சௌடையாவை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்

••

0Shares
0