ஒரு புகைப்படத்தைத் தேடிக் கொண்டிருக்கும் போது 2014ல் ஜப்பான் பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் சேமிப்பு பழைய ஹார்ட் டிஸ்க் ஒன்றில் இருப்பதைக் கண்டேன். அவற்றை இரவில் பார்த்துக் கொண்டிருந்தேன். எத்தனை இனிமையான நாட்கள். இனிய நினைவுகள். எவ்வளவு அற்புதமான நண்பர்கள்.

ஜப்பானுக்குத் தனது வேலை நிமித்தம் சென்ற இளைஞர்களில் சிலர் ஒன்றுகூடி முழுமதி அறக்கட்டளை என்ற அமைப்பினை உருவாக்கி அதன்வழியே தமிழ் கற்றுத்தருவது, இலக்கிய நிகழ்ச்சிகள் செய்வது. தமிழகத்திலுள்ள கிராமப்புற கல்வி நிறுவனங்களுக்கு உதவி செய்வது. தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுப்பது என ஆரோக்கியமாகச் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் அழைப்பின் பெயரால் தான் ஜப்பான் சென்றிருந்தேன்.
ஒரு சின்னஞ்சிறிய அமைப்பு தங்கள் கைப்பணத்தை செலவு செய்து ஆண்டுதோறும் எழுத்தாளர்களை ஜப்பானுக்கு வரவழைத்துப் பொங்கல் விழா கொண்டாடுவது பாராட்டிற்குரிய விஷயம்.

இன்று நினைத்துப் பார்க்கும் போதும் அவர்களின் வரவேற்பும் அன்பும் ஒருங்கிணைப்பு செய்த விதமும் அளவற்ற நேசத்தின் வெளிப்பாடாகவே உள்ளது. ஒவ்வொருவரும் என் நினைவில் பசுமையாகப் பதிந்து போயிருக்கிறார்கள்.

அருள், மணிமாறன், செந்தில்,துரைப்பாண்டி, பாலு, அவரது மனைவி, வேல்முருகன் அவரது துணைவியார், பாலா, சதீஷ் என அன்பான நண்பர்கள். தன் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்த கோவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினர், ஜீவானந்தம் அவரது துணைவியார் சரஸ்வதி என நேசமான மனிதர்கள்.

கோவிந்த் எனது நண்பன் ராஜகோபாலின் மாமா. மிகச்சிறந்த இலக்கிய வாசகர். நீண்டகாலம் ஜப்பானில் வசிப்பவர். எனது நண்பர் ஜென் ராமின் சகோதரர். இன்றும் அவர் சென்னை வரும்போது நாங்கள் சந்தித்துக் கொள்கிறோம்.




ஜப்பானில் மிகச்சிறந்த உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் நண்பர் குறிஞ்சில் பாலாஜி. சென்னையிலும் இவர்களின் உணவகம் மற்றும் தங்குமிடம் செயல்படுகிறது. மிகப் பாசமான மனிதர். ஜப்பான் பயணத்தின் போது சிறப்பான உணவு கொடுத்து உபசரித்த அவரது நேசத்தை மறக்க இயலாது

ஜப்பானுக்குச் சென்றிருந்த போது டோக்கியோ செந்தில் வீட்டிற்குச் சென்றிருந்தேன். மிகுந்த ஆர்வமாக இலக்கியம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். புத்தகக் கடைக்கு அழைத்துச் சென்றார். ஹிரோஷிமாவிற்கு ஒன்றாகப் பயணம் செய்தோம். இன்று அவர் எழுத்தாளராகியிருக்கிறார். இசூமியின் நறுமணம் என்ற புதிய சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள்.


முழுமதி நண்பர்கள் அனைவரையும் இந்த இரவில் நிறைந்த அன்போடு நினைத்துக் கொள்கிறேன். உங்கள் நற்செயல்கள் மேலும் வளர வாழ்த்துகிறேன்.
••