ஜிப்சியும் சிங்கமும்

ஹென்றி ரூசோவின் The Sleeping Gypsy ஒவியத்தை நியூயார்க் மார்டன் ஆர்ட் ம்யூசியத்தில் பார்த்தேன், கண்களை அகற்றவே முடியவில்லை, மயக்கமூட்டும் வசீகர ஒவியமது, பாலைவனத்தில் உறங்கும் ஜிப்சியும், அவளை உற்றுநோக்கியபடி அருகில் நிற்கும் சிங்கமும், நிலவொளிரும் இரவுமான அவ்வோவியத்தினை ரூசோ பற்றிய புத்தகங்களில் பார்த்திருக்கிறேன், ஆனால் நேரில் அதன் முன்பு நின்றபோது சந்தோஷத்தில் சிலிர்த்துப் போனேன்

ரூசோவின் ஒவியங்கள் சிலவற்றை டெட்ராய்ட் ம்யூசியத்தில் முன்னதாகப் பார்த்திருக்கிறேன், ஆனால் ஜிப்சி ஒவியத்தை அப்போது தான் முதன்முறையாகப் பார்க்கிறேன், நியூயார்க்கில் உள்ள ம்யூசியங்களைப் பார்ப்பதற்கு குறைந்த பட்சம் ஒரு மாதம் தேவைப்படும், அப்படியும் முழுமையாக நம்மால் பார்த்துவிட முடியாது.

கடந்து செல்கின்ற ஒவ்வொருவரையும் ஏதோவொரு காந்தசக்தி இழுத்துக் கொள்வது போல  ரூசோவின் ஒவியம் வசீகரிக்கிறது, அதன் வியப்பில் இருந்து மீளமுடியாமல் ஏறிட்டு பார்த்தபடியே நின்றுவிடுகிறார்கள்,

என் முன்னே ஒரு வயதான பெண்மணி தனது நோட்டில் ஜிப்சி ஒவியத்தை நகலெடுத்துக் கொண்டிருந்தார், ஒரு கோடு சரியாக வராத போதும் ரூசோவின் ஒவியத்தினை நெருங்கிப் பார்த்துவிட்டு பெருமூச்சுடன் கண்ணீர் விட்டவராக மறுபடி ஒவியத்தை வரையத்துவங்கினார், நினைத்து நினைத்து ஏங்க வைக்கும் சக்தி அந்த ஒவியத்திற்கு இருக்கிறது

ரூசோவின் சிறப்பு அவர் வண்ணங்களை உபயோகிக்கும் அலாதியான முறை, மற்றும் அவர் தீட்டும் விசித்திரமான உருவங்கள், விலங்குகள், காட்டுவாழ்க்கை,  அவரது ஒவியத்தில் கனவுத்தன்மையும் பேன்டஸியும் மிகுந்திருக்கும், சர்ரியலிச ஒவியர்கள் ரூசோவைத் தங்களது முன்னோடி என்கிறார்கள்.

போஸ்ட் இம்பிரஷனிச வகையைச் சேர்ந்த இந்த ஒவியத்தில் உள்ள கறுப்பின பெண்ணும் ஒளிரும் நிலவின் வெண்மையும், படத்தின் இரு மாறுட்ட தளங்கள், அவளது உடை வானவில்லைப் போல வண்ணமயமாக உள்ளது, அவளது தலைமயிர் பிங்க் நிறத்தில் மணல்மேடுகள் போலக் காணப்படுகிறது, சலனமில்லாத நிலவாகத் தோன்றுகிறது, ஆனால் எங்கிருந்தோ வரும் காற்று சிங்கத்தின் பிடறி மயிரைச் சிலிர்க்க வைக்கிறது, ஒவியத்தின் இடது பக்கம் பெருமளவு உருவங்களால் நிரப்பட்டுள்ளன, மற்றவை வெற்றுவெளி, அந்தச் சமநிலை தான் ஒவியத்தை மிகுந்த ஈர்ப்பு கொள்ளச் செய்கிறது,

தனிமையில் உறங்கும் இளம் பெண், அவள் அறியாமல் நெருங்கி வந்து நிற்கும் சிங்கம் என்ற இரண்டு எதிர்நிலைகள் தான் ஒவியத்தின் ஆதாரப்புள்ளிகள், அவற்றின் ஊடாக ஒளிரும் நிலவு இந்த எதிர்நிலை உருவாக்கிய பயத்தை அகற்றிப் பார்வையாளனைச் சாந்தமாக்குகிறது

ரூசோ, 1844ல் பிறந்த பிரெஞ்சு ஒவியர், முறைப்படி இவர் ஒவியப்பள்ளியில் பயின்றவரில்லை, ஆனால் தனது விடாப்பிடியான முயற்சியால் ஒவியம் வரையக் கற்றுக் கொண்டவர், இவரது அப்பா ஒரு கொல்லர், குடும்ப வறுமையின் காரணமாக பதின்வயதிலே வேலைக்குப் போகத் துவங்கிய ரூசோ பாரீஸ் நகரத்தின் சுங்கத்துறையில் வரி வசூலிப்பவராக வேலை செய்தார், அதுவே அவருக்கு பின்னாளில் பட்டப்பெயராகவும் மாறியது

தனது 49 வயதில் தான் முழுநேர ஒவியராக மாறினார், ரூசோவிற்கு பிடித்தமான இடம் பாரீஸ் நகரத்தில் இருந்த மிருகக் காட்சி சாலை. அங்குள்ள மிருகங்களையும், அதை வேடிக்கை பார்க்க வரும் மனிதர்களையும் அவதானித்து ஒவியம் வரைவது அவரது வழக்கம்,

அப்படி மிருகக் காட்சி சாலையில் மட்டுமே பார்த்துள்ள சிங்கத்தை ரூசோ தனது கற்பனையால் பாலைவனத்தில் இரவில் அலையும் சிங்கமாக உருமாற்றியிருக்கிறார்

ரூசோவிற்கு அவர் வாழ்ந்த காலத்தில் பெயரும் புகழும் கிடைக்கவில்லை, அவரது ஒவியங்கள் வடிவ முழுமையற்றவை, உருவங்களில் நேர்த்தியில்லை. அவை அறைகுறைப் பிரசவங்கள் என்று விமர்சகர்களால் கேலி செய்யப்பட்டன,

1897ல் வரையப்பட்ட இந்த தைல வண்ண ஜிப்சி ஒவியத்தை ஒரு பெர்சிய வணிகர் விலைக்கு வாங்கித் தனது சேமிப்பில் வைத்திருந்தார், 1924ல்களில் தான் இதன் அருமை உலகிற்குத் தெரிய வந்த்து, அதன் பிறகே இதை நியூயார்க் ம்யூசியம் விலைக்கு வாங்கியது

ஒவியத்தில் நம்மை முதலில் ஈர்ப்பது அயர்ந்து உறங்கும் பெண்ணின் தோற்றம், துயிலின் அழகை இதைவிடச் சிறப்பாக வரையவே முடியாது, அவள் ஒரு கறுப்பினப் பெண், அதுவும் ஒரு இசைக்கலைஞர், ஆனால் பாலையில் உறங்குகிறாள், வீடற்ற பெண்ணின் அடையாளமாக அதை வரைந்திருக்கிறாரா என்ற கேள்வி மனதில் எழுகிறது

ஆனால் அவளது அருகில் ஒரு சிங்கம் நிற்கிறது, ஒருவேளை இக்காட்சி அவளது கனவுதானோ என்று கூடத் தோன்றுகிறது, அது கனவு தான் என்பது போல, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பாலைவனம், அதன்பின்னால் மலைகள், அதன் நடுவில் ஆறு என வேறுபட்ட நிலப்பரப்புகள் ஒன்று சேர்ந்திருக்கின்றன, கூடவே நிலவு ஒளிர்கிறது,

அது உறங்கும் ஜிப்சியின் கனவில்லை, ஒவியனின் கனவு, அவனது கனவில் தன்னை மறந்து உறங்கும் ஜிப்சியும் சிங்கமும் இடம் பெற்றிருக்கிறார்கள், சிங்கம் அவனது அடங்காத ஆசையின் புறவடிவம் போலவும், உறங்கும் பெண் அவனது சிருஷ்டிகரத்தின் இயல்பு போலவும் சித்தரிக்கபட்டிருக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம்,

மாண்டலின் வாத்தியக்கருவியும், துணைக்கு வைத்துள்ள  கோலும், அருகில் உள்ள ஜாடியும், வெவ்வேறு வாழ்வியல் குறியீடுகளே,

ஜிப்சி  களைத்துப் போயிருப்பது அவளது முகபாவத்தில் தெரிகிறது, அவளது கூந்தலும் சிங்கத்தின் பிடரியும் மிகநுட்பமாக வரையப்பட்டிருக்கின்றன,

ஒவியத்தின் மையக் கவர்ச்சியாக உள்ளது சிங்கமே,  மனிதவாசனையை அறிந்து வந்து சிங்கம்அவளை முகர்ந்து பார்ப்பது போன்ற நிலையில் இருக்கிறது, அதன் வால் உயர்ந்திருப்பது அது எதையோ அறிந்து கொண்டது போலத் தோன்றுகிறது,

சிங்கத்தின் கண்கள் அவளை வெறித்து நோக்குகின்றன, பச்சையும் நீலமும் கலந்த ஆகாசம், அதில் ஒளிரும் நிலவு, அந்த நிலவிற்குள் மறைந்துள்ள சிரிக்கும் முகம் யாவும் இந்தக் காட்சி ஒரு கனவுநிலையின் தோற்றம் என்றே உணர வைக்கிறது

தன்னை மறந்து உறங்குகின்ற பெண்ணிற்கு வெளியே என்ன அபாயம் காத்திருக்கிறது என்று தெரியவில்லை, இது எல்லாக் காலத்திலும் பெண்கள் எதிர்கொள்ளும் அபாயத்தின் குறியீடு போலுள்ளது என்கிறார்கள் பெண்ணிய விமர்சகர்கள்

ஆனால் சிங்கம் அவளைத் தாக்குவதற்கு நிற்பது போல தெரியவில்லை, மாறாக அது வியந்து போய், அல்லது ஏதோ மயக்கத்திற்கு உட்பட்டது போல கிறங்கியே நிற்கிறது, உறங்கும் பெண் ஏன் கையில் வழிகாட்டும் கோலை வைத்தபடியே இருக்கிறாள், அவள் அருகில் உள்ள மாண்டலினும், பூக்குவளையும் எதைக் குறிக்கின்றன, பார்க்கப் பார்க்க ஒவியம் ஒரு புதிர்வெளி போலாகிவிடுகிறது,

ரூசோவின் நோக்கம் அதுவே, ஒவியத்தினைப் புரிந்து கொள்ள பார்வையாளன் தனது கற்பனையைப் பயன்படுத்த வேண்டும், ஒவியம் ஒற்றை அனுபவத்தைத் தருவதற்கு மாறாக பல்வேறு நிலைகளில் பல்வேறு சாத்தியங்களை உருவாக்கித் தருவதாக அமைய வேண்டும் என்பதை ரூசோ இவ்வோவியத்தில் நிரூபித்திருக்கிறார்

இந்த ஒவியத்தை ஆராய்ந்த உளவியலாளர்கள், இது நமது நனவிலி மனதின் வெளிப்பாடு, ஆகவே சிங்கம் என்ன செய்கிறது, அந்தப் பெண் ஏன் பாலைவனத்தில் வந்து உறங்குகிறாள் என்பதை நேரடியாக அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது என்கிறார்கள்

அவர்களது நோக்கின் படி பாலைவனம் என்பது பாலியல் வறட்சி, அல்லது பாலியல் நாட்டமின்மை, அதில் ஒரு பெண் படுத்துத் தன்னை மறந்து உறங்குவது அவளுக்கு பாலுறவில் ஈடுபாடு இல்லாமல் போய்விட்டதையே குறிக்கிறது, அதனால் தான் அருகில் உள்ள நீர்குவளை காலியாக உள்ளது, இசைக் கருவி இருப்பது அவளது மென்னுணர்ச்சியின் அடையாளம்,

அங்கு நிற்கும் சிங்கம் ஆணின் பாலுறவு வேட்கை, அது பெண்ணை நெருங்கி வால்உயர்த்திச் சிலிர்த்து அருகில் வந்து முகர்ந்து பார்த்து அவளுக்கு வேட்கையில்லையே என திகைத்து நிற்கிறது, பாலையின் பின்னால் உள்ள ஆறு அவர்களது கடந்த காலம், அதன் பிந்திய மலைகள், அவர்களது நினைவுகள்,  நிலவொளி என்பது அவர்களின் காதல் வெளிச்சம், இந்த ஒவியம் பாலுறவில் நாட்டமில்லாத பெண்ணின் மனநிலையைச் சித்தரிக்கிறது என்கிறார்கள், அப்படிப் பொருள் கொள்வதும் பொருத்தமாகவே இருக்கிறது,

கனவை பற்றி நாம் ஆராயும் போது அது ஏன் வந்தது என்ற காரணத்தை அறிந்து கொள்ளவே ஆராய்கிறோம், இன்னொன்று கனவை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது என்று முயற்சிக்கிறோம், இரண்டுமே சரியான வழிகள் இல்லை,

கனவு என்பது ஒரு தனித்த நிலை, அதன் குறியீடுகள், உருவங்கள், கனவு தரும் இதம் அல்லது கோரம் போன்றவற்றை நாம் நேரடியாக அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது, அவற்றை பல்வேறு தொடர்புகளைக் கொண்டு ஒப்பிட்டு புரிந்து கொள்ளமுடியும், இது மேகத்தைப் பார்த்து யானை போலிருக்கிறது என்று கற்பனை செய்வதைப் போன்றது, உண்மையில் கனவைப்பற்றி நாம் பேசுவது யாவும் கனவைப் பற்றிய நினைவுகளையே, நினைவுகள் குறைபாடு கொண்டவை, என்கிறார் போர்ஹே, ஆகவே கனவுநிலை என்பது மனதின் சிக்கலான ஒரு புனைவுத்தளம்,

ரூசோ மரங்களையும் புலிகளையும் வரைவதில் தனித்த ஈடுபாடு கொண்டவர், காட்டினை வரைந்துள்ள ரூசோ மரங்களின் இலைகளையும் புதருக்குள் ஒளிந்து  நிற்கும் புலியையும், காட்டில் பெய்யும் மழையையும் அற்புதமாகத் தீட்டியிருக்கிறார், தன் வாழ்நாளில் எந்த அடர்ந்த காட்டிற்குள்ளும் போய்வராத ரூசோ அவற்றைக் கற்பனையால்  ஒவியமாக்கியிருக்கிறார்,

உறங்கும் ஜிப்சி ஒவியத்தைக் காண்கையில் எனக்கு கிழவி இசர்கீல் என்ற மாக்சிம் கார்க்கியின் சிறுகதை நினைவிற்கு வந்து போனது, அதுவும் ஒரு ஜிப்சி ஸ்டெப்பி புல்வெளியில் இரவைக் கழிக்கும் காட்சியை தான் விவரிக்கிறது.

பௌத்தம் சிங்கத்தை முக்கியக் குறியீடாகக் கருதுகிறது, எங்கெல்லாம் பௌத்த எழுச்சி நடைபெற்றதோ அங்கெல்லாம் சிங்கம் உயர்ந்து நிற்கிறது, கொனார்க் கோவிலின் நுழைவாயிலில் சிங்கம் யானையை வென்று உயர்ந்து நிற்கும் காட்சி கூட பௌத்த எழுச்சியைத் தான் சித்தரிக்கின்றன, பௌத்தம் சிங்கத்தை ஞானத்தின் அடையாளமாகக் குறிக்கிறது, சில ஒவியங்களில் சிங்கம் அடக்கமுடியாத ஆசையின் குறியீடாகவும் இடம் பெற்றுள்ளது,

பௌத்த குறியீடுகளின் உதவி கொண்டு இந்த ஒவியத்தைப் புரிந்து கொள்ள முயன்றால் நாம் பெறுவது முற்றிலும் வேறான ஒரு அனுபவம்,

ஐரோப்பிய மரபில் சிங்கம் தனிமையின் அடையாளம், பாலையைக் கடப்பது தனிமையை கடந்து செல்வதாக அர்த்தம், நிலவொளி என்பது வாழ்வின் பற்றுதல், அந்த கோணத்திலும் இவ்வோவியத்தை நாம் அணுகமுடியும்,

ரூசோவின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கையில் இந்த ஒவியத்தைப் புரிந்து கொள்ள உதவும் ஒரு திறப்பு கண்ணில் தென்பட்டது, ரூசோவின் மனைவி கிளிமென்ஸ் 1888ல் இறந்து போனார், ரூசோவிற்கு தனது மனைவி ஆவியாக வந்து தன்னுடன் பேசுவது போன்ற நினைப்பு அதிகமாக இருந்தது, பலமுறை தனது மனைவி கனவில் தோன்றி தன்னோடு பேசுவதாக குறிப்பேட்டில் எழுதியிருக்கிறார், இந்த ஒவியத்தில் வரும் ஆழ்ந்து உறங்கும் ஜிப்சி அவரது மனைவியின் நகல் உருவமே, பாலை என்பது சாவின் குறியீடு, அங்கு ஒளிரும் நிலவு வாழ்வின் வசீகரம், மீளாத துயில் கொண்ட பெண்ணின் அருகே வந்து நிற்கும் சிங்கம் வேறு யாருமில்லை, அது ரூசோவே தான், தனது மனைவியின் மரணம் ஏற்படுத்திய ஆழமான பாதிப்பினைத் தான் இந்த ஒவியமாக வரைந்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது

ரூசோவின் நண்பரான கவிஞர் அபோலினர் தனது குறிப்பில் ரூசோவிற்குள் இருந்த பயங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், அதன்படி ரூசோ காட்டுவிலங்குகளை ஒவியம் வரையும் போது அவை ஒருவேளை நிஜமாக வந்து தன்னைத் தாக்கிவிட்டால் என்ன செய்வது என்று வீட்டு ஜன்னல்களை மூடி வைத்துவிட்டு தான் படம் வரைவார், குழந்தையின் வியப்பும் பயமும் ஒன்று கலந்த ஒவியரவர், தான் பார்த்த புகைப்படங்கள், படித்த புத்தகங்கள் இதிலிருந்து தான் அவரது ஒவியத்திற்கான உந்துதல்கள் கிடைத்தன என்கிறார் அபோலினர்

ஆளைக்கொல்லும் சிங்கமாக இருந்தாலும் அது ஆழ்ந்து துயிலும் பெண்ணை ஒரு போதும் கொல்லாது என்பதன் குறியீடு தான் இந்த ஒவியம் என்கிறார் ஒவியர் வாசிலெஸ்

கவிஞர் ழான் காக்தூ இந்த ஒவியத்தைப் போல சாந்தியையும் அமைதியையும் சித்தரிக்கும் ஒவியம் எதையும் தான் கண்டதேயில்லை, இது மகத்தான கலைப்படைப்பு என்கிறார்

இரவைப்பற்றி எத்தனையோ ஒவியங்கள் வரையப்பட்ட போதும் ரூசோவின் இந்த ஜிப்சி ஒவியம் புதிர்தன்மைமிக்க ஒரு மெய்யியல் கவிதை போன்று தேடத்தேட அர்த்தம் விரிந்து கொண்டேயிருக்கிறது

Beauty is the promise of happiness என்கிறார் ரூசோ, அவரது ஒவியங்கள் அதையே நிரூபணம் செய்கின்றன

•••

0Shares
0