ஜோதா அக்பர் – விளம்பர உப்புமா


சில ஆண்டுகளுக்கு முன்பாக கலரில் உருமாற்றப்பட்டு வெளியான மொகலே ஆசாம் பார்த்த பிறகு அக்பரையும் மொகலாய வரலாற்றையும் பற்றி அதிகம் வாசிக்க வேண்டும் என்ற உத்வேகம் உருவானது. தேடித்தேடி வாசித்தேன். கறுப்பு வெள்ளையில் இருந்து எப்படிக் கலருக்கு மாற்றினார்கள் என்ற வியப்பு படம் முழுவதுமிருந்தது.


இயக்குனர் ஆசிப் முழுப்படத்தையும் கலரில் உருவாக்கவே விரும்பினார். ஆனால் தயாரிப்பாளர்களின் நெருக்கடி படத்தின் இறுதிப்பகுதி மட்டுமே கலரில் படமாக்கபட்டிருந்தது. பிருத்விராஜ் கபூர் அக்பராக நடித்திருந்ததும் மதுபாலாவும் திலீப்குமாரும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்ததும் இன்றுவரை நினைவில் நிற்கின்றன. அந்த படத்திலிருந்த நம்பகத்தன்மை மிக முக்கியமானது. எனக்கு மொகலே ஆசாம் பிடித்ததிற்கு மூன்று காரணங்கள் உள்ளன. ஒன்று கவிதையாக எழுதப்பட்ட வசனங்கள். அமான் என்ற திரைக்கதையாசிரியர் எழுதியவை. இரண்டாவது நௌஷத்தின் இசை. மூன்றாவது ஆர்.டி.மாத்துர் ஒளிப்பதிவு..

அனார்கலியை இரவில் ரகசியமாகச் சந்தித்துவிட்டு வருகிறான். அதை அறிந்த பணிப்பெண்ணிடம் தங்களைக் கண்ட ரகசியத்தை உனக்குள்ளாகவே மறைத்துக் கொள் என்பதற்காக  சலீம் சொல்கிறான்.. பகலில் தீபங்கள் ஏன் அணைக்கபடுகின்றன  தெரியுமா , அவை இரவில் மனிதர்களின் ரகசியங்களை அறிந்ததால் தான்  என்பான். இது போல படம் முழுவதும் தேர்ந்த கவித்துவமான வசனங்கள். காதலை மறைத்துக் கொண்டபடியே தன் அறையில் வீழ்ந்துகிடக்கும் மதுபாலாவின் முகத்தை கேமிரா காட்டும் நுட்பமும் அழகும் இன்றும் மனதில்  நிழலாடுகின்றன.


அந்த மயக்கத்தில் தான் ஜோதா அக்பர் போவது என்று முடிவு செய்தேன். ஜோதா அக்பரின் முன்னோட்டத்தைப் பார்த்த போதே தோன்றியது ஹிர்திக் ரோஷன் அக்பர் போல இல்லையே, பீர்பால் போல இருக்கிறாரே என்று. அதை உண்மையாக்கியது படம். ஜோதா அக்பர் ஒரு வணிகத் தந்திரம் என்பதற்கு மேலாக எதுவுமில்லை. ஐஸ்வர்யா ராய்க்கு விதவிதமான நகைகள் போட்டு அழகுபார்ப்பதற்கு தான் படத்தில் அதிகக் கவனம் எடுத்திருக்கிறார்க்ள. இப்படமும் மொகலே ஆசாம் போலவே  வாய்ஸ் ஒவரில் கதை துவங்குகிறது. அதே இந்துஸ்தானின் வரைபடம். சண்டை காட்சிகள்.


ஆனால் சீன இயக்குனர் ஜாங் இமுவின் ஹீரோ மற்றும் ஹவுஸ் ஆப் பிளைங் டாகர்ஸை நினைவுபடுத்தும் கத்திச்சண்டைக் காட்சிகள். மம்மி, மற்றும் லார்ட் ஆப் தி ரிங்ஸ் படத்தின்  காட்சிகளை நகலெடுத்த யுத்தங்கள். படம் ஆரம்பித்து நாற்பது நிமிசம் வரை மாமன்னர் அக்பர் தயாராகிக் கொண்டேயிருக்கிறார். கதை ஒரு அடி கூட நகரவில்லை. ராஜஸ்தானத்து மாளிகையினுள்  பதினைந்து நிமிச நேரம் அக்பர் நடக்கிறார். அரசியல் காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறார். தான் ஒரு ராஜ புத்திர மண்ணில் பிறந்த வீரன் என்று யானையை அடக்கிக் காட்டி, வாள்சண்டை போட்டு காட்டி, தன்னுடைய உடல்பலத்தை வெளிப்படுத்துவதில் காட்டும் ஆர்வம் அவரது வேறு நடவடிக்கை எதிலும் இல்லை.


அடிக்கடி படத்தில் யாவரும் கூடிக் கூடி பேசுகிறார்கள். அருகில் படம் பார்த்து கொண்டிருந்த நண்பர் கதையைக் காணவில்லை என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி தான் சபை விவாதித்து கொண்டிருக்கிறது என்றார். இதற்கிடையில் சின்னமாமியார் கொடுமை, உள்நாட்டுப் பிரச்சனை என்று எதையோ பூசி மெழுகி படம் நீள்கிறது. நல்லவேளை முடியப்போகிறது என்று நினைத்தால்  அப்போது தான் இடைவேளை விடப்படுகிறது.


அந்தக் கால லவகுசா போல படம் மூன்று மணி நேரம்  இருபத்திஐந்து நிமிசம் ஒடுகிறது. இதில் அக்பர் நடப்பது, சாப்பிடுவது. தர்பாருக்கு வருவது  போன்ற காட்சிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடம்பெறுகின்றன. இந்திப்படங்களுக்கு உலகம் முழுவதும் கிடைத்துள்ள வணிகம் இது போன்ற உப்புமாவைத் தயாரிக்க சுலபமாக உதவியிருக்கிறது.


படத்தில் நான் வாய்விட்டு சிரித்த காட்சி மாறுவேஷத்தில் அக்பர் ஆக்ரா மார்க்கெட்டை பார்வையிடுவது. தமிழ்படங்களிலாவது குறைந்த பட்சம் ஒரு ஒட்டுதாடி வைத்துக் கொண்டு அல்லது மூக்கு அருகில் ஒரு மச்சம் ஒட்டிக் கொண்டு மன்னர்கள் உலாப் போவார்கள். இதில் அந்தக் கவலையே இல்லை. ஹிர்திக் ரோஷன் தனது கிரீடத்தைக் கழட்டி வைத்துவிட்டு தெருவில் நடக்கிறார். அவரை எவருமே கண்டு  கொள்வதேயில்லை.


பிரம்மாண்டமான ராஜஸ்தானத்து அரண்மனைகள், ஆயிரம் துணை நடிகர்கள். துணைக்கு ஒரு உலக அழகி, வரலாற்றை நிஜமாக்கும் கனவு என்று இயக்குனர் போராடியிருக்கிறார். ரஹ்மானின் இசையும் ஒளிப்பதிவும் சற்று ஆறுதல் தரக்கூடியவை. படத்தில் அக்பர் பேசும் ஒரு வசனமிருக்கிறது. இதுவரை எத்தனையோ யுத்தங்களில் வென்றிருந்த போதும் அவரால் வெல்லமுடியாதது தனக்கான இதயத்தை தான் என்று. பார்வையாளர்கள் விசயத்தில் அது தான் நடந்துள்ளது.


ஜோதா அக்பர் படத்தில் சரித்திரமும் இல்லை சினிமாவும் இல்லை. தானிஷ்க் நகைகளுக்கு எடுக்கப்பட்ட விளம்பரப்படம் அளவேயிருக்கிறது. எதையாவது பாராட்டியே ஆக வேண்டும் என்றால் இந்தப் படத்திற்குக் கூட நூறு ருபாய்க்கு மேல் டிக்கெட் வாங்கிப் படம் பார்க்கும் பொதுமக்களைத் தான் பாராட்ட வேண்டும்.

0Shares
0