டானென்பாம் சொல்கிறார்

கோவிட் லாக்டவுன் காலத்தில் பதிப்பகங்கள் மற்றும் புத்தகக் கடைகள் மிகவும் பாதிப்படைந்தன. மக்கள் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டிய போதும் கடைகளுக்குச் சென்று புத்தகங்களை வாங்க முடியவில்லை. பல மாதங்களாக மூடப்பட்டதால் புத்தகக் கடைகள் பெரிய பொருளாதார நஷ்டத்தைச் சந்தித்தன. சில கடைகளால் இன்று வரை அதிலிருந்து மீள முடியவில்லை.

தேசாந்திரி பதிப்பகமும் லாக்டவுன் காலத்தில் இது போன்ற பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. அதனால் தானோ என்னவோ “Hello, Bookstore“ என்ற ஏ.பி. ஜாக்ஸ் இயக்கியுள்ள ஆவணப்படத்தைக் காணும் போது மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன்.

உலகின் எந்த மூலையிலிருந்தாலும் புத்தகக் கடைகளையும் வாசகர்களையும் எனது சொந்த உலகின் பகுதியாகவே உணர்கிறேன்.

1973 முதல் அமெரிக்காவின் லெனாக்ஸில் தி புக் ஸ்டோர் என்ற பெயரில் புத்தகக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேத்யூ டேனன்பாம். இவர் ஒரு தீவிர வாசகர். புத்தகங்களின் மீதான காதலால் புத்தகக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவருக்கென நிறைய வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். கடையின் உள்ளே சிறிய ஒயின் பார் ஒன்றையும் நடத்தி வந்தார்.

2019 /20 ல் கோவிட் பாதிப்பால் அவரது கடை மூடப்பட்டது. இந்த நாட்களில் அவர் சந்தித்த நெருக்கடிகள். புத்தகம் வாங்க வந்தவர்களின் மனநிலை, மற்றும் அவரது தினசரி வாழ்க்கையை படம் விவரிக்கிறது

நீண்ட லாக்டவுன் காரணமாக வருவாய் வெகுவாகக் குறைந்ததால் கடன்சுமை அதிகமாகவே கடையை மூடவேண்டிய நிலை உருவானது. அப்போது   புத்தகக் கடையை காப்பாற்றும்படி பொது அறிவிப்பு ஒன்றை  இணையத்தில் வெளியிட்டார். அதற்கு மக்கள் பேராதரவு தந்து உதவினார்கள். லாக்டவுன் கால வாழ்க்கையை மற்றும் புத்தக வாசிப்பாளர்களின் உலகைப் படம் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது

புத்தகம் வாங்க வருகிறவர்களுடன் அவர் மனம் விட்டு உரையாடும் விதமும் புத்தகங்களைத் தேர்வு செய்து தரும் முறையும் தனித்துவமானது. ஹாரிபோட்டர் படிக்கும் சிறுமிக்கு அவர் ஒரு மந்திரக்கோலை பரிசு தருகிறார். அவரது கடைக்கு வருகிறவர்கள் இனிப்பு வகைகள் மற்றும் உணவினை அன்போடு தருகிறார்கள். யாரும் வராத நேரத்தில் அவர் கண்ணாடி தடுப்பின் வழியே சாலையை, வானத்தை, கடந்து செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்த்தபடியே இருக்கிறார்.

புத்தகங்களை  அழகாக வகைப்படுத்தி அடுக்கி வைப்பது, பழைய புத்தகங்களைப் பற்றிய அவரது நினைவுகள். அவரது குடும்பம் தரும் ஆதரவு. புத்தங்களுக்குள்ளாகவே நாளை கழிப்பது. என மேத்யூவின் வாழ்க்கையை நாமும் உடனிருந்து காணுகிறோம்.

மேத்யூ டேனன்பாமின் தோற்றமும் புன்னகையும் வசீகரமாகயிருக்கிறது. அவர் வாடிக்கையாளர்களுடன் அரட்டையடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறார். அவரது புத்தகக் கடைக்கு வருகிறவர்களில் குறைவானவர்களே இளைஞர்கள். பெரும்பாலும் வயதானவர்களே கடையைத் தேடி வருகிறார்கள். பை நிறையப் புத்தகங்களை வாங்கிப் போகிறார்கள்.

டிஜிட்டில் புத்தகங்கள் பெருகிவிட்ட இன்றைய சூழலில் ஒரு புத்தக் கடை செயல்படும் விதத்தையும் அது சந்திக்கும் நெருக்கடிகளையும் படம் உண்மையாகப் பதிவு செய்திருக்கிறது.

டானென்பாமின் சொந்த வாழ்க்கை ஒரு நாவலைப் போலவே விவரிக்கப்படுகிறது .டானென்பாம் மன்ஹாட்டனில் செயல்பட்ட கோதம் புக் மார்ட்டில் புத்தக விற்பனையாளராகப் பணிபுரிந்திருக்கிறார். அந்த அனுபவம் தான் பின்னாளில் சொந்தமாக ஒரு கடை நடத்தத் தூண்டியிருக்கிறது

ஆன்லைன் புத்தகக் கடைகள் வந்தபிறகு இது போன்ற சிறிய புத்தக் கடைகளைத் தேடி வந்து வாங்குகிறவர்கள் குறைந்து போனார்கள். என்கிறார் மேத்யூ.

கோவிட் காலத்தில் தனது கடையைத் தேடி வரும் வாசகர்களுடன் உரையாட டானென்பாம் புத்தகக் கடையின் முன் கதவைத் திறக்கிறார். அவர்கள் கேட்கும் புத்தகத்தைத் தானே எடுத்து வந்து தருகிறார். கையில் பணத்தை வாங்குவதில்ல. கிரெடிட் கார்ட் மட்டுமே. பயன்படுத்த முடியும் என்கிறார் தொடர்ந்து ஒலிக்கும் தொலைபேசியில் அன்போடு பேசுகிறார். கடையின் இணையதளத்தின் வழியே ஆர்டர் செய்யும்படி சொல்கிறார்

வாசகர்கள் ஆர்டர் செய்த ஒவ்வொரு புத்தகத்தையும் பிரவுன் பேப்பரில் நேர்த்தியான கவனத்துடன் சுற்றுகிறார். பின்பு கடையின் முன் உள்ள ஸ்டூலில் வைத்துவிடுகிறார். ஆர்டர் செய்தவர்கள் அங்கிருந்து எடுத்துக் கொள்கிறார்கள்.

தொடர்ந்து இடம்பெறும் இக்காட்சிகளின் வழியே நாமும் கடைக்குள் பிரவேசிக்கிறோம். டானென்பாமோடு உரையாடுகிறோம்.

கடன்சுமையால் கடையை மூடும் சூழல் வந்த போது அந்தப் பகுதி மக்கள் தங்களால் முடிந்த நிதி உதவியைச் செய்து புத்தகக் கடையைக் காப்பாற்றுகிறார்கள். நாற்பது ஆண்டுகள் தான் உருவாக்கிய நட்பே அதற்குக் காரணமாக இருந்தது என்கிறார்.

படத்தின் முடிவில் $100,000 டாலர் நிதி கிடைத்தது. இப்போது எனக்குக் கடன் இல்லை. என்று டானன்பாம் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்.

புத்தகம் படிப்பது என்பது ஒருவகைப் பசி. அது மறையவே மறையாது. எனக்கும் அந்தப் பசியிருக்கிறது. வாசகர்களுக்கும் இருக்கிறது. அந்தப் பசி நீடிக்கும் வரை நான் புத்தகக் கடையை நடத்துவேன் என்கிறார் டானென்பாம்

86 நிமிடங்களில் எளிமையான, மனதைத் தொடும் அனுபவத்தைத் தருகிறது இந்த ஆவணப்படம்

0Shares
0