டாலியின் கனவுகள்

சர்ரியலிச ஓவியரான டாலியின் கனவு நிலைப்பட்ட ஓவியங்கள் வியப்பானவை. அந்த ஓவியங்களுக்குள் ஒரு பயணம் செய்வது போல உருவாக்கப்பட்டுள்ள இந்த மயக்கும் காணொளி கனவு வெளியினை அற்புதமாகச் சித்தரித்துள்ளது. டாலியின் புகழ்பெற்ற ஓவியங்களை ஒன்றிணைத்து இந்தக் காணொளியை உருவாக்கியிருக்கிறார்கள். டாலியின் சகோதரி அன்னா மரியா அவரைப்பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு ஆவணப்படம் ஒன்றினை சில வாரங்களுக்கு முன்பு பார்த்தேன். அதில் சிறுவயது முதலே டாலி எப்படி விசித்திரமான உலகின் மீது ஈர்ப்பு கொண்டவராக இருந்திருக்கிறார் என்பதைச் சகோதரி விரிவாக விளக்குகிறார். டாலியின் தோற்றமும் அவரது ஓவியங்களைப் போலவே ஆச்சரியமூட்டக்கூடியது.

டாலியின் மிகப் பிரபலமான படைப்புகளில் ஒன்றான தி பெர்சிஸ்டன்ஸ் ஆஃப் மெமரியில் கடிகாரம் உருகி வழிகிறது. காலத்தை இது போன்ற விசித்திரநிலையில் யாரும் அதன்முன்பாக வரைந்ததில்லை. கொடியில் உலரவைக்கப்பட்ட துணியைப் போல கடிகாரம் தொங்குகிறது. இந்த உருகும் காலத்தின் பின்புலத்தில் நிலையான, என்றுமிருக்கும் நிலக்காட்சி இடம்பெற்றிருக்கிறது. காலம் மனிதர்களின் உருவாக்கம். அது மனிதவாழ்க்கையை மட்டுமே தீர்மானம் செய்கிறது. இயற்கையில் மனிதனின் காலக்கணக்கு செல்லுபடியாவதில்லை

கனவின் விசித்திரம் என்பது அடக்கப்பட்ட ஆசைகள். நினைவுகள் பயங்களின் வெளிப்பாடாகும். உண்மையில் நாம் கனவை விழித்தெழுந்த நிலையில் பேசுகிறோம். அது கனவினைப் பற்றிய நினைவுகள் மட்டுமேயாகும். நினைவுகளால் துல்லியமாக கனவினை வரையறை செய்துவிட முடியாது. கனவில் எந்த பொருளும் நிகழ்வும் நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. கொந்தளிக்கும் உலகம் ஒன்றினுள் சிக்கிக் கொண்டது போன்ற அனுபவமது. ஏன் டாலி இந்த விசித்திரங்களை தனது ஒவியங்களின் முதன்மைப் பொருளாக கொண்டிருக்கிறார் என்றால் நம் காலம் இது போன்ற வீழ்ச்சியின், யுத்தங்களின் காலம். அதை உணர்த்தவே அவர் கனவுக்காட்சிகளை உருவாக்குகிறார். கனவில் எவருக்கும் பெயர்கள் இருப்பதில்லை. ஆண் பெண் அடையாளங்கள் கலைந்துவிடுகின்றன. பல்வேறு உலகங்கள் திறந்து கொள்கின்றன.

இந்தக் காணொளியில் காட்டப்படும் வியப்பூட்டும் நிலப்பரப்பும் பறக்கும் யானைகளும் சிதிலங்களும் நம்மை வேருலகில் சஞ்சரிக்க வைக்கின்றன. டாலியின் உருவங்கள் யாவும் கரைந்த  நிலையினை கொண்டிருக்கின்றன. பொருட்களின் திடம் கரைந்து நீரைப் போலாகிறது. மனித உருவங்கள் சிலந்தியின் கால்கள் கொண்டது போல தோற்றம் தருகின்றன.

0Shares
0