டாலியின் வினோத உலகம்

 “I am not strange. I am just not normal.” ― Salvador Dalí

ஓவியர் சல்வடோர் டாலியின் வாழ்க்கையை மையமாக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் Daliland. மேரி ஹாரன் இயக்கியுள்ளார். பென்கிங்ஸ்லி டாலியாக நடித்திருக்கிறார். மிகப்பொருத்தமான தேர்வு. 1970களில் நடக்கும் கதை. தனது சர்ரியலிச ஓவியங்களால் மிகப்பெரும் புகழை அடைந்தவர் டாலி.

கரப்பான்பூச்சி மீசையும் விசித்திரமான ஒப்பனைகளும் கொண்ட டாலி தனது ஒவியங்களைப் போலவே வாழ்க்கையிலும் கனவுலகில் சஞ்சரித்தார். அவரது ஆடம்பர வாழ்க்கை ஒழுக்க வரம்புகளை மீறியதாக இருந்தது. அவர் நடத்தும் விருந்திற்கான கட்டணங்களை செலுத்துவதைத் தவிர்க்க, காசோலைகளின் பின்புறத்தில் வரைவது வழக்கம். அந்த ஓவியம் பெரும்தொகைக்கு விற்பனையாகும் . படத்திலும் அப்படி ஒரு காட்சி இடம்பெறுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் வேறு எந்த ஓவியரையும் விட அமெரிக்காவில் நன்கு அறியப்பட்டவர் டாலி. அவர் எப்போதும் ஒரு பரபரப்பை உருவாக்க விரும்பினார், விளம்பரமும் பணமும் டாலிக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது,

ஆண்டுதோறும் டாலி தனது மனைவி காலாவுடன் நியூயார்க்கில் உள்ள செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் தங்குவது வழக்கம். அதிலும் ஒரு குறிப்பிட்ட அறையில் தான் தங்குவார். 1973 ஆம் ஆண்டில் அப்படியான வருகையின் போது ஜேம்ஸ் அவரது உதவியாளராகப் பணியாற்றுகிறான். அவனது பார்வையில் டாலியின் வாழ்க்கையும் கொண்டாட்டங்களும் குழப்பங்களும் படத்தில் விவரிக்கப்படுகின்றன.

டாலியின் ஓவியங்களை விற்பனை செய்யும் நியூயார்க் கேலரி ஒன்றில் பணியாற்றுகிறான் ஜேம்ஸ். ஒரு நாள் அவனிடம் கொஞ்சம் பணத்தைத் தரும் உரிமையாளர் அதை ரெஜிஸ் ஹோட்டலில் தங்கியுள்ள டாலியின் மனைவி காலாவிடம் ஒப்படைக்கச் சொல்கிறார். அவன் கலைக்கல்லூரியின் பயின்றவன். பாதியில் படிப்பை விட்டுக் கேலரியில் வேலை செய்து கொண்டிருக்கிறான். ஆகவே டாலியின் ஓவியங்களை நன்கு அறிவான். அவர் மீது பெருமதிப்புக் கொண்டிருந்தான்.

டாலியை சந்திக்கும் ஆசையில் அந்த ஹோட்டலுக்குச் செல்கிறான். இளமையான ஜேம்ஸைக் காணும் காலா அவனது அழகில் மயங்கி இரவு நடக்கும் விருந்திற்கு அழைக்கிறாள்.

ஐம்பது வயதைக் கடந்த அவளுக்கு இளம் பையன்களைப் பிடிக்கும் என்கிறார் டாலியின் மேலாளர். ஜேம்ஸ் அன்றிரவு விருந்திற்குப் போகிறான். வினோதமான அலங்காரம் செய்து கொண்டு டாலி விருந்திற்கு வருகிறார்.. அறை முழுவதும் இளம்பெண்கள். குடி, இசை, நடனம், பாலுறவு எனக் களியாட்டம் இரவெல்லாம் நீள்கிறது. டாலியின் விருந்திற்கு வந்த ஒரு இளம்பெண்ணுடன் ஜேம்ஸ் உடலுறவு கொள்கிறான். அதைத் திரைக்குப் பின்பாக ஒளிந்திருந்து காணுகிறார் டாலி. அவருக்கு இது போல ரகசிய இச்சைகளில் நாட்டம் அதிகம் என்பதை அறிந்து கொள்கிறான்.

மறுநாள் அவர்களின் கேலரிக்கு வரும் டாலிக்கு அவரது விதவிதமான கையெழுத்துக்களைக் கொண்ட ஆல்பம் ஒன்றை பரிசாகத் தருகிறான் ஜேம்ஸ். இதில் மனம்மகிழ்ந்த டாலி அவனைத் தனது உதவியாளராக வரும்படி அழைக்கிறார். அன்றிலிருந்து ஜேம்ஸ் டாலியின் உதவியாளராகப் பணியாற்றத் துவங்குகிறான்.

டாலி மற்றும் காலாவின் வாழ்க்கைவினோதங்களை அருகிலிருந்து காணும் ஜேம்ஸ் அதை எப்படிப் புரிந்து கொள்வது எனத் தெரியாமல் குழப்பமடைகிறான்.

டாலியின் இளமைப்பருவம் மற்றும் காலாவை காதலித்த நாட்கள் பற்றிய நினைவுகளை அவர் வழியாகவே அறிந்து கொள்கிறான்.

எழுபது வயதான டாலி சாவு தன்னைத் துரத்துவதைக் கண்டு பயப்படுகிறார். எப்போதும் இளமையானவர் போலக் காட்டிக் கொள்ள ஒப்பனை செய்து கொள்கிறார். இளம்பெண்களுடன் உல்லாசமாகக் கழிக்கிறார். அவர் நடுங்கும் கைகளுடன் ஒப்பனை செய்யும் காட்சி படத்திலிருக்கிறது.

நியூயார்க்கில் நடைபெற இருக்கும் கண்காட்சிக்கு தேவையான ஓவியங்களை டாலி வரைகிறாரா எனக் கண்காணிக்கும்படி அனுப்பி வைக்கபட்ட ஜேம்ஸ், அங்கே நடைபெறும் பார்ட்டி, செக்ஸ் மற்றும் போதை மருந்து கொண்டாட்டங்களுக்கு மத்தியில் தடுமாறுகிறான்

டாலியின் புகழைப் பணமாக மாற்றுகிறாள் காலா. அவரது ஓவியங்களை விற்பனை செய்வதிலும் அவருக்குப் புதிய இன்பங்களை அறிமுகம் செய்வதிலும் தொடர்ந்து ஈடுபடுகிறாள். காலாவின் தீராத பணப் பசியை ஜேம்ஸ் அறிந்து கொள்கிறான். அதே நேரம் டாலி ஒரு குழந்தையைப் போல அவளிடம் நடந்து கொள்வதையும் காணுகிறான். அவர்கள் ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்பதை உணருகிறான்.

காலாவின் உண்மையான பெயர் ஹெலினா இவனோவ்னா டியாகோனோவா. அவர் டாலியை விடப் பத்து வயது மூத்தவர், கவிஞர் பால் எலுவார்டையும் திருமணம் செய்து கொண்டிருந்தார். டாலி அவளை முதன்முறையாகக் கண்டதும் காதல் கொண்டுவிட்டார். காலா தன்னை மீட்க வந்த தேவதை என்று நம்பினார். காலாவும் தனது கணவரைப் பிரிந்து டாலியுடன் வாழத் துவங்கினார். பின்பு அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். டாலி தனது ஓவியங்களில் காலாவின் பெயரையும் சேர்த்து எழுத ஆரம்பித்தார். டாலியின் ஒவியங்களை நிராகரித்த கேலரிகளுடன் காலா போராடி அவரது ஓவியங்களை விற்பனை செய்ய வைத்தார். டாலியின் புகழுக்குக் காலா முக்கியக் காரணமாக விளங்கினார்.

டாலி 1968 ஆம் ஆண்டில் காலாவிற்காகப் புபோல் நகரில் ஒரு கோட்டையை விலைக்கு வாங்கினார். அங்கே அவளது அனுமதி இன்றி டாலியே செல்ல முடியாது என்ற கட்டுப்பாடு இருந்தது. அக்கோட்டையில் காலா தனது இளங்காதலர்களுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்தார்

முதுமையின் காரணமாகக் கைநடுக்கம் ஏற்பட்டு டாலியால் ஓவியம் வரைய இயலாமல் போனது. ஆயினும் அவர்களின் ஆடம்பர வாழ்க்கைக்காக நிறையப் பணம் தேவைப்பட்டது. இதனால் வெற்றுக் கேன்வாஸ்களில் கையொப்பமிடும்படி அவரைக் காலா வற்புறுத்தினார் . டாலி நிறைய வெற்றுக் கேன்வாஸ்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். அவற்றை வேறு ஓவியர்கள் மூலம் வரையச் செய்து போலி ஓவியங்களாகக் காலா விற்றிருக்கிறார்.

மருத்துவரின் ஆலோசனையின்றிக் காலா தானாகக் கொடுத்த மருந்துகள் டாலிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தின. அவர் பார்கின்சன் நோயால் பீடிக்கபட்டார். ஐம்பத்து மூன்று வருடங்கள் அவர்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள்

ஜூன் 10, 1982 இல் கடுமையான காய்ச்சலால் காலா இறந்தார். அவரது உடல் புபோல் கோட்டையினுள் அடக்கம் செய்யப்பட்டது.

காலா இறந்தபிறகு டாலி வெளியுலகத் தொடர்புகளை முற்றிலும் துண்டித்துக் கொண்டார். காலாவின் பெயரை எவரும் சொல்வதைக் கூடத் தடை செய்தார். டாலி தனது 84வது வயதில் ஸ்பெயினில் உள்ள ஃபிகுராஸ் மருத்துவமனையில் இதயக் கோளாறு காரணமாகக் காலமானார்.

இப்படம் டாலி மற்றும் காலாவின் வாழ்க்கையைச் சுற்றியே நகர்வதால் அவரது அபாரமான ஒவியத்திறமை அதற்குப் பின்னுள்ள மனநிலை. சர்ரியலிஸ்டுகளின் நட்பு வட்டம். ஹாலிவுட்டில் டாலி பணியாற்றியது குறித்து அதிகம் இடம்பெறவில்லை.

எழுபதுகளின் காலகட்டத்தை படம் சிறப்பாக மறுஉருவாக்கம் செய்துள்ளது. தேர்ந்த ஒளிப்பதிவு. கலை இயக்கம், காலாவாக நடித்துள்ள பார்பரா சுகோவாவின் நடிப்பு படத்தின் சிறப்புகள்.

டாலியின் மேதமையை விடவும் அவரது விசித்திரமான நடவடிக்கைகளைப் படம் அதிகம் கவனப்படுத்தியதால் கோமாளி போலவே அவரை உணருகிறோம்.

ஆனால் பல ஆண்டுகளாக, டாலி வெவ்வேறு ஊடகங்களில் பரிசோதனை செய்த உண்மையான கலைஞராக இருந்திருக்கிறார், டாலியின் பெயரைக் குறிப்பிடாமல் சர்ரியலிசத்தைப் பற்றிப் பேசுவது சாத்தியமற்றது. டாலியின் நேர்காணல்கள் மற்றும் அவர் பற்றிய புத்தகங்களை வாசிக்கும் போது அவரது ஆளுமையைச் சரியாக அறிந்து கொள்ள முடியும்.

The Persistence of Memory போன்ற நிகரில்லாத ஓவியத்தை வரைந்தவர் தான் டாலி என்பதே நாம் ஒரு போதும் மறந்துவிடக் கூடாது.

0Shares
0