டால்ஸ்டாயின் கைகள்

லியோ டால்ஸ்டாயோடு மிகுந்த நட்பு கொண்டிருந்தார் மாக்சிம் கார்க்கி.  பலமுறை தேடிச் சென்று டால்ஸ்டாயை சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்பினை பற்றி நினைவுக்குறிப்புகளில் டால்ஸ்டாயின் கைகளைப் பற்றி வியந்து எழுதியிருக்கிறார்.

டால்ஸ்டாயின் நரம்புகள் புடைத்த பெரிய கைகளைக் காணும் போது லியனார்டோ டாவின்சியின் கைகளைப் போலவே தோன்றியது. இரண்டு பேர்களின் கைகளும் தொட்டதையெல்லாம் கலையாக்கியவை. மாயத்தன்மை கொண்ட கைகள். பேசிக் கொண்டிருக்கும் போது டால்ஸ்டாயின் கைகள் அசைந்து கொண்டேயிருந்தன. கடவுளை போல அவர் அமர்ந்திருப்பதாகத் தோன்றியது.

அந்த உரையாடலின் போது தனக்கு ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சனின் தேவதை கதைகள் முதல் வாசிப்பில் எந்த ஈர்ப்பையும் தரவில்லை. ஆனால் சமீபத்தில் மறுமுறை வாசித்த போது ஹான்ஸ் கிறிஸ்டியன் மிகவும் தனிமையான மனிதர். தீராத தனிமையே குழந்தைகளுக்கான கதைகளை எழுத வைத்திருக்கிறது என்று தோன்றியது.

பெரியவர்களை விடவும் சிறார்கள் பிறரை உண்மையாக நேசிக்கிறார்கள் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஆகவே தான் குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறார் என்றார் டால்ஸ்டாய்.

உரையாடலின் போது இயேசுவையும் புத்தரையும் நிகரற்ற மனிதர்களாக புகழ்ந்து பேசினார் டால்ஸ்டாய். இருவர் மீது மிகுந்த பற்று இருந்ததை உணர முடிந்தது.

கிராமப்புற மக்கள் கதை சொல்லும் விதம் குறித்தும் அதன் எளிமை குறித்தும் எப்போதும் டால்ஸ்டாய் வியந்து பேசியே வந்தார்.

ஒரு நடைபயிற்சியின் போது பறவை ஒன்றின் குரலைக் கேட்ட டால்ஸ்டாய் அது என்ன பறவை என்று கார்க்கியிடம் கேட்டார்.

பின்ச் எனக் கார்க்கி பதில் சொன்னவுடன். இந்தக் குருவி வாழ்நாள் முழுவதும் ஒரே பாடலை தான் பாடிக் கொண்டேயிருக்கிறது. மனிதர்களின் இதயத்திலோ ஆயிரமாயிரம் பாடல்கள் இருக்கின்றன. ஆனால் மனிதன் பறவை கண்டு பொறாமைப்படுகிறான் என்று பதில் சொன்னார் டால்ஸ்டாய்.

கடவுள், பெண்கள், விவசாயம் இந்த மூன்று விஷயங்களுமே அவரது பேச்சின் மையமாக எப்போதும் இருந்தன.

ஒருமுறை கடற்கரை பகுதியில் அவருடன் பேசிக் கொண்டு நடந்த போது டால்ஸ்டாய் ஒரு இடத்தில் உட்கார்ந்துவிட்டார். கடற்கரையில் அமர்ந்திருந்த அவரது தோற்றததைக் காணும் போது தொன்மையான பாறை ஒன்று உயிர் பெற்றுவிட்டதைப் போலத் தோன்றியது.

டால்ஸ்டாயின் கண்களும் கைகளும் மறக்க முடியாதவை. அவர் சந்தோஷமாக இருந்தால் தனக்கு விருப்பமான எழுத்தாளர்களை வீட்டிற்கு அழைத்துப் பேசுவார். மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார். விருந்து தருவார். டால்ஸ்டாயின் பேச்சில் கெட்டவார்த்தைகள் சரளமாகப் புழங்கும்.

அவர் ஒருமுறை மாஸ்கோவின் சாக்கடை ஒன்றில் போதையில் தள்ளாடி விழுந்து கிடக்கும் ஒரு பெண்ணைக் கண்டதாகவும். அவள் அழுக்கடைந்து செம்பட்டை படிந்த தலையுடன் போதையில் எழுந்து நிற்க முடியாமல் தவித்தாள் என்றும் அவளை நெருங்கிப் போகப் பயமாக இருந்தது என்று நினைவு கூர்ந்தார்.

அத்துடன் அவளைப் போன்ற குடிகாரியைப் பார்த்திருக்கிறாயா கார்க்கி. அவளைப் பற்றி நீ ஏதாவது எழுதியிருக்கிறாயா..

அது போன்ற பெண்களைக் கண்டால் மனம் பதறிவிடுகிறது. அவர்களைப் பற்றி எதையும் எழுதக்கூடாது என்று தோன்றுகிறது.

பாவம் அந்தப் பெண். பாவம் என்றபடியே டால்ஸ்டாய் கண்ணீர் விட்டார்.

தன்னை அழித்துக் கொள்ளும் பெண்ணின் நிலை அவரை உணர்ச்சிபட வைத்தது.

நான் வயதானவன். உணர்ச்சிகளைக் கட்டுபடுத்த தெரியவில்லை என்று சொல்லியபடியே கண்ணீரை துடைத்துக் கொண்டார் .

தஸ்தாயெவ்ஸ்கியை வியந்து பேசிய டால்ஸ்டாய் இடியட் நாவலில் வரும் மிஷ்கின் வலிப்பு நோய் கண்டவன். நோயாளி ஒருவனை ஏன் நாவலின் கதாநாயகனாகத் தஸ்தாயெவ்ஸ்கி சித்தரிக்கிறார். காரணம் தஸ்தாயெவ்ஸ்கியே ஒரு நோயாளி. இன்றைய இளைஞர்கள் ஆரோக்கியமற்றவனாகவே இருக்கிறார்கள். உலகமே நோய்மையுடன் இருக்கிறது. நாவலின் சிறப்பு அதுவே. மக்களின் பேச்சுமொழியை, அதன் கொச்சையை அப்படியே தஸ்தாயெவ்ஸ்கி பயன்படுத்துகிறார். அது தான் அவரது எழுத்தின் வலிமை.

அவர் பயன்படுத்தும் சொற்கள் கவித்துவமாகயில்லை. வறண்டு, சிதைந்து, கொச்சையாக உள்ளன. அப்படித் தான் அடிதட்டு மக்கள் பேசுகிறார்கள். விவசாயிகள் பேசிக் கொள்ளும் போது புத்திசாலித்தனமாகப் பேசிக் கொள்வதில்லை. முட்டாள்தனம் கலந்த உரையாடலாகவே இருக்கும். அதை நான் அறிந்திருக்கிறேன். தஸ்தாயெவ்ஸ்கி மிகச்சிறந்த படைப்பாளி. அதில் வேறு கருத்தேயில்லை.

••

0Shares
0