டால்ஸ்டாயோடு நடந்தேன் 1


 


 


 


 


கடந்த ஒரு மூன்று வார காலமாகவே புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துக் கொண்டிருந்தேன். அவரது மனைவியின் நாட்குறிப்புகள். மகன் மகள்களின் நினைவுப்பதிவுகள் மற்றும் டால்ஸ்டாயின் இறுதி நாட்கள் பற்றிய அவரது உதவியாளரின் குறிப்புகள் , டால்ஸ்டாயின் கடிதங்கள் என்று நாலைந்து புத்தகங்கள் அவரது வாழ்வை விவரிக்கின்றன.


1) Leo Tolstoy`s Diaries & Letters 2) The Diaries of Sophia Tolstoy 3) Reminiscences of Leo Tolstoy 4) The Life of Tolstoy 5) The Last Days of Leo Tolstoy என்று அவற்றை ஒன்று சேர வாசித்துக் கொண்டிருந்தேன்.டால்ஸ்டாயின் கதைகள், நாவல்களை வாசிப்பது எப்போதுமே அந்தரங்கமான நெருக்கமும் மன நெகிழ்வும் தரக்கூடியது. என் கல்லூரி நாட்களில் தொடர்ந்து டால்ஸ்டாயை வாசித்துக் கொண்டிருந்தேன். குறிப்பாக புத்துயிர்ப்பு நாவலும் நடனத்திற்குப் பிறகு குறுநாவலும் என் விருப்பத்திற்கு உரியவை.


அன்னாகரீனனா. போரும்வாழ்வும், கசாக்குகள். டால்ஸ்டாய் சிறுகதைகள், செவஸ்தபோல் கதைகள். இளமைபருவம், டால்ஸ்டாய் நீதிக்கதைகள் போன்றவை தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்துள்ளன. எளிதில் இன்று வாசிக்க கிடைக்கின்றனடால்ஸ்டாயை வாசிக்கையில் என்ன நேர்கிறது. முதலில் அது ஒரு ரஷ்ய நாவல் என்ற அந்நியத்தன்மை விலகிப்போய் மிக நெருக்கமாக வாழ்வை அது விவரிக்கிறது. அத்தோடு நாவலின் மையமாக ஒரு கதாபாத்திரம் இருப்பதில்லை. நாவல் வாழ்வின் எண்ணிக்கையற்ற கிளைவேர்களுடன் இணைந்தே விரிவடைகிறது. அத்தோடு நாவலின் வழியாக சமகாலமும் வாழ்வின் சுகதுக்கங்களும் அபத்தங்களும் விவரிக்கபடுகின்றன. விமர்சிக்கபடுகின்றன. அதே நேரம் ரஷ்யவாழ்வின் தனித்துவங்களும் அதன் கலாச்சார நுண்மையும் நம்மால் உணர முடிகிறது.குறிப்பாக டால்ஸ்டாய் என்ற கதைசொல்லியின் ஆளுமை பன்முகப்பட்டது. சிலவேளைகளில் அது ஒரு போர்வீரனைப் போல கலக்கமற்று வாழ்வினை விவரிக்கிறது. சில வேளைகளில் அது ஒரு ஞானியைப் போல வாழ்வு இவ்வளவு தான் என்று அடையாளப்படுத்துகிறது. இன்னும் சில தருணங்களில் அது ஜிப்சியைப் போல சாகசமே வாழ்க்கை என்கிறது. சில தருணங்களில் இயற்கையின்  பிரம்மாண்டத்தின் முன்பாக மனித வாழ்க்கை காற்றில் அடித்து செல்லப்படும் ஒரு மணல்துகள் என்று சுட்டிக்காட்டுகிறது.


கல்லூரி நாட்களில் வாசித்தபோது டால்ஸ்டாய் என் கிராமப்புற மனிதனைப் போல ஒரு மூர்க்கமான விவசாயியின் இயல்பையே கொண்டிருந்தார். எழுதித் தீராத நினைவுகளும் தொடர்ந்து குடும்பஉறவுகளின் வீழ்ச்சி மற்றும் சமுக மாற்றங்களோடு தன்னை அடையாளப்படுத்தி கொள்வதன் நெருக்கடிகள், சிக்கல்கள் என்று ஒலிக்கும் அவரது குரல் தனித்துவமாக இருந்தது.


அன்னா ஏன் தற்கொலை செய்து கொண்டாள்.விரான்ஸ்கி செய்தது சரியா?  எதற்காக ரயிலில் விழுந்து சாகிறாள்  ? புத்துயிர்ப்பில் வரும் மாஸ்லாவா பெரியவளா அல்லது தஸ்தாயெவ்ஸ்கியின் சோனியா பெரியவளா என்று விவாதங்களும், டால்ஸ்டாயின் ஆன்மீக விடுதலை குறித்த எண்ணங்கள்  என்று பகலிரவாக பேசித் தீர்த்திருக்கிறேன்.


ஆனால் இப்போது டால்ஸ்டாய் என்ற எழுத்தாளனின் வாழ்வைக் கூர்ந்து வாசிக்கையில் அவனது புனைவுகள் அத்தனையும் விட விசித்திரமாகவும், காரணம் சொல்லமுடியாத நிகழ்வுகளோடும், துக்கத்தோடும் , மன உளைச்சலோடும், விவரிக்கமுடியாத துயரோடும் வாழ்வை அவர் சந்தித்த விதம் என்னை தீவிரமாக பற்றிக் கொண்டுவிட்டது.


ஒவ்வொரு புத்தகத்தை வாசித்து முடித்தபிறகு நாலைந்து இரவுகள் உறக்கமற்று கிடந்திருக்கிறேன். மனம் டால்ஸ்டாயின் மீதே கவிந்துகிடந்தது. எனக்கு மிக நெருக்கமான ஒரு மனிதனோடு நீண்ட நடைபயணம் ஒன்றை மேற்கொண்டுவிட்டு பாதியிலே  விட்டு விலகி வந்தது போலிருந்தது.
தன் பிறப்பிலிருந்து மரணம் வரை எல்லாவற்றையும் டால்ஸ்டாய் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். அவை வெறுமனே ஒரு எழுத்தாளனின் நினைவுகள் என்று மட்டும் வரையறுத்துவிட முடியாது. மாறாக அவை ஒரு மனிதன் வாழ்வைச் சந்தித்த சில சாத்தியங்கள். சில வழிகாட்டுதல்கள், சில தவிர்க்கமுடியாத வீழ்ச்சிகள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.


ஒரு ஆசானை போல டால்ஸ்டாயிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். பலநேரங்களில் அவரது கை என் தோளில், முதுகில் தொட்டு சாந்தம் தருவதையும் சில நேரங்களில் அவர் என்னை இறுக்கி அணைத்து கண்ணீர் விடுவதும் போலவும் உணர்ந்திருக்கிறேன்.


ரகசியம் என்று மனதில் ஒளிந்துகிடந்த வடுக்கள்,வேதனைகள் அத்தனையும் அவர் முன்னே மலரத்துவங்கிவிடுகின்றன. சில நேரங்களில் காற்றில் உதிர்ந்து அலையும் இலை போல அவர் இலக்கற்று நம்மை பறக்க செய்கிறார்.சில நேரங்களில் மரத்தை தரையில் வீழ்த்தும் நிழலைப் போல நம் கடந்த காலத்தை காலடியில் வீழ்த்திக் காட்டுகிறார்.


இருபது வயதில் கதை சொல்வதில் டால்ஸ்டாய் காட்டிய பிரமிப்பை நோக்கியே மனது சென்றது. ஆனால் இன்று வாசிக்கையில் அதைவிடவும் வாழ்வை எப்படி சந்திப்பது என்று அவரது சொந்த வாழ்வின் வழியாக அடையாளம் காட்டிய வெற்றி தோல்விகளும்  குடும்ப உறவுகளின் சிக்கல்களும் பிரிவும் மரணமும் அதன் விளைவுகளும் மிக முக்கியமானவை என்று அதை நோக்கியே மனது நகர்கிறது.


பனிப்பாறைகள் ஏதோ ஒரு நாளில் தானே உடைந்து வெள்ளப்பெருக்கெடுப்பது போல நமக்குள் உறைந்து போன அந்தரங்கத்தின் வெளிப்படுத்தபடாத தருணங்கள் டால்ஸ்டாயின் ஆவேசத்தின் முன்பாக உடைந்து சிதறுகின்றன.
டால்ஸ்டாயின் வாழ்க்கை விசித்திரமானது. அவரே நினைவு கொள்வதில் இருந்தும் அவரைப்பற்றி நினைவு கொள்வதில் இருந்தும் என்னை பாதித்த சில நிகழ்வுகள் இவை


**
டால்ஸ்டாயின் குடும்பம் மரபான ரஷ்ய நிலப்பிரபுவின் குடும்பம். மகாகவி புஷ்கின் அவரது தந்தை வழி உறவினர். நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம், பழத்தோட்டங்கள், விவசாய காரியங்களை கவனிக்கும் குடியானவர்கள். வேலையாட்கள் மற்றும் சார்ந்து வாழ்ந்த கிராம மக்கள் என்று பெரிய கூட்டு குடும்பமாக இருந்தது.டால்ஸ்டாயின் பூர்வீக வீடு முப்பத்தியாறு அறைகள் கொண்டது. விருந்தினர்களுக்கு என்று தனி அறைகள் . வேலைக்காரர்களுக்கு என்று தனியான வீடுகள் யாவும் சேர்ந்து அது ஒரு தனி உலகமாக இருந்தது.
இளமையில் சாகசத்தை துரத்தியலைந்த  டால்ஸ்டாய்க்கு சூதாட்டத்தில் இருந்த மிதமிஞ்சிய ஆர்வம் ஒரு நாளில் பதினெட்டு மணிநேரம் சூதாட வைத்திருக்கிறது. சீட்டாட்டம் அதற்கு துணையாக குடி, சீட்டாட்டம் ஏற்படுத்தும் மனச்சோர்விலிருந்து விடுபடுவதற்காக வேசைகள் என்று அவரது உலகம் சூதிற்குள்ளாகவே மையங் கொண்டிருந்தது.


தொடர்ந்த தோல்விகள் சூதை ஒரு வெறியாக அவருக்குள் மாற்றியிருந்தன. சில இரவுகளில் யாருமற்ற சூதாட்ட மேஜையின் முன்பாக அமர்ந்தபடியே தனியே பேசிக் கொண்டிருந்திருக்கிறார் டால்ஸ்டாய். கண்ணுக்கு தெரியாத தீவினையின் உருவம் ஒன்று தன்னை பரிகசிப்பது போலவே தோன்றியிருக்கிறது. தொடர்ந்த சூதாட்டம் அவரை கடனாளி ஆக்கியது.


அந்தக் கடனை அடைப்பதற்கு என்ன செய்வது என்று யோசிக்கையில் அவருக்கு வேறு வழியில்லை. பூர்வீக வீட்டை விற்பது என்ற முடிவிற்கு வந்தார். இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னதாக கட்டப்பட்ட அவ்வளவு பிரம்மாண்டமான வீடு சூதாட்டத்தோல்விக்கு பறிபோவது அவரை வேதனைக்கு உள்ளாக்கியது. ஆனால் வேறு வழியில்லை என்ற நிலையில் அந்த வீட்டை அருகாமையில் உள்ள இன்னொரு நிலப்பிரபுவிடம் விற்றுவிட்டு அந்த வீட்டிலிருந்த முன்னோர்களின் கோட்டோவியங்களை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியேறியிருக்கிறார்.சூதாடி தோற்று அதன் விளைவாக ஏற்பட்ட அவமானங்கள்,வடுக்கள் பற்றி அவர் தன்வாழ்நாள் முழுவதுமே குற்றவுணர்வு கொண்டிருக்கிறார். ஏறத்தாழ இதே போன்ற ஒரு நிலை தான் தஸ்தாயெவ்ஸ்கிக்கும் இருந்தது. தஸ்தாயெவ்ஸ்கி அதை சூதாடி என்ற பெயரில் நாவலாக எழுதியிருக்கிறார்.


டால்ஸ்டாய் தன்னுடைய சூதாட்ட நினைவுகளை அதிகம் எழுத்தில் பதிவு செய்யவில்லை. ஆனால் மறக்கமுடியாத ஆழமான வடு ஒன்றை போல இழந்து போன வீடும் அதன் அறைகளும் அங்கு நடப்பட்டிருந்த மரங்களும் அவருக்குள்ளாகவே இருந்தன என்பதை வாசிக்கையில் அவரது படைப்புகளின் பின்னால் உள்ள உளவியலை புரிந்து கொள்ள முடிகிறது


**
தன் வாழ்வின் அத்தனை நிகழ்வுகளையும் டால்ஸ்டாய் எழுதி எழுதியே வெளிப்படுத்தியிருக்கிறார். உணவு மேஜையில் தனக்கு பிடிக்காத உணவு பரிமாறப்பட்டது என்பதை வெளிப்படுத்தக் கூட அவர் குறிப்பு ஒன்றை எழுதி தான் தந்திருக்கிறார். மனைவிக்கு பிள்ளைகளுக்கு வீட்டு வேலையாட்களுக்கு நண்பர்களுக்கு பத்திரிக்கையாளர்களுக்கு என்று அவர் எழுதிய கடிதங்கள் குறிப்புகள் ஏராளம்.


அது போலவே அவரது வீட்டின் வரவேற்பு அறையில் ஒரு தபால்பெட்டி ஒன்றை பொருத்தியிருக்கிறார். அந்த பெட்டியில் வீட்டில் உள்ள எவரும் தான் எழுதிய கதை, கட்டுரை அல்லது கவிதைகள் எதையும் அதில் போட்டுவிடலாம். அது போலவே தனக்கு பிடித்தவை, பிடிக்காதவை மற்றும் நேரில் சொல்லமுடியாதவை அத்தனையும் எழுதி அதில் போட்டுவிடலாம்.


இந்த தபால்பெட்டி வார இறுதி நாளில் திறக்கபடும். அன்று டால்ஸ்டாய் அதில் உள்ள படைப்புகள் கடிதங்கள் குறைகள் போன்றவற்றிற்கு பதில் அளிப்பார்.
இதனால் டால்ஸ்டாயிடம் நேரில் கேட்க பயந்த எத்தனையோ கேள்விகள் அதில் எழுதி போடப்பட்டிருக்கின்றன. அப்பாவிற்கு தெரியாமல் காதலித்த மகன் அதை டால்ஸ்டாயிடம் சொல்வதற்கு கூட அதே தபால்பெட்டியை தான் பயன்படுத்தியிருக்கிறான்.


எழுத்து ஒன்றே பகிர்ந்து கொள்வதற்கான எளிய வழி என்று டால்ஸ்டாய் நம்பினார். இதற்காகவே கவிதை கதை என்று வாசிக்கும்பழக்கத்தை வீட்டில் ஏற்பத்தினார். இந்த  தபால்பெட்டியில் டால்ஸ்டாயே பலமுறை மற்றவர்கள் மீதான தனது அதிருப்தியை கடிதமாக எழுதி போட்டிருக்கிறார். பிள்ளைகள் எழுதிய கவிதைகளை வாசித்து பாராட்டியிருக்கிறார். கவிதைகள் வாசிப்பதற்காகவே ஜெர்மன் மொழியை பிள்ளைகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தனி ஆசிரியரை நியமதித்திருக்கிறார். பிள்ளைகள் பிரெஞ்சு ஜெர்மன் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகள் கற்றிருக்கிறார்கள்.வீட்டினுள் தபால்பெட்டி வைத்த நடைமுறையால் ஒளிவுமறைவற்ற தன்மை உருவானதோடு ஒருவரையொருவர் பகிர்ந்து கொள்வதற்கான எளிய சாத்தியமும் உருவாகியிருக்கிறது


**
தன்னுடைய பிள்ளைகள் பற்றி டால்ஸ்டாய் எழுதிய குறிப்புகள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு தகப்பனும் தன்பிள்ளை பற்றி பகிர்ந்து கொள்ளபடாத ஒரு ரகசிய குறிப்பேட்டை மனதிற்குள்ளாகவே கொண்டிருக்கிறேன். அது அவனுக்குள்ளாகவே உருவாகி  அவனுக்குள்ளாகே அழிந்து போய்விடக்கூடியது.


பிள்ளைகள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட சம்பவங்களை விடவும் வெளிப்படுத்தபடாத நிகழ்வுகளே அதிகம். தன்னுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரைப் பற்றியும் நுட்பமான அவதானிப்புகளை டால்ஸ்டாய் எழுதியிருக்கிறார்.


இதில் ஒரு பையனை பற்றி எழுதும்போது அவன் பிறந்த நாளில் இருந்து இன்றுவரை உடல்நலக்குறைவு வந்ததே கிடையாது. அது அவனது தனித்துவம். அவன் ஏதோ ஒருவிதத்தில் இறந்து போன தனது தம்பியை நினைவுபடுத்துகிறான் என்ற குறிப்பு காணப்படுகிறது.அது போலவே இன்னொரு மகனை பற்றி எழுதும் போது இவனுக்கு என்ன ஆடைகள் அணிவித்தாலும்  கச்சிதமாக பொருந்துகிறது. அவனுக்கு என்றே உருவாக்கபட்டது போன்றிருக்கிறது. இப்படி சிலர் தான் உலகிலிருப்பார்கள். அவர்களுக்கு எந்த ஆடை அணிவித்தாலும் நன்றாகவே இருக்கும்.  அவனிடம் உள்ள சிரிப்பு அபூர்வமானது. அது உறக்கத்திலும் அவன் முகத்திலிருந்து பொங்கி வழிந்து கொண்டேயிருக்கிறது என்கிறார்.


இன்னொரு மகளை பற்றி சொல்லும் போது அவள் அப்படியே அம்மாவை கொண்டு பிறந்திருக்கிறாள். அவளைப் போலவே எதையும் வெளிக்காட்டி கொள்ளத சுபாவம். காரணமற்ற ஏக்கம். என்று அவளை பற்றி சொல்லிக் கொண்டு வந்தவர் ஒவ்வொரு குழந்தையும் நம்மோடு இருந்து மறைந்த யாரையோ நினைவுபடுத்துகிறார்கள் அதை பலமுறை உணர்ந்திருக்கிறேன். சிறுவயதில் அப்பாவை பற்றிய நினைவுகள் மனதிலிருந்து விலகி போய்விட்டன. ஆனால் நீண்ட வருசத்தின் பிறகு தன்னுடைய மகனை பார்க்கும் போது தொடர்ந்து தன் அப்பாவின் நினைவு வருகிறது என்ற டால்ஸ்டாயின் குறிப்பு மிக முக்கியமானது


*
டால்ஸ்டாயின் மகன் இலியா ஒரு பெண்ணை காதலித்திருக்கிறான். அந்த பெண்ணின் குடும்பத்தை டால்ஸ்டாய்க்கு பிடிக்கவில்லை. அதை பற்றி பையனோடு எப்படி பேசுவது என்று புரியாமல் அவர் தடுமாறிக் கொண்டிருந்திருக்கிறார்.


தினசரி டால்ஸ்டாய் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். அப்படி நடைபயிற்சிக்கு செல்லும் போது தன்மகனை கூடவே அழைக்கிறார். அவனுக்கு புரிந்துவிட்டது தன்னுடைய காதல் விவகாரம் பற்றி பேசத்தான் அப்பா அழைக்கிறார் என்று இருவருமே மிக அமைதியாக நடக்கிறார்கள். எந்த இடத்தில் எப்போது பேச்சை துவங்குவது என்று இருவருக்குள்ளுமே ஒரு போராட்டம் நடந்து கொண்டேயிருக்கிறது. யாருமற்ற ஒரு சரிவு ஒன்றில் இறங்கி நடக்க துவங்கியதும் டால்ஸ்டாய் ஆத்திரத்துடன் அந்த கேடுகேட்ட குடும்பத்தோடு தினமும் பொழுதை கழிக்கிறாய் என்று கேள்விபட்டேன் நிஜமா என்று கேட்டிருகிறார்.


மகன் அமைதியாக தனக்கு அவர்கள் வீட்டு பெண்ணை பிடித்திருக்கிறது. அவள் ரொம்பவும் நல்ல பெண் என்று சொல்லியிருக்கிறான். உனக்கு அவளை பிடித்திருக்கிறதா என்று டால்ஸ்டாய் திரும்பவும் கேட்கிறார். அவன் ரொம்பவும் பிடித்திருக்கிறது என்றதும் டால்ஸ்டாய்  உடல் இன்பத்தை அனுபவிப்பதற்காக இவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவாயே ஆனால் அது உன்னை ஒருநாள் வேதனைக்குள் தள்ளிவிடும். ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு உடற்கவர்ச்சியை தாண்டிய ஏதோவொரு நெருக்கமும் ஒற்றுமையும்தேவைப்படுகிறது. உண்மையில் திருமணம் என்பது இணைந்து ஆற்ற வேண்டிய ஒரு கடமை. அது இரண்டு உடல்களால் மட்டும் தீர்மானிக்கபட கூடாது என்கிறார்.


மகன் எரிச்சலோடு தங்களுக்குள் அப்படியொரு மனஒற்றுமை இருக்கிறது என்கிறான். அப்படியானால் உன் இஷ்டப்படி அவளை திருமணம் செய்து கொள். ஆனால் வாழ்க்கை என்பது காதலிப்பது திருமணம் செய்து கொள்வது என்பதில் முடிந்துபோவது என்று மட்டும் முடிவு செய்து கொள்ளதே என்று சொல்லிவிட்டு தனியே நடக்க துவங்குகிறார். மகன் ஆத்திரத்துடன் வேறு பாதையில் தனியே வீடு திரும்புகிறான்.அதன் சில நாட்களுக்கு பிறகான இரவில் டால்ஸ்டாய் தனியே அறையில் இருக்கிறார். மகன் அவர் அறைக்குள் வருகிறான். அவர் அறையின் கதவை சாத்த சொல்லிவிட்டு அவனை முகம் கொடுத்து பார்க்காமல் திரும்பி உட்கார்ந்து கொண்டு கேட்கிறார்நீ இதுவரை எந்த பெண்ணோடாவது உடல் உறவு கொண்டிருக்கிறாயா?


இலியா இல்லை என்று அமைதியான குரலில் சொல்கிறான்


வேசைகளின் நிர்வாண உடல்களை கூட கண்டதில்லையா என்று  மறுபடியும் கேட்கிறார்


அவன் தான் காதலிக்கும் பெண்ணை தவிர வேறு பெண் எவரையும் தனக்கு பரிச்சயமே கிடையாது என்று சொல்கிறான்


டால்ஸ்டாய் குரல் கம்மியபடியே சொல்கிறார்


என்ன துரதிருஷ்டம். ஒரு பெண்ணோடு உடலுறவு கொள்வதற்காக ஒரு ஆண் எத்தனை ஆண்டுகள் காத்துகிடக்க வேண்டியிருக்கிறது. இலியா.. உன் நிலமை எனக்கு புரிகிறது. திருமணத்தை தவிர உனக்கு வேறு வழிகள் இல்லை
என்று சொல்லியபடியே கண்ணீர்விட துவங்குகிறார். மகன் தன்னை மீறி தானும் அழுகிறான். அவர் எழுந்துவந்து ஒரு சிறுவனை அணைத்துக் கொள்வது போல இலியாவை அணைத்துக் கொள்கிறார். சில நிமிசத்திற்கு பிறகு எழுந்து தன்னுடைய எழுதும் அறைக்குபோய்விடுகிறார். மகனும் வெளியே செல்கிறான்.


வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மரத்தடியில் போய் நின்ற போது அவனுக்கு தன்னுடைய அப்பாவின் மீது அளவு கடந்த பாசமும் அன்பும் பெருக்கெடுக்கிறது. அப்பா அவன் மனதில் அடைந்து கிடந்த ஏதோ ஒரு சிக்கலை  தீர்த்துவிட்டது  போலிருந்தது. அவன் இருட்டிற்குள் இருந்தபடியே அப்பாவிற்கு நன்றி சொல்கிறான்.  அது தன் அப்பாவை பற்றி தனக்குள்ள மறக்கமுடியாத நினைவு  என்று இலியா குறிப்பிடுகிறான்


**        


தன்னுடைய எழுதும் அறையில் டால்ஸ்டாய் டிக்கென்ஸின் உருசித்திரம் ஒன்றை வைத்திருந்தார். தன்னுடைய ஒவ்வொரு கதையையும் அவர் டிக்கென்ஸோடு ஒப்பிட்டு பார்க்க தவறுவதேயில்லை. அவர் வரையில் தான் அடைய விரும்பிய இடம் சார்லஸ் டிக்கென்ஸ்க்கு எழுத்தில் கிடைத்த கௌரவம் மற்றும் உயர்இடம்.


**
பைபிள் முழுவதையும் மனப்பாடம் செய்திருந்த டால்ஸ்டாய் பிரார்த்தனை நேரங்களில் எந்த அத்யாயத்திலிருந்து எந்த பாடலை வேண்டுமானாலும் உடனே பாடவும் விளக்கம் சொல்லவும் கூடியவராகயிருந்தார். இதனால் அவரை மதசொற்பொழிவுகளுக்கு அழைத்திருக்கிறார். கிராமப்புற விவசாயிகளிடம் அவர் பைபிள் குறித்து உரைகள் நிகழ்த்தியிருக்கிறார்


கிராமப்புற மாணவர்கள் பள்ளியில் சென்று கல்விகற்க வேண்டும் என்று அவருக்கு இருந்த ஆசையின் காரணமாக தன் வீட்டின் ஒரு பகுதியில் சிறிய பள்ளிக்கூடம் போல ஒன்றை துவங்கி அதில் விவசாய குடும்பத்தை  சேர்ந்த மாணவர்களை வரவழைத்து தானே பாடம் நடத்தியிருக்கிறார்.


அதுபோலவே தன் பண்ணையில் விளையும் தானியங்களில் இருந்து ஒரு கஞ்சி தொட்டி உருவாக்கபட்டு தன் ஊரை கடந்து செல்லும் எவரும் எப்போதும் அங்கே வந்து சாப்பிட்டு செல்லலாம் என்ற நடைமுறை ஒன்றையும் ஏற்படுத்தியிருக்கிறார்


**
பிள்ளைகள் வளர்ந்து தன் பேச்சை கேட்க மறுத்த நாட்களில் அவருக்குள் பொங்கி வழிந்த கோபத்தால் அவர் கடுமையாக நடந்திருக்கிறார். குறிப்பாக தன் மகள் தன் பேச்சை மீறி கல்யாணம் செய்து கொள்ளப் போவதைக் கண்டித்து அவர் சிலநாட்கள் வீட்டிலே சாப்பிடாமல் உண்ணாநோன்பு இருந்திருக்கிறார்.


பின்பு அவராகவே உணர்ந்து அதை ஏற்றுக் கொண்டதோடு தன்னை பொறுத்தவரை தன்பிள்ளைகள் எவருக்கும் வயதாவது தனக்குத் தெரியவதேயில்லை என்ற குறிப்பு ஒன்றையும் எழுதியிருக்கிறார்


**– பகுதி 1 –


 

0Shares
0