டால்ஸ்டாயோடு நடந்தேன் 2

எல்லா அப்பாக்களும் பையன்களை விடவும் பெண்கள் மீதே அதிக அன்பும் நெருக்கமும் கொண்டிருக்கிறார்கள். அதுவும் எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை. ஏதோவொரு மகள் அப்பாவின் மிகுந்த அன்பிற்கும்  பரிவிற்கும் உள்ளாகிறாள்.


அப்படி டால்ஸ்டாயின் அன்பிற்கு உரியவளாக இருந்தவள் மாஷா. தன்னுடைய குழந்தைகளை முத்தமிடுவதை கூட ஒரு சடங்கு போல செய்யக்கூடியவர் டால்ஸ்டாய். தாயின் வளர்ப்பில் மட்டுமே உருவானவர்கள் அவரது பிள்ளைகள். அந்த நிலையில் மாஷா ஒருத்தி மட்டும் அப்பா எழுதிக்கொண்டிருக்கும் போது அருகில் நின்று பேசுவது அவரை கொஞ்சுவது அப்பாவோடு ஒன்றாக நடைபயிற்சி போவது. அப்பாவிடம் கதை கேட்பது என்று தனிஉரிமை கொண்டிருந்தாள்.


அவளை டால்ஸ்டாய் ஒரு போதும்கோவித்துக் கொண்டதே கிடையாது. அவளும் உறங்க போகும் நிமிசம் வரை அப்பாவை பற்றியே நினைத்துக் கொண்டிருப்பாள். சிறுவயதிலே தாயை இழந்து போன டால்ஸ்டாய்க்கு அவரது மகள் தன் தாயின் மாற்று வடிவமாகவே இருந்தாள்.


மாஷாவை இதனாலே வீட்டிலிருந்த மற்ற பிள்ளைகளுக்கு பிடிக்காமல் போனது. மாஷா எப்போதும் சுத்தமான உடைகள் அணிய கூடியவள். நேர்த்தியாக எழுதவும் படிக்கவும் தெரிந்தவள்.  ஆனால் அவள் ஒரு நோயாளி. அதுவும் பலவீனமான நுரையீரல் கொண்டவள். குளிர் அவளை படுத்தி எடுத்தது. நோய் முற்றி படுக்கையில் கிடந்த நாட்களில் டால்ஸ்டாய் அருகிலே இருந்து அவளை கவனித்திருக்கிறார்.


தன்வாழ்நாள் முழுவதும் மகள் அருகிலே இருக்க வேண்டும் என்பதற்காகவே மாஷாவை அருகிலே திருமணம்செய்து கொடுத்திருக்கிறார். சொத்தில் தனக்கு உள்ள பங்கை கூட வாங்க மறுத்த மாஷா தான் அப்பாவின் நெருக்கத்தில் இருப்பதையே விரும்பியிருக்கிறாள்


இடைவிடாத நோய்மை அவளை வத்தது. நோய்முற்றிய நிலையில் அவள் அப்பாவோடு கூடவே இருந்தாள். எந்த நேரமும் அவள் இறந்துபோய்விடுவாள் என்பதை டால்ஸ்டாய் உணர்ந்திருந்தார்.


ஆனால் அது நடந்துவிடக்கூடாது என்பதற்காக அவர் ரகசியமாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். நுரையீரல் அழற்சி காரணமாக நிமோனியா முற்றி அவள் ஒரு நாளில் மரணம் அடைந்தாள். அந்த தகவல் அவளது மற்ற சகோதரர்கள் பலருக்கும் அளிக்கபடுகிறது. அவர்கள் அதை எதிர்பார்த்திருந்தார்கள். இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக குடும்பம் தயார் ஆனது. டால்ஸ்டாய் அழவேயில்லை.தன் மகளுக்கு விருப்பமான ஆடையை அணிந்து கொண்டு மிக மௌமனமாக சவப்பெட்டியின் முன்னால் நடந்து சென்றிருக்கிறார். அவளை புதைத்துவிட்டு திரும்பிய பிறகும் கூட அவர் தன் வேதனையை வெளிப்படுத்தவேயில்லை. பலரும் டால்ஸ்டாய்க்கு ஆறுதல் சொன்னார்கள். அது எதுவும் அவருக்குள் போகவேயில்லை. அவர் அந்த வலியை கொஞ்சம் கொஞ்சமாக தனக்குள் நிரப்பிக் கொண்டார்.


ஒரு நாள் அவரது பண்ணையில் வேலைசெய்யும் விவசாயி அவரை சந்தித்து இப்படி தானும் பெண் பிள்ளைகளை பெற்று பறிகொடுத்திருக்கிறேன். எதற்காக கடவுள் இப்படி நடந்துகொள்கிறார். வாழ்க்கையின் அர்த்தம் தான் என்ன என்று புலம்பிய போது தன்னை அறியாமல் அழுததோடு இவ்வளவு காலம் எவ்வளவோ எழுதி படித்து வந்த போதும் வாழ்க்கையை பற்றி தனக்கு எதுவும் தெரியாது. வாழ்க்கை இரக்கமற்றது என்று புலம்பியிருக்கிறார். மகளின் மரணம் டால்ஸ்டாய்க்குள் எப்போதும் தீராத வலி தருவதாக இருந்தது. இறந்து போன மகளின் இடத்தை நிரப்புவதற்காகத் தானோ என்னவோ அவர் தன் படைப்பில் வலிமையான பெண் கதாபாத்திரங்களாக உருவாக்க முயன்றார் என்று தோன்றுகிறது.


**
தன் காலத்தில் வாழ்ந்த எந்த எழுத்தாளரோடும் டால்ஸ்டாய் சண்டையிட்டதில்லை. துவேசத்துடன் எதையும் எழுதியதில்லை. மாறாக மிகுந்த இணக்கத்துடன் அரவணைப்போடு தான் நடந்து கொண்டிருக்கிறார். துர்கனேவ் அவரை பற்றி குறிப்பிடும் போது டால்ஸ்டாய் ஒருவர் தான் தன்னோடு ஒருபோதும் சண்டையிடாதவர் இவ்வளவிற்கும் அவரை எவ்வளவோ காயப்படுத்தியிருக்கிறேன். ஆனால் அதை டால்ஸ்டாய் பெரிதாக எடுத்துக் கொண்டதேயில்லை என்று குறிப்பிடுகிறார்.


ஆனாலும் துர்கனேவ் தன்னுடைய மகளை படிக்க வைப்பதில் காட்டிய துவேசம் காரணமாக அவரோடு பதினாறு வருடங்கள் டால்ஸ்டாய் பேசாமலே இருந்திருக்கிறார். செகாவ், கார்க்கி போன்றவர்கள் டால்ஸ்டாயின் மேதமை பற்றி மிக உயர்வாகவே சொல்கிறார்கள்.


டால்ஸ்டாய் எழுதுவதில் ஒருபோதும் சோர்வடைந்ததேயில்லை. அவரது எழுத்திற்கு பெரும்பலமாக இருந்தது அவரது மனைவி. டால்ஸ்டாயின் மனைவி அவரை இம்சைசெய்தார் என்ற பொதுவான எண்ணங்களை தாண்டி அவர் டால்ஸ்டாயின் வேலைகளில் கொண்ட ஈடுபாடும் அர்ப்பணிப்பும் மறக்கமுடியாதது.


டால்ஸ்டாயின் கையெழுத்து மிக சுமாரானது. அதனால் அவரால் நேர்த்தியாக எழுத முடியாது. அத்தோடு இலக்கணப்பிழைகள் மலிந்தது. கையெழுத்து பிரதிகளின் குறுக்கும் நெடுக்காக மாற்றங்கள் எழுதி சேர்க்க கூடியவர் டால்ஸ்டாய்.


அதனால் அவரது கையெழுத்து பிரதியை முழுமையாக அவரது மனைவி தன் கையெழுத்தில் மாற்றி பிழைகள் நீக்கி எழுதி பதிப்பகத்திற்கு அனுப்புவதோடு அங்கிருந்து அனுப்பபடும் பிழைத்திருத்தம் அத்தனையும் சரிசெய்து டால்ஸ்டாயின் ஒப்புதலோடு பதிப்பகத்திற்கு அனுப்பியிருக்கிறார்.


டால்ஸ்டாய் திருத்தபட்ட பிரதிகளை அச்சிற்கு அனுப்பிய பிறகுகூட அதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து தொடர்ந்து கடிதம் எழுதுவார். சில நேரங்களில் அவர் சில சொற்களுக்கு மாற்றான இணைசொற்களை கண்டுபிடித்து அவற்றை தந்தியடித்து மாற்ற செய்திருக்கிறார்.


நான்காயிரம் பக்கம் கொண்ட கையெழுத்து பிரதியாக ஒரு நாவலை எழுதி அதை நான்கு முறை திருத்தி எழுதியிருக்கிறார் என்பது எளிமையானதில்லை.
**
ஒரு இரவு தன்னுடைய அறையில் இருந்து பார்த்தபோது பின்னிரவில் தொலைதுரமான ஒரு இடத்தில் வெளிச்சம் வருவதை கண்டிருக்கிறார் டால்ஸ்டாய். அது என்ன வெளிச்சம் . பனிபெய்யும் அந்த இரவில் யார் விழித்திருக்க போகிறார்கள் என்ற யோசனையோடு தன் வீட்டிலிருந்து கிளம்பி வெளிச்சத்தை நோக்கி நடந்திருக்கிறார்.


தாங்கமுடியாத குளிர் நகரை நடுக்கி கொண்டிருக்கிறது. வெளிச்சம் வந்தஇடம் எங்கே என்று தெரியவில்லை. தேடி கண்டுபிடித்த போது உறங்க இடம் கிடைக்காத பிச்சைகாரர்கள் ஒரு இடத்தில் குளிர்காய்வதற்காலக நெருப்பிட்டு அதன்முன்பாக அமர்ந்தபடியே குளிரை போக்கிக் கொண்டு துங்கிவழியும் முகமும் பசியுமாக இருந்திருக்கிறார்கள். டால்ஸ்டாயை கண்டவுடன் அவர்கள் உறக்கத்தை கலைத்துக்கொண்டு பணம் பணம் என்று கையேந்தி யிருந்திருக்கிறார்கள்.சாப்பிடுவதற்காக ஏதாவது தரும்படியாக அவர் கால்களை கட்டிக் கொண்டு கதறியிருக்கிறார்கள். நடுக்கமும் வேதனையுமாக தன்கையில் உள்ள பணம் முழுவதையும் தந்துவிட்டு வீடு திரும்பிய டால்ஸ்டாய் என்ன வாழ்க்கை இது எதற்காக இவர்கள் இப்படி குளிரில் நடுங்கிக் கொண்டு இந்த நகரில் வசிக்க வேண்டும்.


எங்கோ கடைகோடியில் உள்ள ஒரு ரஷ்ய கிராமத்தில் கூட விவசாயி குளிருக்கு பாதுகாப்பாக ஒரு வீடு அமைத்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறான். இவர்கள் எதற்காக நகருக்கு வந்தார்கள். ஏன் இப்படி மக்கள் வாழ்க்கை நிம்மதியாக உறங்க கூட முடியாமல் இருக்கிறது என்று நீண்ட யோசனைகளுடன் இவர்களுக்கு தன் எழுத்தால் என் பயன் இருக்க போகிறது என்ற சலிப்பும் பற்றிக் கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சி தான் டால்ஸ்டாயை கிறிஸ்துவ மதத்தின் மீது மிகுந்த ஈடுபாட்டையும் ஆன்மவிடுதலை பற்றிய எண்ணங்களுக்கும் மூலகாரணமாக இருந்திருக்கிறது
 
டால்ஸ்டாய் பசியை தாங்க முடியாதவர். அத்தோடு உணவு அருந்து மேஜையின் முன்பாக வந்து அமர்ந்தவுடன் பரிமாறப்பட்ட  முதல் உணவை வேகவேகமாக சாப்பிடக்கூடியவர். ஒரு காலத்தில் வேட்டைகாரராக இருந்த அவர் பின்பு தானாகவே விரும்பி மாமிச உணவை சாப்பிடுவதை விலக்கி கொண்டார். அதனால்  அவருக்கு என்று சமைப்பதற்காகவே தனியே சமையற்காரன் ஒருவன் வீட்டில் இருந்தான். அவன் ஒவ்வொரு நாளும் சமைக்க படவேண்டிய உணவை பற்றி முன்னதாகவே அவரோடு பேசி முடிவு செய்தே சமைப்பான்.


தனக்கு பெரும்பசி உண்டு என்று டால்ஸ்டாயே குறிப்பிடுகிறார். அத்தோடு சாப்பாட்டின் முன் உட்கார்ந்தவுடன் தனக்குள் அசுரத்தனம் வந்துவிடுகிறது. தன்வாழ்நாளில் ஒரு நாளும் நிதானமாக உணவு அருந்த தன்னால் முடிந்ததேயில்லை என்கிறார்


**
வயதான நாளில் தன்வீட்டை விட்டு வெளியேறி டால்ஸ்டாய் அலைய துவங்கியதற்கும் காரணம் ஒரு விவசாயியே. அவன் ஒரு நாள் டால்ஸ்டாயை சந்தித்து வயதான பிறகும் எதற்காக ஒரு மனிதன் தன் குடும்பம் பிள்ளைகள் என்று மட்டுமே ஒடுங்கியிருக்க வேண்டும். மிச்சமிருக்கும் வாழ்நாளை கடவுளுக்காக செலவழிக்கலாம் தானே என்று சொன்னது டால்ஸ்டாய்க்கு ஒப்புதலாக இருந்தது. அவர் தன் அந்திம காலத்தில் யாவரையும் விலக்கி தனியே கிளம்பி சென்றார்.


வழியில் நோயுற்று ஒரு ரயில்நிலையத்தில் வீழ்ந்தார். அவரை அடையாளம் கண்டு தந்தி கொடுத்து வீட்டிற்கு கொண்டுவந்து சேர்த்தார்கள். தன் இறுதி நெருங்கிவிட்டதை அறிந்த அவர் ஒவ்வொருவருக்காக நன்றி தெரிவிக்க விரும்பினார். தன்பிள்ளைகள் மனைவி தன்வீட்டிலிருந்த நாய் என்று தன்னை சுற்றிய ஒவ்வொன்றிற்கும் டால்ஸ்டாய் நன்றி தெரிவித்திருக்கிறார். முடிவில் தன் மகனை அழைத்து தான் பிறந்ததில் இருந்த தன்னை அறிந்த மரம் ஒன்று இருக்கிறது. அதை வெட்டாமல் பார்த்துக் கொள்ளவும் என்று சொல்லியிருக்கிறார்.


**
டால்ஸ்டாயின் வாழ்வில் நாய்களுக்கும் குதிரைகளுக்கும் மிக முக்கிய இடமிருந்தது. அவர் நாய்கள் வளர்ப்பதிலும் நாயை அழைத்துக் கொண்டு வேட்டைக்கு செல்வதிலும் அதிக ஆர்வம் காட்டினார். குறிப்பாக அவரது வீட்டில் வேலைக்காரியாக இருந்த அகப்யாவிற்கு நாய்கள் என்றால் பிரியம். அவள் நாய்களை கவனிப்பதையே தன் முக்கிய வேலையாக வைத்திருந்தாள். வேட்டைக்காக டால்ஸ்டாய் கிளம்பி சென்ற நாட்களில் அவள் நாய்கள் நலமாக வீடு திரும்பி வர வேண்டும் என்று கடவுளிடம்பிரார்த்தனை செய்து மெழுகுவர்த்தி ஏற்றியிருக்கிறாள்.


அது போலவே வேட்டை முடித்து நாய்கள் திரும்பி வந்தவுடன் அவற்றை கொஞ்சி பேசி சாப்பிட வைத்து தனித்தனியாக தன்னிஷ்டம் போல அலைய விடுவாள். ஏன் அந்த வேலைக்காரிக்கு நாய்களிடம் அப்படியொரு ப்ரியம் இருந்தது என்று எவருக்குமே புரியவில்லை. டால்ஸ்டாய் நாய்களின் தன்மையை அறிந்தவர் என்பது அவரது நாவல்களில் பலஇடங்களிலும் நுட்பமாக வெளிப்பட்டுள்ளது.


குதிரைகளை வளர்த்து பெரிய பண்ணை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே அவர் ஸ்டெப்பி பகுதியில் நிலம் வாங்கி அங்கே குதிரைகள வளர்ப்பதற்கு முயன்றிருக்கிறார். குதிரை சவாரி செய்வதில் அவருக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் குதிரை சவாரி செய்வது தான் தன் உடல் ஆரோக்கியத்திற்கான முக்கிய காரணம் என்று  டால்ஸ்டாய் குறிப்பிடுகிறார்.


*
டால்ஸ்டாயின் வீட்டில் இருந்த இன்னொரு வேலைக்காரி இரவில் உறங்குவதேயில்லை. அவள் தன் வயிற்றில் ஒரு மரம் வளர்வதாகவும் அது பெரியதாகி கிளைவிடுவதால் தன்னால் உறங்கமுடியவிலலை என்று நம்பிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் இரவில் அவள் யார்  ? என்ன செய்து கொண்டிருக்கிறாள்? என்று இருள் அவளை கேட்டுக் கொண்டேயிருப்பதாகவும் அந்த கேள்விக்கான பதிலை தான் யோசித்து யோசித்து சலிப்படைந்து போய்விட்டதாகவும் அதனால் தனக்கு உறக்கமே வருவதில்லை என்று சொல்லியிருக்கிறாள். அதனாலே அவளை சாக்ரடீஸ் என்று டால்ஸ்டாய் கேலி செய்வதும் உண்டு.


**
முதுமை எல்லோரையும் போலவே டால்ஸ்டாயையும் நினைவுகள் தடுமாற செய்தது. பல நேரங்களில் அவர் ஒரு சிறுகுழந்தையை போல தன்னை யாராவது அரவணைத்து தூக்கும்படியாக மன்றாடியிருக்கிறார். தன் சொந்த பிள்ளைகளை யார் அவர்கள் என்று கேட்டிருக்கிறார். ஐம்பது வருடங்களுக்கு முன்னால் இறந்து போன தனது சகோதரன் ஏன் தன்னை பார்க்க வரவில்லை என்ற கோவித்து கொண்டிருக்கிறார். பலநேரங்களில்  இது தன்னுடைய வீடில்லை என்று மறுத்திருக்கிறார். ஆனால் சிறுவயதின் நினைவுகள் துல்லியமாக இருந்திருக்கின்றன. தன் தாயை பற்றியும் தன் அப்பாவை பற்றியும் அவர் மிக விரிவாக நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.


**
அவர் விரும்பியபடியே ஆப்பிள் தோட்டத்தின் நடுவில் அவரது கல்லறை அமைக்கபட்டது. நிழலும் வெயிலும் பனியும் குளிர்காற்றும் எப்போதும் டால்ஸ்டாயின் புதைமேட்டினை கடந்து செல்கின்றன. நீண்ட மௌனத்தினுள் அவர் பூமியினுள் புதையுண்டு கிடக்கிறார். எங்கோ பெயர் தெரியாத ஊர்களில் திரும்ப திரும்ப டால்ஸ்டாய் வாசிக்கபட்டுக் கொண்டேயிருக்கிறார். எழுத்து தன் நீண்ட பயணத்தில் யாவரையும் ஒன்று சேர்ந்துவிடுகிறது.


*
 


 


 

0Shares
0