டாவின்சி- கலையும் வாழ்வும்

வான்கோ, பிக்காசோ, லியோனார்டோ டாவின்சி இந்த மூவர் குறித்தும் ஆண்டுக்கு ஒரு ஆவணப்படம் அல்லது திரைப்படம் வெளியாகிறது. புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள் மற்றும் தொலைக்காட்சியால் உருவாக்கபடும் இந்தப் படங்கள் உலகெங்கும் திரையிடப்படுகின்றன. பெரும்வரவேற்பைப் பெறுகின்றன.

கார்செஸ் லம்பேர்ட் இயக்கிய I, Leonardo 2019ல் வெளியானது. இப்படம் டாவின்சியின் அறிவியல் ஈடுபாட்டினை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. குறிப்பாக டாவின்சியின் கோட்டுச்சித்திரங்கள் பற்றியும் அவரது ஓவியங்களுக்கு மாடலாக இருந்தவர்கள் யார். அவர்களுடன் டாவின்சிக்கு எத்தகைய உறவு இருந்தது என்பது குறித்தும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

மனித உடலின் வடிவத்தையும் அழகினையும் டாவின்சி ஆழ்ந்து ரசித்து வரைந்திருக்கிறார். ஒரு நபரின் உடலமைப்பை உண்மையாகச் சித்தரிக்க, முதலில் ஒரு மனிதனின் தசைகள் மற்றும் எலும்புக்கூடு எவ்வாறு அமைந்துள்ளது. எப்படி ஒன்றாகப் பொருந்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் டாவின்சி. ஆகவே உடலின் இயக்கம் மற்றும் உடற்கட்டுமானம், நரம்புகள், எலும்புகளின் இயல்பு பற்றிய அவரது புரிதல் வியப்பளிக்கிறது

லியோனார்டோ டா வின்சி பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக இருந்தார். தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திப் பணம் ஈட்டுவதை விடவும் கலையின் உன்னத நிலையை அடைவதற்காகவே போராடியிருக்கிறார். டாவின்சி தனது தந்தையைப் பற்றிச் சில குறிப்புகள் எழுதியிருக்கிறார். ஆனால் தாயைப் பற்றி அதிகம் பேசவில்லை. தாய் தனியே வாழ்ந்து வந்தார். ஆகவே அவர் பெரும்பாலும் தனது தந்தையின் குடும்பத்துடன் வளர்ந்ததாகத் தெரிகிறது,

இப்படத்தின் ஒரு காட்சியில் அவர் தனது தாயை நினைவுகூறுகிறார். டாவின்சியின் அம்மா அடிதட்டு வகுப்பை சேர்ந்தவர். தந்தை ஒரு வழக்கறிஞர். டாவின்சி பிறந்தபிறகே அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு முன்பு பிறந்த பிள்ளைகளைக் கள்ளக்குழந்தைகளாக அன்றைய சமூகம் கருதியது. ஆகவே அவர் தனது தாயைப் பற்றிப் பொதுவெளியில் அதிகம் பகிரவில்லை.

புளோரன்ஸில் வசித்த ஓவியரும் சிற்பியுமான ஆண்ட்ரியா டெல் வெரோச்சியோவிடம் டாவின்சி கலைகள் கற்றுக் கொண்ட நாட்களைப் படம் சிறப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளது. அந்தக் கலைக்கூடத்தில் சேர்ந்த போது அவரது வயது 14. டாவின்சி இடது கைப் பழக்கம் உடையவர்.

பத்து ஆண்டுகள் வெரோச்சியிடம் கலைபயின்றிருக்கிறார். இயற்கையைப் பற்றிய அவரது ஆய்வைப் பதிவு செய்வதற்கான ஒரு கருவியாக வரைதல், இருந்திருக்கிறது. அவரது ஆர்வமும், அறிவுப் பசியும் தொடர்ந்து பல்வேறு துறைகளில் கவனம் கொள்ளச் செய்திருக்கின்றன

டாவின்சி மீது நம்பிக்கை கொண்டிருந்த போதும் அவரை வெரோச்சி புரிந்து கொள்ளவில்லை.. கடைசி விருந்து ஓவியத்தை வரைவதற்கு முன்பு இதை உலகின் உன்னதமான ஒவியமாக வரைந்து முடித்துவிட்டால் தனது திராட்சை தோட்டத்தைப் பரிசாகத் தருவதாகச் சொன்னார் வெரோச்சி. தன் மனதில் அந்த ஓவியம் முழுமையடையாமல் தன்னால் சுவரில் வரைய முடியாது என்று உறுதியாகச் சொன்னார் டாவின்சி.

வெரோச்சி கலைக்கூடத்தில் பெற்ற பயிற்சிகள் தான் பின்பு அவரை ஒப்பற்ற ஓவியராக ஒளிரச் செய்தது. இந்தத் திரைப்படத்தில் கடைசிவிருந்து ஒவியத்தைத் தனது மனதில் டாவின்சி எப்படி உருவாக்கினார் என்பதையும் யூதாஸின் முகத்திற்கான மாடலைத்தேடி அன்றாடம் சந்தையில் சுற்றி அலைந்தார் என்பதையும் குறிப்பிடுகிறார்கள். ஆயிரக்கணக்கான முகங்களைக் கடந்த பிறகு தனக்கான யூதாஸின் முகத்தினை டாவின்சி கண்டுபிடித்திருக்கிறார்.

தனது சீடர்களில் ஒருவன் தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்று இயேசு சொன்னதைக் கேட்டுச் சீடர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதையே கடைசி விருந்து ஓவியம் சித்தரிக்கிறது. இயேசுவின் சீடர்களின் முகங்கள் மற்றும் அதன் கோணம். உணவு மேஜையில் உள்ள ரொட்டித் துண்டுகள். இயேசுவின் முகபாவம், அவரது சீடர்களுக்குள் உள்ள நெருக்கம் மற்றும் கவலை, திகைப்பு. எனத் துல்லியமாக உணர்ச்சிகளைச் சித்தரித்துள்ளார் டாவின்சி. இதற்கான ஒத்திகையை அவர் தொடர்ந்து மேற்கொள்வதையும் அவரே இயேசுவாக மாறி உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதையும் படத்தில் காணமுடிகிறது.

டாவின்சியின் அறிவு தீர்க்கமானது. அவர் பறக்கும் இயந்திரங்கள், ஒரு வகைக் கவச போர் வாகனம், சூரிய சக்தி இயந்திரம் எனப் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை வரைந்திருக்கிறார். இது போலவே உடற்கூறியல், சிவில் இன்ஜினியரிங், புவியியல், ஒளியியல் மற்றும் கட்டிடக்கலையில் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருக்கிறார்.

படத்தின் ஒரு காட்சியில் அழகு குறித்த தனது பார்வையை டாவின்சி வெளிப்படுத்துகிறார். குறிப்பிட்ட கோணம் அழகை முழுமையாக்குகிறது என்று சொல்கிறார். அதைக் கேட்ட இளம் பெண் காலத்ததால் அழகும் காதலும் அழிக்கபட்டுவிடும் என்கிறாள். அதற்குச் சிரித்தபடியே கலை அழகை நிரந்தரமாக்கிவிடும் என்று சொல்கிறார் டாவின்சி. அவர் அழகு எனச் சொல்வது புற அழகினை மட்டுமில்லை. உலகம் அருவெருப்புக் கொண்டு ஒதுக்குகிற விஷயங்களில் அவர் அழகினைக் கண்டார். உடலின் தசைகளையும் நரம்புகளையும் அழகின் வடிவமாகக் கருதினார்.

இளமை மற்றும் முதுமை, அழகு மற்றும் அசிங்கத்திற்கு இடையிலான வேறுபாடுகளை அவரைப் போல ஆராய்ந்தவரில்லை. ஒரே உடலில் துயரமும் மகிழ்ச்சியும் இரு தலைகள் கொண்டிருப்பதாக ஒரு ஒவியத்தை வரைந்திருக்கிறார். அந்தப் புரிதல் முக்கியமானது. கர்ப்பத்திலுள்ள சிசுவின் தோற்றம் மற்றும் இயக்கங்களை அவர் வரைந்துள்ள விதம் பிரமிக்க வைக்கிறது.

லியோனார்டோ டாவின்சியின் வாழ்க்கை மற்றும் ஓவியங்கள் குறித்து ஆழ்ந்த புரிதல் கொண்டவர் கலைவிமர்சகர் கென்னத் கிளார்க். டாவின்சியின் ஓவியங்களை ஆராய்வதிலே தனது வாழ்க்கையைக் கழித்திருக்கிறார். டாவின்சி பற்றி விரிவான புத்தகம் ஒன்றையும் எழுதியிருக்கிறார். டாவின்சியின் புகழ்பெற்ற ஒவியங்கள் குறித்த கென்னத் கிளார்க்கின் பார்வைகள் முக்கியமானவை. கலைஞர்களின் குறிக்கோள் வெளிப்புறத் தோற்றத்தை வரைவது மட்டுமல்ல, அவர்களின் உள் எண்ணங்களையும் வெளிப்படுத்த வேண்டும். அதை டாவின்சி சிறப்பாகச் செய்திருக்கிறார் என்கிறார் கென்னத் கிளார்க்

லியோனார்டோவின் பல உருவப்படங்களில், ஒரு நிறம் எந்த இடத்தில் முடிவடைகிறது, மற்றொன்று எந்தப் புள்ளியில் தொடங்குகிறது என்று சொல்வது சாத்தியமற்றது இந்தக் காரணத்திற்காக, லியோனார்டோ “தெளிவற்ற” முகபாவனையை உருவாக்கினார். தெளிவற்ற வெளிப்பாடுகளில் ஒரு நிலையான தோற்றமயக்கம் ஏற்படுகிறது. இந்த நோக்கத்திற்காக “ஸ்ஃபுமாடோ” (புகை போல மறைந்து போவதற்கான இத்தாலிய வார்த்தை) நுட்பத்தை உருவாக்கினார். இந்த நுட்பம் லியோனார்டோவால் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் அதை அவர் சரியாகப் பயன்படுத்தினார்.. மேம்படுத்தினார் என்பதே நிஜம்.

மிலனில் உள்ள சாண்டா மரியா டெல்லே கிரேசியின் சுவரில் கடைசி விருந்து ஓவியத்தை டாவின்சி வரைந்திருக்கிறார். லியோனார்டோ இந்த ஒவியம் மனதின் இயக்கங்களைக் காட்சியாகச் சித்தரிக்கிறது. மேசையின் எதிர் பக்கத்தில் வரையப்பட்ட யூதாஸ், மற்ற அப்போஸ்தலர்களிடமிருந்து அவரது நிழல் முகத்தால் தனித்துத் தெரிகிறார்.

கட்டிடக் கலைக்காக உருவாக்கபட்ட கோல்டன் ரேஷியோ எனப்படும் கோட்பாட்டினை தனது ஒவியங்களில் டாவின்சி பயன்படுத்தியிருக்கிறார் . லியனார்டோ சரியான கண்ணோட்டத்துடன் காட்சிகளை வரைவதற்கு உதவும் ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்தார். இந்த இயந்திரம் பெர்ஸ்பெக்டோகிராஃப் என்று அழைக்கப்பட்டது, கேமிராவின் முன்னோடி என இதைச் சொல்லலாம். லியோனார்டோ தான் ஓவியம் வரைய விரும்பிய காட்சியின் முன் கண்ணாடிக்கருவியை வைத்து அதன் துளை வழியாகப் பார்த்து, காட்சியின் வெளிப்புறத்தை கண்ணாடி துண்டில் வரைவது வழக்கம். இப்படத்தில் அந்தக் காட்சி இடம்பெற்றுள்ளது.

லியோனார்டோ டாவின்சி தண்ணீரை “இயற்கையின் வாகனம்” என்று அழைக்கிறார். நமது உடலுக்கு இரத்தம் எப்படி ஆதாரமாக இருக்கிறதோ அது போலவே உலகிற்குத் தண்ணீர் ஆதாரமாக இருக்கிறது. ஆகவே லியோனார்டோவின் பல ஓவியங்கள் தண்ணீரைக் கொண்டிருக்கின்றன. இப்படத்தின் ஒரு காட்சியில் அடுப்பில் தண்ணீர் சூடாகிக் கொதித்துக் கொண்டிருக்கிறது. தண்ணீரை ஒடுக்குவதற்காக நெருப்பு அதனைச் சூடேற்றுகிறது எனக் கதை போல டாவின்சி சொல்கிறார். முடிவில் தண்ணீர் பொங்கி வழிந்து நெருப்பை அணைத்துவிடுகிறது. அதைக்கண்டு உற்சாகமாகி தண்ணீர் தான் எப்போதும் வெல்கிறது என்கிறார் டாவின்சி.

அவர் திரவ இயக்கவியலைப் புரிந்து கொள்ள விரும்பினார்: நீர் செல்லும் வழி. ஓட்டம், வேகம், வெள்ள மேலாண்மை மற்றும் சுழல்கள் குறித்து ஆராய்ந்திருக்கிறார். நீர்பொறிகளை உருவாக்கியிருக்கிறார். அதன்வழியே நவீன நீர் பொறியியல் துறைக்குப் பல பங்களிப்புகளைச் செய்துள்ளார், தண்ணீரில் நடக்கத் தனித்துவமான காலணிகளைக் கூட உருவாக்கினார். அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.

ஜியான் கியாகோமோ கப்ரோட்டி எனும் பத்து வயது சிறுவன் டாவின்சியின் கலைக்கூடத்தில் உதவியாளராக வந்து சேர்ந்தான். அவனைத் தனது மாடலாக வைத்து ஓவியங்கள் வரைந்திருக்கிறார். டாவின்சியின் கலைக்கூடத்திலிருந்த சில்லறைக்காசுகளை அவன் திருடிச் சென்றுவிடுவது வழக்கம். ஆனாலும் அவனது தோற்றம் மற்றும் முகபாவத்திற்காகப் பல காலம் தனது உதவியாளராக வைத்திருந்தார். சலாய் என்று அவனை அன்போடு அழைத்தார். Saint John The Baptist ஒவியத்திற்கான மாடலாக இருந்து சலாய் தான். டாவின்சி அவனது தோற்றத்தை மட்டுமின்றி ஆன்மாவையும் தனது ஒவியத்தில் சிறப்பாக வரைந்திருக்கிறார். படத்தில் இந்தக் காட்சியை வரையும் போது அவன் விளையாட்டுத்தனமாக நடந்து கொள்கிறான். டாவின்சி அவனைக் கோவிப்பதில்லை. மாறாக அவனுக்குத் தான் எதை வரைகிறேன் என்று புரிய வைக்கிறார்.

இப்படத்தில் டாவின்சியின் பன்முகத்தன்மை முழுமையாக வெளிப்படுத்தபட்டுள்ளது. நிலையற்ற, மாறும் மன நிலைகள், எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை டாவின்சி ஆராயும் விதம் படத்தின் தனிச்சிறப்பு என்பேன். தேர்ந்த ஒளிப்பதிவு மற்றும் அரங்க அமைப்புகள் படத்திற்குக் கூடுதல் அழகு தருகின்றன. ஒரே குறை டாவின்சியாக நடித்தவர் செயற்கையாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார் என்பதே.

0Shares
0