Armando’s Tale of Charles Dickens என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன்

தொலைக்காட்சி தயாரிப்பாளர் மற்றும் இலக்கிய ஆர்வலரான அர்மாந்தோ யெனூச்சி சார்லஸ் டிக்கன்ஸின் தீவிர வாசகர். அவர் பிபிசிக்காக இந்த ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார்
டிக்கன்ஸ் பிறந்து இருநூறு ஆண்டுகள் ஆகின்றன. அவரது நாவல்கள் பல்வேறு நாடுகளில் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. நாடகமாகவும் தொலைக்காட்சித் தொடராகவும் இன்றும் உருவாக்கப்படுகின்றன.
டிக்கன்ஸின் டேவிட் காப்பர்ஃபீல்டு, ஆலிவர் டுவிஸ்ட் போன்ற நாவல்களை இன்றைய தலைமுறை விரும்பிப் படிக்கிறார்களா. அல்லது அவர் வெறும் கலாச்சாரப் பிம்பம் மட்டும் தானா என்ற கேள்வியை முன்வைத்து தனது ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார்
குறிப்பாக டேவிட் காப்பர்ஃபீல்டை முன்வைத்து டிக்கன்ஸின் மொழி மற்றும் கதாபாத்திரங்களின் தனித்துவம், நாவல் உருவான விதம் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்.

ஆண்டுதோறும் டிக்கன்ஸ் பற்றிப் புதிது புதிதாகப் புத்தகங்கள் வந்தபடியே இருக்கின்றன. அவர் குறித்த விசேசக் கண்காட்சிகளும் நடைபெறுகின்றன. ரஷ்ய இலக்கியமேதைகளான டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி இருவரும் டிக்கன்ஸை விரும்பிப் படித்திருக்கிறார்கள். அவரை ஆதர்சமாகக் கொண்டு நாவல் எழுதியிருக்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கி தனது அறையில் டிக்கன்ஸ் ஒவியம் ஒன்றை மாட்டி வைத்திருந்தார். ஐரோப்பாவின் முக்கிய எழுத்தாளர்கள் பலரும் டிக்கன்ஸைக் கொண்டாடினார்கள். ஆனால் இன்று அந்த அலை ஒய்ந்துவிட்டது. சிறிய வட்டத்தினர் மட்டுமே டிக்கன்ஸை வாசிக்கிறார்கள்.
டிக்கன்ஸின் வாழ்க்கை அவரது ரகசிய காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றிய கட்டுரை தொகுப்புகள் வந்துள்ளன. டிக்கன்ஸின் பயணங்கள் குறித்து தனிப் புத்தகம் வெளியாகியுள்ளது. டிக்கன்ஸ் எவ்வாறு மக்கள் முன்பாக கதை படிப்பார் என்பதைப் பற்றி ஆய்வு நூல் வெளியாகியிருக்கிறது. இவற்றைப் படிக்க இன்றைய வாசகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் ஆயிரம் பக்கங்கள் கொண்ட டிக்கன்ஸ் நாவலை வாசிக்க பொறுமையும் விருப்பமும் இல்லை.
டேவிட் காப்பர்ஃபீல்டைத். திரைப்படமாகப் பார்த்திருந்தாலும் நாவலாகப் படிப்பதில் உள்ள சுகம் இணையற்றது, தலைசிறந்த கதைசொல்லியின் ஆற்றலை வாசிக்கும் போது தான் உணர முடிகிறது. குறிப்பாக டிக்கன்ஸின் நகைச்சுவை மற்றும் புத்திசாலித்தனமான ஒன்-லைனர்கள் வியப்பூட்டுகின்றன என்கிறார் யெனூச்சி
விக்டோரியன் யுகத்தினைத் துல்லியமாகத் தனது எழுத்தில் சித்தரித்தவர், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் அடித்தட்டுமக்களின் வாழ்க்கை அவலங்களை நுட்பமாக எழுதியவர் என்ற முறையில் டிக்கன்ஸ் இன்றும் கொண்டாடப்படுகிறார்,
டிக்கன்ஸை ஒரு இலக்கிய பிம்பமாக மாற்றியதன் மூலம் இன்று அவரை வாசிக்க மறந்துவிட்டார்கள். அவரை மீள்வாசிப்பு செய்யவும் டிக்கன்ஸின் மேதமையை எடுத்துச் சொல்லவுமே இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளேன் என்கிறார் யெனூச்சி.
“I believe that the true Dickensian world is our world. Dickens speaks to us now.” என்கிறார் யெனூச்சி. அது உண்மையே. டிக்கன்ஸ் பேசிய விஷயங்கள் சுட்டிக்காட்டிய பிரச்சனைகள் இன்றும் தொடர்கின்றன. இதயமற்ற மனிதனின் குரூரச் செயல்களை ஒடுக்குமுறைகளை டிக்கன்ஸ் நுணுக்கமாக எழுதியிருக்கிறார். அந்த வாழ்க்கை மறைந்துவிடவில்லை. உருமாறியிருக்கிறது.
இலக்கியவாசிப்பை பரவலாக்க இது போன்ற ஆவணப்படங்கள் அவசியமானவை. அர்மாந்தோ யெனூச்சி அதைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்
••