டி.எம்.கிருஷ்ணா

கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவின் உரையைக் கேட்பதற்காக நேற்று மாலை நடைபெற்ற கேணி கூட்டத்திற்குச் சென்றிருந்தேன், நான் அதிகம்  இசைகேட்கிறவனில்லை, ஆனால் கிருஷ்ணா பாடிய சில பாடல்களைக் கேட்டிருக்கிறேன், தனித்துவமான குரல் அவருடையது,  கிருஷ்ணா மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ இருவரது கச்சேரியை முதன்மைபடுத்தி உருவாக்கபட்ட மார்கழி ராகம் என்ற திரைப்படம்  எனக்குப் பிடித்திருந்தது, நேற்று அவர் கர்நாடக இசையை அறிமுகப்படுத்திப் பேசியதும் அதைத் தொடர்ந்த விவாதங்களுக்குப் பதில் அளித்ததும் மிகச்சிறப்பாக இருந்தது,

இசை தொடர்பான அவரது ஆழ்ந்து தெளித்த அறிவு, கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வேகம், புதிய புதிய யோசனைகள், விமர்சனங்கள் என மனுசன் பின்னி எடுத்துவிட்டார், இவ்வளவு அற்புதமான பேச்சைக் கேட்டு நீண்டநாட்களாகிவிட்டது,

கிருஷ்ணாவிற்கு கிரிக்கெட் ரொம்பவும் பிடிக்கும் என்று கேள்விபட்டிருக்கிறேன், நேற்று கேள்வி கேட்டவர்களுக்கு அவர் பதில் சொன்ன விதம் அத்தனையும் சிக்ஸர்கள் தான்.

ஜேகே பள்ளியில் பயின்றவர் என்பதால் இப்படிப் பேசுகிறார் என்று பார்வையாளர்களில் ஒருவர் சொன்னார், மனதில் சரியெனப் படுவதை இவ்வளவு நேர்பட பேசும் ஒரு இசைக்கலைஞரை நான் முதன்முறையாக காண்பதாகவே உணர்ந்தேன், அவர் பேச்சில் பெருமிதமில்லை, யாரைப்பற்றியும் பயமில்லை, தெளிந்த ஞானமே அவரை வழிநடத்துகிறது என்பதைப் பேச்சு முழுவதும் உணர முடிந்தது,

பொதுவாக கர்நாடக இசைகலைஞர்கள் அதிகம் பேசுவதில்லை. பேசினாலும் அதிகம் சுவாரஸ்யமாக இருப்பதில்லை. ஆனால் இவர் விதிவிலக்கு,  கர்நாடக இசையின் வரலாற்றை நுட்பமாக ஆராய்ந்திருக்கிறார், சிலப்பதிகாரம் பற்றிப் பேசுகிறார், அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்தை பற்றி அலசுகிறார், கூத்தின் அடவுகளுக்குள் உள்ள இசைநுணுக்கங்களைச் சுட்டிக்காட்டுகிறார், சரபோஜி மன்னர்கள் இசைக்குச் செய்த சேவையை அடையாளம் காட்டுகிறார், இப்படி இசையின் மாற்றங்களை வரலாற்றுச் சாட்சிகளுடன் பேசியதோடு இன்றைய சபா கச்சேரிகளின் நிலையைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்,

பேச்சின் ஊடாக தெறிக்கும் கேலி தான் அவரது தனித்துவம்

கொக்கோ கோலாவைப் பற்றி சமஸ்கிருத்த்தில் ஒரு பாட்டுப் போட்டு கச்சேரியில் நான் பாடினால் பலரும் அம்பாளைப் பற்றி தான் பாடுகிறேன் என்று நினைத்து மெய்யுருகி ரசிப்பார்கள், அது தான் இன்றைய நிலைமை என்று அவர் சொன்னது பகடியின் உச்சபட்சம்,

கர்நாடக இசையின் கட்டுப்பெட்டித்தனங்களை சுட்டிக்காட்டியதோடு அதன் தனித்துவங்களையும் அழகாக எடுத்துக் காட்டினார். மரபு என்பது வெறும்சுமையா அல்லது சொத்தா, அதை எப்படிப் புரிந்து கொள்வது என்பதைப் பற்றியும் விரிவாகப் பேசினார்,

பக்தி என்பது கடவுளோடு தொடர்புடைய ஒன்றுமட்டுமில்லை என்ற அவரது எண்ணத்தைச் சொன்னவிதம் மிக நன்றாக இருந்தது.

மூன்று மணி நேர நிகழ்விலும் அவரது உற்சாகம் குறையவேயில்லை, முடிவில் அவர் பாடிய சாந்தி நிலவ வேண்டும் பாடல் வீடு வந்து சேர்ந்த பிறகும் மனதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது,

கிருஷ்ணா ஒரு மகத்தான கலைஞன். நேற்று அவர் நிகழ்த்தியது ஒரு ப்யூர்மாஜிக், மனத்தடைகள் இல்லாமல் பேசுவது எப்படி என்பதற்கு முன்உதாரணமான பேச்சு ,

இது போன்ற நிகழ்வுகளைச் சாத்தியமாக்கிவரும் கேணியை நடத்தும் ஞாநிக்கும் பாஸ்கர் சக்திக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும்.

••

0Shares
0