எழுத்தாளர்களில் பலருக்கும் எழுதுவதற்கு இணையாக பல்வேறு தனித் திறன்கள் இருப்பதை அறிந்திருக்கிறேன். குறிப்பாக ஒவியத்தில் நாட்டமும் தனித்திறனும் கொண்ட எழுத்தாளர்கள் பலர் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.
தமிழில் நான் அறிந்தவரை எழுத்தாளர் வண்ணதாசன், விட்டல்ராவ், கவிஞர்கள் தேவதச்சன், ஆனந்த், வைத்தீஸ்வரன், போன்றவர்கள் சிறப்பாக ஒவியம் வரையக்கூடியவர்கள். ஆனால் அதை முழுமையாக அவர்கள் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. யூமா வாசுகி ஒவியக்கலைப் பயின்றவர். தேர்ந்த ஒவியர். அவரது எழுத்திலும் அதே தீவிரமும் தனித்துவமும் உள்ளது. கவிஞர் பிரம்மராஜன் கணிப்பொறியை பயன்படுத்தி ஒவியம் தீட்டுவதில் தனித்திறன் கொண்டவர். அவர் வரைந்து தந்த ஒவியங்கள் ஸ்நேகா பதிப்பக புத்தகங்களின் அட்டைபடமாக வெளிவந்திருக்கின்றன.
எழுத்தாளன் வரைந்த ஒவியங்களில் அதிகமும் சர்சைக்கு உள்ளானது டி.ஹெச். லாரன்ஸின் ஒவியங்களே. (D.H. Lawrence ) அவரது நாவல்கள் உருவாக்கிய சர்சைகள், நீதிமன்ற விசாரணைக்கு சற்றும் குறைவில்லாத பரபரப்பையும் தடைகளையும் அவரது ஒவியங்களும் பெற்றன. மிக ஆபாசமான ஒவியங்கள் என்று ஒதுக்கி வைக்கபட்டிருந்த லாரன்ஸின் பத்தொன்பது முக்கிய ஒவியங்கள் தற்போது உலகமெங்கும் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன.
அத்தோடு அவரது ஒவியங்களின் வண்ணப்பதிப்பு சமீபத்தில் வெளியாகி உள்ளது. லாரன்ஸின் ஒவியங்கள் அடங்கிய வண்ணபதிப்பு நூலை இரண்டு நாட்களுக்கு முன்பாக விளம்பர நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் நண்பரின் வீட்டில் பார்த்தேன். மிக அழகான பதிப்பு. அன்றைய பகல் முழுவதும் அந்த ஒவியங்களை பார்த்துக் கொண்டிருந்தேன்
இந்தியாவில் டி.ஹெச்.லாரன்ஸ் மிகவும் பரவலாக அறியப்பட்டவர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை லாரன்ஸை படிப்பது என்பது போர்னோகிராபி படிப்பது போன்றே அறியப்பட்டது. அதிலும் ஆங்கில இலக்கியம் கற்பிக்கும் வகுப்பறைகளில் லாரன்ஸின் பிரசித்தி பெற்ற நாவலான Lady Chatterley`s Lover நடத்தப்படும் போது பெரும்பான்மையான பக்கங்கள், பகுதிகள் நீக்கப்பட்டு வெறும் சக்கையாகவே நடத்தப்படும்.
அத்தோடு லாரன்ஸ் குறித்து பெண் பித்தன் மற்றும் ஆபாச எழுத்தை உருவாக்கியவன் என்றே அடையாளம் காட்டப்படுவதும் உண்டு. இன்றும் பிளாட்பார கடைகளில் மலினமான பதிப்பில் லேடி சாட்டர்லிஸ் லவ்வர் காணப்படுகின்றன.வாங்கி செல்பவனும் ரகசியமாக மறைத்து எடுத்து போகிறான். இதே சிக்கலுக்கு ஆளான இன்னொரு எழுத்தாளர் விளாதிமிர் நபகோவ். அவரது லோலிதா நாவலும் மஞ்சள் புத்தகமாகவே இன்றும் விற்கப்படுகின்றன.
தமிழில் லாரன்ஸ் அதிகம் மொழிபெயர்க்கபடவில்லை. லேடி சாட்டர்லி லவ்வர் பற்றி நேரு கருத்து சொல்லியிருக்கிறார். அது சில காலம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் நான் அறிந்தவரை அது தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. சுருக்கபட்டு சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் நக்கல்களுடன் சதுக்கபூதம் என்ற சிற்றதழ் லாரன்ஸிற்கு ஒரு தனி இதழ் கொண்டு வந்திருக்கிறது. மற்றபடி அவரது ஒன்றிரண்டு கதைகளை தவிர லாரன்ஸ் தமிழில் அதிகம் வாசிக்க கிடைப்பதில்லை
ஆனால் ஆங்கில புத்தகங்கள் விற்பனையாகும் கடைகளில் லாரன்ஸ் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து பரபரப்பாகவே விற்பனையாகிக் கொண்டேயிருக்கிறார். இன்றும் யாராவது ஒருவர் லாரன்ஸை படித்து எப்படி இவ்வளவு அப்பட்டமாக பால் உணர்ச்சிகளை எழுதியிருக்கிறார் என்று விவாதம் செய்தபடி தானிருக்கிறார்கள்.
டி.ஹெச். லாரன்ஸை மலினமான பாலியல் கதைகளை எழுதியவர் என்று ஒதுக்கி தள்ளிவிட முடியாது. கவிஞர், கட்டுரையாளர், நாவலாசிரியர், சிறுகதையாசிரியர். பயணி, ஒவியர் என்று அவருக்கு பன்முகதன்மையிருக்கிறது.
என்வரையில் அவரது நாவல்களை விடவும் லாரன்ஸின் சிறுகதைகளே எனக்கு மிகுந்த விருப்பத்திற்கு உரியவையாக உள்ளன. Odour of Chrysanthemums , “The Horse-Dealer`s Daughter” The woman who rode away போன்றவை மிக முக்கியமான சிறுகதைகள். நாவல்களில் லேடி சாட்டர்லி லவ்வரை விடவும் WOMEN IN LOVE எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது
லாரன்ஸ் முறையாக ஒவியம் கற்றுக் கொண்டவர் இல்லை. தனக்கு கிடைத்த ஒவியங்களை நகல் எடுப்பதில் துவங்கி தானே வரைந்தவை தான் அவரது ஒவியங்கள். அவரது ஒவியங்களில் பிளேக்கின் சாயல் அதிகம் உள்ளது. அவரே பிளேக்கின் ஒவியங்களை நகல் எடுத்தே ஒவியம் வரைவதில் ஆர்வம் கொண்டதாகவும் குறிப்பிடுகிறார்.
லாரன்ஸின் ஒவியத்தில் சர்சைக்கு உள்ளாவதற்கான முக்கிய காரணமாக இருந்தவை வெளிப்படையாக பெண் உடல்கள் மற்றும் பாலுறவு சித்தரிப்புகள். ஒவிய உலகில் பெண்உடலை நிர்வாணமாக சித்தரிப்பது என்றே தனித்த வகை உள்ளது. அதை எவரும் ஆபாசம் என்று ஒதுக்குவது கிடையாது. அது போலவே பாலுறவு சித்தரிப்புகளாக கிரேக்க புராண மற்றும் விவிலிய காட்சிகளை ஒவியங்களாக்குவதும் மரபாகவே தொடர்ந்து வந்திருக்கிறது.
லாரன்ஸின் ஒவியங்களில் உள்ள பாலுறவு தோற்றங்கள் எனக்கு பெரிதும் பால்காகினையே போல சுய வெளிப்பாட்டு தன்மை கொண்டவை. உருவங்கள் அவரது சாயல்களில் காணப்படுவது காகினையே நினைவூட்டுகின்றன. உருவங்களின் சாயல்கள் மற்றும் நிறங்களின் தேர்வு. உடல்களை வெளிப்படுத்தும் முறையில் காகின் முயற்சியே காணப்படுகின்றது. லாரன்ஸின் நாவல்களிலும் தொடர்ந்து பாலுறவு காட்சிகள்
வெளிப்படையாகவும் துல்லியமாகவும் சித்தரிக்கபட்டன. அதை ஆபாசம் என்று நீதிமன்றம் தடை செய்தது. வழக்கு நடந்து அவை ஆபாசமானவை அல்ல என்று நாவல்கள் வெளியானது.
எது ஆபாசம் அல்லது ஆபாசம் என்பதன் வரையறை என்னவென்று லாரன்ஸ் தொடர்ந்து எதிர்குரல் எழுப்பிக் கொண்டிருந்தார். லாரன்ஸின் மீதான குற்றசாட்டுகளாக அன்று கூறப்பட்டயாவும் இன்று நடைமுறையாக ஊடகங்களில் பொதுவெளிகளில் அன்றாடம் நடக்கின்றன. பாலுறவு சர்சைகள் நேரடியாக விவாதிக்கபடுகின்றன. மற்றும் பெண்களின் மீதான பாலுணர்வு வன்முறைகள் கண்டனத்திற்கு உள்ளாகின்றன.
இன்று லாரன்ஸை வாசிப்பவன் அவர் எழுத்து பாலியலை வெளிப்படையாக வர்ணிக்கிறது என்பதில் எந்த அதிர்ச்சியும் அடைவதில்லை. மாறாக பால் உணர்வுகளின் கட்டுபாடும், பீறடலும் எந்த நிலையில் என்ன மனநிலையில் ஏற்படுகின்றது. அது எவ்விதமான உளச்சிக்கலை உருவாக்குகின்றது என்பதேயே கவனம் கொள்கிறான்.
லாரன்ஸின் ஒவியங்கள் 1929 ஆண்டு காட்சிக்கு வைக்கபட்டன. ஆனால் உடனடியாக அவை ஆபாசமானவை என்று குற்றம்சாட்டப்பட்டு முடக்கபட்டன. பின்பு இந்த ஒவியங்களை லாரன்ஸ் எங்கும் காட்சிக்கு வைக்ககூடாது என்ற உத்தரவின் பேரில் அவரிடம் ஒப்படைக்கபட்டன. இன்று லாரன்ஸின் ஒவியங்களை பார்வையிடும் பார்வையாளன் அவரது காலத்தைய பரபரப்புகள் அடங்கிய மனநிலையில் ஒவியங்களை பார்வையிடுகிறான். அவன் முன்னே சர்சைகள் இல்லை. தடைகள் இல்லை.
லாரன்ஸின் ஒவியங்களில் பிரதானமாக வெளிப்படுவது ஆண் உடல்களின் தோற்றமே. அதுவும் பருத்த கால்கள் கொண்ட உடல்கள். பெண் உடல்களோ மிக வாளிப்பாகவும் ஒருமைகொண்டும் காணப்படுகின்றன. உடல்கள் தன்னை மீறிய இச்சையில் இயங்குகின்றன என்பது போன்ற மையப்பொருளே அவரது ஒவியங்களில் வெளிப்படுகின்றன.
லாரன்ஸிற்கு மிகவும் பிடித்த ஒவியர் செசான். அவர் ஒவியங்களில் தான் முதன்முறையாக அடக்கி வைக்கபட்ட உணர்ச்சிகள் பீறிடுகின்றன. அவர் தன்காலத்தைய சுகபோக வாழ்விற்கு எதிராக ஒவியங்களை வரைந்திருக்கிறார். செசான் ஒரு நவீன ஒவியர். அவருக்கு இணையான இன்னொருவர் ரெனார் என்று லாரன்ஸ் தனக்கு விருப்பமான ஒவியர்களை பற்றி தனதுகட்டுரைகளில் குறிப்பிடுகிறார்
லாரன்ஸின் ஒவியங்களில் அவரது எழுத்தை போல வேகமும் சிதறடிக்கபட்டதன்மையும் காணப்படுகின்றது. ஒவிய உலகில் லாரன்ஸ் மிக முக்கியமான ஒவியர் என்று அடையாளம் காணப்படுவதில்லை. ஆனால் ஒரு எழுத்தாளர் தன் வெளிப்பாட்டின் ஒரு பகுதியாக வரையப்பட்ட ஒவியங்கள் இவை என்ற அளவில் மிக முக்கியம் வாய்ந்தவையாகவே தோன்றுகிறது.
இந்த ஒவியங்களை தொடர்ந்து பார்வையிடும் போது லாரன்ஸின் நாவல்களுக்கும் இந்த ஒவியங்களின் காட்சிகளுக்கும் உள்ள அகதொடர்பை உணர்ந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக வுமன் இன் லவ்வில் வரும் சில நிகழ்வுகளையே இந்த ஒவியங்கள் பிரதிபலிப்பதாக தோன்றுகின்றன.
இன்னொன்று தன் எழுத்தின் மீதான கடுமையான சர்சைகள் தடைகள் காரணமாக அதை மீறி தன்னால் செயல்பட முடியும் என்பதை நிரூபிக்கவும் இந்த ஒவியங்களை சர்சையை உருவாக்க வேண்டும் என்றே லாரன்ஸ் வரைந்திருக்க கூடும் என்றும் தோன்றுகிறது.
Christopher Miles இயக்கத்தில் லாரன்ஸின் வாழ்வை பற்றி Priest Of Love என்ற திரைப்படம் வந்திருக்கிறது. தற்போது அதன் டிவிடி எளிதில் கிடைக்கிறது. அதில் லாரன்ஸின் வாழ்வின் முக்கிய தருணங்களை மிக அழகாக படமாக்கபட்டுள்ளது.
லாரன்ஸை வாசிக்க விரும்புகின்றவர்களுக்கு இன்று அவை இணையத்தில் இலவச தரவிறக்கப்பிரதிகளாக கிடைக்கின்றன.
https://www.gutenberg.org/browse/authors/l#a123
**