டோக்கியோ விசாரணை

இரண்டாம் உலகப்போரின் முடிவிற்குப் பின்பு ஹிட்லரின் போர்க்குற்றங்களையும் அதற்குக் காரணமாக இருந்த நாஜி ராணுவ அதிகாரிகள். அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட உயர்பதவி வகித்தவர்களையும் விசாரிக்க நூரென்பெர்க்கில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. நீதிமன்ற வரலாற்றில் நூரென்பெர்க் விசாரணை மிகவும் முக்கியமானது. இந்த விசாரணையை மையமாகக் கொண்டு 1961ம் ஆண்டு JUDGMENT AT NUREMBERG என்ற திரைப்படம் ஸ்டான்லி கிராமர் இயக்கத்தில் வெளியானது. தலைமை நீதிபதி டான் ஹேவுட்வாக ஸ்பென்சர் டிரேசி சிறப்பாக நடித்திருப்பார். அற்புதமான  திரைப்படம்.

நூரென்பெர்க் விசாரணையைப் போலவே ஜப்பான் மீது ஒரு சர்வதேச விசாரணை நடைபெற்றது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் செய்த போர்க்குற்றங்கள் மற்றும் பியர்ல் ஹார்பர் தாக்குதல்,பல்வேறு நாடுகளில் ஜப்பானிய ராணுவம் செய்த கொடூரங்களை விசாரிக்க நேச நாடுகளின் தலைமை தளபதி  டக்ளஸ் மெக்ஆர்தர் சிறப்புத் தீர்ப்பாயம் ஒன்றை ஏற்படுத்தினார்

1931 ஆம் ஆண்டு மஞ்சூரியா மீதான ஜப்பானிய படையெடுப்பிலிருந்து தொடங்கி ஜப்பான் சரணடைவது வரை நடந்த விஷயங்களை இந்த விசாரணையில் ஆராய்வதாக முடிவு செய்யப்பட்டது..

நீதிமன்றத்தின் அமைப்பு, அதிகார வரம்பு, அதன் குற்ற விசாரணைக்கான நடைமுறைகளை நிறுவுவதற்கு ஒரு சாசனம் வரைவு செய்யப்பட்டது; நூரென்பெர்க் விசாரணையின் மாதிரியைக் கொண்டு இதனை உருவாக்கினார்கள்.

வில்லியம் வெப் தலைமையில் ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சோவியத் யூனியன், இங்கிலாந்து ஆகிய பதினொரு நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் இக் குழுவில் இடம்பெற்றிருந்தார்கள். ஜப்பானியப் பிரதமர், அமைச்சர்கள் உயரதிகாரிகள். ராணுவ தளபதி, கடற்படை தளபதி உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தப்பட்டது.

2016ல் வெளியான Tokyo Trial நான்கு பகுதிகள் கொண்ட தொலைக்காட்சித் தொடர். இதனைத் தற்போது ஒரே திரைப்படமாக வெளியிட்டிருக்கிறார்கள். இந்த தொடரை பீட்டர் வெர்ஹோஃப்; ராப் டபிள்யூ. கிங் இணைந்து இயக்கியுள்ளார்கள்.

JUDGMENT AT NUREMBERG போலவே இப்படமும் நீதிபதிகளின் வருகையில் துவங்குகிறது. நீதி விசாரணை நடக்கும் இடம் தேர்வு செய்யப்படுகிறது. ஒரியண்டல் ஹோட்டலில் அவர்கள் தங்க வைக்கபடுகிறார்கள்.  நீதி விசாரணையை எப்படிக் கொண்டு செல்வது என்பதற்கான திட்டம் தயாராகிறது. பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள். ராணுவ தளபதி மற்றும் இருபத்தி எட்டு உயர்மட்ட தலைவர்கள் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டார்கள்

பல்வேறு போர்க்குற்றங்கள் மற்றும் பொதுமக்களைக் கொன்று குவித்தது. போர் கைதிகளை மோசமாக நடத்தியது. பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட ஐம்பத்தைந்து குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன.

இந்த விசாரணை மூன்று ஆண்டுகாலம் நடைபெற்றது. ஜப்பானிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சார்பில் அமெரிக்க வழக்கறிஞர்களும் ஜப்பானிய வழக்கறிஞர்களும் வாதிட்டார்கள். இந்த நீதி விசாரணையை எப்படிக் கொண்டு செல்லவேண்டும் என்பதில் அமெரிக்காவின் தலையீடு மிக அதிகமாக இருந்தது.

டோக்கியோ நீதி விசாரணையிலிருந்து ஜப்பானியப் பேரரசர் ஹிரோஹிட்டோ மற்றும் அவரது குடும்பம் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தார்கள். மன்னர் போரை விரும்பவில்லை. கட்டாயத்தின் பேரில் தான் சம்மதித்தார் என்று பிரதமர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அத்தோடு போருக்கு பிந்திய ஜப்பானின் வளர்ச்சிக்கு மன்னரின் தயவு முக்கியம் என அமெரிக்கா கருதியது.

நீதிவிசாரணை நடைபெற்று வந்த போது ஜப்பானிய அதிகாரிகளில் இருவர் இறந்துவிட்டார்கள். ஒருவருக்கு மனநிலை பேதலித்துவிட்டது. ஆகவே அவர் விசாரணைக்குத் தகுதியற்றவராக விலக்கப்பட்டார்.

31 மாதங்களில் 800க்கும் மேற்பட்ட நீதிமன்ற அமர்வுகளுக்குப் பிறகு நீதி விசாரணை முடிவுக்கு வந்தது

1948 நவம்பர் 12 அன்று நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. இதில், ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, 16 பேருக்கு ஆயுள் தண்டனை, ஒருவருக்கு 20 ஆண்டுக்கால சிறைவாசம், மற்றொருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது

நீதிபதியான ராதாபினோத் பால் தனியே ஒரு தீர்ப்பினை வழங்கினார். பொது தீர்ப்பின் சில விஷயங்களில் டச்சு மற்றும் பிரெஞ்சு நீதிபதிகள் மாற்றுக் கருத்து தெரிவித்தார்கள்.

இந்த வரலாற்று ஆதாரங்களைக் கொண்டு Tokyo Trial திரைப்படம் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நீதிபதிகளின் தோற்றம் மற்றும் நீதிமன்ற உரையாடல்கள். சாட்சிகள் விசாரிக்கப்படும் முறை, அன்றைய டோக்கியோவின் சித்தரிப்புகள் ஆகியவை துல்லியமாக காட்சிப்படுத்தபட்டிருக்கின்றன.

அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை வெப் மேற்கொள்கிறார் ஆனால் அது தோல்வியில் முடிகிறது. அமெரிக்காவிற்குச் சார்பாக. குழுவாகச் செயல்படும் சூழல் உருவாகிறது. ஜப்பானை எந்தச் சட்டத்தின் அடிப்படையில் விசாரிப்பது எனப் பால் எழுப்பும் கேள்வி. பாரிஸ் சாசனம் பற்றிய விவாதங்கள் எனப் பல்வேறு கோணங்களில் படம் நீதி விசாரணையை மிக அழுத்தமாக, சுவாரஸ்யமாகப் பதிவு செய்திருக்கிறது.

இப்படத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக இடம்பெற்ற ஜஸ்டிஸ் பால் தனித்துவமிக்கக் கதாபாத்திரமாக ஒளிருகிறார். ஜஸ்டிஸ் பாலாக இர்பான் கான் சிறப்பாக நடித்திருக்கிறார். குழுவிடம் தனது தரப்பை அவர் முன்னெடுத்து வைப்பது அழகான காட்சி. உறுதியான நிலைப்பாடுடன் அவர் தொடர்ந்து செயல்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.

ராதாபினோத் பால் கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் கணிதம் பயின்றவர் பின்பு கல்கத்தா பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றியிருக்கிறார். இவரது திறமை காரணமாக. பிரிட்டிஷ் அரசாங்கம் 1927 ஆம் ஆண்டு பாலை சட்ட ஆலோசகராக நியமித்தது இந்திய வருமான வரிச் சட்டத்தை உருவாக்குவதில் பால் முக்கியமானவராக பணியாற்றினார்.

1923 முதல் 1936 வரை கல்கத்தா பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்பு 1941 இல் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பதவி வகித்திருக்கிறார்.

டோக்கியோ விசாரணையின் துவக்கத்தில் இந்திய நீதிபதி சேர்க்கபடவில்லை. ஆனால் விசாரணை துவங்கிய பின்பு இந்தியாவின் தரப்பை வெளிப்படுத்த ஒரு நீதிபதியை பரிந்துரைக்கிறார்கள். அப்படியே பால் டோக்கியோ விசாரணையில் இடம்பெறுகிறார்,

டோக்கியோ விசாரணையின் போது ஹிரோஷிமா நாகசாகியில் அமெரிக்கா அணுகுண்டுவீசியது குற்றமில்லையா. அது ஏன் விசாரிக்கப்படவில்லை என்ற கேள்வியை ராதாபினோத் பால் எழுப்பினார். அதை மற்ற நீதிபதிகள் விரும்பவில்லை. அத்தோடு ஜப்பானைப் போருக்குள் தள்ளியது அமெரிக்கா தான் எனப் பால் நேரடியாகக் குற்றம் சாட்டினார்

குற்றவாளியாக நிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் எவரையும் நாம் குற்றம் சொல்ல முடியாது. உண்மையில் ஜப்பானியர்கள் செய்த போர்க்குற்றங்கள் மற்றும் அட்டூழியங்களை வகுப்பு B மற்றும் C வகைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் ஆனால் இது போன்ற சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்கத் தேவையில்லை என்பதே அவரது வாதம்.

1928 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பாரிஸ் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் எந்தச் சூழலிலும் போரை ஏற்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்தார்கள். உண்மையில் இந்தச் சாசனம் சட்டப்பூர்வமானதா எனப் பால் கேள்வி எழுப்புகிறார்

ஒரு தேசம் ஏன் போரில் ஈடுபடுகிறது என்பதை நாம் ஆராய வேண்டும். பிரிட்டிஷ் காலனித்துவம் மற்றும் மேற்குலகின் அதிகார வெறி எப்படி ஜப்பானின் இயல்பை மாற்றியது. ஜப்பானியர்களின் மௌனத்தைப் புரிந்து கொள்ளக் கீழைதேய நாடுகளின் பண்பாட்டினை புரிந்து கொள்ள வேண்டும் என்று நீதிபதி பால் வாதிட்டார்.

ஆரம்பம் முதலே பாலின் வாதங்களை மற்றவர்கள் ஏற்கவில்லை. அத்தோடு அமெரிக்காவிற்குச் சாதகமாக நடந்து கொள்ளவே முயன்றார்கள். இறுதிவரை பால் தனிநபராகவே செயல்பட்டிருக்கிறார். ஆகவே அவர் தனது தீர்ப்பினை தனியே எழுதி 25 ஜப்பானியர்களையும் நிரபராதிகள் என விடுதலை செய்தார். நீதிபதி பாலின் தீர்ப்பு 1,230 பக்கங்கள் கொண்டது.

இந்த விசாரணை வெற்றிபெற்றவர்களின் பழிவாங்கும் நடவடிக்கை மட்டுமே என்று பால் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளார் .

நீதிபதி பால் வழங்கிய தனித்தீர்ப்பின் காரணமாகப் பின்னாளில் அவருக்கு ஜப்பானிய அரசின் உயரிய விருது வழங்கப்பட்டது. அவரது மறைவிற்குப் பின்பு அவரது சிலை ஒன்றை டோக்கியோவிலுள்ள ராணுவ கல்லறைத் தோட்டத்தில் அமைத்திருக்கிறார்கள்.

டச்சு நீதிபதி ரோலிங் முக்கியமான கதாபாத்திரம் அவர் சிறந்த வயலின் இசைக்கலைஞர். அவருக்கும் ஜெர்மானிய பியானோ இசைக்கலைஞர் எட்டா ஹரிச்-ஷ்னெய்டர்க்கும் இடையில் ஏற்படும் நட்பு. இணைந்து இசை வழங்குவது போன்றவை படத்தின் மையக்கதையை விட்டு விலகிப் போவதாக இருந்தாலும் முடிவில் அது கதையோடு பொருத்தமாக இணைக்கப்படுவது சிறப்பாக உள்ளது.

படம் ஜஸ்டிஸ் பெர்ட் ரோலிங்கின் நினைவுகள் வழியாகவே விவரிக்கப்படுகிறது. குடும்பத்தைப் பிரிந்து வாழும் அவர் நீதிபதி பாலின் வாதங்களிலுள்ள உண்மையைப் புரிந்து கொள்கிறார். அவருக்கு ஆதரவு குரல் தருகிறார். ஆனால் பொதுக்கருத்தை அவரால் உருவாக்க முடியவில்லை.

ஆவணப்படம் போன்ற பாணியில் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இடைவெட்டாக வந்து செல்லும் கறுப்பு வெள்ளை நீதிமன்றக் காட்சிகள் நாம் காணுவது வெறும் கற்பனையில்லை என்பதைப் புரியவைக்கின்றன.

போர்க்குற்றத் தீர்ப்பாயத்தின் நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக இருக்கும் சட்டங்கள், தார்மீகக் கோட்பாடுகள் மற்றும் நெறிமுறை விதிகளைக் கேள்வி கேட்கிறது என்ற வகையில் இந்தப்படம் முக்கியமானதே.

0Shares
0