டோக்கியோவில் இருந்த முன்மாதிரிப் பள்ளி டோமாயி . இங்கே படித்த டெட்சுகோ குரோயாநாகி தனது பள்ளி நினைவுகளை முன்னிறுத்தி எழுதிய டோட்டோ-சான் – ஜன்னலில் ஒரு சிறுமி மிக முக்கியமான சிறார் நூலாகும், ( Totto-chan, the Little Girl at the Window)
ஜப்பானில் இந்தப் புத்தகம் ஒரே ஆண்டில் 45,00,000 பிரதிகள் விற்பனையாகி வரலாறு படைத்துள்ளது
கோபயாஷி என்பவர் நடத்திய இப் பள்ளி மற்ற பள்ளிக்கூடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
இங்கே வகுப்பறையாக கைவிடப்பட்ட ரயில்பெட்டிகள் மாற்றபட்டிருந்தன , விவசாயப் பாடம் நடத்த விவசாயி ஒருவரே சிறப்பு ஆசிரியராக அழைத்து வரப்படுவார், சுதந்திரமான பாடமுறை. சரிவிகித உணவுத் திட்டம், இயற்கையோடு இணைந்த கற்பிக்கும் முறை, திறந்தவெளிச் சமையல் வகுப்புகள் என அற்புதமான கல்விச்சூழலை உருவாக்கியது இப்பள்ளி
டோட்டோ சானை வாசித்த நாளில் இருந்து அந்தப் பள்ளியின் புகைப்படங்களைத் தேடிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் ஒரு நண்பர் இந்தப் புகைப்படங்களை அனுப்பியிருந்தார்.
டோமாயி பள்ளி இப்படித்தான் இருந்திருக்கிறது
பள்ளியில் படித்த டெட்சுகோ குரோயாநாகியின் புகைப்படமும் கிடைத்திருக்கிறது,
இந்தப்புகைப்படங்களைப் பார்க்கும் போது மிகுந்த சந்தோஷமாக இருந்தது.
தற்போது இது போல ரயில்பெட்டியை வகுப்பறையாகக் கொண்ட ஒரு பாலர் பள்ளி கோவையில் உருவாகிக் கொண்டிருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். அதற்கு உந்துதலாக இருந்த்து டோட்டாசான் என அறிந்த போது கூடுதல் சந்தோஷம ஏற்பட்டது
இதுவரை டோட்டோ சான் புத்தகத்தை வாசிக்காதவர்கள் தமிழிலோ, ஆங்கிலத்திலோ உடனே வாசித்துவிடுங்கள்
இது உங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத புத்தகங்களில் ஒன்றாக நிச்சயம் இருக்கும்
குறிப்பாக ஆசிரியர் ஒவ்வொருவரும் தவறாமல் படிக்க வேண்டிய நூல்.
பள்ளி ஆசிரியர்கள் இதைத் தேடி வாசிக்கும்படியாகச் சிபாரிசு செய்கிறேன்
•••