டோனி மாரிசன்

நியூயார்க்கர் இதழ் சென்ற ஆண்டு அமெரிக்காவில்கடந்தஇருபத்தைந்து வருடங்களில் வெளியான சிறந்த நாவல் எது என்று  ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி அதில் நோபல்பரிசு பெற்ற எழுத்தாளரான டோனி மாரிசனின்  Beloved நாவலைத் தேர்வு செய்தது. அப்போது இதை மறுபடியும் படிக்க வேண்டும்என்று நினைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன்பாக அதைத் திரும்ப வாசிக்க நேர்ந்தது.1987ல் வெளியான இந்த நாவலைப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை படித்திருக்கிறேன். அப்போது எனக்கு நாவலின் மையமாகப் பட்டது முக்கியப் பெண்கதாபாத்திரம் மற்றும் அவளது அடிமையாக இருந்த வாழ்வும் இடர்பாடுகளும். தற்போது அதை மீண்டும் வாசித்த போது நாவலின் மையமாக  இருப்பது பெயரிடப்படாத இறந்து போன குழந்தை என்று உணரமுடிந்தது


நாவலை வாசிப்பது என்பது சதா மாறிக்கொண்டேயிருக்க கூடிய ஒரு மன இயக்கம்.சில வருசத்தின் முன்பு படித்த நாவல் தற்போது முற்றிலும் புதியதொரு அனுபவதளத்தில் முன்அறியாத நெருக்கம் கொண்டுவிடுகின்றது. இதன் எதிர்நிலையும் சாத்தியமாகியிருக்கிறது.


என்றால் நாவல் ஒரு இயங்குபரப்பு தான் போலும். அதன்வழியாக எதையோ காண்பதும் எதையோ நினைவு கொள்வதும் எதையோ மறப்பதுமான முடிவற்ற நிகழ்வு திரும்பத் திரும்ப நடந்து கொண்டேயிருக்கிறது.


டோனி மாரிசன் (Toni Morrison)நாவல் பல்வேறு விதங்களில் தமிழ்வாழ்வோடு மிக நெருக்கமாக இருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக தமிழ் குடும்பங்களில் இறந்து போன குழந்தைகள் குறித்த நினைவுகள் பலவருடகாலத்திற்கு கூடவே இருக்கக் கூடியது. சில வேளைகளில் அவர்கள் தான் வேறு பிள்ளைகளாக பிறந்திருக்கிறார்கள் என்று கூட நம்புவதுண்டு.


நான் அறிந்த சில கிராமங்களில் இறந்துபோன குழந்தைகளுக்கும் பண்டிகை நாட்களில்  புத்தாடைகள் எடுத்து பூஜை வைப்பது அல்லது விருப்பமான உணவை சமைத்து படையல் செய்வது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை கண்டிருக்கிறேன். இந்த நிகழ்வுகளுக்கும் இந்த நாவலுக்கும் இடையே மிக நெருக்கமான தொடர்பு உள்ளது.


இது டோனி மாரிசனின் ஐந்தாவது நாவல். சேதே என்ற கறுப்பின பெண்ணின் வாழ்வை விவரிக்கிறது. அடிமையாக விற்கபட்ட அவள் தன் மகளோடு அடிமை வாழ்விலிருந்து யாரும் அறியாமல் தப்பி ஒஹியோவில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் புகலிடம் ஆகி வாழ்கிறாள். கடந்த காலத்தின் வலியும் வேதனைகளும் அவளுக்குள் ஆறாத ரணங்களாக நிரம்பியிருக்கின்றன.இவளது பதின்வயது மகள் டென்வர். இவர்கள் வீட்டில் விசித்திரமான குரல்கள் மற்றும் சில நிகழ்வுகள் நடைபெற துவங்குகின்றன. அது ஒரு ஆவியின் வேலை என்றும் தாங்கள் குடியிருக்கின்ற வீட்டில் ஒரு ஆவியிருப்பதாகவும் அவர்கள் நம்புகிறார்கள்.


அந்த ஆவி அவர்களோடு தன்னைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறது. அதனால் டென்வர் மனகுழப்பத்திற்கு உள்ளாகிறாள். அது சேதேவைக் கவலை கொள்ள வைக்கிறது. ஆவியை என்ன செய்வது என்று வழிமுறைகளை ஆராயும் போது ஆவியாக வந்துள்ளது அவளது சொந்த மகள் என்பதும் ,  தன்னைப் போல அவளும் வளர்த்து எதற்காக அடிமையாக வளர வேண்டும் என்பதால் சேதே அந்த இரண்டு வயது பெண் குழந்தையைக் கழுத்தை நெறித்து கொன்று விட்டாள் என்பதும் தெரியவருகிறது.


என்றோ வறுமை மற்றும் இனதுவேசத்தின் நெருக்கடி, அடிமை வாழ்வு காரணமாக தன்னால் கொல்லபட்ட தனது மகள் இன்று தங்களோடு ஒன்று கலக்கக் காத்திருப்பது சேதேவுக்கு வருத்தமளிக்கிறது. இறந்து போகிறவர்கள் அப்படியே மறைந்து போய்விடுவதில்லை அவர்கள் நினைவுகளாக நம்மோடு தங்கியிருக்கிறார்கள்.அந்த நினைவுகள் வாழ்கின்றவர்களோடு தொடர்பு கொண்டபடியே இருக்கும் என்ற நம்பிக்கை கொள்கிறாள்.


அதே நேரம் தன்னால் கொல்லபட்ட இரண்டு வயது மகளை புதைக்கச் சென்ற போது அங்கே கல்லறை கல்லில் தன் விருப்பத்திற்குரியவள் என்ற இரண்டு எழுத்துகளைப் பொறிக்க செய்வதற்கு சேதேவுக்கு பணம் இல்லாமல் போகிறது . வேறு வழியில்லாமல் கல்லறைக் கல்லை செதுக்குபவனோடு பத்து நிமிடங்கள் படுத்து பாலியல் சுகம் தந்து ஒரேயொரு சொல்லைப் பொறிக்க செய்கிறாள்.அந்த வார்த்தை தான் Beloved  .தன்னால் முறையாக புதைக்கபடாமல், சவசடங்குகள் செய்யப்படாமல் போனதால் தான் மகள் ஆவியாக வந்திருக்கிறாள் என்று சேதேவுக்கு தோன்றுகிறது.


ஒரு பக்கம் ஆவியின் வழியாக நீளும் பழைய நினைவுகள் .இன்னொரு பக்கம் கறுப்பின மக்களை அடிமைகளாக கப்பலில் ஏற்றிக் கொண்டு செல்லும் போது நோயாலும் அடிபட்டும் செத்து போன பலஆயிரம் பேர்களை நேரில் கண்ட வயதான பெண்ணின் வழியாக கடந்த காலம் பீறிட்டு கொண்டேயிருக்கிறது. இன்னொரு பக்கம் அடிமை பணியின் ரணமிக்க நிகழ்வுகளும் ஊடுகலக்கின்றன. இந்த நிலையில் சேத்யுவின் மனதறிந்து அவளுக்கு உதவி செய்ய வருகிறார் Paul D.நாவலின் ஒரே முக்கிய ஆண்கதாபாத்திரம். தங்கள் துயரங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு ஆறுதலான மனிதன். அவனது நேசம் பல நேரங்களில் சேதேவை தாங்கமுடியாத மனதுயரத்திற்கு உள்ளாக்குகிறது. இந்தநிலையில் மகள் மனஅழுத்தம் தாங்க முடியாமல் வீட்டை விட்டு ஒடிவிடுகிறாள். கடந்த காலம் ஒரு புதைகுழி போல தன்னை இழுக்க அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறாள் சேதே


இப்படியாக நாவல் பல்வேறு குரல்களின் வழியே நிகழ்வுகளின் முன்பின்னாக நகர்ந்து ஒன்று சேர்க்கிறது. ஒரு உண்மைசம்பவத்தின் பின்புலத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் கறுப்பின மக்களின் வாழ்வில் சாவும், சாவைக் கடந்து செல்லும் நினைவுகளும் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. அவர்களின் நினைவுகள் நிம்மதியற்றவை. அவை துர்கனவுகள் போன்றவை என்பது துல்லியமாக புலப்படுத்துகின்றது


இந்த நாவலை தமிழ் சூழலோடு தொடர்பு கொள்ள வைப்பது நாவலில் ஒரு வீட்டில் ஆவியிருப்பதாக அறிந்த உடன் அதை வீட்டில் உள்ள அத்தனை பேரும் எவ்விதமான எதிர்வாதமும் இன்றி அதை நம்ப துவங்குவது. மற்றொன்று பெண்குழந்தைகளை பிறந்த சில மாதங்களில் கொன்றுவிடும் பெண்சிசுக்கொலை. மூன்றாவது இறந்து போன குழந்தைகள் தங்கள் ஆசை அடங்கும் வரை அந்த வீட்டையே சுற்றிக்கொண்டிருப்பார்கள் என்ற நாட்டார் நம்பிக்கைகள்.


இவை யாவிற்கும் மேலாக அம்மாவிற்கும் மகளுக்கும் உள்ள உறவு. பெற்ற பிள்ளையை தானே கொன்று போடும் அளவு வாழ்வில் வலியும் ரணங்களும் அவமானங்களையும் சந்தித்த பெண்ணின் அக உலகம், விலக்கபட்ட மற்றும் மறைக்கபட்ட பாலியல் வன்கொடுமைகள் என பெரும்பாலும் நாவல் தமிழ் வாழ்வோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருக்கிறது


அது போலவே நம்மிடம் உள்ள கதைசொல்லும் முறை போலவே ஒவ்வொரு நிகழ்வையும் கடந்த காலத்தின் நினைவுகளையும் ஒன்றோடு ஒன்று பின்னிச் செல்லும் கதை சொல்லும் முறை. வயதானவர்கள் நினைவில் இன்றும் உயிர்போடு உள்ள கடந்த காலத்தின் சுவடுகள், யாவையும் மீறி வாழ்வை கொண்டு செலுத்தும் அன்றாடம், வழித்துணையாகும் உறவுகள், தீராத துயரை பகிர்ந்து கொள்ளும் பெண்களின் வலி மிகுந்த வாழ்வு என நாவல் நமக்கு மிக நெருக்கமானது.


டோனி மாரிசன் கறுப்பின இலக்கியத்தின் உலகறிந்த எழுத்தாளர். நோபல் பரிசு பெற்றவர். இந்த நாவலின் வழியே தன் இனத்தின் துயர்மிகு வாழ்வை அவர் உரத்த குரல் இன்றி வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த நாவல் Oprah Winfrey  நடித்து திரைப்படமாகவும் வெளியாகியிருக்கிறது.


நாவலின் ஊடாக வெளிப்படும் மிகக் கவித்துமான வரிகளும் உணர்வு எழுச்சியைத் தூண்டும் நிகழ்வுகளும் படித்து முடித்த பிறகு உருவாகும் ஆழ்ந்த துயரமும் சில நாட்களுக்கு வேறு  எதையும் வாசிக்க முடியாதபடி செய்கிறது. அதுவே இந்த நாவலின் மிகப்பெரிய வெற்றி.0Shares
0