டோமிரிஸின் கோபம்.

“The Legend of Tomiris” ஸ்டெப்பிப் பழங்குடிக்குள் உள்ள பகை மற்றும் பழிவாங்குதலைப் பேசும் படம். தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் மகளின் கதை என்பது சினிமாவில் மிகப்பழையது. ஆனால் படமாக்கப்பட்ட முறை மிகச்சிறப்பாக உள்ளது. குறிப்பாகச் சண்டைக்காட்சிகளை மிக நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் காசன் கைடிராலியே மிக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டோமிரிஸ் அரசியின் கதையைத் தான் படம் விவரிக்கிறது. கிமு 484-425க்கு இடையில் வாழ்ந்த கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரோடோடஸின் வரலாற்றுப் பதிவுகளில் தான் முதன்முறையாக மாசஜெட்டே ராணி டோமிரிஸ் மற்றும் பாரசீக மன்னர் சைரஸ் II மீதான அவரது படையெடுப்பு பற்றி குறிப்பிடுகிறது

ஷேக்ஸ்பியர் தனது ஹென்றி V நாடகத்தில் ‘சித்தியர்களின் ராணி’ என்று டோமிரிஸைக் குறிப்பிடுகிறார். அந்த அளவு டோமிரிஸ் புகழ்பெற்றிருந்தாள்.

மாசஜெட்டீயன்ஸ் என்றும் அழைக்கப்படும் மாசஜெட்டே ஒரு பண்டைய நாடோடி கூட்டமைப்பாகும், மத்திய ஆசியாவின் புல்வெளிகளிலும், காஸ்பியன் கடலின் வடகிழக்கிலும் வசித்து வந்த இனக்குழுவாக இவர்களைக் குறிப்பிடுகிறார்கள். பிற ஆதாரங்களின்படி அராஸ் நதிக்கு அப்பால் காஸ்பியன் கடலின் மேற்கு கடற்கரையில் இவர்கள் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

டோமிரிஸாக நடித்துள்ள Almira Tursyn சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது நேர்கொண்ட பார்வை, வேகமான நடை அதி வேகமாகச் சண்டையிடும் விதம் அத்தனையும் ரசிக்கும்படி உள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வெற்றி பெற்ற ராணியாக அவர் தன் இனக்குழுவைத் தேடி வரும் காட்சி கம்பீரமானது.

இப்படத்தின் முக்கிய வேடங்களில் யெர்கெபுலன் டெய்ரோவ், அசாமத் சதிபால்டி, பெரிக் ஐட்ஷானோவ், அல்மிரா டர்சின், ஆதில் அக்மெடோவ், காசன் மசூத் மற்றும் பலர் நடித்துள்ளனர்

டோமிரிஸ் பிறப்பதிலிருந்து படம் துவங்குகிறது. அவளது தந்தை ஸ்பர்காப் டோமிரிஸை பையனைப் போலவே வளர்க்கிறார். சண்டைப் பயிற்சிகள் சொல்லித் தருகிறார். போர்வீரனாக உருவாக்குகிறார்

ஒரு நாள் குவாரெஸ்மியர் இனத்தை சேர்ந்த அவரது எதிரிகள் சதி செய்து ஸ்பர்காப்பைக் கொன்று விடுகிறார்கள். டோமரிஸ் உயிர்தப்பி விசுவாசமான ஆட்களுடன் வெளியேறிப் போகிறாள். அவளது இனம் அடிமையாகிறது. காட்டிற்குள் ஒளிந்து வாழும் அவள் தந்தையின் சாவுக்குக் காரணமாக இருந்தவர்களைப் பழிவாங்கக் காத்திருக்கிறாள். படம் முழுவதும் டோமிரிஸ் தனது கோபத்தை அடக்கிக் கொண்டேயிருக்கிறாள். சரியான தருணத்தில் மட்டுமே அவளது கோபம் வெளிப்படுகிறது. அடக்கப்பட்ட கோபம் அவளிடம் வீரமாகிறது. உறுதியான பெண்ணாக அவளை உருவாக்குகிறது. கோபத்தை கையாளத் தெரிந்த பெண்களே வெற்றியாளர்களாக உருவாகிறார்கள்.

ஒரு நாள் அமேசானியப் பெண்களின் படை ஒன்று அவர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுகிறது. அதில் டோமிரிஸ் காயமடைகிறாள். அவளைக் குதிரையில் தூக்கிச் செல்கிறார்கள். அவர்கள் தந்த மருத்துவ உதவியால் உயிர் பிழைக்கும் டோமிரிஸ் அந்த இனக்குழுவோடு சேர்ந்து வசிக்கிறாள். சண்டையிடுகிறாள். அங்கே நடக்கும் விழா ஒன்றில் தனது தந்தையைக் கொன்ற எதிரிகளைச் சந்திக்கிறாள். அவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறாள். அதற்கான சந்தர்ப்பம் உருவாகிறது.

படைதிரட்டிப் போய்ச் சண்டையிட்டு வெல்கிறாள். விரும்பிய காதலனைத் திருமணம் செய்து கொண்டு அமைதியாக வாழ்ந்து வருகிறாள். இந்த நிலையில் பெர்சிய அரசனின் விருந்தினராக அழைக்கப்பட்ட அவளது கணவன் கொல்லப்படவே மீண்டும் அவள் போர்க்கோலம் பூணுகிறாள். பெரிய யுத்தத்தைச் சந்திக்கிறாள்

சிறந்த வில்லாளியான டோமிரிஸ் செய்யும் வில்யுத்தம் பிரமாதமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குதிரையில் சரிந்தபடியே அவர் வில் விடும் வேகம் அசரவைக்கிறது.

டோமிரிஸின் கதையில் என்னைக் கவர்ந்த விஷயம் பழங்குடி பண்பாட்டின் கூறுகள். குறிப்பாகக் குழந்தை பிறப்பதை முன்னிட்டுச் செய்யப்படும் சடங்குகள். வழிபாடுகள். மற்றும் டோமிரிஸ் சென்று சேரும் இனக்குழுவில் ஆண்களின் தலையை வெட்டிக் கொண்டுவந்தால் மட்டுமே பெண்களுக்குத் திருமணம் என்ற கட்டுப்பாடு, விருந்தில் நடக்கும் நிகழ்வுகள். திருமணச் சடங்குகள். போர் முறைகள். விதிகள். இனக்குழுவினை யார் வழிநடத்துவது என்பதில் உள்ள போட்டி பொறாமை. அவர்கள் கடந்து செல்லும் நிலவெளியின் பிரம்மாண்டம். எனத் துல்லியமாகச் சித்தரிப்புகளுடன் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அரசனைக் காணப் புறப்படும் கணவனுக்குத் துணையாக மகனை அனுப்பி வைக்கும் காட்சியும் கொல்லப்பட்ட கணவனின் உடலைப் பெற்றுத் தனிமையில் டோமிரிஸ் அழும் காட்சியும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவை.

வரலாற்றின் போக்கினை யார் தீர்மானம் செய்கிறார்கள். வணிகமே இதற்கான முக்கிய காரணம். வணிகர்களின் சுயலாபங்களுக்காக ஆட்சி மாற்றம் காலம் காலமாக நடந்து வருகிறது.

ஸ்டெப்பியை கடந்து செல்லாமல் வணிகர்களால் வணிகம் செய்யமுடியாது. ஆகவே அவர்களுக்குப் பழங்குடி மக்களின் உதவி தேவைப்படுகிறது. அதற்காகச் சில பழங்குடிகளுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து ஆதரவைப் பெறுகிறார். எதிர்ப்பவர்களை நட்போடு  பழகிக் கொன்றுவிடுகிறார்கள்.

வணிகர்களின் சூழ்ச்சி தான் படத்தின் பிற்பகுதிக்கதை. அதுவும் பெர்சிய மன்னரின் அழைப்பின் பெயரில் டோமிரிஸின் கணவனை அழைப்பதும் அவன் தன் மகனுடன் புறப்பட்டுப் போவதும் அங்கே மன்னரைச் சந்திக்கும் போது நடக்கும் உரையாடலும் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

மத்திய ஆசியாவின் வரலாற்றில் இனக்குழுக்களுக்குள் நடைபெற்ற சண்டை என்பது ரத்தம் சிந்திய வரலாறு.

டோமிரிஸின் கதை வரலாற்றிலிருந்து நிறைய மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘டோமிரிஸ்’ படத்தைக் கசாகிஸ்தான் கலாச்சார மற்றும் விளையாட்டு அமைச்சின் உதவியோடு இயக்குநர் அகன் சடாயேவ் 2.5 பில்லியன் செலவில் உருவாக்கியுள்ளார். மத்திய ஆசியாவின் வரலாற்றுப் பெருமையைச் சொல்லும் திரைப்படம் எனச் சர்வதேசச் சந்தையில் இதை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். வரலாற்று உண்மைகளைச் சினிமா வணிகம் தனக்கு ஏற்பவே எப்போதும் மாற்றிக் கொள்கிறது. அதற்கு இன்னொரு உதாரணம் டோமிரிஸ்

••

0Shares
0