டோரா ஜெயிக்கிறான்

குத்துச்சண்டை போட்டியினை எப்படி ஒரு சூதாக மாற்றுகிறார்கள் என்பதைப் பற்றிய படம் The Harder They Fall. மார்க் ராப்சன் இயக்கியுள்ளார். போகார்ட் நடித்த கடைசிப்படம்.

திறமையில்லாத ஒரு குத்துச்சண்டை வீரனை மீடியா எவ்வாறு திட்டமிட்டு நாக் அவுட் நாயகனாக உருவாக்குகிறது என்பதே படத்தின் மையக்கதை. 1956ல் வெளியான திரைப்படம். ஹம்ப்ரி போகார்ட் எடியாக நடித்திருக்கிறார். புட் ஷுல்பெர்க்கின் நாவலைப் படமாக்கியிருக்கிறார்கள்.

புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் எழுத்தாளர் எடி வில்லிஸ்ஸைத் தேடி ஒரு நாள் குத்துச்சண்டை போட்டிகளை ஏற்பாடு செய்யும் விளம்பரதாரர் நிக் பெங்கோ வருகிறான்.

தாங்கள் புதிதாக ஒரு குத்துச்சண்டை வீரனைக் களம் இறங்க வைக்கிறோம். அவனைப் பற்றி உயர்வாக எழுதி குத்துச் சண்டை போட்டியின் சாதனை நாயகனாக உருமாற்ற வேண்டும். அதற்காகக் கைநிறைய பணம் தருகிறோம் என்கிறான்

முதற்சந்திப்பில் நிக் சொல்லும் வார்த்தைகள் முக்கியமானவை

it’s an important job that calls for an important man that pays important money and I think you’re important.

பத்திரிக்கைகளில் எழுதிச் சொற்ப சம்பளமே கிடைக்கிறது. ஆனால் இது போலப் போட்டிகளைப் புகழ்ந்து எழுதினால் பெரும் பணம் கிடைக்கும் என எடி இதற்கு ஒத்துக் கொள்கிறார்

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த டோரோ என்ற குத்துச்சண்டை வீரனை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வைக்கிறார்கள். அவன் திறமையற்ற குத்துச்சண்டை வீரன். சர்க்கஸில் வேலை செய்தவன். ஆறு அடிக்கும் மேலான உயரத்தில் ஆஜானுபாகுவாக இருக்கிறான். ஆனால் மூன்றாம் நிலை குத்துச்சண்டை வீரன். அவன் உடல் உருவத்தைக் காட்டி பெரிய சேம்பியன் போலப் பொய் பிம்பத்தை உருவாக்க நினைக்கிறான் நிக்.

இதற்காக அவனுடன் மோதுகிறவர்களுக்குப் பணம் கொடுத்துத் தோற்கும்படி செய்கிறார் எடி. மேலும் டோரோ துடிப்பான குத்துச் சண்டை வீரன் என்று பத்திரிக்கையாளர்களுக்குப் பணம் கொடுத்து எழுத வைக்கிறார்.

கலிபோர்னியாவில் அவனது முதல் போட்டி நடக்கிறது. திட்டமிட்டபடியே டோரா ஜெயிக்கிறான். எந்த ஊர் மக்கள் எது போன்ற போட்டிகளைக் காண விரும்புகிறார்கள் என்பதை வைத்து அதற்கேற்ப நிகழ்ச்சிகளை உருவாக்குகிறான் எடி.

டோரோ அமெரிக்காவில் புகழ்பெற ஆரம்பிக்கிறான். எடி பணத்திற்காக இப்படி நடந்து கொள்வது அவரது நெருங்கிய நண்பனுக்குப் பிடிக்கவில்லை. நேரடியாகவே அது ஒரு ஏமாற்றுவேலை என்ற குற்றம் சாட்டுகிறான். ஆமாம். பணத்திற்காகத் தான் எதையும் செய்வேன் என்கிறான் எடி

இந்த நிலையில் டோரோ மற்றும் அவரது மேலாளர் லூயிஸ் அக்ராண்டி தொடர்ந்து பணம் கேட்பதால் விசா முடிந்துவிட்டது என்று மேலாளரை அர்ஜெண்டினாவிற்கு அனுப்பி விடுகிறார்கள். இதனால் டோரோ மனம் உடைந்து போகிறான்

டோரோவிற்காக எடி தொலைக்காட்சி நேரலையில் குத்துச்சண்டை போட்டி நடத்துகிறான். முன்னாள் குத்துச்சண்டை சேம்பியன்களை டோரோ பற்றிப் பேசச் செய்கிறான். டோரோவின் பிம்பத்தை ஊதிப்பெருக்குகிறான்.

ஊர் ஊராகப் போய்ப் பொய்யான குத்துச்சண்டை போட்டியை நடத்தி மக்களை ஏமாற்றுகிறார்கள். இது எடியின் மனைவிக்குப் பிடிப்பதில்லை. அவள் இப்படிப் பணம் சம்பாதிக்க வேண்டாம் என்று எடியிடம் சண்டையிடுகிறாள். ஆனால் எடி தன்னுடைய தரப்பு நியாயங்களைச் சொல்லி தனக்கு நிறையப் பணம் தேவை என்று வாதிடுகிறான்.

இந்நிலையில் ஒரு போட்டியில் டோரோவின் தாக்குதலில் உடல்நிலை சரியில்லாத ஒரு குத்துச்சண்டை வீரன் டண்டி இறந்துவிடுகிறான். இது பரபரப்பான செய்தியாகிறது. டோரோ குற்றவுணர்விற்கு உள்ளாகிறான். அவனைத் தனியே சந்திக்கும் எடி அவன் ஒரு கோழை. இந்த மரணத்திற்கு அவன் காரணமில்லை என்று குற்றம் சாட்டி கத்துகிறான். டோரா உண்மையை உணர்ந்து அழுகிறான்.

உலக ஹெவிவெயிட் சாம்பியனான பட்டி பிரான்னனுடன் கடைசிப்போட்டி நடைபெறவுள்ளது. அவன் டோரோவை பழிவாங்கியே தீருவேன் என்று பகிரங்க சவால் விடுகிறான். அவனைப் பணம் கொடுத்துச் சரிக்கட்ட முயற்சிக்கிறார்கள். ஆனால் இயலவில்லை.

இந்தப்போட்டியில் டோரோ குத்துப்பட்டுச் சாகவும் கூடும் என்று அறிந்தும் அவனைக் களம் இறக்குகிறார்கள். டோரோ குத்துச்சண்டையில் மிக மோசமாக அடிபடுகிறான். மருத்துவமனை கொண்டு செல்லப்படுகிறான். வசூலில் கிடைத்த பணத்தை அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

எடி இறுதியாக ஒரு முடிவு எடுக்கிறான். அது எதிர்பாராத ஒன்று. எடி என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஊடகங்கள் எப்படி ஒரு திறமையில்லாத ஒருவனைப் பெரிய சேம்பியன் போல ஊதிப்பெருக்குகின்றன என்பதை அழகாகக் காட்டுகிறார்கள். அத்தோடு விளையாட்டினை சூதாக மாற்றும் நிக் போன்ற ஆட்கள் எப்படி எல்லாம் செயல்படுகிறார்கள் என்பதையும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள்

The fight game today is like show business, என்று நிக் ஒரு காட்சியில் சொல்கிறான். இன்று தொலைக்காட்சியில் காட்டப்படும் மல்யுத்தப்போட்டிகளைக் காணும் போது இச் சூது நீண்டகாலமாகவே தொடருகிறது என்பது புரிகிறது

வழக்கமான படங்களிலிருந்து போகார்ட் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தான் ஏமாற்றுகிறோம் என்ற குற்றவுணர்வை மறைத்துக் கொண்டு போட்டி நடக்குமிடத்தில் அவர் நடந்து கொள்வதும். நிக்கோடு வாதிடுவதும், டோராவைக் கையாளுவதிலும் காட்டும் நெகிழ்ச்சியும் எனப் போகார்ட் சிறப்பாக நடித்திருக்கிறார்.

நிக் இன்றைய மனிதன். அவன் விளையாட்டினை எப்படிப் பணமாக மாற்ற முடியும் என்பதைப் புரிந்து வைத்திருக்கிறான். சின்னமீனைப் போட்டு பெரிய மீனைப்பிடிப்பது என்ற விளையாட்டினை அவன் தைரியமாக ஆடுகிறான். காலைப்பிடிக்க வேண்டிய இடத்தில் காலைப் பிடிக்கிறான். கழுத்தை அறுக்க வேண்டிய இடத்தில் கழுத்தை அறுக்கிறான். நிக்கின் கதாபாத்திரம் மிகவும் யதார்த்தமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

முதற்காட்சியில் துவங்கிய படத்தின் வேகம் கடைசிக்காட்சி வரை பரபரப்பாக இருக்கிறது.

உண்மையான குத்துச்சண்டை வீரர்கள் சிலரைப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். படத்தின் ஒரு காட்சியில் முன்னாள் குத்துச்சண்டை வீரன் பிழைக்க வழியில்லாமல் கஷ்டப்படுவதை நேர்காணல் ஒன்றில் சொல்கிறான். அது மனசாட்சியின் குரல் போலவே ஒலிக்கிறது

••

21.8.20

0Shares
0