தண்ணீரின் சிறகுகள்

கனடாவில் பயணம் செய்யும் வரை தண்ணீரைப் பற்றி என் மனதில் பதிந்திருந்த சித்திரம் வேறாகவே இருந்தது, கனடாவின் பிரம்மாண்டமான ஏரிகள் அந்த பிம்பத்தை முற்றிலும் மாற்றிவிட்டன

தண்ணீருக்குச் சிறகுகள் இருப்பதைக் கனடாவின் ஒன்டாரியோ ஏரியையும், சிம்கோ ஏரியையும்,  பார்த்த போது தான் உணர்ந்தேன், கண்கொள்ளமுடியாதபடி அகன்று விரிந்து கிடக்கிறது ஏரி, கடலிடமுள்ள ஆர்ப்பரிப்பு கிடையாது, சுவையான நல்ல தண்ணீர், அடிவானத்தோடு தண்ணீர் ஒன்று சேர்ந்திருப்பதால் ஆகாசம் தான் தண்ணீராக உருமாறியிருக்கிறதோ எனும்படியாக நீர்பரப்பு விரிந்து கிடக்கிறது,

குட்டி குட்டியாகத் தீவுகள், அடர்ந்த மரங்கள் கொண்ட அந்தத் தீவுகளுக்குச் செல்லும் படகுப்போக்குவரத்து, தீவின் உள்ளே ஆங்காங்கே ஏரியைப் பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ள மரக்குடில்கள், பழுத்த இலை ஒன்று மரத்திலிருந்து கிழே உதிர்ந்தால் கூட துல்லியமாகக் கேட்குமளவு பேரமைதி, இதமான காற்று,  திட்டுத்திட்டாக நீரில் மிதக்கும் மேகங்கள், துள்ளும் மீன்களைத் தாவிப் பிடித்து தின்னும் பறவைகள், தண்ணீரின் தேசம் என்பது கனடாவிற்குத் தான் பொருத்தமானது,

ஒரு தேசத்தின் விதியைத் தண்ணீர் தான் தீர்மானம் செய்கிறது என்பது வியப்பானதில்லையா, கனடாவின் வாழ்வாதாரம் தண்ணீரே, அது தான் தேசத்தின் இயல்பை, வளத்தை, தொழிற்சாலைகளை, போக்குவரத்தை, தேசவருமானத்தை, வாழ்க்கை முறையைத் தீர்மானிக்கிறது,

உலகிலே மிக வலிமையான ஆயுதம் எதுவெனக் கேட்டால் நிமிஷ நேரம் கூட யோசிக்காமல் தண்ணீர் என்று சொல்வேன், அதே தண்ணீர் தான் உலகின் கோடான கோடி மனிதர்களை வாழ வைக்கவும் செய்கிறது, தண்ணீருக்கு நெருக்கமாக வாழும் மனிதர்களின் சுபாவம் தனித்துவமானதாக இருக்கிறது, கனடாவாசிகளின் இயல்பில் காணப்படும் பரந்தமனதும், சாந்தமும்,  பகிர்ந்து கொள்ளும் கூட்டுவாழ்க்கையின் இயல்பும் தண்ணீரிடமிருந்து தான் வந்திருக்க கூடுமோ என்று தோன்றுகிறது

இரண்டு ஏரிகளும் அகன்ற சிறகுகள் கொண்ட இரண்டு கழுகுகளைப்  போலவே தோன்றின, பூர்வகுடிமக்கள் ஏரிகளுக்குச் சிறகுகள் இருப்பதாகவும், அவை ஒரு இடம் விட்டு இன்னொரு இடம் பறந்து போய்விடும் என நம்புவதாகக் குறிப்பிடுகிறார்கள்,

ஏரிகள் பறந்து செல்கின்றன என்ற கற்பனையே எவ்வளவு உவப்பாக இருக்கிறது, ஆயிரமாயிரம் மீன்கள், ஆமைகள், நண்டுகள், இதர உயிரினங்களுடன் ஒரு ஏரி வானில் பறந்து கொண்டிருக்கும் காட்சியை நினைத்துப் பாருங்கள், எவ்வளவு பெரிய விந்தை, பூர்வகுடி மனிதன் தண்ணீரைத் தனது இணைபிரியாத தோழனாகவே கருதினான், பலநேரங்களில் தண்ணீரே  தனது மூதாதையர்களின் வீடு என்று நம்பிக்கை கொண்டிருந்தான், தண்ணீரை அவன் வணங்கியது வெறும் பழக்கத்தால் மட்டுமில்லை, மாறாக அதன் உக்கிரத்தை, கருணையை அறிந்திருக்கிறான் என்பதாலே.

ஏரியினுள் நீர்தெய்வம் இருப்பதாக உள்ள நம்பிக்கை எல்லா இனங்களிலும் காணப்படுகிறது, கார்லோஸ் ப்யூன்டஸ் எழுதிய சக்மூல் என்ற சிறுகதை தான் நினைவிற்கு வருகிறது, சக்மூல் என்ற மழைக்கடவுளின் சிற்பம் ஒன்றைத் தனது அடுக்குமாடி குடியிருப்பிற்குக் கொண்டு வந்து வைத்த ஒருவனைப்பற்றிய கதையது, அதில் சக்மூல் பெருமழையின் உக்கிர வடிவமாக இடம் பெறுகிறது, மெக்சிகப் பூர்வகுடிகளுக்கு சக்மூல் போல ஒவ்வொரு ஆதிஇனமும் தண்ணீரை தனித்துவமிக்க தெய்வமாக உருமாற்றி வழிபடவே செய்கின்றன,

ராமநாதபுர மாவட்டத்தில் ராஜசிங்க மங்கலம் என்றொரு ஊரிருக்கிறது, அங்குள்ள கண்மாய் மிகப்பெரியது, அதை நாரை பறக்காத நாற்பத்தியெட்டு மடைக் கண்மாய் என்று சொல்வார்கள், அது ஒரு பெருமிதம், ஆனால் உண்மையில் ஒரு நாரையால் கூடக் கடந்து போக முடியாத அளவு பெரிய நீர்நிலையென்பது என்பது  கனடாவின் ஏரிகளுக்கே சாரும், ஆண்டு முழுவதும் இந்த ஏரிகளில் நீர்வற்றாமலிருக்கின்றது, ஒன்டாரியோ ஏரி எப்போது தோன்றியது என்று கேட்கையில் ஐஸ்யுகத்தில் தோன்றியிருக்க கூடும் என்றார்கள்,

காலனிமயமாக்கப்பட்டதன் விளைவை மனிதர்கள் மட்டும் எதிர்கொள்ளவில்லை, இயற்கையும் அதிகமாகவே எதிர்கொண்டிருக்கிறது, கனடாவில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய ஏரிகள் இருக்கின்றன, ஒன்டாரியோ மாகாணத்தில் மட்டும்  250,000 நன்னீர் ஏரிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்த ஏரிகளின் பெயர்களை பாருங்கள்

Lake Superior, Lake Huron, Lake Ontario . Lake Erie.  Lake Huron, , Lake Nipigon ,Lake Seul,  Lake St. Clair, Lake Abitibi, Lake Nipissing, Lake Simcoe, Big Trout Lake,  Lake Melville,  Grand Lake, Ashuanipi Lake, Atikonak Lake  Lake Joseph, Lake Winnipeg,        Lake Winnipegosis.                Lake Manitoba,   Southern Indian Lake,Cedar Lake,   Gods Lake,            Cross Lake,            Playgreen Lake,   Dauphin Lake, Granville Lake, Sipiwesk Lake  Molson Lake, Lake Athabasca Peter.  Pond Lake, Deschambault Lake, Churchill Lake. Frobisher Lake, Black Lake Montreal Lake.

இவை சிறு மாதிரி மட்டுமே, இவை போல இன்னும் ஆயிரக்கணக்கில் உள்ளன, இந்த  ஏரியின் பெயர்களில் பெரும்பான்மை பிரிட்டீஷ், பிரெஞ்சு காலனிய அதிகாரிகள் உருவாக்கியவை, பூர்வகுடி மக்கள் இந்த ஏரிகளுக்கு வைத்திருந்த பெயர்களை மாற்றிவிட்டு ஆட்சியாளரின் தாத்தா, மாமனார், அவர் காலத்தைய மிலிட்டரி ஜெனரல், கவர்னர், அவரது மனைவி, மச்சினன் என்று பலரது பெயர்களும் ஏரிகளுக்குச் சூட்டப்பட்டிருக்கின்றன

சிம்கோ ஏரிக்குப் போன போது முதலில் கேட்டது இந்த ஏரியின் உண்மையான பெயர் என்னவென்று தான், அது எவருக்கும் தெரியவில்லை, தெரிந்திராதபடி அது நினைவில் இருந்து அழிக்கப்பட்டு விட்டது,

சிம்கோ ஏரிக்கு இங்கிலாந்தின் கடற்படையில் பணியாற்றி உயிர்நீத்த  Captain John Simcoeவின் நினைவாக அவரது பையன் John Graves Simcoe ,  ஏரியின் பெயரை மாற்றி சிம்கோ ஏரி என வைத்திருக்கிறான்,  அந்த ஏரியின் உண்மையான பெயர் Ouentironk, இனிப்பான தண்ணீர் என்று அர்த்தம், இந்த பெயர் மாற்றம்  1793 ம் ஆண்டு நடைபெற்றிருக்கிறது, இது ஒரு சிறிய உதாரணம், இது போல தான் பெரும்பான்மை ஏரிகள், நகரங்கள், மலைகள், சாலைகள் பிரிட்டீஷ்காரர்களின் இஷ்டம் போல பெயர் மாற்றம் பெற்றிருக்கின்றன,,

டொரன்டோ நகருக்கு அந்த பெயர் வந்ததிற்கு காரணமே ஏரி தான் என்கிறார்கள், ஒன்டாரியோ என்ற மிகப்பெரிய ஏரி டொரன்டோ நகரைச்சுற்றியுள்ளது, டொரன்டோ என்ற இராகுயி மொழிச் சொல் (Iroquoian) தண்ணீருக்குள் மரங்கள் அடர்ந்து நிற்கின்றன என்பதையே  குறிக்கிறது, அதாவது நிறைய மரங்கள் அடர்ந்த ஒரு கரைப்பகுதியாக இருந்திருக்ககூடும், இன்றும் தண்ணீருக்குள் மரங்கள் இருப்பதை நம்மால் காணமுடிகிறது,

மீன்பிடிப்பு தான் ஏரிசார்ந்த வாழ்வின் பிரதானத் தொழில், இன்றும் அதிகாலையில் ஏரிகளில் மீன்படகுகள் செல்வதையும், அருகாமைச் சந்தைகளில் விதவிதமான மீன்கள் விற்பனைக்குக் கொட்டி வைக்கப்பட்டிருப்பதையும் காணும் போது வியப்பாகவே இருக்கிறது.

ஒன்டாரியோ ஏரியை முதன்முறையாக விமானத்தில் இருந்து பார்த்தபோது தரையே தெரியாத கடல் போலிருந்தது, இயற்கையின் பிரம்மாண்டமான நீர்கோப்பையில் பனித்துண்டுகள் மிதந்து கொண்டிருப்பது போல நிலம் தென்பட்டது, ஒன்டாரியோ வட அமெரிக்காவின் ஐந்து மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று . இதன் ஒரு பகுதி கனடாவிலும் மறுபகுதி அமெரிக்காவிலும் உள்ளது,  ஒருமுறை முழு ஏரியைச் சுற்றிவர 712 மைல் ஆகும் என்றார்கள்,  ஒன்டாரியோ என்றால் ஒளிரும் தண்ணீர் என்று பொருள், அது நிஜம் என்பதை ஏரியை நேரில் காணும் போது உணர முடிந்தது, பகலில் ஒன்டாரியோ ஒருவிதமாக ஒளிர்கிறது, இரவில் இன்னொரு விதமாக உள்ளது, லேசான பச்சையொளியது, சில நேரங்களில் நீலமும் பச்சையும் கலந்த வெளிச்சமாக மாறுகிறது, பகலில் ஒன்டாரியோ ஏரி மிகப்பெரிய கண்ணாடி போலாகிவிடுகிறது, மொத்த வெளிச்சத்தையும் அந்தக் கண்ணாடி பிரதிபலித்து அருகாமையில் உள்ள நகரத்தின் மீது பாய்ச்சுகிறது,

பகலில் ஏரியில் பயணம் செய்யும் போது கண்கள் தானே சுருங்கிவிடுகின்றன, அதிகாலை நேரமும் மாலையும் தான் ஏரியைப் பார்ப்பதற்காக சரியான நேரங்கள், உலகிலேயே மிக உயரமான சி.என்.டவரின் உச்சியில் இருந்து ஒன்டாரியோ ஏரியை பார்த்த போது பறக்க எத்தனித்த ஒரு பறவையைப் போலவே தோன்றியது,

சி. என். டவரின் உயரம் 1815 அடிஉயரம், இதன் உச்சத்தில் ஒரு சுழலும் உணவகம் உள்ளது, இந்த உணவகம் உலகின் மிக உயரமான ஒன்று,  இதில் உணவு அருந்துவதற்காக நண்பர் ஜெயராமன் அழைத்துப் போயிருந்தார், அவரும் அவரது துணைவியாரும் இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர்கள், அவர்களது வீட்டில் உள்ள நூலகம் மிகப்பெரியது, அவர் வீட்டு ஜன்னலைத் திறந்தால் சி.என், டவரைக்காணலாம், அவ்வளவு உயரத்தில் வசிக்கிறார், அவரோடு சி.என் டவரின் உச்சிக்கு சென்றிருந்தேன்,

இரவு மணி எட்டு ஆகியும் வெயில் இருந்தது, சுழலும் கட்டிடம் என்பதால் கண்முன்னே காட்சி மாறிக் கொண்டேயிருந்தது, அவ்வளவு உயரத்தில் சாப்பிடும் போது பூமியை விட்டு மிதந்தபடியே சாப்பிடுவது போல விசித்திரமான அனுபவமாக இருந்தது.

தொலைவில் ஏரியின் நிறம் வெயில்பட்டு மாறிக் கொண்டேயிருப்பதை கண்டேன், அவ்வளவு உயரத்தின் தனித்துவம் அதிவேகமாக வீசும் காற்று, ஒரு சிறிய கதவை திறந்து வெளியே வந்து நின்றால் காற்று நம்மை பிசாசைப் போல இழுக்கிறது, இவ்வளவு விசையோடு வீசும் காற்றை நான் அறிந்ததேயில்லை

மறுநாள் பகலில் ஏரியின் கரையிலே நடந்து கொண்டிருந்தேன்,  ஏரியைப் பார்க்கும் போதெல்லாம் மனது தண்ணீரில் விழுந்த களிமண் போலாகிவிடுகிறது, கனடாவாசிகள் இந்தக் இளம்கோடையைக் கூட தாங்கமுடியாமல் நிறைய ஐஸ்துண்டுகள் போட்ட தண்ணீரை குடித்தபடியே இருக்கிறார்கள்

கனடாவின் சூரியனும் நம் ஊரின் சூரியனும் ஒரே ஆள் இல்லை, உடன்பிறப்புகள் போலதானிருக்கிறார்கள், நமது சூரியனுக்கு திடீரென கிறுக்குப் பிடித்து கொண்டது போலிருக்கும், கனடாவின் சூரியன் சற்று கனவான், அவர் மிக நிதானமாக எழுந்து நடந்து உயர்ந்து நீண்ட நேரம் பணியாற்றி மெதுவாக தனது வீடு திரும்பிப் போகிறார், நமது ஊரின் சூரியனோ எழுந்து கொள்வது துவங்கி, அஸ்தமனம் வரை எல்லாவற்றிலும் பதற்றம், படபடப்பு, அசுரவேகம், உக்கிரம், விளையாட்டுதனம் கொண்டதாகவேயிருக்கிறது,

கனடாவிற்கு சென்ற சில நாட்களுக்குப் பகல் இரவு குழப்பம் மனதை வாட்டி எடுத்துவிட்டது, கையில் உள்ள கடிகாரம் மணி இரவு ஒன்பது என்று காட்டும், ஆனால் சாலையில் நல்ல பகல்வெளிச்சம், ஆள் நடமாட்டமிருக்கும், இரவு உணவு சாப்பிடலாமா என்று நண்பர்கள் கேட்பார்கள், இன்னமும் இரவு வரவில்லையே என்றால், சிரிப்பார்கள், கடிகாரம் இரவு ஒன்பதைக் காட்டுகிறதில்லையா, என்றால் இது இரவு தான் என்பார்கள், வெயிலுள்ள இரவு என்பது இந்தியா போல காலமாற்றம் அதிமில்லாத நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு பழக்கமே இல்லாதது, விரைவில் இது பழகிவிடும் என்றார்கள்,

கனடாவின் சூரியன் ஏரியினுள்ளிருந்து உதயமாகி வரும் காட்சிக்கு நிகராக எதையும் சொல்ல முடியாது, அது நான் பார்த்த அற்புதங்களில் ஒன்று, கன்னியாகுமரிக் கடலில் சூரியன் உதயமாகி வருவதைக் காணும் போது கடலின் அடியில் இருந்து சிவப்புகோளம் ஒன்று உருண்டு திரண்டு வெளியே வந்து, மெல்ல குளிர்ந்து ஒரு விளையாட்டுப் பந்து போலாகி, பின்பு அதுவும் உருமாறி குழந்தை முதன்முறையாக எழுந்து நடப்பது போல தட்டுத்தடுமாறி காலூன்றி நடந்து, சட்டென அதிவேகம் கொண்டு, பார்த்துக் கொண்டிருந்த அரைமணி நேரத்தில் அது விசையேறி வெக்கையும் வெயிலுமாக ஆவேசமாக செல்லத்துவங்கும்,

ஆனால் ஏரியில் உதிக்கும் சூரியனோ உலகைப் பார்வையிடுவதற்காக வானுலகில் வந்த ஒரு தேவனைப் போல நடந்து கொள்கிறது, நிதானமான அது ஏரியின் அடியில் இருந்து மேலே எழுகிறது, ஏரியினுள் உள்ள உயிரியக்கம் யாவும் சரியாகதான் உள்ளதா என பார்வையிடுவது போல  தண்ணீருக்குள்ளாக அமிழ்ந்திருக்கிறது, அதன் வருகையை முன்அறிவிப்பது போல ஏரித் தண்ணீரின் மீது பறவைகள் அலைந்து கொண்டேயிருக்கின்றன, அடிவானம் காத்துக் கொண்டிருக்கிறது, சூரியன் வருவதற்கு முன்பே  வெளிச்சம் கரைந்து மேலே வரத் துவங்கிவிடுகிறது,

சூரியன் தன் தலையை மட்டும் வெளியே எட்டிப்பார்த்து யாவும் சரியாக உள்ளதென அறிந்தபிறகு வெளியே வரலாம் என்பது போலவே மெதுவாக எட்டிப் பார்க்கிறது, அல்லது அதற்குள் என்ன அவசரம், தண்ணீரை விட்டு ஏன் போகிறீர்கள் என்று யாரோ காலைப் பிடித்து இழுத்துக் கொண்டது போல தண்ணீரில் பாதியும் ஏரியின் விளம்பில் பாதியுமாக இருக்கிறது, அந்தக் காட்சியை மீன்கள் கைதட்டி ரசிப்பது போல துள்ளுகின்றன, விளையாடியது போதும் என்ற போது சூரியன் மேலே எழுகிறது, அந்த எழும் கணம் ஒரு மகத்தான பிரிவு போலவும், அதன் துக்கம் தாளாமல் ஏரி வருந்துவது போன்றும் செந்நிற மாற்றம் ஏற்படுகிறது,

சூரியனும் உடனே வானின் உயரத்திற்கு எழுந்துவிடுவதில்லை, அந்த துக்கத்தை உணர்ந்து கொண்டதைப் போல அது சற்று நின்று, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலே எழுகிறது,

அதுவரை தன்னை விட பிரம்மாண்டம் வேறு எதுவுமில்லை என்று இருந்த ஏரியை வெட்கப்படச் செய்யும் அளவிற்கு, சூரியன்  தனது வெளிச்சத்தை உலகின் மீது படர விடுகிறது, எவரையும் நனைக்காத தண்ணீர் தான் வெளிச்சம் என்பதைக் கண்டு கொண்டது போல ஏரி வாய்மூடி மௌனமாகிவிடுகிறது,

பின்பு சூரியன் கரையோர மரங்களைப் பார்வையிடுகிறது, மனிதர்களைப் பார்வையிடுகிறது, தூரத்துப் பண்ணை வீட்டின் நிலவறையில் தூங்கும் சிலந்தியைக் கூட தொட்டு எழுப்பி வேலையைப் பார்க்கச் சொல்கிறது,

சூரியன் எழும் தருணங்களில் நடக்கும் இந்த நாடகத்திற்கு இசை சேர்ப்பது போல ஒரு அபூர்வமான சங்கீதம் ஒன்றும் கேட்கிறது, அதை யார் வாசிக்கிறார்கள், உலகில் உள்ள பூச்சியினங்களா, அல்லது தண்ணீரின் முணுமுணுப்பு தான் அப்படி கேட்கிறதா, அல்லது மரங்களின் இலையசைவு அப்படியிருக்கிறதா, இல்லை காற்று தான் அப்படி குரலை மாற்றி சலசலக்கிறதா எனத்தெரியவில்லை, ஆனால் அது மயக்கமூட்டும் விசித்திரமானதொரு இசை, இதே மகத்தான நாடகம் சூரியன் அஸ்தமிக்கும் போது நடைபெறுகிறது, ஆனால் அதை நின்று பார்ப்பவர்கள் குறைவு,

உண்மையில் சூரியன் எழுவதற்கு முன்பே ஏரி கண்விழித்துக் கொள்கிறது,  அதன் அறிகுறி போல தண்ணீரின் வேகம் மாறுகிறது, காற்றின் சுழிப்பும் மாறிவிடுகிறது,  ஒரு டைனோசரை நேரில் பார்க்க நேர்ந்தால் எவ்வளவு பழமையான ஒன்றை பார்க்கிறோம் என்று நாம் வியப்படைவோம், இந்த ஏரிகள் டைனோசர்கள் காலத்திற்கும் முந்தியவை, அவற்றின் முன் நாம் நிற்கும் போது ஏரியின் நினைவில் நாம் ஒரு சிறு துளி, துளி என்பது கூட பெரிய சொல், துமி, அது தானே துளியினுள் துளி, அவ்வளவு சிறியதாகவே  உணர்க்கிறோம், ,

ஏரிக்காற்றை அனுபவித்த மனிதன் அதன்பிறகு வேறு எதையும் விரும்ப மாட்டான், அது ஒருவிதமான பிணைப்பு, வருடல், ஆறுதல், எந்த மனிதக் கரத்தாலும் அந்தக் காற்றைப் போல ஒரு நாளும் முகத்தை, பிடரியைத் தொட்டுத் தடவி இதம் தர முடியாது.

ஒவ்வொரு ஏரிக்குள்ளும் குளத்தில் எறிந்த அரிசிப்பொரி மிதப்பது போல குட்டிகுட்டியாகத் தீவுகள், சில தீவுகளில் ஒரு காலடி தான் வைக்கமுடியும், மறு அடியை வைக்க பக்கத்து தீவிற்கு போக வேண்டும் என்பது போலிருக்கிறது,

மேபிள் மரங்கள் எங்கு பார்த்தாலும் காணப்படுகின்றன, மேபிள் மரத்தின் இலை தான் கனடாவின் தேசியச் சின்னம், மேபிள் மரத்தில் இருந்து எடுக்கப்படும் தேனை மருந்துப்பொருளாக விற்கிறார்கள், மேபிள் இலையின் சிவப்பு நிறம் அழகானதாகயிருக்கிறது, இலையுதிர்காலத்தில் அதன் நிறம் மாறிவிடும் என்றார்கள்

கனடாவின் துருவப்பகுதியில் உள்ள பூர்வகுடிகளை “Inuit” எனறு அழைக்கிறார்கள், அவர்கள் குடியிருக்கும் பகுதி First Nation என்று குறிக்கப்படுகிறது, எஸ்கிமோ என்று நாம் குறிப்பிடுகிறோம் இல்லையா, அந்தச் சொல் அங்கே தவறானது என்று விலக்கபட்டிருக்கிறது, காரணம் எஸ்கிமோ (Eskimo) என்பதற்கு பச்சை மாமிசம் உண்பவர்கள் என்று பொருள், ஆகவே அது பூர்வகுடிகளை இழிவுபடுத்தும் சொல் என்று  கனடாவாசிகள் அதைப் பயன்படுத்துவதில்லை,

கனடாவின் துருவப் பகுதியில் Yupik , Inuit.  என இரண்டுவிதமான பூர்வகுடிகள் இருக்கிறார்கள், அவர்களுக்கான பொதுச்சொல்லாக இனியூட் என்ற சொல் பயன்படுத்தபடுகிறது, இந்த இனியூட் மக்கள் தண்ணீர் குறித்து அதிகம் அறிந்தவர்கள், குறிப்பாக பனியைப் பற்றி இவர்களது அனுபவ அறிவு மகத்தானது,  இனியூட் மக்களின் கலை, பண்பாடு மற்றும் வாழ்வியல் முறை குறித்து அறிந்து கொள்ள விசேசமான ஒரு ம்யூசியம் உள்ளது, அது டொரன்டோவின் டவுன்டவுன் பகுதியில் இருக்கிறது, அதைப் பார்வையிடுவதற்காக நண்பர்களுடன் சென்றிருந்தேன்,

இனியூட் மக்களின் வேட்டைக்கருவிகள், குளிராடைகள், வீடுகளின் அமைப்பு, மற்றும் உணவுப்பாத்திரங்கள், குலக்குறிகள், கைவினைப்பொருள்கள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன, அதில் கற்களை குவித்துவைத்து அதன் வழியே ஒரு செய்தியை சொல்லும் அடையாளக்குறிகளைக் கண்டேன், ஒரு கல் மீது இன்னொரு கல்லை நிற்கச் செய்து தங்களின் செய்திகளைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள், கற்கள் தான் அவர்களது சொற்கள் என்று அறிந்து கொண்ட போது சந்தோஷமாக இருந்தது, ஏரியை ஒட்டிய சாலைகளில் இது போன்ற பிரம்மாண்டமான கல் அடுக்குகள்  இருக்கின்றன, அவை இன அடையாளமாக கருதப்படுகின்றன என்று அருங்காட்சியகத்தின் ஒருங்கிணைப்பாளர் விளக்கினார்

டொரன்டோ நகருக்குள் இருந்து கொண்டு ஒன்டாரியோ ஏரியைப் பார்ப்பது ஒருவிதம் என்றால், அதை நகரை விட்டு விலகி வேறு வேறு உயரங்களில் வேறு வேறு முனைகளில் நின்று காண்பது முற்றிலும் வேறுபட்ட அனுபவம், ஒரு குன்றின் மீதிருந்து ஏரியைப் பார்த்தேன், அப்போது ஏரி உருவிய வாளைப் போல தகதகத்துக் கொண்டிருந்தது, பூங்கா ஒன்றின் அடர்ந்த மரங்களைக் கடந்து சென்று பாறை ஒன்றின் மேல் நின்று பார்த்த போது அதே ஏரி பூமி எனும் குடுவையில் பாதி நிரப்பட்ட மதுவைப் போல அலையாடுவதாகத் தோன்றியது, படகோட்டம் நடைபெறும இடத்திலிருந்து பார்க்கையில் ஏரி குழந்தைகளின் விளையாட்டு சறுக்குப்பலகை போலிருந்தது

இந்தியாவின் மிகப்பெரிய ஏரியான ஒரிசாவில் உள்ள சில்கா ஏரிக்குப் போயிருக்கிறேன், அந்த ஏரி கடலோடு கலக்கும் ஒரு முனையை அருகில் சென்று பார்த்திருக்கிறேன், சில்கா ஏரியின் சிறப்பு நம் கண்முன்னே டால்பின் மீன்கள் துள்ளிவிளையாடும், ஆனால் கனடாவின் ஏரிகளோடு ஒப்பிடுகையில் சில்கா சிறிய இலந்தைப் பழம் போலவே தோன்றியது,

ஒன்டாரியோ ஏரியை பனிக்காலத்தில் பார்க்கையில் முற்றிலும் வேறுவிதமாக இருக்கும் என்றார் அ.முத்துலிங்கம், அமெரிக்காவில் இருந்து திரும்பி கனடா வரும் போது பில்லிபிஷப் விமான நிலையம் எனப்படும் தீவில் உள்ள சிறிய விமான நிலையத்தில் வந்து இறங்கினேன், விமானம் ஏரித் தண்ணீரின் மீது ஒரு தும்பி பறப்பதைப் போல மிக நெருக்கமாக பறந்தது, சிறிய விமானம் என்பதால் கை நீட்டி வெளியே தொட்டுவிடலாம் என்பது போலத் தெரிந்தது,

டொரன்டோ நகருக்கு வணிகரீதியாக பயணம் செய்பவர்களுக்கு  வசதியாக அலுவலகங்கள் அதிகமுள்ள டவுன்டவுன் செல்வதற்கு ஏற்றார் போல தீவில் இந்த விமானநிலையம் அமைந்திருக்கிறது, தீவில் இறங்கியதும் விமானநிலையக் கண்ணாடி ஜன்னல் வழியாக ஒன்டாரியோ ஏரியைக் கண்டேன், கண்கூசும் வெளிச்சம், அருகாமை நகரம் தெரியாதபடி வெளிச்சம் உயர்ந்து எழுந்திருந்தது,  இயந்திரப்படகுகள் போவதும் வருவதுமாக இருந்தன, உயரமான சிவப்பு நிற விளம்பர பலூன் ஒன்றை ஏரிக்கரையில் பறக்கவிட்டிருந்தார்கள், பழுப்பேறிய மரக்கட்டை ஒன்று தனியே மிதந்து கொண்டிருந்தது, அது போல கட்டைகள் மிதந்து கொண்டிருப்பதைப் பூர்வகுடிகள் ஏரியில் உள்ள அரக்கன் அப்படி உருமாறி ஒய்வெடுத்துக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்,

எல்லா ஏரிகளிலும் ஒற்றையாக உள்ள மரத்தை பற்றியும், நீர்பிசாசைப் பற்றியும் கதைகள் இருக்கின்றன, காரை எடுத்துக் கொண்டு வெளியே வருகையில் ஏரியை பார்த்தபடியே ஒரு சாக்ஸபோன் கலைஞன் இசைத்துக் கொண்டிருப்பதை கண்டேன், சாலையோர இசைக்கலைஞர்கள் கனடாவில் அதிகம், அவர்களின் இசை அபூர்வமான சங்கீதமாகவே இருக்கிறது

கனடாவில் இருந்து ஊர் திரும்பும் நாளில் மறுபடியும் விமானத்தில் இருந்து ஒன்டாரியோ ஏரியை பார்த்தேன், எவ்வளவு மகத்தான ஏரி, கண்ணில் இருந்து ஏரி மறையும் வரை பார்த்துக் கொண்டேயிருந்தேன், விமானம் மேகமூட்டத்திற்குள் மறைந்து போனது, கண்ணில் இருந்து ஏரி மறைந்து மனதிற்குள் நிரம்ப துவங்கியது, பின்னர் பிராங்க்பர்ட் வந்து சேரும்வரை ஒன்டாரியோ ஏரியோடு இணைந்திருந்த தருணங்கள் ஒவ்வொன்றாக நினைவில் எழுந்து கொண்டிருந்தன,

ஊர்வந்து இறங்கும் போது We do not see nature with our eyes, but with our understandings and our hearts.என்ற வில்லியம் ஹாஸ்லிட்டின் வரி தான் எனது அனுபவமும் என்று உணர்ந்தேன்

••

0Shares
0