தண்ணீரைத் தேடி

The Naked Island படத்தில் தொலைதூரத் தீவு ஒன்றில் வாழும் ஆணும் பெண்ணும் விவசாயம் செய்கிறார்கள்

கடலின் உப்பு நீரைக் கொண்டு விவசாயம் செய்ய முடியாது என்பதால் நல்ல தண்ணீரைத் தேடி தீவின் மறுகரைக்குச் செல்கிறார்கள். வாளிகளில் தண்ணீரைச் சேகரித்து, தங்கள் தீவுக்குக் கொண்டு வருகிறார்கள். பாறைவெடிப்புகளுக்குள் நீளும் பாதையில் தண்ணீர் வாளிகளைக் கொண்டு செல்கிறார்கள். கிட்டத்தட்ட முதுகுத்தண்டு உடைந்துவிடுமளவு கடினமான பணி.

அந்தப் பெண் இரண்டு பக்கமும் இரண்டு தண்ணீர் வாளிகளைச் சுமந்தபடி உயரமான பாதையில் நடந்தேறுகிறாள். இந்தக் காட்சியில் கேமிரா அவள் கூடவே பயணம் செய்கிறது. அவளது நடையின் தடுமாற்றம். கடினமான பாறைகளுக்குச் செல்லும் சிறிய பாதை. சூரிய ஒளி அவள் முகத்தில் பட்டு தெறிக்கும் விதம். அவள் ஒவ்வொரு அடியையும் உறுதியாக, கவனமாக எடுத்து வைக்கிறாள். அவர்களின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பதை நீண்டு செல்லும் அந்தக் காட்சி உணர்த்திவிடுகிறது.

தீவுப் பெண்ணாக நடித்திருப்பவர் இயக்குநர் ஷிண்டோவின் மனைவி நொபுகோ ஒட்டோவா. ஷிண்டோ மற்றும் நொபுகோ இறந்த போது அவர்களின் சாம்பல் இந்தத் தீவில் தூவப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் வசனமே கிடையாது. இசையும் கதபாத்திரங்களின் உடல்மொழியும் இணைந்து புதிய அனுபவத்தை ஏற்படுத்துகின்றன. சுகுனே என்ற சிறிய தீவில் படமாக்கியிருக்கிறார்கள். பிரமிக்க வைக்கும் நிலப்பரப்பு.

1960ல் வெளியான இந்தத் திரைப்படத்தை இயக்கியிருப்பவர்க் கனெட்டோ ஷிண்டோ. இவர் Children of Hiroshima என்ற அற்புதமான படத்தை இயக்கியிருக்கிறார். இது ஜப்பானின் சிறந்த செவ்வியல் திரைப்படங்களில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்படுகிறது.

The Naked Island படம் ஹிரோஷிமாவின் அருகிலுள்ள ஒரு தீவில் படமாக்கபட்டிருக்கிறது. நான்கே கதாபாத்திரங்கள். விவசாயம் செய்யும் ஒரு ஆண். அவனது மனைவி. இரண்டு பிள்ளைகள். போராட்டமான அவர்கள் வாழ்க்கையை ஆவணப்படம் போல படம்பிடித்துள்ளார் ஷிண்டோ. காட்சிக் கோணங்களும் ஹிகாரு ஹயாஷியின் இசையும் பிரமிக்க வைக்கின்றன. குறிப்பாக நீண்டு செல்லும் காட்சிகளில் நாம் நிழலைப் போல அவர்களைப் பின்தொடருகிறோம்.

கறுப்பு வெள்ளையில் கவித்துவமான காட்சிகளை உருவாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் கியோமி குரோடா

தொலைதூரத் தீவில் உள்ள ஒரு குடும்பத்தின் வாழ்க்கையைச் சொல்வதன் மூலம் போருக்கு முந்தைய ஜப்பானிய வாழ்வை ஆவணப்படுத்துகிறார் ஷிண்டோ. நன்றியுணர்வும் பணிவும் கொண்ட அந்த விவசாயக் குடும்பம் ஒரு காலகட்டத்தின் சாட்சியம் போலவே சித்தரிக்கபடுகிறது

அவர்கள் தீவில் வசித்தாலும் மறுகரையிலுள்ள ஓனோமிச்சி என்ற சிறுநகருக்குப் போகிறார்கள். அங்கே வாழ்க்கை நவீனமாகி வருவதை அறிந்து கொள்கிறார்கள். அந்த மாற்றம் அவர்களிடம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

உணவு மேஜையின் முன்பு கூட அவர்கள் நிதானமாக இருப்பதில்லை. பசி அவர்களைப் பதற்றம் கொள்ள வைக்கிறது. வேகவேகமாகச் சாப்பிடுகிறார்கள். வெந்நீர்த் தொட்டியில் குளிக்கும் போது தான் சற்று மகிழ்ச்சி அடைகிறார்கள். அந்தப் பெண் அடையும் மகிழ்ச்சி அழகாக வெளிப்படுத்தபட்டுள்ளது. விவசாயின் மகன் அருகிலுள்ள பள்ளியில் படிக்கிறான். இதற்காக அவனை தனது படகில் அழைத்துக் கொண்டு போகிறாள் அம்மா. அழகான அந்தப் பள்ளிக்கூடம், அதன் மைதானம். விளையாடும் சிறுவர்கள் எனப் பள்ளி வாழ்க்கைக் குறைவான காட்சிகளில் அழகாக வெளிப்படுத்தப்படுகிறது

பருவகாலம் மாறும் போது அவர்களின் வாழ்க்கைக் கடினமாகிறது. மழையினையும் பனிக்காலத்தையும் அவர்கள் எதிர்கொள்ளும் விதம்  துயரமானது. அருகிலுள்ள ஊரில் நடக்கும் திருவிழா, விளைந்த பொருட்களைக் காணிக்கை செலுத்தும் விதம், அவசர உதவிக்காக மருத்துவரை அழைப்பதற்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை என்று அந்தக் கால ஜப்பானிய விவசாய வாழ்க்கை ஆவணப்படம் போல சித்தரிக்கபடுகிறது

அவளுடைய தண்ணீர் வாளிகளைக் குறியீடாகவே காணுகிறேன். ஒரு பெண்ணாக, மனைவியாக, தாயாக அந்தப் பெண் மீது ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்களின் உருவகமாகக் கனமான வாளி சித்தரிக்கபடுகிறது

சிறுவர்கள் மீன்பிடிக்கும் காட்சியும். அந்த மீனை விற்பதற்காகக் குடும்பம் ஓனோமிச்சிக்கு மேற்கொள்ளும் பயணமும், உணவகம் ஒன்றில் அமர்ந்து அவர்கள் சுவைமிக்க உணவைச் சாப்பிடும் காட்சியும், முகமூடி அணிந்து ஆடும் நடனமும் அபூர்வமான கலையழகுடன் உருவாக்கபட்டிருக்கின்றன

உயிர்வாழ்வதற்கான அவர்களின் இடையுறாத போராட்டம் கிரேக்கப் புராணத்தில் வரும் சிசிபஸின் செயல்பாட்டினைப் போன்றது. சலிப்பான போதும் அதிலிருந்து மீட்சி கிடையாது.

இது போல விவசாய வாழ்க்கையின் கஷ்டங்களை ரஷ்ய இயக்குநரான டவ்சென்கோ The Earth என்று படமாக்கியிருக்கிறார். இப்படம் பார்க்கும் போது அதன் நினைவு வந்து போனது. சிறுவர்கள் விளையாடும் காட்சிகள் சத்யஜித்ரேயின் பதேர்ப் பாஞ்சாலி போன்றிருக்கின்றன. ஜப்பானிய சினிமாக் காவியங்களில் ஒன்றாகவே இப்படத்தைக் கருதுவேன்.

தனிமைப்படுத்தப்படுத்த அவர்களின் வாழ்க்கை ஒரு தீவைப் போலவேயிருக்கிறது. சுற்றிலும் கடல் இருந்தாலும் அவர்கள் தண்ணீருக்காகவே போராடுகிறார்கள். இயற்கை தான் அவர்களின் சொர்க்கம் அதுவே அவர்களின் நரகமும் கூட.

0Shares
0