ஜப்பானிய எழுத்தாளர் சுடோமு மிசுகாமியின் நாவலை மையமாகக் கொண்டு 1963ல் உருவாக்கபட்ட திரைப்படம் Bamboo Doll of Echizen.
மூங்கில் பொம்மைகள் செய்யும் இளைஞனின் வாழ்க்கையை விவரிக்கிறது. ஜப்பானிய கறுப்பு வெள்ளைப்படங்கள் தனித்துவமான அழகியலைக் கொண்டிருக்கின்றன. மாறுபட்ட கதைகள். மறக்க முடியாத கதாபாத்திரங்கள். உணர்ச்சிப்பூர்வமான திரைமொழி, நேர்த்தியான இசை, மற்றும் கச்சிதமான படத்தொகுப்பு என ஜப்பானிய சினிமா அதற்கான கலைநேர்த்தியைக் கொண்டிருக்கிறது.
இப் படத்தின் இயக்குநர் கோசாபுரோ யோஷிமுரா. இவர் புகழ்பெற்ற இயக்குநர் யசுஜிரோ ஓசுவின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ஆகவே இப்படத்தில் ஓசுவின் சாயலைக் காண முடிகிறது. படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் கசுவோ மியாகாவா. இவர் ரஷோமோன் படத்தின் ஒளிப்பதிவாளர். ஜப்பானின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராகக் கொண்டாடப்பட்டவர்.
எச்சிசன் மாகாணத்தின் டேகாமி என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் கிசுகே உஜியே பொம்மைகள் செய்யும் கலைஞன். இவனது தந்தை புகழ்பெற்ற பொம்மைக்கலைஞர். தந்தையின் மரணத்திலிருந்தே படம் துவங்குகிறது. அவருக்கான நினைவுச் சடங்குகளை நடத்தி வைப்பதற்காகப் புத்த மதகுருவை அழைத்து வருகிறான். அவரும் பிரார்த்தனை செய்து சடங்குகளை நிகழ்த்துகிறார். பனிப்பொழிவின் ஊடாக நடைபெறும் இந்த நிகழ்வு அழகாகக் காட்சிப்படுத்தபட்டிருக்கிறது.
கிசுகேவின் தந்தை மறைந்ததைப் பற்றிக் கேள்விபட்டு தாமே என்ற அழகான இளம் பெண் அஞ்சலி செலுத்த வருகிறாள். அவள் யார் என்று கிசுகேயிற்குத் தெரியவில்லை. அவனது தந்தைக்குப் பழக்கமானவள் என்று சொல்கிறாள். பனியின் ஊடே நீண்ட தூரம் பயணம் செய்து வந்துள்ள அவளை வீட்டிற்குள் வரவேற்கிறான்.
குடையுடன் அவளைத் தந்தையின் நினைவிடத்திற்கு அழைத்துப் போகிறாள். அங்கே தாமே உணர்ச்சிவசப்பட்டவளாகப் பிரார்த்தனை செய்கிறாள். பின்பு தனது ரயிலுக்கு நேரமாகிவிட்டது என்று பனிக்காற்றின் ஊடே புறப்படுகிறாள். அவளது பெயரை அறிந்து கொண்ட, கிசுகே சில நாட்களுக்குப் பின்பு அவளைத் தேடிச் செல்கிறான்.
தாமே ஒரு விலைமாது, சட்டவிரோதமான இன்ப விடுதியில் வேலை செய்கிறாள் என்பதையும், அவனது தந்தை ஒரு காலத்தில் அவளுடைய வழக்கமான வாடிக்கையாளராக இருந்ததையும் அறிந்து கொள்கிறான்.
தாமேயின் அறையில் அவளுக்காகத் தந்தை செய்து கொடுத்த அழகான மூங்கில் பொம்மை ஒன்றைக் காணுகிறான். அப்படி ஒரு அழகான பொம்மையை அவன் கண்டதேயில்லை. தாமே அந்தப் பொம்மையை அவனுக்கே பரிசாக அளிக்கிறாள்.
சிறுவயதிலே தாயை இழந்து தந்தையால் வளர்க்கபட்ட கிசுகேவிற்குத் தாமேயின் மீது ஈர்ப்பு உண்டாகிறது. அடிக்கடி அவளைத் தேடிச் சென்று பார்க்கிறான். உரையாடுகிறான். பெரும்கடன் சுமையால் அவள் சிரமப்படுவதை அறிந்து தனது பணத்தைக் கொடுத்து அவளைக் கடனிலிருந்து மீட்கிறான்.
அவள் விரும்பினால் அந்த விடுதியிலிருந்து வெளியேறி வந்து தன்னுடன் கிராமத்தில் வசிக்கலாம் என்று அழைப்பு விடுக்கிறான். தாமே யோசிப்பதற்கு நேரம் வேண்டும் என்கிறாள்
பொம்மை செய்வதற்கான மூங்கில் வெட்ட காட்டிற்குள் கிசுகே சென்றிருந்த நாளில் தாமே கிராமத்திற்கு வந்து சேருகிறாள். அவள் குதிரை வண்டியில் வருவதைக் கேள்விபட்டு கிசுகே காட்டிற்குள் மூச்சிரைக்க ஒடிவருவது அழகான காட்சி. ஊர்மக்கள் அவளைப் புது மணப்பெண் என்று நினைத்துக் கொண்டு வரவேற்கிறார்கள். அவளை வீட்டிற்குள் அழைத்துச் சென்று தங்க வைக்கிறான். ஊரார் ஆசையைப் போலவே அவளும் கிசுகேயை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாள். அவர்கள் திருமணம் எளிமையாக நடைபெறுகிறது
முதலிரவில் அவளுடன் உடலுறவு கொள்ளக் கிசுகே தயங்குகிறான். அவள் வற்புறுத்தவே அவளைத் தனது தாயாக நினைப்பதாகச் சொல்லி விலகிப் போகிறான். அதைத் தாமேயால் ஏற்க முடியவில்லை. அவனைக் கட்டாயப்படுத்த முடியாது என உணர்ந்த தாமே இந்த மனத்தடை நாளைடைவில் நீங்கிவிடும் என்று நம்புகிறாள்.
தந்தை பரிசாகச் செய்து கொடுத்த மூங்கில் பொம்மையைப் போலக் கிசுகே தானும் உருவாக்குகிறான். அவை சந்தையில் நல்ல விலைக்குப் போகின்றன. அவனுக்குப் பெயரும் புகழும் ஏற்படுகிறது. தாமே கிசுகேவின் மனைவியாக வீட்டுவேலைகளைச் செய்கிறாள். ஆனால் அவளது உடலின் தேவையை அவன் அறியவேயில்லை. தாமே ஏக்கத்தால் வாடுகிறாள். ஒரு நாள் தன்னைத் தேடி வரும் தோழியிடம் இதைப்பற்றிச் சொல்லிப் புலம்புகிறாள்.
இன்னொரு நாள் கியோட்டோவிலிருந்து அவர்களின் மூங்கில் பொம்மைகளை வாங்கிப் போவதற்காக விற்பனைபிரதிநிதி ஒருவன் வந்து சேருகிறான். அவன் தாமேயின் பழைய வாடிக்கையாளன். அவளுக்குத் திருமணமாகிவிட்டது என்ற போதும் அவளது ஏக்கத்தைப் புரிந்து கொண்டு கட்டாயப்படுத்தி அவளுடன் உடலுறவு கொள்கிறான். இதில் தாமே கர்ப்பமாகிறாள்.
கணவனுக்குத் தெரியாமல் கருக்கலைப்புச் செய்ய விரும்பிய தாமே கியோட்டோ நகருக்குச் செல்கிறாள். அங்கே தன்னை ஏமாற்றிய விற்பனைபிரதிநிதியைச் சந்திக்கிறாள். கணவனின் அனுமதியின்றிக் கருக்கலைப்புச் செய்வது சட்டவிரோதமானது என்பதால், அவனிடம் உதவி கேட்கிறாள். அவனோ உதவி செய்வதாக நம்ப வைத்து அவளைத் திரும்பவும் ஏமாற்றுகிறான்.
தாமே இறுதியில் தன் குழந்தையைத் தற்செயலாக இழக்கிறாள். நடந்த நிகழ்ச்சிகள் எதுவும் கிசுகேவிற்குத் தெரியாது. அப்பாவியான அவனை ஏமாற்றுகிறோம் என்ற குற்றவுணர்வில் பாதிக்கபடும் தாமே கொஞ்சம் கொஞ்சமாக நோயாளியாகிறாள். காசநோயின் பாதிப்பு அவளை முடக்குகிறது. கிசுகே உண்மையை அறிந்து கொள்வதே பிற்பகுதிக்கதை.
தாமேயை தேடி அவளது விடுதிக்கு கிசுகே செல்லும் காட்சி, அவளுடன் உறையாடும் காட்சிகள் அழகானவை. அமைதியான வாழ்க்கையை விரும்பி கிராமத்திற்கு வரும் தாமேக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கிறது. ஆனால் உடலின் தேவை அவளைப் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப வைக்கிறது. எதற்காக அவள் கிசுகேவின் தந்தைக்கு அஞ்சலி செலுத்த வந்தாள் என்ற காரணம் படத்தில் சொல்லப்படுவதில்லை. ஆனால் அந்த உறவு அவளுக்கு ஆறுதல் அளித்திருக்கிறது. கிசுகே தனது தந்தையை விடவும் அவள் மீது அதிக அன்பு செலுத்துகிறான். அவனை ஏமாற்றும் குற்றவுணர்வு தாமேவை நோய்மையுறச் செய்கிறது. கிசுகே தனது தந்தையின் மரணம் ஏற்படுத்திய வெறுமையைத் தாமேயைக் கொண்டு நிரப்பிக் கொள்கிறான். அவள் வந்தபிறகே அவனது வாழ்க்கை வளர்ச்சி அடைகிறது. தந்தையின் ஆசைநாயகியாக இருந்தவளை திருமணம் செய்து கொண்ட போதும் அவளை மனைவியாக அவனால் நினைக்க முடியவில்லை. இந்தச் சிக்கலை படம் அழகாக் கையாண்டிருக்கிறது
நாவலில் வரும் கிசுகேவைப் போலவே எழுத்தாளர் சுடோமு மிசுகாமியும் தச்சர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் மிகவும் ஏழ்மையானது, அவர் ஒன்பது வயதில் உள்ளூர் புத்தகோவிலில் எடுபிடி வேலைகள் செய்வதற்காக அனுப்பப்பட்டார், பின்னர் அவர் கியோட்டோவில் உள்ள ஷோகோகுஜி கோயிலுக்கு மாற்றப்பட்டார், அங்குச் சில காலம் ஹனாசோனோ உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்
வறுமையின் காரணமாகச் சிறு சிறு வேலைகளைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அவர் சீனாவிற்கும் மஞ்சூரியாவிற்கும் அனுப்பப்பட்டார், அங்குப் போர்க்களப் பணியாளர்களின் பொறுப்பாளராக வேலை செய்தார். ராணுவ சேவையிலிருந்து தப்பி வந்து தலைமறைவு வாழ்க்கையை நடத்திய காலத்தில் தான் மிசுகாமி எழுதுவதில் ஆர்வம் காட்டினார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அவர் தனது முதல் நாவல் வெளியானது. அதன்பிறகே அவர் திருமணம் செய்து கொண்டார், அவரது குழந்தை குறைவளர்ச்சியுடன் பிறந்தது. தனது மகளைக் காப்பாற்ற அவருக்கு நிறையப் பணம் தேவைப்பட்டது. இதற்காக மர்மக்கதைகள் எழுத ஆரம்பித்தார். அவரது மனைவிக்குக் குறைவளர்ச்சியான குழந்தையைப் பிடிக்கவில்லை. மிசுகாமியோடு தொடர்ந்து சண்டையிட்ட அவரது மனைவி பின்பு அவர்களைக் கைவிட்டு பிரிந்து போனார்.
மிசுகாமி தனது சிறுவயது மற்றும் இளமைக்கால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு Bamboo Doll நாவலை எழுதினார். இனவரைவியல் ஆவணம் போன்ற உணர்வைத் தரும் இந்த நாவல் ஜப்பானின் சிறந்த நாவல்களில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்படுகிறது.
படத்தின் கருப்பு வெள்ளை ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது, தாமேவாக நடித்துள்ள அயகோ வகாவோவின் சிறந்த நடிப்பும், சேய் இகெனோவின் இசையும் கச்சிதமான திரைக்கதையும் இப்படத்தை ஜப்பானின் கிளாசிக் படங்களில் ஒன்றாக வைத்திருக்கிறது.
**