தந்தையின் சிறகுகள்

1940ல் எழுதப்பட்ட ஆர்தர் மில்லரின் Death of a Salesman என்ற பிராட்வே நாடகம் அன்றைய சூழலுக்கு மட்டுமின்றி இன்றைக்கும் மிகப்பொருத்தமாகவே உள்ளது. ஆர்தர் மில்லர் இந்த நாடகத்திற்காகப் புலிட்சர் பரிசைப் பெற்றிருக்கிறார். இந்நாடகம் 29 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

A MAN IS MEASURED FAR MORE BY WHAT HE SELLS THAN BY WHAT HE DOES என்பதே படத்தின் மையக்கரு.

தந்தைக்கும் மகனுக்குமான உறவுச்சிக்கலை, புரிதலை, எதிர்பார்ப்புகளைப் பேசும் இந்த நாடகம் இருவரது நியாயங்களையும் சரியாக முன்வைத்திருக்கிறது.

இந்த நாடகத்தை ஜெர்மானிய இயக்குநர் வோல்கர் ஸ்க்லோன்டார்ஃப் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார். டஸ்டின் ஹாஃப்மேன் தந்தையாக நடித்திருக்கிறார்.

கடந்தகாலத்தின் மகிழ்ச்சியான நினைவுகளுக்கும், இன்றைய நெருக்கடிகளுக்கும் இடையில் சஞ்சரிக்கும் மனப்போக்கினை டஸ்டின் ஹாஃப்மேன் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

63 வயதான வில்லி லோமன் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்பவர். அவர் நீண்ட தூரப் பயணத்திலிருந்து காரில் வீடு திரும்புவதுடன் படம் ஆரம்பிக்கிறது.

அவர் சந்திக்கச் சென்ற வேலை நடக்கவில்லை. ஏமாற்றத்துடன், சோர்வுடன் பயணத்தினை மேற்கொள்கிறார். அர்த்தமில்லாமல் பொய் கனவை துரத்திக் கொண்டிருக்கிறோம் என உணரும் லோமன் தற்கொலை செய்து கொள்வதே இதிலிருந்து மீளும் வழி என நினைக்கிறார். திடீரென கார் அவரது கட்டுப்பாட்டினை இழக்கிறது. சிறிய விபத்து ஏற்படுகிறது. அதிலிருந்து காப்பாற்றப் படுகிறார்

இது தற்செயல் நிகழ்வில்லை. திட்டமிட்ட விபத்து என்று அறிகிறாள் அவரது மனைவி லிண்டா. அவர் சிலகாலமாகவே இப்படித் தற்கொலைக்குத் திட்டமிடுவதை அறிந்த அவள் எப்படியாவது அவரைச் சமாதானம் செய்து மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ள முயலுகிறாள்.

வீடு திரும்பும் லோமன் இரண்டு பெரிய பெட்டிகளைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் வருகிறார். அந்தக் காட்சி ஒரு குறியீடு போலவே தோன்றுகிறது.

அவரது கடந்தகாலம் தான் அந்தப் பெட்டிகளாகக் கனக்கிறதோ என்னவோ

ஏமாற்றத்துடன் வீடு திரும்பியவரை லிண்டா இனி இப்படி சுற்றியலைய வேண்டாம். வயதாகிவிட்டது. வீட்டில் நிம்மதியாக ஓய்வெடுக்கும்படி சொல்கிறாள். ஆனால் குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என நினைக்கும் லோமன் அதை விரும்பவில்லை.

அவர் தனது இரண்டு மகன்களின் எதிர்காலம் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டேயிருக்கிறார். பிள்ளைகள் தன்னைப் போல ஆகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். அவர்கள் ஏதாவது தொழில் செய்து நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

வில்லியின் இளைய மகன் ஹேப்பி வியாபாரத்தில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறான் ஆனால் மூத்த மகன் பிஃப் பல வருடங்களாகப் பலவிதமான திருப்தியற்ற வேலைகளைச் செய்து தோற்றுப் போய் தனது 34வது வயதில் மீண்டும் வீடு வந்து சேருகிறான்

இதனால் லோமன் அவன் மீது கோபம் கொள்கிறார். அவனை உதவாக்கரை என்று திட்டுகிறார். அண்ணன் தம்பி இருவரும் இணைந்து புதிய தொழில் துவங்கக் கனவு காணுகிறார்கள். அதற்கான முதலீடு திரட்டுவது பற்றி யோசிக்கிறார்கள். தந்தை இதை விரும்பவில்லை. தந்தையின் சிறகுகளுக்குள் பிள்ளைகள் அடங்கியிருக்க முடியாது. அவர்களுக்கான வானில் அவர்கள் தனியே பறப்பது தான் சரியானது என நினைக்கிறார்கள்.

உங்களுக்காக உங்களின் தந்தை நிறையக் கஷ்டப்பட்டுவிட்டார். 34 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்துவிட்டார். அவருக்கு ஓய்வு கொடுங்கள் . அவர் வேலை செய்தது போதும் என்கிறார் லிண்டா .

நாங்கள் வேலை செய்து சம்பாதித்து அவரைக் காப்பாற்றுகிறோம் என்கிறார்கள் பிள்ளைகள்

ஆனால் அதை லோமன் விரும்பவில்லை. தனது சம்பாத்தியத்தில் மட்டுமே தான் வாழ வேண்டும் என்று நினைக்கிறார். தனது சாவில் கூடக் குடும்பத்தின் நலமே முக்கியமாக இருக்கும் என்று சொல்கிறார்.

பிள்ளைகள் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று உறுதியாக நம்புகிறார் லோமன். பிள்ளைகளுக்கோ தந்தை விரும்புவது போல நாம் நடந்து கொள்ள முடியாது. அவர் நம்மைப் புரிந்து கொள்ளமறுக்கிறார் என்று ஆதங்கம். இவர்களுக்கு நடுவில் லோமனின் மனைவி ஊசலாடுகிறார். அவளுக்குக் கணவரும் முக்கியம். பிள்ளைகளும் முக்கியம்.

ஒவ்வொருவரும் மற்றவரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழத் தவறுகிறார்கள். இதனால் அடுத்தவர் மீது குற்றம் காணுகிறார்கள். ஒரு காட்சியில் லோமனைப் பற்றி அவரது மனைவி பிள்ளைகளிடம் கோபத்தில் வெடித்துப் பேசுகிறாள். அது லோமனைப் பற்றியது மட்டுமில்லை. ஒரு குடும்பத்தில் தந்தையின் நிலை மற்றும் பங்களிப்பு பற்றிய உண்மையான வெளிப்பாடாகும்

ஒரு நாள் பிஃப் தனது பழைய முதலாளியைச் சந்தித்து கடன் கேட்கப்போவதை அறிந்து லோமன் மகிழ்ச்சி அடைகிறார். எப்படியாவது அவரிடம் பேசி கடனை வாங்கிவிடு, புதிய தொழிலை ஆரம்பி என்று உற்சாகப்படுத்துகிறார். அந்தக் காட்சியில் தான் லோமன் சந்தோஷமாக இருக்கிறார். உற்சாகமாக நடந்து கொள்கிறார்.

வில்லியின் மோசமான மனநிலை மற்றும் சமீபத்திய கார் விபத்து குறித்துக் கவலைப்படும் லிண்டா, அவர் தனது சொந்த நகரத்தில் வேலை செய்ய அனுமதிக்குமாறு முதலாளி ஹோவர்ட் வாக்னரைக் கேட்டுக்கொள்ளும்படி சொல்கிறாள்.

இதை அடுத்து லோமன் தனது முதலாளியைச் சந்தித்துத் தனது அடுத்த விற்பனை பயணம் பற்றி விவாதிக்க முயலுகிறார். ஆனால் முதலாளி அவர் இனி வேலையில் தொடரவேண்டியதில்லை. ஓய்வெடுக்கவேண்டிய வயது வந்துவிட்டது என்று சொல்லி வேலையை விட்டு நிறுத்திவிடுகிறார்

அந்தக் காட்சியில் முதலாளியின் அறையில் லோமன் தன்னை மீறி அழுகிறார்.  மனதைத் தொடும் காட்சியது.

பிஃப். புதிய தொழிலைத் தொடங்க முன்னாள் முதலாளியிடமிருந்து கடனைப் பெற முயல்கிறான் ஆனால் அது நடக்கவில்லை. முதலாளியின் பேனா ஒன்றைத் திருடிக் கொண்டு ஒடிவந்துவிடுகிறான் பிஃப்.  சிறிய குற்றத்தின் வழியே அவன் உறவை புதுப்பித்துக் கொள்ள முயலுகிறான்.

ஒரே நாளில் தந்தை மகன் இருவரும் ஏமாற்றம் அடைகிறார்கள். ஒரு இரவுவிடுதியில் அவர்கள் சந்தித்துக் கொள்ளும் போது மகன் கெட்ட செய்தியைச் சொல்ல முற்படுவதைக் கேட்பதற்கு லோமன் விரும்பவில்லை. பிஃப் தந்தையிடம் பொய் சொல்ல முயன்று தோற்றுப் போகிறான். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பெரிய வாக்குவாதம் ஏற்படுகிறது,

வேலை பறி போன லோமனுக்கு அவரது ஒரே நண்பரும் அண்டை வீட்டாருமான சார்லி வேலை தர முன்வருகிறார். ஆனால் லோமன் அதை ஏற்கவில்லை. கடனாகக் கொஞ்சம் பணம் மட்டும் வாங்கிக் கொள்கிறார்.

ஒரு காட்சியில் மகனின் வேலை பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது லோமனின் மனைவி லிண்டா குறுக்கிடுகிறாள். அவளைக் கடிந்து கொள்கிறார் லோமன். இரண்டாம் முறையாக இது போலக் குறுக்கிட்டுப் பேச முற்படும் போது லோமன் முறைத்தபடி அவள் வாயை மூடும்படி சொல்கிறார். இதைக் கண்ட மகன் ஆத்திரமாகி அம்மா விஷயத்தில் இன்னொரு முறை இப்படி நடந்தால் சும்மா இருக்க மாட்டேன் என்று மிரட்டுகிறான். சட்டெனத் தனது தவற்றை உணர்ந்து தலைகவிழ்கிறார். இந்தக் காட்சியில் ஹாஃப்மேன் மற்றும் மல்கோவிச்சின் நடிப்பு சிறப்பானது

நகரவாழ்க்கை லோமனுக்கு மூச்சுமுட்டுகிறது. தனக்கு நண்பர்களேயில்லை என்பதை உணர்ந்திருக்கிறார். வீட்டின் தேவைகளுக்கு ஏற்ப சம்பாதிக்க முடியவில்லை என்ற குற்றவுணர்வு அவரை வேதனைப்படுத்துகிறது. இதைக் காட்டிக் கொள்ளாமல் கடன் வாங்கிக் குடும்பத்தை நடத்துகிறார். கற்பனையான திட்டங்களை உருவாக்குகிறார். தனது பிள்ளைகளின் நலனிற்காகத் தான் உயிருடன் இருப்பதை விடச் சாவதே மேல் என்று உணருகிறார். காரணம் அவர் இறந்து போனால் அவரது இன்சூரன்ஸ் பணம் மகனுக்குக் கிடைக்கும். அதைக் கொண்டு அவன் ஒரு தொழில் துவங்கலாம் என்பதே

வில்லி லோமன் நிகழ்காலத்திலிருந்து கடந்தகாலத்திற்குள் அடிக்கடி நழுவிவிடுகிறார். இரண்டுக்குமான கோடு அவருக்குள் அழிந்துவிடுகிறது. ஆகவே இறந்தவர்களுடன் உரையாடுகிறார். வில்லி ஒரு மோசமான கணவர் மற்றும் ஒரு மோசமான தந்தை இத்தோடு தோற்றுப்போன விற்பனையாளர் , இந்த உண்மைகளை அவர் உணர்ந்திருப்பது தான் அவரை அதிகம் துயரமடையச் செய்கிறது.

பிஃப் ஏன் தந்தையை வெறுக்கிறார் என்பதற்கு ஒரு காட்சி விவரிக்கப்படுகிறது. அதில் தற்செயலாக அவர் தந்தையை ஒரு இளம்பெண்ணுடன் விடுதியின் படுக்கை அறையில் காணுகிறார்.. அந்த சம்பவம் தந்தையிடமிருந்து மகனை விலகிப் போகச் செய்கிறது. தந்தையின் மறுபக்கத்தை மகன் அறியும் தருணமது

உலகம் அவரைப் பந்தாடுகிறது. வறுமை அவரைத் துரத்துகிறது. உலகிடம் காட்டமுடியாத தனது கோபத்தைக் குடும்பத்திடம் காட்டுகிறார் லோமன். வில்லிக்கு எப்பொழுதும் எதைப் பற்றியும் இரண்டாவது எண்ணமே கிடையாது. அவர் தனக்குள்ளாகவே வாழுகிறார். தனது முடிவே இறுதியானது என்று நம்புகிறார். .

தந்தையின் மீதான அன்பை எப்படி வெளிப்படுத்துவது என்று பிள்ளைகளுக்கும் தெரியவில்லை. கழிப்பறையினுள் அமர்ந்தபடியே லோமன் கடந்தகாலத்திற்குள் சஞ்சரிப்பதும் ஒரு வெயிட்டர் கதவைத் தட்டி உதவி செய்வதும் சிறப்பான காட்சி.

தனது மகன் தன்னை மன்னித்துவிட்டதை லோமன் ஒரு காட்சியில் உணர்ந்து கொள்கிறார். அப்போதே அவர் தனது கடைசி முடிவை எடுத்துவிடுகிறார். இறுதிவரை பிஃப் தந்தையின் கனவை நிறைவேற்றவில்லை. ஆனால் அவன் தந்தையின் நிழல் போல மாறிவிடுகிறான். தந்தையின் பாதையில் நடந்து செல்ல ஆரம்பிக்கிறான்.

“You can’t eat the orange, and throw the peel away—a man is not a piece of fruit” என்ற வில்லியின் சொற்கள் என்றைக்குமானது.

நாடகம் பார்ப்பது போலவே படம் உருவாக்கபட்டிருக்கிறது. சில காட்சிகளில் அப்படியே நாடக அரங்க அமைப்பு பயன்படுத்தபட்டிருக்கிறது. இந்தக் குறைகளை மீறி நம்மைப் படத்தோடு ஒன்றச் செய்வது டஸ்டின் ஹாஃப்மேனின் நடிப்பு. அவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமும் உடல்மொழியும் அபாரமானது.

நமது வாழ்க்கை என்பது ஒரு வணிகமே. இதில் ஏதேதோ வழிகளில் நம்மை நாமே விற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த அபத்த நாடகத்தை நாம் உணரும் போது மீளாத் துயரமடைகிறோம். நாம் விரும்பும் வாழ்க்கையும் கிடைத்திருக்கும் வாழ்வும் வேறு வேறானது. இந்த இடைவெளியைக் கடக்கவே முடியாது. ஏமாற்றத்தின் கருநிழல் கவ்விக் கொள்ளும் போது நாமும் வில்லி லோமனைப் போலாகிவிடுகிறோம். இதைத் தவிர்க்கவே முடியாது.

நாளை லோமனின் பிள்ளைகளும் முதுமையில் இப்படித் தான் நடந்து கொள்வார்கள். காலம் காலமாக வாழ்க்கை அப்படியே தான் தொடருகிறது.

0Shares
0