தனிமையின் கண்கள்.

இளங்கவிஞரான வே.நி.சூர்யா மிகச் சிறப்பான கவிதைகளை எழுதி வருகிறார்.

கரப்பானியம் என்ற அவரது கவிதைத் தொகுப்பு மிக முக்கியமானது. இதனைத் சால்ட் பதிப்பகம் வெளியீட்டுள்ளது

அவரது மொழிபெயர்ப்பில் வெளியாகும் கவிதைகளும் அற்புதமாக உள்ளன.

இணையம் மற்றும் சிற்றிதழ்களில் தொடர்ந்து வெளியாகி வரும் அவரது கவிதைகள் தனித்துவமான குரலில் ஒலிக்கின்றன.

தன்னைச் சிதறடிக்கும் கவிதைகள் என்று இவற்றை கூறலாம். தானற்று போவதையும் தான் எதில், எவ்வாறு சிதறி வெளிப்படுகிறோம் அல்லது விலக்கப்படுகிறோம் என்பதையே சூர்யாவின் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.

அவரது கவிதை மொழி மிகவும் புதியது. ஐரோப்பியக் கவிதைகளில் காணப்படுவது போன்று எளிய தோற்றத்தில் அபூர்வமான கவித்துவ மொழிதலைக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக அவர் தனது கவிதையை துவங்கும் விதம் அபாரமானது.

எந்த சன்னலிடமும் நேற்று இல்லை

அவை வைத்திருப்பதெல்லாம் இன்றினை மாத்திரமே

என தனது சன்னல்கள் பற்றிய கவிதையைத் துவங்குகிறார். சன்னல் ஏன் கடந்தகாலத்தினை கைவிடுகிறது. அல்லது கடந்து போய்விடுகிறது. சன்னல் ஒரு திறப்பு. சட்டகம் மட்டுமே. அதன் வழியே காட்சிகள் மாறிக் கொண்டிருப்பதற்கும் அதற்கும் ஒரு தொடர்புமில்லை. உலகோடு நாம் கொள்ளும் தொடர்பின் ஒரு வடிவமே சன்னல். ஒரு வகையில் சன்னலுக்கு பின்னே நிற்பது பாதுகாப்பின் அடையாளம். சன்னல் வழியாக காணும் உலகம் ஒரு சட்டகத்திற்கு உட்பட்டது. ஆனால் சன்னலைக் கடந்து செல்லும் பறவையைப் போலவே காலம் செயல்படுகிறது. ஆகவே சன்னலிடம் நேற்றில்ல. அவை வைத்திருப்பது இன்றினை மாத்திரமே. கண்ணாடியைப் போல சன்னலை மாற்றும் அற்புதம் இந்தக் கவிதை வரியில் நடக்கிறது. சூர்யாவின் புதிய கவிமொழியும் கவிதை வெளிப்படுத்தும் விஷயங்களும் அவரை தனித்துவமிக்க இளங்கவிஞராக அடையாளம் காட்டுகின்றன

தேவதச்சன் கவிதைகளில் காணப்படுவது போல தொலைவும் அண்மையும் இவரது கவிதைகளிலும் இடம்பெறுகிறது. ஆனால் இவர் அந்த எதிர்நிலைகளுக்குள் தனது தத்தளிப்பையே முதன்மையாக்குகிறார்.

காற்று ஒருவனின் இருப்பை இடம் மாற்றம் செய்கிறது. உதிரும் இலைகளுக்கு ஒருவன் பெயரிடுகிறான். அவற்றை காதல்ஜோடிகளாக உலவவிடுகிறான். நிழலாகயிருப்பது நன்று நிழலாகக் கூட இல்லாமலிருப்பது அதனினும் நன்று என ஒரு கவிதை சொல்கிறது. பெரிய சந்தோஷத்தின் முன்பு சிறிய சந்தோஷம் மிரட்சி கொள்கிறது. சூர்யாவின் கவிதைமொழி பாதரசத்தைப் போல ஒளிருகிறது. சுய அனுபவத்தை இப்படியான கவிதைகளாக மாற்ற முடியுமா என வியப்பளிக்கின்றன இவரது கவிதைகள்.  

அவர் மொழியாக்கம் செய்ய தேர்வு செய்யும் சர்வதேசக் கவிஞர்களும் முக்கியமானவர்கள். சிறந்த கவிதைகளை தேர்வு செய்து மொழியாக்கம் செய்து வருகிறார்

கவிஞர் வே.நி.சூர்யாவிற்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்

.•••••

சன்னல் கவிதைகள்

வே.நி.சூர்யா

எந்த சன்னலிடமும் நேற்று இல்லை

அவை வைத்திருப்பதெல்லாம் இன்றினை மாத்திரமே

நீங்கள் வேண்டுமானால்

‘இதோ வைத்துக்கொள் வைத்துக்கொள்’ என

நேற்றுகளை கொடுத்துப் பாருங்களேன்

குளிர்பொறுக்காமல் பனிக்கட்டிகளை நழுவ விடும் பாவனையோடு அவை

அவற்றை தவறவிட்டுவிடும்

நேற்றுகளை ஏற்றுவிட்டால்

உலகம் மண்ணோடு மண்ணாய்ப் போய்விடும் என்று

சன்னல்களுக்குத் தெரியும்..

00

திறந்திருக்கும் சன்னலுக்குள் காட்சிகளின் நதி ஓடிக்கொண்டிருக்கிறது

அந்நதியை நீந்திக்கடக்க முயன்று கொண்டேயிருக்கிறாள் ஒருத்தி

கரையை ஒவ்வொருமுறை நெருங்கும்தோறும்

கரை தூரம் தூரம் என சென்றபடியிருக்கிறது

ஆனால் மூடியிருக்கும் சன்னலுக்குள்

இருண்ட பாலைவனம் வளர்ந்துகொண்டிருக்கிறது

அப்பாலையில் மணல் இழுக்க இழுக்க

தன்னை வெளியே எடுத்துக்கொண்டே நடக்கிறான் ஒருவன்

இருவருமே ஒருவரையொருவர் தேடிக்கொண்டிருக்கிறார்கள்

அவர்கள் கட்டியணைத்துக்கொள்ளும்போது

சன்னல்களை திறக்கவோ மூடவோ முடியாது

00

ஒவ்வொரு சன்னலுக்கும் ஒரு எல்லையுண்டு

அந்த எல்லையில் எந்நேரமும்

ரோந்து செல்கிறார்கள் ராணுவ வீரர்கள்

கண்காணிப்பு கோபுரங்கள் தலையை

இங்கும் அங்கும் அசைக்கின்றன

திடுமென ஒருவரை மாற்றி ஒருவர்

சுட்டுக்கொள்கிறார்கள்

பீரங்கிகள் ஊர்ந்து செல்கின்றன

எரிநட்சத்திரங்கள் வீழ்வதுபோல் நெருப்புக்கட்டிகள் விழுகின்றன

சன்னல்களின் அமைதி உடன்படிக்கையை

காற்று ஒன்றிற்கு இரண்டு முறை படித்துப்பார்க்கிறது ..

00

சின்னஞ்சிறிய சந்தோஷங்கள் இருண்ட காலத்தில் வாழ்கின்றன

வே.நி.சூர்யா

1

பெரிய சந்தோஷங்கள் வரும்போது

சின்னஞ்சிறிய சந்தோஷம்

விழிவிரியமிரட்சியுடன்பார்க்கிறது

என்ன செய்ய

யாரோ ஒருவன்தான்

அதனிடம் தெம்புடன்  இருக்கச்சொல்கிறான்

2

ஒரு சின்னஞ்சிறிய சந்தோஷம்

டீக்கடையில் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கிறது

இருசக்கர வாகனத்தில்

முறைத்துக் கொண்டே போகிறது பெரிய சந்தோஷம்

3

ஒருசமயத்தில்

சின்னஞ்சிறிய சந்தோஷத்தை கரப்பான் பூச்சி உட்பட

யாருமே கண்டுகொள்ளவில்லை

சுவரில் முட்டிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுகிறது

••

ஒரு டிசம்பர் மாலைப்பொழுது

வே.நி.சூர்யா

காற்றடித்தால்

உயரத்திலிருந்து

சிணுங்கிச் சிணுங்கி

நான் இருக்கிறேன்

நான் இருக்கிறேன் எனத்

தெரிவிக்கும்

இந்த உலோகக் கிண் கிணிகளை

நீ என்று நினைத்தது தவறாகப் போயிற்று

இப்போது பார்

காற்று வீசும்போதெல்லாம் அருகிலிருப்பவனாகவும்

வீசாதபோதெல்லாம் தூரத்திலிருப்பவனாகவும்

மாறிக்கொள்ள வேண்டியிருக்கிறது எனக்கு

சோகம்தான். .

•••

சாவதானம்

வே.நி.சூர்யா

பூங்காவில் இருக்கையின் மீது

ஒரு இலை

விழுகிறது.

சற்றுநேரத்தில் இன்னொரு இலை.

நான் முதலில் விழுந்த இலைக்கு மாதவி எனவும்

இரண்டாவது இலைக்கு சூர்யா எனவும் பெயரிடுகிறேன்

இப்போதோ இருவரும் அருகருகே அமர்ந்து

பூங்காவின் சாவதானத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

எனக்குத் தெரியும்

இன்னும் கொஞ்சநேரத்தில் இந்நகரின் மீது ஜோடியாக பறப்பார்கள்

நான் சந்தோஷத்துடன் பார்ப்பேன்..

•••

வே.நி.சூர்யா மொழியாக்கம் செய்துள்ள கவிதைகள்.

ஓர் இலையுதிர் காலத்து காலை

– டோபிரிசா செசாரிக்

நான் உடையணிந்து கொண்டேன்.

பின்பு சன்னலை நோக்கிச் சென்றேன்.

வெளியே: இலையுதிர் காலம்.

என் நண்பன் உள்ளே வந்தான். அவனுடைய மேலங்கியோ நனைந்திருந்தது.

என் மொத்த அறையையும் மழையின் வாடை அடிக்கும்படிச் செய்திருந்தான்.

ஒரு “வணக்கம்” கூட சொல்லவில்லை.

உட்கார்ந்தான்.

பிறகு யோசனையில் ஆழ்ந்தவாறு

அவன் சொன்னான்: “இலையுதிர் காலம்”

அந்த வார்த்தையோ அவ்வளவு புதியதாக இருந்தது

மழைக்குப் பிறகான

கிளையிலிருக்கும் ஆரஞ்சு போல.

*

நன்றி: Dobrisa Cesaric Poems

••

எஹுதா அமிக்ஹாய் கவிதைகள்

••••

ஒருவரை மறந்துவிடுவது

ஒருவரை மறந்துவிடுவது என்பது

புழக்கடையிலிருக்கும் விளக்கை

அணைக்காமல் விடுவதைப் போன்றது

ஆகையால் அது ஒளிர்ந்துகொண்டேயிருக்கும் மறுநாள் வரைக்கும்.

ஆனால் பின்பு அதன் வெளிச்சமே

நமக்கு ஞாபகப்படுத்திவிடும்.

                     **

பிறகு நினைவுகூர்பவர்களை யார் நினைவுகூர்வது?

மறக்கப்படுதல், நினைக்கப்படுதல், மறக்கப்படுதல்.

திறந்திருத்தல், மூடியிருத்தல், திறந்திருத்தல்.

(தொடர் கவிதையின் ஒரு பகுதி)

                               **

கடலும் கரையும்

கடலும் கரையும் எப்போதும் ஒவ்வொன்றுக்கும்

அடுத்தடுத்ததாக உள்ளன.

இரண்டும், ஒரு வார்த்தையை மட்டும்,

பேசவும் சொல்லவும்

கற்றுக்கொள்ள விரும்புகின்றன.

கடல் “கரை” என்று சொல்ல விரும்புகிறது

கரை “கடல்” என்று சொல்ல விரும்புகிறது

மில்லியன் வருடங்களாக, அவை நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன, அந்த ஒரு வார்த்தையை

பேசுவதற்காகவும் சொல்வதற்காகவும்.

கடல் “கரை” என்றும் கரை “கடல்” என்றும் சொல்லும்போது,

மீட்சி உலகத்திற்கு வருகிறது,

உலகமோ பெருங்குழப்பத்திற்கே திரும்புகிறது.

••

சார்லஸ் சிமிக் கவிதைகள்

ஒரு காகத்தைப் போல கடந்து செல்லுதல்

இலைகளற்ற இந்த மரங்களுக்காக பேசுவதற்கு

உனக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறாதா?

துணியுலர்த்தும் கொடியிலிருக்கும்

ஒரு ஆணின் சட்டையையும் ஒரு பெண்ணின் இரவு உடையையும்

காற்று என்ன செய்ய நினைத்திருக்கிறது என்று உன்னால் விளக்க முடியுமா?

கருத்த மேகங்களை குறித்து உனக்கு என்னத் தெரியும்?

உதிர்ந்த இலைகளால் நிறைந்த குளங்களைக் குறித்து?

சாலையோரச் சந்துகளில் துருப்பிடித்து நிற்கும் பழைய ரக கார்களை குறித்து?

சாக்கடையில் கிடக்கும் பியர் குப்பியைப் பார்க்க யார் உன்னை அனுமதித்தது?

சாலையோரத்தில் கிடைக்கும் வெண்ணிறச் சிலுவையை?

விதவையின் வீட்டு முற்றத்தில் இருக்கும் ஊஞ்சலை?

உன்னை நீயே கேட்டுக்கொள்

சொற்கள் போதுமானவையா

இல்லை மரம் விட்டு மரம் சிறகடித்து பறக்கும் ஒரு காகத்தைப் போல

நீ கடந்து செல்வது  மேலானதா?

**

அச்சம்

ஏனென்றே தெரியாதவாறு

அச்சம் மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவுகிறது,

ஒரு இலை தன் விதிர்ப்பை மற்றொன்றிற்கு கைமாற்றுவதைப்போல.

திடீரென மொத்த மரமும் அதிர்கிறது,

ஆனால் அங்கே காற்றின் எந்த அறிகுறியுமில்லை.

**

நித்தியத்துவத்தின் அனாதைகள்

ஒரு இரவில் நீயும் நானும் நடந்து கொண்டிருந்தோம்.

மிகப் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது நிலவு.

அப்புறம் முகில்கள் வந்து அதை மறைக்கப் பார்த்தது.

அதனால் வெறுங்கால்களில் மணலினை உணரும் வரைக்கும்

நம் பாதையில் கண்மூடித்தனமாக செல்ல வேண்டியிருந்தது

பிறகு அலையடிப்பதை செவியுற்றோம்.

நீ என்னிடம் சொன்னது நினைவிருக்கிறதா?

“இந்த தருணத்திற்கு வெளியிலிருக்கும் அனைத்துமே பொய்கள்தான்”

நாம் இருட்டில் உடைகளை கழற்றிக் கொண்டிருந்தோம்

சரியாக நீரின் விளிம்பில்

என் மணிக்கட்டிலிருந்து கைக்கடிகாரத்தை நழுவவிட்டபோது,

உனக்கு தெரியாமலும்

பதிலுக்கு எதையும் சொல்லிக்கொள்ளாமலும்

நான் அதை எடுத்து கடலில் தூக்கி எறிந்தேன்.

நன்றி

http://suryavnwrites.blogspot.com/

0Shares
0