தனுஷ்கோடி

அழிந்து சிதலமாகி நிற்கும் தனுஷ்கோடியின் கரையில் நின்று கொண்டிருந்தேன். கடல் அடங்கியிருந்தது. மாலை நேரம். வெளிறிய நீல வானம். மேற்கில் ஒளிரும் சூரியன். மிதமான காற்று. கடல் கொண்டது போக எஞ்சிய இடிபாடுகள் கண்ணில் விழுகின்றன. ஒரு நாய் அலையின் முன்பாக ஒடியாடிக் கொண்டிருக்கிறது.



கடலின் அருகாமை நம் சுபாவத்தையே மாற்றிவிடுகிறது. பலநேரங்கள் பேச்சற்று அதை பார்த்து கொண்டேயிருக்கிறோம். கடலை எப்படி உள்வாங்கி கொள்வது. கண்களால் கடலை ஒரு போதும் அறிய முடியாது. அலைகள் அல்ல கடலின் வசீகரம். அலைகள் கடலின் துள்ளாட்டம். சிறகசைப்பு அவ்வளவே. கடலைப் புரிந்து கொள்வது எளிதில்லை. அது ஒரு நிலைகொள்ளாமை. தவிப்பு.  காற்றில் பறக்கும் பட்டம் போல சதா மாறிக்கொண்டிருக்கும் பேரியக்கம்.



கடலும் கரையும் கொண்டிருக்கும் உறவு விசித்திரமானது. ஒன்றையொன்று நெருங்குவதும் பிரிவதுமான முடிவற்ற தவிப்பு. கண்ணால் பார்க்கும் போது கடல் உப்பரிப்பதில்லை.


கடல் நம் மனதில் நிரம்புவதற்கு அதன் ஊடாகவே வாழ வேண்டும். கடலோடு பேசவும் கடலை நேசிக்கவும் தெரியாதவனை கடல் தன்னுள் அனுமதிப்பதில்லை என்று ஒரு மாலுமியின் குறிப்பு ஒன்றில் படித்திருக்கிறேன். 


நடந்து வந்த மணல்வெளியின் அடியில் தனுஷ்கோடி புதைந்துகிடக்கிறது. பாதி கடலுக்குள்ளும் இருக்க கூடும். வாழ்வதற்கு தகுதியற்ற இடம் என்று அரசு தனுஷ்கோடியை கைவிட்டுவிட்டது. ஆனால் இந்த இடிபாடுகளுக்கு இடையில் பாசிமாலைகள், குளிர்பானங்கள் விற்கும் கடைகளும் குடும்பங்கள் வசிக்கிறார்கள். இரண்டு ஆசிரியர்கள் உள்ள பள்ளி ஒன்று கூட இங்குள்ள மீனவ சிறுவர்களுக்காக நடக்கிறது. வாழ்ந்தாலும் செத்தாலும் தனுஷ்கோடியை விட்டு போவதில்லை என்று பிடிப்பு கொண்ட பல குடும்பங்கள் இன்னமும் அங்கு இருக்கின்றன. அதில் ஒருவரிடம் பேட்டரியில் இயங்கும் தொலைக்காட்சி பெட்டி கூடயிருக்கிறது.


ஆனால் அழிவு அதன் வலிய கரத்தால் நகரத்தை இன்னமும் தன் பிடிக்குள் தான் வைத்திருக்கிறது. நீண்ட மண்பாதையின் வெறுமையும் அரித்து போன தண்டவளாங்களும் அதை நினைவு கொள்ள செய்கின்றன.


என்றோ ஒடி மறைந்து போன ரயிலின் ஒசை இருளுக்குள் புதைந்திருக்கிறது. கடற்பறவைகள் மணலில் எதையோ தேடியலைகின்றன. சுற்றுலா வந்த சிறுமி ஒருத்தி மண்மேடுகளை தன் கால்களால் எத்தி சிப்பிகளை தேடிக் கொண்டிருக்கிறாள். கண்ணாடி அணிந்த வயதான பெண்மணி கடலின் முன்னே நின்றபடியே தன்னை புகைப்படம் எடுத்து தர சொல்லிக் கொண்டிருந்தாள். கடலின் முன்னே இவள் யார்? புகைப்படத்தில் உள்ள கடல் அலையடிப்பதில்லை தானே. மீனவர்களின் குலசாமியான கூனிமாரியம்மன் கோவில் ஒன்று தனுஷ்கோடியிலிருக்கிறது. அதன் சொல்லுக்கு கடல் அடங்கி போகும் என்பது மீனவ நம்பிக்கை.


மண்ணுக்குள் புதையுண்ட எலும்புகள் இன்றும் விழித்து கொண்டுதானிருக்கின்றன. அது எவரெவர் வழியாகவே தன் நினைவுகளை மீள்உரு கொள்ள செய்தபடியே இருக்கின்றன. தனுஷ்கோடி ஒரு அழிவின் மணல் புத்தகம். அதன் உள்ளே முடிவில்லாத கதைகள்  எழுதப்பட்டிருக்கின்றன. மணலை வாசிக்க தெரிந்த மனிதன் அதை புரிந்து கொள்ள கூடும்.


அழிந்து போன இடங்களை பார்த்தவுடன்   ஏன் மனது வருத்தம் கொண்டுவிடுகிறது.. அழிந்த நகரங்கள் பலவற்றை பார்த்திருக்கிறேன். அதற்குள் சென்றவுடன்  உடல் பதற்றம் கொள்ள துவங்கிவிடுகிறது. மனது விழித்து கொள்கிறது. ஒவ்வொரு அடியும் கவனமாக எடுத்து வைக்க. யாரோ உற்று பார்க்கிறார்கள் என்பது போன்ற பிரமை உருவாகிறது. நெருக்கமான எதையோ இழந்துவிட்ட துயர் மனதில் வலிக்க துவங்குகிறது.


பள்ளி நாட்களில் இருந்து இன்று வரை பலமுறை தனுஷ்கோடிக்கு சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அது தனித்த அனுபவமாகவே இருக்கிறது. பத்து வருசங்களுக்கு முன்பு ஒரு புதுவருசப்பிறப்பின் இரவில் விடியும் வரை தனுஷ்கோடியில் இருந்தேன். கடலுக்கும், இருளில் புதைந்த மனிதர்களுக்கும் வாழ்த்து சொல்லி பிறந்தது அந்த புதுவருசம். பின்னரவில் தனுஷ்கோடி கொள்ளும் அழகு ஒப்பற்றது. அது மணப்பெண்ணின் வசீகரம் போன்றது. அந்த புது வருச கொண்டாட்டம் அற்புதமானது.


இன்று தனுஷ்கோடி அடங்கியே இருந்தது. பார்த்துக் கொண்டிருந்தபோதே மாலை வடிந்து இருள் துவங்கியிருந்தது. கடலுக்குள் வீழ்ந்திருந்தது சூரியன். இனி இரவெல்லாம் அதை மீன்கள் தின்னக்கூடும்.


தனுஷ்கோடியில் மின்சார வெளிச்சமில்லை. ஆனால் பார்வை புலனாகும் அளவில் குறைந்த வெளிச்சம் இருளுக்குள் ஒழுகிக் கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் எவர் முகமும் தெளிவாக தெரிவதில்லை. குரல்கள் தான் நகர்கின்றன. இடிபாடுகளை நிரப்புகிறது இருள். கடல் அரித்து போன தேவாலயம் இருளில் முணுமுணுத்து கொள்கிறது தன் கடந்த காலத்தின் நினைவுகளை.


என் அருகில் நீண்ட தாடி வைத்த மீனவக் கிழவர் வந்து நிற்கிறார். கடலை பார்த்தபடியே முந்திய நாள் பெய்த மழையை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். மழை பெய்யும் போது எங்கிருந்தீர்கள் என்று கேட்டேன். இதே இடத்தில் நின்று கொண்டுதானிருந்தேன். நான் மழைக்கு ஒடி ஒதுங்குற ஆள் இல்லை. மழை நம்மளை என்ன செய்ய போகுது. கடல் புரண்டுதிமிறுவதை பார்த்து கிட்டே இருந்தேன். பத்து வயசு பையன்ல இருந்து கடலை பாத்துகிட்டு தானே இருக்கேன். அதுக்கு என்னை நல்லா தெரியும் என்றார்.


பிறகு தன் பையிலிருந்து ஒரு பீடியை எடுத்துக் கொண்டு பற்ற வைக்க முயற்சித்தார். காற்று நிச்சயம் தீக்குச்சியை அணைத்துவிடும் என்று நினைத்தேன். அவர் தீக்குச்சியை உரசிய விதமும் அதை கைக்கூட்டிற்குள் காப்பாற்றி நெருப்பில் பீடி பற்ற வைத்த விதமும் வியப்பாக இருந்தது. அவர் காற்று இன்னைக்கு வேகமில்லை என்றபடியே புகைக்க துவங்கினார்.


இருட்டிற்குள்ளாகவே பாசி விற்கும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ஈரமேறிய கடல் மணல் அருகே போய் நின்றேன். கால்களில் அலை படும்போது மணல்கள் கரைந்து போக குறுகுறுப்பாகிக் கொண்டிருந்தது.


நட்சத்திரங்கள் உலகை பார்த்தபடியே இருக்கின்றன. அதற்கு தனுஷ்கோடி என்றோ, மச்சுபிச்சு என்றோ,  பேதமில்லை. அது பூமியை தன் விளையாடுமிடமாக மாற்றியிருக்கிறது. இருண்ட கடற்கரையிலிருந்தபடியே நட்சத்திரங்களின் வெளிச்சத்தை காண்பது அலாதியானது. காற்றும் சேர்ந்து கொண்டது. கண்முன்னே பிரபஞ்சம் இயங்கி கொண்டிருப்பதை காண முடிகிறது.
கடல் மணலில் கிடந்த கல் ஒன்றை குனிந்து எடுத்தேன். எதன் மிச்சமது. இடிந்த ரயில் நிலையமா? வீடா, தேவாலயமா? குடியிருப்பா. இல்லை எங்கிருந்தாவது கடல் கொண்டு வந்த போட்டதா? அந்த கல் ஈரமேறியிருந்தது. உலகில் உள்ள எல்லா கற்களும் பழையதாகவே இருக்கின்றன. புத்தம் புதிய பூவை காண்பது போல இன்று பிறந்த கல் என எதையும் காண முடியவேயில்லை. எல்லா கற்களும் ஏதோவொன்றின் சிறு பகுதி தானில்லையா?


கடல் சப்தம் சீராக வந்து கொண்டிருந்தது. அந்த வயதானவர் அதிகம் பேசுகிறவராக இல்லை. அவரும் இருளுள் உட்கார்ந்திருந்தார். காற்று அதிகமாகிக் கொண்டேயிருந்தது. உலகின் மிக தொன்மையான கடலின் முன்பாக உட்கார்ந்திருக்கிறேன் என்ற உணர்வு மேலோங்கியிருந்தது. கடற்கரையில் இருளுக்குள்ளும் நாய் அலைந்துகொண்டிருக்கிறது. அதற்கு கடலிடம் பயமில்லை.


ஒரு சிறுமி இருளுக்குள்ளாகவே நடந்து சாப்பிட அழைப்பதாக கிழவனை அழைத்தாள். அவர் வானத்தை ஏறிட்டு பார்த்துவிட்டு இன்னும் மணி ஒன்பது கூட ஆகியிருக்காது.  பிறகு வர்றேன் என்றார்.


இயற்கை தான் அவர்களது கடிகாரம். அதன் நகர்வோடு தங்களையும் பொருத்திக் கொண்டிருக்கிறார்கள். மனித உள்ளுணர்வை விட மேலான இயந்திரம் என்ன இருக்கிறது.


கடற்காற்று, தனிமை, கடலிடம் பயங்கொள்ளாத நெருக்கம், நாளை பற்றிய கவலையில்லாத ஏகாந்தமான மனநிலை.  என்றிருந்த அந்த கிழவனை பார்த்து கொண்டிருந்தேன். அந்த நிமிசத்தில் உலகின் மிகச் சந்தோஷமான மனிதன் அவரே.


மிக பெரிய சந்தோஷங்கள் எதுவும் விலை கொடுத்து வாங்காமல் கிடைக்க கூடியதே அந்த நிமிசத்தில் தோன்றியது. தனுஷ்கோடி ஒவ்வொரு முறையும் ஏதோவொன்றை கற்றுகொடுக்கிறது. நினைவுபடுத்துகிறது. அன்றும் அப்படியே உணர்ந்தேன்.
***


 


 

0Shares
0