தமிழ்க் கவிதையின் இடம்.

ஆங்கிலத்தில் வெளியாகும் பெரும்பான்மையான INDIAN POETRY ANTHOLOGY களில் தமிழ்க் கவிதையே இடம்பெறுவதில்லை. அபூர்வமாக இடம்பெற்றாலும் மிக மோசமான கவிதையாக உள்ளது. அதைப் படிக்கும் வாசகன் இவ்வளவு தானா தமிழ்க் கவிதையின் தரம் என நொந்துபோவான்.

சமீபத்தில் அப்படி இரண்டு கவிதைத் தொகுதிகளைப் படித்தேன். இரண்டிலும் தமிழ்க் கவிதைகள் இடம்பெறவில்லை. இன்று இந்திய அளவில் தமிழின் நவீன கவிதை மிகச் சிறந்த இடத்தைக் கொண்டிருக்கிறது. தமிழில் உள்ளது போலப் புதுக்குரல்கள். புதிய மொழி, புதிய கவிதையாக்கம் வேறு மொழிகளில் அதிகம் நடைபெறவில்லை.

தமிழ், மலையாளம் கன்னடம் அல்லது குஜராத்திக் கவிதையை ஆங்கிலத்தில் வாசிக்கும் போது அந்தக் கவிதையின் சாரத்தை மட்டுமே நாம் பெறுகிறோம். அதன் இசையை, தனித்துவமான மொழியமைப்பை, அர்த்த தளங்களை நாம் பெறுவதில்லை. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்யப்பட்ட கவிதைகளில் மிகக் குறைவானவை தான் சிறந்த முறையில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

கவிதையை மொழியாக்கம் செய்வது எளிதானதில்லை. அது ஒரு சவால். ஒரே கவிதையை எப்படி வேறுவேறு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் என்பதற்கு Eliot Weinberger எழுதிய Nineteen ways of looking at Wang Wei சிறந்த நூலாகும். அதை வாசித்துப் பாருங்கள். கவிதை மொழியாக்கத்தின் உண்மையான சவால்களை உணர்வீர்கள்.

பெரும்பான்மை ஆங்கில தொகுப்பாளர்களுக்குத் தமிழ் கவிதையுலகம் பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் தங்களின் நண்பர்களின் மூலம் தெரிந்த தமிழ் கவிஞர்களைத் தேர்வு செய்கிறார்கள். அவ்வளவே. பல நேரம் அந்த முயற்சியைக் கூட எடுப்பதில்லை.

தொகுப்பு நூலில் தான் அப்படி என்றால் இணையத்தில் நடைபெறும் இந்திய அளவிலான கவிதை வாசிப்பு. மற்றும் சர்வதேச கவிதைகள் விழா என எதிலும் தமிழ் கவிஞர்கள் அழைக்கப்படுவதில்லை. பங்குபெறுவதில்லை. அது போன்ற ஒரு உலகம் இயங்குவதே பல தமிழ் கவிஞர்களுக்கும் தெரியாது.

விதிவிலக்காகக் கவிஞர் சுகுமாரன். கவிஞர் சேரன், கவிஞர் சல்மா போன்றவர்கள் சில கவிதை நிகழ்வுகளில் அழைக்கப்படுகிறார்கள். சுகுமாரனின் கவிதைகள் முழுமையாக ஆங்கிலத்தில் வெளியாக வேண்டும். அவர் உலக அளவில் பேசப்பட வேண்டிய கவிஞர். சமீபத்தில் அவரது கவிதைகள் பற்றி மலையாளக் கவிஞர் ராமன் எழுதிய கட்டுரையைப் படித்தேன். சிறப்பாக எழுதியிருக்கிறார்.

சமகாலத் தமிழ் கவிதையுலகம் பற்றி ஆங்கிலத்தில் ஏதாவது எழுதப்பட்டிருக்கிறதா என்று தேடினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. எம்.எஸ். ராமசாமி மொழிபெயர்ப்பில் முன்பு ஒரு தொகுப்பு ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. அதைத் தவிர இந்தியன் லிடரேசர் இதழில் தமிழ் கவிதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன. நகுலன் தானே ஆங்கிலத் தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். கல்கத்தாவிலுள்ள ரைட்டர்ஸ் வொர்க் ஷாப் அதை வெளியிட்டுள்ளது.

சர்வதேசக் கவிதைகளை வெளியிடும் இணையதளங்கள் ஐம்பதுக்கும் மேலிருக்கின்றன. அதில் நூற்றுக்கணக்கான நவீன சீனக்கவிதைகள். ஜப்பானியக் கவிதைகள். ஸ்பானியக் கவிதைகள் உள்ளன. ஆனால் எதிலும் தமிழ் கவிதைகளைக் காணமுடியாது. மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை என்கிறார்கள். அது ஒரு காரணம். இன்னொரு காரணம் அது போன்றவற்றில் கவிதைகளை கொண்டு செல்லும் முனைப்பு தமிழ் வெளியில் குறைவாக இருக்கிறது.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் கவிஞர் தேவதச்சனின் கவிதைகளை ஒருவர் ஆங்கிலத்தில் வாசிக்க விரும்பினால் பத்துக்கும் குறைவான கவிதைகளே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

பிரெஞ்சிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட ழாக் பிராவர் கவிதைகளை நாம் கொண்டாடுகிறோம். இது போலத் தேவதச்சன் கவிதைகளைப் பிரெஞ்சில் மொழியாக்கம் செய்யப்பட்டால் அங்கே நிச்சயம் கொண்டாடப்படுவார்.

சங்க கவிதைகளை ஏ.கே. ராமானுஜன், வைதேகி ஹெபர்ட் ஆகியோர் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். தங்கப்பாவும் ஆ.ரா. வெங்கடாசலபதியும் இணைந்து Love Stands Alone: Selections from Tamil Sangam Poetry எனத் தொகுப்பினை கொண்டு வந்திருக்கிறார்கள். டாக்டர் கே. எஸ். நிறைய கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். லதா ராமகிருஷ்ணன் தமிழின் முக்கியக் கவிஞர்களை மொழியாக்கம் செய்து FLEETING INFINITY என்ற தொகுப்பினைக் கொண்டு வந்திருக்கிறார்.  ஆனால் அவை பரந்த வாசிப்பிற்கும் ஆழ்ந்த கவனத்திற்கும் உள்ளாகவில்லை.

ஆற்றூர் ரவிவர்மா தமிழிலிருந்து புது நானூறு என முக்கியமான நவீனத் தமிழ்க் கவிதைகளை மலையாளத்திற்கு மொழியாக்கம் செய்திருக்கிறார். இது போல ஆங்கிலத் தொகுப்பு செய்யப்படுதல் அவசியம்.

சென்ற ஆண்டு மும்பையில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்து கொண்ட போது நிறைய இந்திய எழுத்தாளர்களுடன் உரையாடினேன். அவர்கள் திருக்குறள். கம்பன். பாரதியை தவிர வேறு எந்த நவீன தமிழ் கவியினையும் அறிந்திருக்கவில்லை. இவ்வளவிற்கும் அவர்கள் தீவிர வாசிப்பாளர்கள்.

இன்றும் தொடர்ந்து ஆங்கில நாளிதழ்களில் கவிஞர்கள் பத்தி எழுதுகிறார்கள். சமகால ஆங்கில கவிதைகள் பற்றி பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிடப்படுகின்றன. மலையாள, கன்னடக் கவிஞர்கள் நிறைய ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தபடுகிறார்கள். சர்வதேச பதிப்பகங்கள் அவர்களின் கவிதைகளை மொழியாக்கம் செய்து வெளியிடுகின்றன. தமிழ் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் குகைக்குள் வாழ்ந்து கொண்டு சுவரோவியங்கள் வரைந்து கொண்டிருப்பதை போலவே இன்றைய நவீன தமிழ் கவிஞன் சமகால உலகினால் நடத்தப்படுகிறான். கவிதையைக் கொண்டாடாத சமூகம் மேம்படாது.

ஆங்கிலத்தில் மட்டுமின்றிப் பிற இந்திய மொழிகளிலும் சமகாலத் தமிழ்க் கவிதைகளின் தேர்வு செய்யப்பட்ட தொகுப்பு வெளியாக வேண்டும். அதுவே தமிழ் கவிதையின் இடத்தை உலகறியச் செய்யும்

••

0Shares
0