தமிழ் விக்கிபீடியா

பெரும்பான்மை கல்லூரி நிகழ்ச்சிகளில் என்னை அறிமுகப்படுத்தும் போது தமிழ் விக்கிபீடியாவில் உள்ள சுயவிபரக்குறிப்பை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். எனது விக்கிபீடியா தகவல்களை யார் உருவாக்கினார்கள் எனத் தெரியவில்லை ஆனால் முழுமையான விபரங்களில்லை
நான் மொழிபெயர்த்த ஆலீஸின் அற்புத உலகம் நூலை நான் எழுதிய புத்தகமாகப் பதிவு செய்திருக்கிறார்கள், குழந்தைகள் புத்தகமான ஏழுதலைநகரம் நான் எழுதிய நாவலாக இடம் பெற்றுள்ளது ( நாவல் என்ற சொல்லை தமிழ் விக்கிபீடியா பயன்படுத்தாது என்பது இன்னொரு விசித்திரம் ) எனது வாழ்க்கைக் குறிப்பு பற்றி ஒருவரியும் கிடையாது. முன்பு எனது விக்கிபீடியாவில் இருந்த தகவல்கள் பல நீக்கப்பட்டுவிட்டன. பாதிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பற்றிய விபரங்கள் இல்லை.
எனது கதை கர்ணமோட்சம் குறும்படமாக்கபட்டு தேசிய விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறது, பதினைந்துக்கும் மேற்பட்ட குறும்படங்கள் எனது கதைகளை மையமாகக் கொண்டு உருவாக்கபட்டுள்ளன.
எனது கதைகள் ஆங்கிலம் மலையாளம், ஜெர்மன், பிரெஞ்சு வங்காளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கின்றன. ஏழு இலக்கிய உரைகளும் ஏழு உலகச் சினிமா சார்ந்த உரைகளும் நிகழ்த்தியிருக்கிறேன், இரண்டும் மிகப்பெரிய வாசக வரவேற்பை பெற்றவை.
கதை சொல்லும் நிகழ்ச்சிகள், இலக்கிய முகாம்கள் என நிறைய நடத்தியிருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களைச் சந்தித்து உரையாற்றியிருக்கிறேன், நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களிடம் வரலாறு, இலக்கியம் பண்பாடு குறித்துப் பேசியிருக்கிறேன்.
எனது படைப்புகள் குறித்து ஆய்வு செய்து மூன்று பேர் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள், பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் எம்பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள், ஒன்பது கல்லூரிகளில் எனது புத்தகம் பாடமாக வைக்கபட்டுள்ளது.
எனது நாடகங்களின் ஆங்கில மொழியாக்கத்தை ஒரியண்ட் லாங்மென் பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.
நான் எழுதியுள்ள எனது இந்தியா, மறைக்கப்பட்ட இந்தியா ஆகிய இரண்டு வரலாற்று நூல்கள் இந்திய வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் முக்கிய நூல்கள் ஆகும்.
இது போன்ற எந்தத் தகவலும் விக்கிபீடியாவில் இல்லை.
என்னைப் பற்றிய அறிமுகத்தைப் பாருங்கள்
எஸ். ராமகிருஷ்ணன் (பிறப்பு: 1966) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு எனும் ஊரில் பிறந்த இவர் பல அச்சிதழ்களில் புதினம், சிறுகதை, கட்டுரைகள் என எழுதி வருகிறார். இவர் சில தமிழ் திரைப்படங்களுக்குத் திரைக்கதை, உரையாடல்களும் எழுதியுள்ளார்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் எனக்கு இப்படி ஒரு அறிமுகம் தேவைதானா.
எப்போது எழுத துவங்கினேன், எத்தனை ஆண்டுகளாக எழுதி வருகிறேன். இதுவரை எத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். எங்கே வசிக்கிறேன், எந்த விபரமும் கிடையாது. ஆனால் என்னைப் பற்றிய முக்கிய விபரங்கள் அத்தனையும் ஆங்கில விக்கிபீடியாவில் உள்ளது, அதைத் தமிழ் விக்கிபீடியா உருவாக்குபவர்கள் படிக்கக் கூட மாட்டார்களா என்ன.
விக்கிபீடியாவில் பக்கங்களை உருவாக்குவது சேவை மனப்பாங்கில் செய்யப்படுவது என்பதால் சரியான தகவல்களை யாராவது உள்ளீடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்
0Shares
0