புதிய சிறுகதை
பிப்ரவரி 7 2023
இந்தக் கதையில் நடக்கும் நிகழ்வுகள் ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்திருக்கக்கூடும். அல்லது அந்த நூற்றாண்டில் பல்லவ இளவரசனாக இருந்த தர்மகீர்த்தி பற்றியதாக இருக்கவும் கூடும். தர்மகீர்த்தி ஒரு சிறுகாப்பியம் எழுதியிருக்கிறார். அதன் பெயர் தர்மகீர்த்தியாணம்.

முடிமன்னர்கள் கவிஞராக மாறுவதும் கவிதைகள் எழுதி அங்கீகாரம் கேட்பது தமிழ் கவிதை மரபின் விசித்திரம். தன்னிடம் இல்லாத எந்த அங்கீகாரத்தைக் கவிதையின் வழியே மன்னர் அடைய முற்படுகிறார் என்பது புரியாதது..
தோல்வி தான் மன்னர்களைக் கவிதை எழுத வைத்திருக்கும் என்று தோன்றுகிறது. துரோகம் அல்லது ஏமாற்றம் எதையேனும் அடையும் போதும் கவிஞனாக மாறியிருக்கக்கூடும். கவிதையின் நாக்குத் தீண்டியதும் மன்னர் மறைந்துவிடுகிறார். அவருக்குத் தனது அதிகாரத்தின் வரம்பு புரிந்துவிடுகிறது
நீங்கள் வரலாற்றில் தர்ம கீர்த்தியைத் தேடுவதாக இருந்தால் அவனைப்பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்காது. ஆனால் கதைகளிலும் கவிதைகளிலும் இடம்பெற்றிருக்கிறான். எதிலும் அவன் எந்தப் பல்லவ சக்ரவர்த்தியின் மகன் என்று குறிப்பிடப்படவில்லை.
காஞ்சி அரண்மனையில் வசிக்கிறான். பொற்கிண்ணத்தில் பால் அருந்துகிறான், யானை மீதேறிச் செல்கிறான் என்ற தகவலைக் கொண்டு நாமே யூகித்துக் கொள்ள வேண்டியது.
வரலாற்று நாயகர்கள் பலரும் நாமாக உருவாக்கிக் கொண்டவர்கள் தானே. உண்மையாக எப்படி இருந்தார்கள். எப்படி நடந்து கொண்டார்கள் என்று யாருக்குத் தெரியும்.
வரலாறும் இலக்கியமும் எப்போதும் ஒரே உண்மையைச் சொல்வதில்லை. வரலாறு கொண்டாடும் எவரையும் இலக்கியம் பொருட்படுத்துவதில்லை. அது போலவே கவிஞனின் குரலையோ கதைகளில் வரும் மனிதர்களையோ வரலாறு கண்டுகொள்வதேயில்லை.
தர்ம கீர்த்தியின் கதையும் அப்படியானதே.
அவன் உண்மையாகவே பல்லவ இளவரசன் தானா என்பதைப் பற்றி இன்றுவரை சர்ச்சைகள் இருந்துவருகின்றன. வரலாற்றின் திரைக்குப் பின்னே மறைந்து போனவர்களை, ஒளிந்து கொண்டவர்களை இன்றிலிருந்து கண்டறிய முடியாது.
தர்ம கீர்த்தியும் அப்படியானவன் தான்.
கதைகளில் தர்ம கீர்த்தித் துறவியாக, நடிகனாக, வணிகனாக, மாயத்திருடனாக அழியாக் காதலனாக இடம்பெறுகிறான்
••.
தர்மகீர்த்தி யார் என்பது இந்தக் கதையை வாசிப்பவர்களுக்கு முக்கியமில்லை. தர்மகீர்த்தி எதனால் நினைவு கொள்ளப்படுகிறான் என்பதே முதன்மையானது. இத்தனை நூற்றாண்டுகளைக் கடந்து ஒரு பெயர் நிலைத்து நிற்கமுடியும் என்றால் அது காதலாலோ பெரும் வீரத்தாலோ மட்டுமே முடியும். இரண்டிலும் புனைவுகள் அதிகம். நிஜத்தை விடவும் புனைவே வரலாற்றை ருசிமிக்கதாக்குகிறது. நெருக்கம் கொள்ளவைக்கிறது
தர்ம கீர்த்தியைப் பற்றிய கதைகளில் முதன்மையானது அவனது மயில் கதைகள்.

தான் காதலித்த பெண்கள் அனைவரையும் மயில்களாக உருமாற்றிவிட்டான் என்பதை அக்கதைகளின் சாரம்.
இதே கதைகளுக்கு மாற்று வடிவமிருக்கிறது. அதில் தர்மகீர்த்தியால் நிராகரிக்கப்பட்ட பெண்கள் மயில்களாக உருமாறி அவனைப் பின்தொடர்கிறார்கள். வஞ்சம் தீர்க்க முனைகிறார்கள். முடிவில் அவர்கள் மயிற்கண் கொண்ட மீன்களாக மாறி விடுகிறார்கள்.
••
தர்மகீர்த்தி கதையில் வாழுகிறவன். கதையில் வசிப்பவர்களின் தோற்றம் மாறிக் கொண்டேயிருக்கக் கூடியது. வயதற்ற அவர்கள் இசைக்கருவியைப் போன்று வாசிப்பவருக்கு ஏற்ப மாறுபடக்கூடியவர்கள். ஒரு கதையைக் காலம் கைவிட்டாலும் அதில் வசித்த சிலர் என்றும் வாழ்ந்து கொண்டேயிருப்பார்கள். தர்மகீர்த்தியும் அப்படியே.
••
நீண்ட சுருளமுடியும் கிரேக்கச் சிற்பம் போன்ற முகமும், வெண் முத்தென்ற கண்களும், இரும்பு பூண் போன்ற தோள்களும் உள்ளோடிய வயிறும், கற்தூண்களின் உறுதி கொண்ட கால்களும் சற்றே பெரிய பாதங்களும் கொண்ட தர்ம கீர்த்தி நீலப்பட்டு உடுத்தி தலையில் வெண்தாமரை சூடியிருப்பான். சூரியனைப் போல அவன் செல்லும் இடமெல்லாம் ஒளிரக்கூடியவன். கொக்கின் சிறகு விரிவது போல அவனது சிரிப்பு இயல்பாக விரிந்து பரவும் என்கிறார்கள்.

தர்ம கீர்த்தியின் முதுகில் தாமரைக் கொடிகள் போன்ற சித்திரம் வரையப்பட்டிருக்கிறது என்றார்கள்..
உண்மையில் அந்தத் தாமரைக் கொடிகள் அவனது காதலின் போது உயிர்பெற்றுவிடும் என்றும் அவனைக் காதலிக்கும் பெண் ஆரத்தழுவும் போது அந்தத் தாமரை இலையின் ஈரத்தை உணர்வாள் என்றார்கள்.
காதலிப்பதற்காகவே தர்மகீர்த்தி வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் எங்கே சென்றாலும் அதன் நோக்கம் காதலிப்பது மட்டுமே. அவன் அழகான பெண்களால் காதலிக்கப்பட்டிருக்கிறான். ஆனால் எந்தக் காதலும் அவனுக்குப் போதுமானதாகயில்லை. பல்லாயிரம் மழைத்துளிகளைக் குடித்தபோதும் பூமியின் தாகம் அடங்கிவிடுகிறதா என்ன.
ஒரு கதையில் வாழ்நாள் முழுவதும் காதலித்துக் கொண்டேயிருக்கும்படி அவனுக்குச் சாபம் அளிக்கப்படுகிறது. அவனது குரு அந்தச் சாபத்தைத் தருகிறார். ஒருவேளை அவன் குருபத்தினியை காதலித்திருக்கக் கூடும். ஆனால் இந்த உலகில் காதலித்துக் கொண்டேயிருக்கும்படி ஒருவனுக்குச் சாபம் வழங்கப்படுகிறது என்பது வரமா இல்லை வருத்தமளிக்கும் சாபமா.
தர்மகீர்த்தியின் கதையில் அவன் காதலில் தோற்றுக் கொண்டேயிருக்கிறான். அல்லது தோற்பதற்காகவே காதலிக்கிறான். தர்மகீர்த்தியின் கதை ஏன் இத்தனை ஆண்டுகளாகப் பேசப்படுகிறது என்பதற்குக் காரணம் ஒவ்வொரு தோல்விக்கும் பிறகும் புதிதாகக் காதலிக்கத் துவங்கிவிடுகிறான் என்பதே
தர்மகீர்த்தியின் காதல் காரணங்கள் அற்றது. உலகின் நியதிகளைப் பொருட்படுத்தாதது. நிறைய மாயங்களைக் கொண்டது. பேரலையைப் போலக் காதலை அவன் உக்கிரமாக வெளிப்படுத்தும் போது காதலித்த பெண்ணால் நிராகரிக்கப்படுகிறான். அன்பின் பொருட்டால் தோற்கடிக்கப்படுகிறான். அவனைக் காதலித்த பெண்கள் உதிர்ந்த இலையை நோக்கும் மரத்தைப் போல அவனை நடத்துகிறார்கள். அவமானத்துடன் வெளியேறும் தர்ம கீர்த்தி காதலின் ஒற்றையடிப் பாதையில் அயராமல் நடக்கத் துவங்குகிறான்
••
தர்ம கீர்த்தியைக் காதலித்த ஒரு பெண் அவனைப்பற்றி இப்படிப் பகிர்ந்து கொண்டிருக்கிறாள். இதுவும் ஒரு கதையில் தானிருக்கிறது
தர்மகீர்த்தி ஒரு பொன்னிறமான நரியைப் போல எனது வீட்டின் பின்புறம் நின்றிருந்தான். காற்று தண்ணீரைத் தொடுவது போல என்னை ஏறிட்டுப் பார்த்தான். மறுநிமிடம் எனது ஆடைகள் தளர்வு கொள்வதையும் கைகள் அவனை நோக்கி நீள்வதையும் விநோதமாக உணர்ந்தேன். அவன் இப்போது பொன்னிற நரியில்லை. இளைஞன். அதுவும் வெண்பட்டு உடுத்தி சிகையில் மலர் சூடிய இளைஞன். அவனை நோக்கி நானே ஓடினேன். என்னை ஏற்றுக் கொண்டான் எனது உடலுக்குள் மறைந்திருக்கும் சுடர்களை ஏற்றத் துவங்கினான். நான் ஒரு சுடர் வரிசை என உணர்ந்த தருணத்தில் காற்று சுடருடன் விளையாடுவது போல என்னுடன் விளையாடினான். அவனுடனே கரைந்து போக ஆசைப்பட்ட நிமிஷத்தில் அவன் கேட்டான்
எனக்காக நீ ஒரு மயிலாக மாறுவாயா
மாறுவேன்
உன் விருப்பம் நிறைவேறும் என்றபடியே கைகளைக் காற்றில் அசைத்தான். மறுநிமிடம் நான் நீலமயிலாக மாறியிருந்தேன். தர்ம கீர்த்தி அங்கே இல்லை. மறைந்திருந்தான். இன்றும் அடிவானத்தின் அடியில் அவனது வருகைக்காகக் காத்திருக்கிறேன்.

••
தர்ம கீர்த்தியைப் பற்றிய இன்னொரு கதையில் அவன் ஒரு பௌத்த துறவியாக இருக்கிறான். அதுவும் காதலின் பொருட்டு மடாலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கள்ளத்துறவியாகவும் சித்தரிக்கப்படுகிறான்.
துறவியான தர்மகீர்த்தி மொட்டைத்தலையுடன், கனத்த புருவத்துடன் இருந்தான். ஆறடி உயரம். செருப்பு அணியாத கால்கள். படகுத்துறை ஒன்றில் அவனைக் கடந்து சென்ற ஒரு பெண்ணின் காலடி ஓசையை வைத்து அவளைக் காதலிக்கத் துவங்கினான் என்றும் அந்தப் பெண்ணின் முகத்தைக் கூட அவன் கண்டதில்லை என்றும் சொன்னார்கள்.
காலடி ஓசையிலிருந்து அவன் தனக்கான பெண் முகத்தை உருவாக்கிக் கொண்டான். அந்த முகத்தை ஒரு சுவரோவியமாக வரைந்தான் என்றும் அந்த ஓவியத்தின் முன்பாகக் கண்களை மூடி மணிக்கணக்கில் தியானம் செய்து வந்தான் என்றும் சொல்லப்படுகிறது.
பேரழகு கொண்ட ஒரு பெண் உருவின் முன்பு இளந்துறவி தியானிப்பதை எப்படி மடாலயத்தால் அனுமதிக்க முடியும். ஆகவே அவன் வெளியேற்றப்பட்டதாகவும் கதையில் வருகிறது.
அந்த ஓவியத்தில் இருந்த பெண் மயிற்றோகையை உடையாக அணிந்திருந்தாள். உண்மையில் அவள் ஒரு மயில் பெண்ணாகத் தோன்றினாள் என்கிறாள். தர்மகீர்த்தி என்ற துறவியின் கற்பனையில் ஏன் ஒரு பெண் மயில்தோகை கொண்டவளாகத் தோற்றம் கொண்டாள் என்பது புதிராகவே இருக்கிறது.
••
வேறு கதையில் இதே தர்ம கீர்த்தி திருடனாக இருக்கிறான். அவன் திருடச் செல்லும் வீடுகளில் உள்ள இளம்பெண்ணின் கனவிற்குள் புகுந்துவிடுகிறான். அவனைக் கனவில் கண்டு பழகிய பெண் விழித்து எழுந்த பின்பு அவனைத் தேடத் துவங்குகிறாள். கண்டறிய முடியாத போது அவனது நினைவிலே மயில்களாக மாறிவிடுகிறாள். அவன் செல்லும் இடமெல்லாம் அவனைப் பின்தொடர்கிறாள்.
அந்தக் கதையில் ஒரு படகில் நூறு மயில்களுடன் தர்மகீர்த்தி வருவதாகவும் படித்துறையில் அவன் இறங்கி நடக்கும் போது அவன் பின்னால் மயில்களின் கூட்டம் தொடர்வதாகவும் சித்தரிக்கப்படுகிறது.
••
தர்ம கீர்த்தியால் மயிலாக மாற்றப்பட்ட பெண்கள் என்ன ஆகிறார்கள்.
ஏன் காதல் ஒருவரை மயிலாக மாற்றிவிடுகிறது.
கதையில் அவர்கள் பூமியில் வசிக்கும் மயில்களைப் போலின்றி வானில் பறக்கத் துவங்கிவிடுகிறார்கள். சில இரவுகளில் வானில் மயில் கூட்டம் செல்வது போன்ற மாயக்காட்சி தெரிவதற்கு இதுவே உண்மைக்காரணம் என்கிறது கதை.

••
தனது மனைவியால் ஏமாற்றப்பட்ட தர்மகீர்த்தி என்ற இளவரசன் அந்த ஏமாற்றத்தைத் தாங்கமுடியாமல் மனைவியின் பெயர் கொண்ட பெண்ணை அழைத்துவந்து திருமணம் செய்து கொண்டு அன்றிரவே அவர்களைக் கொல்லத்துவங்கினான் என்றும் அவனிடமிருந்து தப்பிச் செல்வதற்காகவே பெண்கள் மயிலாக மாறினார்கள் என்றும் ஒரு கதை சொல்கிறது. இது உண்மையாக இருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் இதே போலக் கதை அரபு தேசத்தில் சொல்லப்படுகிறது. ஒருவேளை அந்தக் கதை தான் ஏழாம் நூற்றாண்டில் ஒரு வணிகன் மூலம் காஞ்சி வந்து சேர்ந்து தர்மகீர்த்தியின் கதையாக மாறிவிட்டதா என்றும் தெரியவில்லை
••
தர்மகீர்த்தியைப் பற்றிய இன்னொரு கதையில் அவன் பிறந்தவுடன் தாயை இழந்துவிடுகிறான். தந்தை அவனை வெறுக்கிறார். தனிமாளிகை ஒன்றில் வளர்க்கப்படுகிறான். மூர்க்கமான இளைஞனாக வளர்கிறான். அரண்மனை தோட்டத்தில் ஒரு நாள் நீலமயில் ஒன்று பேரழகு மிக்கப் பெண்ணாக உருமாறுவதைக் காணுகிறான். அவளை அடைய விரும்பி துரத்துகிறான். அவள் காதலால் அன்றிப் பலவந்தால் தன்னை அடைய முடியாது என்கிறாள். என்ன செய்ய வேண்டும் என்று கேட்கவே அவனை ஆண்மயிலாக மாற்றிவிடுகிறாள்.
அதன்பிறகு தர்ம கீர்த்தி ஆண்மயிலாக வாழுகிறான். அதில் அடையும் இன்பம் அவனைச் சுயநினைவின்றி மயக்கி வைக்கிறது, தந்தை இறந்து போகவே அவனது தேசத்தின் மீது எதிரிகள் போர் தொடுக்கிறார்கள். அப்போதும் அவன் ஆண்மயிலாகவே போருக்குச் செல்கிறான். போர்க்களத்தில் அவனை மயில்களே பாதுகாக்கின்றன. போரில் வென்றபின்பு அவன் இரண்டு மயில்கள் கொண்ட ரதம் ஒன்றில் அரண்மனை நோக்கிப் பறந்து வருகிறான். ஆண்மயிலாகவே அவன் ஆட்சியைத் தொடருகிறான். அவனை மயிலாக மாற்றிய பெண் இறந்து போகவே மீளாத் துயரில் அவன் நெருப்பில் விழுந்து இறந்துவிடுகிறான் என்கிறது இக்கதை
••
தர்மகீர்த்தியைப் பற்றிய சிறுகாப்பியமான தர்மகீர்த்தியாணத்தை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் இளவரசன் தர்ம கீர்த்தி பேராலே வழங்கப்படுகிறது. அதிலும் தாயற்ற தர்மகீர்த்திச் சிறுவயதிலே கானகம் சென்று துறவியாக வாழுகிறான். ஞானத்தை அடைவதற்காகக் கடுந்தவம் செய்கிறான். அவனை அரண்மனைக்கு அழைத்து வர ஒரு இளம்பெண்ணை அனுப்பி வைக்கிறார்கள். அவள் மயிலாக உருமாறி காட்டிற்குள் வருகிறாள். அந்த மயிலின் வசீகரத்தால் மயங்கி அரண்மனை திரும்பிய தர்மகீர்த்தி அவளை மனைவியாக்கிக் கொள்கிறான். வருஷங்கள் கடந்து போகின்றன. அவள் இறந்து போகிறாள்.அந்த துக்கத்தை அவனால் தாங்கமுடியவில்லை. தனது மனைவியைப் போல ஒரு மயிலால் உருமாற முடியும் என நினைத்த தர்ம கீர்த்தி அதற்காக நாட்டிலுள்ள மயில்களை வேட்டையாட ஆரம்பிக்கிறான். முடிவில் தேசத்திலிருந்த மயில்கள் முற்றி அழிந்து போகின்றன. இந்தச் சிறுகாப்பியத்தின் முடிவில் மயில்களின் சாபத்தால் தர்ம கீர்த்தி நாகமாக மாற்றப்படுகிறான். அவனை வானிலிருந்த வந்த மயில் ஒன்று கவ்விக் கொண்டு பறக்கிறது.
••
தர்மகீர்த்தியினைப் பற்றிய கதைகளில் அவன் நிஜமாகவும் இல்லை. புனைவாகவும் இல்லை. நீரிலும் நிலத்திலும் ஒரே நேரத்தில் வாழும் உயிரினம் போலிருக்கிறான். கதைகளில் வாழுகிறவர்களின் விதி புதிரானது போலும்.

தர்மகீர்த்தி என்பது ஒரு மயிலின் பெயர். அது புத்தனின் மனைவி யசோதரையால் வளர்க்கப்பட்டது என்று எங்கோ படித்த ஞாபகம்.
ஒருவேளை அதுவும் புனைவு தானோ.
••