தலைகள் இரண்டு

புதிய சிறுகதை

பிப்ரவரி 16 2023

குளோபல் செக்யூரிட்டி சிஸ்டம் நிறுவனத்தில் மனோகர் வேலை செய்து கொண்டிருந்தான். கண்காணிப்புக் கேமிரா பொருத்துவது தான் அவனது பணி.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக குளோபல் செக்யூரிட்டி சிஸ்டத்தில் வேலை கிடைத்தது. மூன்று மாத பயிற்சி கொடுத்தார்கள். அதன்பிறகு நேரடியாகக் கண்காணிப்புக் கேமிரா பொருத்தும் பணியில் ஈடுபடத் துவங்கிவிட்டான்

அவனது நிறுவனம் நிறைய வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்தது. அவர்கள் கண்காணிப்பு கேமிராவை பொருத்தி தருவதுடன் அதன் பராமரிப்பு பணியினையும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதால் பள்ளி கல்லூரிகள் கூட கூட அவர்களின் வாடிக்கையாளர்களாக இருந்தார்கள்.

அப்படி ஒரு கண்காணிப்புக் கேமிரா பொருத்தும் பணியை முன்னெடுப்பதற்காகத் தான் மருத்துவக் கல்லூரி வளாகத்திற்கு வந்திருந்தான். அந்த மருத்துவக்கல்லூரியின் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே முன்பு கண்காணிப்புக் கேமிராக்கள் பொருந்தப்பட்டிருந்தன. ஆனால் அவை முறையாகப் பராமரிக்கபடாத காரணத்தால் செயலற்றுப் போயிருந்தன. தற்போது மொத்த வளாகத்தையும் கேமிரா பொருந்த அவர்களை நியமித்திருந்தார்கள்.

மனோகர் மற்றும் மூன்று ஊழியர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் செயல்பட்டு வந்த மியூசியத்தில் கேமிரா பொருத்தும் வேலையை முன்னெடுத்தார்கள். அப்போது தான் அங்கே ஒரு மியூசியம் செயல்பட்டு வருவதைக் கண்டான்.

மருத்துவக் கல்லூரிக்குள் அப்படி ஒரு மியூசியம் இருப்பது ஆச்சரியமாக இருந்தது. இதுவரை அவன் கேள்விபட்டது கூடக் கிடையாது.

பாடம் செய்யப்பட்ட சிசுக்கள். உடல் உறுப்புகள், எலும்புகள் என விநோதமான பொருட்கள் அந்த மியூசியத்தில் காணப்பட்டன. அலெக்சாண்டர் கிரஹாம் என்ற வெள்ளைக்கார மருத்துவர் இதைத் துவங்கியிருக்கிறார்.

கண்ணாடி பாட்டில்களுக்குள் காணப்படும் அந்த விசித்திர உருக்களை, காணும் போது அச்சமாகவே இருந்தது. பெரிய கண்ணாடி பெட்டகத்திற்குள் விதவிதமான மருத்துவக் கருவிகளை வைத்திருந்தார்கள்.

அசாதாரண வளர்ச்சி கொண்ட கருப்பைகள், ஃபலோபியன் குழாய்கள், சிதைந்து பிறந்த கருக்கள், உடற்குறைபாடு கொண்ட சிசுக்களின் இறந்த உடல்கள் கண்ணாடி பெட்டிகளில் பார்மால்டிஹைடில் பாதுகாக்கபட்டிருந்தன. சில பொருட்களின் அடியில் எங்கே சேகரிக்கபட்டது என்ற தகவல் டைப் செய்து ஒட்டப்பட்டிருந்த்து.

இந்த மியூசியத்தில் எங்கெங்கே கேமிரா பொருத்தப்பட வேண்டும் என்பதை மனோகர் தான் முடிவு செய்தான். இவற்றை யார் திருடப்போகிறார்கள். அன்றாடம் மியூசியத்தைக் காண வரும் மருத்துவ மாணவர்கள் எண்ணிக்கையே மிகக் குறைவு தானே.

பெரிய ஹாலில் மட்டுமில்லாது நான்கு அறைகளிலும் இறந்த சிசுக்களின் மாதிரிகள் வைக்கபட்டிருந்தன. அந்த அறைகளில் பகலிலும் டியூப் லைட் இல்லாமல் எதையும் காண முடியாது. நேரடி வெளிச்சம் மிகக் குறைவு என்பதால் கேமிரா பொருத்துவது சவாலான வேலையாக இருந்தது.

உள் அறையின் ஜன்னலை ஒட்டி இருந்த கண்ணாடி குடுவை ஒன்றில் இரண்டு தலை கொண்ட சிசுவின் உடல் மிதந்து கொண்டிருந்தது.

இரட்டைத் தலைகளைக் காணும் போது இரண்டு மலர்கள் ஒரே காம்பில் மலர்ந்திருப்பது போலவே தோன்றியது. மூடிய கண்கள் கொண்ட அந்தச் சிசுவை நெருங்கி பார்த்துக் கொண்டிருந்தான் மனோகர்.

அந்தக் குடுவையின் அடியில் சிசுவின் தாய் பெயர் இந்திராணி சுப்ரமணியம் இடம் காஞ்சிபுரம் வருஷம் 1994 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மனோகர் அந்தப் பெயரை வாசித்த போது அது தனது அம்மாவின் பெயர் போலிருப்பதாக நினைத்தான். அம்மாவின பெயர் எப்படி இதில் இடம்பெற்றுள்ளது எனப் புரியவில்லை.

யாரிடம் இதைப்பற்றிக் கேட்பது எனத் தெரியவில்லை

அந்த மியூசியத்தில் மூன்று பேர் வேலை செய்தார்கள். ஒருவர் முக்காலி போட்டு ஹாலின் ஒரமாக அமர்ந்து காவல்பணியைச் செய்துவந்தார். இன்னொரு பெண் ரிக்கார்டுகளைப் பராமரிப்பதும்,தினசரி பதிவேட்டினை நிர்வகிப்பதுமாக இருந்தார். மூன்றாவது நபர் அந்த மருத்துவ மியூசியத்தின் பொறுப்பாளர். அவருக்கெனத் தனியறை இருந்தது. எப்போதாவது தான் அவர் வருவார் என்றார்கள்

பதிவேட்டினை நிர்வகிக்கும் ஐம்பது வயதைத் தாண்டிய பெண்ணிடம் சென்று விபரம் கேட்டான் மனோகர்

“கேமிரா பிக்ஸ் பண்ண தானே வந்தீங்க. நீங்க எதுக்கு இதெல்லாம் கேட்குறீங்க“ என்று சந்தேகத்துடன் கேட்டாள் அந்தப் பெண்

“அதுல உள்ள பேரு எங்கம்மா பேரு மாதிரி இருந்துச்சி. அதான்“ என்றான் மனோகர்

“இரட்டை தலைப்பையனா“ என்று அந்தப் பெண் கேட்டார்.

“ஆமாம். ஜன்னலை ஒட்டி இருக்குது பாருங்க“ என்றான் மனோகர்

“அதுல என்ன நம்பர் போட்டு இருக்கு பாத்து சொல்லுங்க “என்றார் அந்தப் பெண்

மனோகர் உள்அறைக்குச் சென்று அந்தக் கண்ணாடி பாட்டிலின் அடியில் எழுதப்பட்டிருந்த எண்ணை தனது செல்போனில் போட்டோ எடுத்து கொண்டுவந்து காட்டினான்

அவள் தனது இருக்கையிலிருந்து எழுந்து நடந்தாள். பாரிய உடம்பு என்பதால் மூச்சுவாங்கியது. நிர்வாகியின் அறையினுள் பழைய மர டிராயரை இழுத்து அவள் எதையோ தேடுவது தெரிந்தது.

வெளியே வந்த அவள் பளுப்பு நிறமான காகிதம் ஒன்றை அவனிடம் காட்டினாள்.

“1994 ஏப்ரல் 6ம் குழந்தை காஞ்சிபுரம் ஜிஎச்ல பிறந்துருக்கு. தாயார் பேரு இந்திராணி. அப்பா பேரு சுப்ரமணியம். சொந்த ஊர் தாமல். “ எனத் தொடர்பு முகவரி உள்ளிட்ட விபரங்களைச் சொன்னாள் அந்தப் பெண்

மனோகரால் நம்பமுடியவில்லை. அது அவனது அம்மாவே தான். இப்படி ஒரு இரட்டை தலை பையன் தனக்கு முன்னால் பிறந்த விஷயத்தைப் பற்றி அம்மா சொன்னதேயில்லையே.

எப்போதோ ஒருமுறை தனக்கு முன்பாக ஒரு பையன் பிறந்து இறந்து போனதாகச் சொல்லியிருக்கிறாளே தவிர அவன் இப்படி ஒரு விநோத பையன் என்று சொன்னதில்லையே.

அப்படியானால் இந்தக் கண்ணாடி குடுவையில் பாடம் செய்யப்பட்டிருப்பவன் அவனது அண்ணன். அதுவும் இரட்டை தலை கொண்டவன். தான் ஒரு இரட்டை தலை கொண்டவனின் தம்பி என்ற எண்ணம் மனதில் தோன்றியதும் தானே விநோதமாகிவிட்டதாக மனோகர் உணர்ந்தான்.

மறுபடியும் அந்தச் சிசுவை பார்க்க விரும்பியவனாக உள் அறைக்குள் சென்றான்.

நெருக்கமாகக் காணும் போது அந்த முகத்தில் அம்மாவின் சாயல் இருப்பதைக் கண்டான். நிச்சயம் அவனது அண்ணனே தான்.

பிறந்த சில மணி நேரங்களிலே இறந்து போயிருக்கிறான். இறந்த சிசுவை மருத்துவ நிர்வாகம் பெற்றுக் கொண்டு பாடம் செய்து வைத்திருக்கிறார்கள்.

அம்மா ஏன் இதை மறைத்தாள்.

இன்று ஒருவேளை இந்தப் பையன் உயிரோடு இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும். இரண்டு தலை பையன் என்பதால் நிறைய அவமானங்களைச் சந்தித்திருப்பான் என்று தோன்றியது

தனது செல்போனில் இரட்டைதலை சிசுவை புகைப்படம் எடுத்துக் கொண்டான்.

தான் இதுவரை அறியாத அண்ணன் இங்கே காட்சிப்பொருளாக இருக்கிறான். அவனைப் பாதுகாக்க தான் கேமிரா பொருத்திக் கொண்டிருக்கிறேன் என்பது அபத்தமாக இருந்தது.

தன்னோடு வேலை செய்யும் ரூபனை அழைத்து வந்து அந்தச் சிசுவைக் காட்டி மனோகர் சொன்னான்

“இது எங்க அண்ணன்“

“எப்படிறா ரெண்டு தல இருக்கு“ என்று கேட்டான் ரூபன்

“அதான் தெரியலை“

“நல்லவேளை மூணு தலை இல்லே. இருந்தா நீ பிரம்மாவோட தம்பி ஆகியிருப்பே“ என்று கேலி செய்தான் ரூபன்

இத்தனை நாட்களாக எளிய மனுஷியாகத் தெரிந்த அம்மா இப்படி இரட்டை தலை கொண்ட குழந்தையைப் பெற்றவள் என்பது புதிராகயிருந்தது.

அன்றிரவு பெரம்பூரில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியதும் அம்மாவிடம் கேட்டான் மனோகர்

“எனக்கு முன்னாடி ஒரு பையன் பிறந்தானே அவனுக்கு ரெட்டைத் தலையா“

அந்தக் கேள்வியை அம்மா எதிர்பார்க்கவில்லை

“ஆமா. அதுக்கென்ன. அவன் பிறந்தவுடனே செத்துப் போயிட்டானே“ என்றாள்

“அந்த பையனை இன்னைக்கு நான் பார்த்தேன்“ என்றான் மனோகர்

“என்னடா சொல்றே“ எனப் புரியாதவளாகக் கேட்டாள் அம்மா

“மெடிகல் காலேஜ் மியூசியத்தில அதைப் பாடம் பண்ணி வச்சிருக்காங்க நான் பார்த்தேன்“ என்றான் மனோகர்

“நீ அங்கே எதுக்குப் போனே“.

“அங்க எங்க கம்பெனி கேமிரா பிக்ஸ் பண்ணுறாங்க. நான் அண்ணனை போட்டோ எடுத்துட்டு வந்துருக்கேன். நீ பாக்குறயா“

“எனக்கு வேணாம்பா. அதெல்லாம் எப்பவோ முடிஞ்ச கதை…செத்துப் போனவங்களைப் பற்றிப் பேசி என்னடா ஆகப்போகுது. அதெல்லாம் எனக்கு மறந்தே போச்சு“

“அது எப்படிம்மா மறக்க முடியும். ரெட்டை தலையோட பிள்ளை பிறக்கிறது சாதாரண விஷயமில்லை. “

“பிள்ளைக்கு எத்தனை தலை இருக்கு. எத்தனை கைகால் இருக்குனு யாரு கவலைப்படப்போறா. அது பிறந்து ஒரு நாள் கூட வாழலையே. அது தான் மனசுக்கு கஷ்டமா இருந்துச்சி“.

“இத்தனை வருஷம் ஏன்மா இதை என்கிட்ட சொல்லவேயில்லை“

“இதுல சொல்றதுக்கு என்னடா இருக்கு. நல்லவேளை உனக்காவது ஒத்தை தலை இருந்துச்சே. அதை நினைச்சி சந்தோஷப்பட்டுகிட்டோம். “

அம்மாவின் பேச்சை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனது அப்பா ஆறு வருஷங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஒருவேளை அவர் இருந்திருந்தால் நிச்சயம் இந்தப் புகைப்படத்தைப் பார்க்க ஆசைப்பட்டிருப்பார். அம்மா அதைப் பெரிதாக நினைக்கவேயில்லை

ஆனால் இதன்பிந்திய நாட்களில் மனோகர் அடிக்கடி மியூசியத்திற்குப் போய் வரத்துவங்கினான். அண்ணன் முன்பாக நிற்கும் நிமிஷங்களில் ஏதோவொரு நெருக்கம் உருவாவதாக நினைத்தான்.

ஒரு நாள் அவன் மருத்துவக்கல்லூரி மியூசியத்திற்குள் நுழையும் போது அவனது அம்மா வெளியேறிப் போவதைக் கண்டான். அம்மாவே தான். இத்தனை நாட்களாகப் பார்க்க மாட்டேன் என்றவள் இன்று எதற்காகத் தேடி வந்திருக்கிறாள் என்று யோசித்தான்

பதிவேடுகளைப் பராமரிக்கும் பெண் சொன்னாள்

“அந்தம்மா ரொம்ப நேரம் இரட்டை தலை பையனை பாத்துகிட்டே இருந்தாங்க. அந்தப் பையன்கிட்டே ஏதோ சொன்னது மாதிரி கேட்டுச்சி. என்ன சொன்னாங்கன்னு தெரியலை“

அம்மா என்ன சொல்லியிருப்பாள். எதற்காகத் தேடி வந்தாள் என்று புரியவில்லை. உடனே வீடு திரும்பி இதைப்பற்றி விசாரிக்க வேண்டும் போலிருந்த்து. ஆனால் அவனது அலுவலகத்தில் புதிய பணி ஒன்றின் திட்டமிடலுக்கான கூட்டம் முடிய இரவு ஒன்பதாகியது.

பசியோடு வீடு திரும்பிய மனோகர் அம்மாவிடம் கேட்டான்

“நீ எதுக்கு அந்த மியூசியத்துக்குப் போயிருந்தே“

“என்னமோ பாக்கணும்னு தோணுச்சி. அதான் பார்த்துட்டு வந்தேன். அவன்  பிறந்த அன்னைக்கே செத்துட்டான் பேரு கூட வைக்கலை. அதான் இன்னைக்குப் போய்ப் பெயர் வச்சிட்டு வந்தேன். இரண்டு தலை இருக்குல்லே. அப்பே அவன் இரண்டு ஆள் தானே. அதான் ஒருத்தன் பேர் சுந்தர் இன்னொருத்தன் பேர் சந்துருனு வச்சிட்டு வந்தேன். நம்ம புள்ளைக்கு நாம தானே பேர் வைக்கணும்“

“சுந்தர் சந்துரு “என்ற பெயர்கள் வைக்கபட்டவுடன் அந்த இரட்டைதலைப் பையன் தனது அண்ணனாக முழுமை பெற்றுவிட்டதாகத் தோன்றியது.

மனோகர் தானும் ஒருமுறை அந்தப் பெயர்களை மனதிற்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.

“ஒரு போட்டோ எடுத்து நம்ம வீட்ல மாட்டி வைப்போம்மா“ என்று கேட்டான் மனோகர்

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். அதைப் பார்த்தா மனசை உறுத்திக்கிட்டே இருக்கும். நடந்ததை நினைச்சிகிட்டே இருந்தா பிழைப்ப பாக்க முடியாதுறா. நீயும்.. இனிமே அங்கே போகாதே“ என்றாள்

அம்மா சொன்னது சரிதான் எனத் தோன்றியது.

ஆனால் தான் இரட்டைதலை கொண்டவனின் தம்பி என்பதை எப்படி மறப்பது என்று தான் அவனுக்குப் புரியவில்லை

•••

0Shares
0