தலைகீழ் அருவி

புதிய சிறுகதை

“குற்றாலத்துக்குப் போவமா“ என்று சங்கரன் கேட்டபோது அவர்கள் டீக்கடையில் அமர்ந்திருந்தார்கள்.

சங்கரனை மறுப்பது போல மதன் தலையை அசைத்தபடியே சொன்னான்

“அருவியில் இப்போ ஒரு சொட்டுத் தண்ணி கூட இருக்காது. “

“அது தான் நமக்கு வேணும்“

“மொட்டைப்பாறையைப் பாக்க அவ்வளவு தூரம் போகணுமா“

“சீசன்ல குளிக்க நிறையத் தடவை போயிருக்கோம்லே . இப்போ ஒரு தடவை மொட்டைப் பாறையைப் பாத்துட்டு வருவோம்“

“அதுல என்னடா இருக்கு“ என்று கேட்டான் கேசவன்

“உனக்குச் சொன்னா புரியாது. நீ கூடவா காட்டுறேன்“

“சரி சண்டே போகலாம்“

“அதுவரைக்கும் ஏன் வெயிட் பண்ணனும். இன்னைக்கே கிளம்புவோம்“ என்றான் சங்கரன்

“வீட்ல எங்கம்மா ஒரு வேலை சொல்லியிருக்குடா“ என்றான் மதன்

“அதை எல்லாம் வந்து பாத்துகிடலாம்.. எனக்கு இன்னைக்கே அருவியைப் பாக்கணும்“

“ காசு எவ்வளவு வச்சிருக்கே“ என்று கேட்டான் கேசவன்

“என்கிட்ட நூற்றம்பது ரூபா தான் இருக்கு“ என்றான் சங்கரன்

“நீங்க பைபாஸ் பெட்ரோல் பங்க் கிட்ட நில்லுங்க வீட்ல போயி காசு எடுத்துட்டு வர்றேன்“ என்றான் மதன்

சங்கரனின் பைக்கில் கேசவன் ஏறிக் கொண்டான். மதன் தன் பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கிக் கிளம்பினான்.

சங்கரனின் யமஹா பைக் மேற்கு நோக்கி செல்ல ஆரம்பித்தது.

••

மூவருக்கும் இருபத்தைந்து வயது நடந்து கொண்டிருந்தது. மூவரும் வேலையற்றிருந்தார்கள். ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். பின்பு ஒன்றாக ஒரே கல்லூரியில் பிஎஸ்ஸி பிசிக்ஸ் படித்தார்கள். மூவருக்கும் மேலே படிக்கவிருப்பமில்லை. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வேலை தேடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வசித்த சிறுநகரில் மூன்று திரையரங்குகள் இருந்தன. அதில் வாரம் ஒருமுறை மட்டுமே படம் மாற்றுவார்கள். இரண்டு பெரிய விளையாட்டு மைதானங்கள் இருந்தன. இதைத் தவிர அவர்களுக்குப் போக்கிடமில்லை.

சங்கரன் தான் நினைத்த விஷயங்கள் நடக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பான். செகண்ட் ஷோ சினிமா என்ன படம் பார்க்க வேண்டும் என்பதில் துவங்கி எந்தக் கடையில் பரோட்டா சாப்பிடுவது என்பது வரை அவன் தான் முடிவு செய்வான்

கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ஆளுக்கு ஒரு பக்கம் பிரிந்து போய்விடுவோம் என்று நினைத்தார்கள். ஆனால் ஒருவருக்கும் வேலை கிடைக்கவில்லை. கல்லூரி நாட்களைப் போலவே காலையில் டீக்கடை சந்திப்பு. சிகரெட், டீ, வெட்டி அரட்டை. பின்பு வேண்டும் என்றே மதிய சாப்பாட்டினை தவிர்த்துவிடுவது. பிறகு பைக்கில் ரயில்வே காலனியில் இருந்த முருகனைச் சந்திக்கப் போவது. அவன் வீட்டில் கேரமாடுவது. மாலை மறுபடியும் டீக்கடை. கடைமூடும் வரை அரட்டை. பிறகு சாலையோரக் கடையில் சாப்பாடு. நைட் செகண்ட் ஷோ. இப்படியாக அவர்கள் வாழ்க்கை கடந்து கொண்டிருந்தது.

சங்கரன் சில படங்களைப் பாடல்களுக்காக மட்டுமே பார்ப்பான். அந்தப் பாட்டு முடிந்தவுடன் தியேட்டரை விட்டு எழுந்து போய்விடுவான். அவன் மட்டுமின்றி உடன் வந்தவர்களையும் வெளியே இழுத்துக் கொண்டு போய்விடுவான்.

படம் விடும்வரை தியேட்டரின் இருண்ட படிக்கட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். பிறகு பைக்கை எடுத்துக் கொண்டு காரணமேயில்லாமல் ஊரை சுற்றுவார்கள். அடைத்துச் சாத்தப்பட்ட கடைகள் கொண்ட வீதிகளுக்குள் பைக்கில் செல்லும் போது ஆசுவாசமாக இருக்கும். தெரிந்த மனிதர்கள் கண்ணில் படாமல் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது. ரோந்து வரும் போலீஸ்காரர்கள் அனைவருக்கும் அவர்களை நன்றாகத் தெரியும். எதிர்படும் போது சிரித்துக் கொள்வார்கள்.

கல்லூரி முடிக்கும் வரை ஒரு நாள் என்பது மிகச்சிறியதாகக் கைக்குட்டை போல இருந்தது. ஆனால் வேலை தேடத் துவங்கியதும் ஒரு நாள் என்பது தூரத்து அடிவானம் போலாகியிருந்தது. எவ்வளவு நடந்தாலும் அடிவானம் முடியாது தானே.

குற்றால சீசன் சமயத்தில் அவர்கள் மூவரும் பைக்கிலே குற்றாலம் போய்வருவார்கள். அங்கே தங்குவதற்கு அறை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பைக்கை ஏதாவது ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு பார்க்கிலோ ,மூடக்கிடந்த பள்ளிக்கூடத்திலோ படுத்துக் கொள்வார்கள்.

சீசனில் குற்றாலம் திருவிழா போலாகிவிடும். ஈரஉடைகளுடன் நடந்து செல்லும் இளம்பெண்கள். எண்ணெய் தேய்த்த உடலுடன் நடந்து செல்லும் ஆண்கள். பருத்த தொப்பைகள். குழந்தைகள் கையிலிருந்த வடையை, இனிப்பை பறித்துச் செல்லும் குரங்குகள். மின்சாரக் கம்பத்தில் தாவி ஆடும் குரங்குக் குட்டிகள். . வாழை இலையை மென்றபடியே நிற்கும் கோவில்மாடு. மங்குஸ்தான் பழம் விற்கும் கிழவர். அப்பளக்கடைகள். பிளாஸ்டிக் பொருள் விற்கும் கடைகள். சிறிய உணவகங்கள். அதில் தட்டில் அடுக்கி வைக்கபட்டிருக்கும் பூரிகள், சிவப்புப் பச்சை நிற கதர்துண்டுகள். ஆர்ப்பரிக்கும் அருவி. அதை நெருங்க நெருங்க தானாக வெட்கமும் கூச்சமும் கலந்து ஒளிரும் முகங்கள். என அது ஒரு தனியுலகம்.

குளித்துத் திரும்புகிறவர்களிடம் அலாதியான சாந்தம் இருப்பதைச் சங்கரன் பலமுறை கண்டிருக்கிறான்.

ஒருவாரமோ பத்துநாட்களோ அவர்கள் குற்றாலத்தில் தங்கியிருப்பார்கள். ஒரு அருவியிலிருந்து இன்னொரு அருவிக்கு எனப் பைக்கில் சுற்றியலைவார்கள். சில நேரம் பைக்கை மரநிழலில் நிறுத்திவிட்டு தேனருவிக்குச் செல்ல மலையேறுவார்கள். காடு விசித்திரமானது. விநோத ஒசைகளும் மர்மமும் கொண்டது. அந்த மலைவழியாகக் கேரளா போய்விடலாம் என்பார்கள். ஒருமுறை போய்வர வேண்டும் என்று சங்கரன் ஆசை கொண்டிருந்தான். சீசனில் பகலில் மட்டுமின்றிப் பின்னிரவிலும் அருவியில் போய்க் குளித்து வருவார்கள். இரவில் தண்ணீரின் குளிர்ச்சி அதிகமாகிவிடும். ஒவ்வொரு நாளும் செங்கோட்டை பார்டர் கடையில் போய்ப் பிய்த்துப் போட்ட கோழியும் பரோட்டாவும் சாப்பிடுவார்கள்.

வேலையில்லாத போதும் அவர்கள் சீசனுக்குக் குற்றாலம் போய்வருவது நிற்கவில்லை. ஆனால் இவ்வளவு சந்தோஷங்களை அனுபவிக்கும் போது மனதில் குற்றவுணர்ச்சி எழவே செய்கிறது. ஒருவகையில் இந்தக் குற்றவுணர்ச்சியைப் புதைப்பதற்காகவே கூட அவர்கள் அருவிக்கு வருகிறார்கள் எனலாம்

மூவரின் வீட்டிலும் வேலை தேடியது போதும் கிடைக்கிற வேலையைப் பாத்துக் கொள் என்று கண்டித்துவிட்டார்கள். அதிலும் கேசவனின் அய்யா அவனை மிட்டாய் கடையைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டார் அவனுக்குப் போவதில் விருப்பமில்லை. கடையில் மிக்சர் விற்பதற்கு எதற்காகப் பிஎஸ்ஸி பிசிக்ஸ் படிக்க வேண்டும்.

சங்கரன் வீட்டில் அவனை டெல்லியிலுள்ள அக்கா வீட்டிற்குப் போகும்படி சொல்லிக் கொண்டிருந்தார்கள். மாமா தனது கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லியிருந்தார்.

மதன் வீட்டில் மட்டும் தான் இதைப் பற்றி அதிகம் பேசவில்லை. அவனது அப்பா அம்மா இரண்டு பேரும் ஆசிரியர்கள். ஒரே பையன் ஆகவே அவனாக வேலை தேடிக் கொள்ளும் வரை அன்றாடச் செலவிற்குப் பணம் கொடுத்தார்கள். அவன் தான் குற்றால சீசனின் போது மொத்த செலவையும் ஏற்றுக் கொள்வான்

சீசன் துவங்கிய சில வாரங்களில் அவர்கள் ஊரிலிருந்து கிளம்பி கிராமசாலைகள் வழியாகப் பயணிப்பார்கள்.

ராஜபாளையத்தைத் தாண்டியதுமே காற்றில் ஈரம் படர்ந்திருப்பதை நன்றாக உணர முடியும். தென்காசியைத் தொட்டவுடனே சாரல் அடித்துக் கொண்டிருக்கும். சாரலுக்குள் பைக்கை ஒட்டுவது அலாதியான சுகம். நனைந்தபடியே அவர்கள் பைக்கில் குற்றாலத்தை நோக்கிப் போவார்கள். ஈரமான சாலைகள். ஈரமான கட்டிடங்கள். ஈரமான பேருந்துகள். ஈரமான மனிதர்கள். குளிப்பது இவ்வளவு பெரிய கொண்டாட்டம் என்பதைக் குற்றாலம் வந்த போது தான் உணருவார்கள்.

குளிக்கக் குளிக்கப் பசி அதிகமாகும். தேடித்தேடி விதவிதமாகச் சாப்பிடுவார்கள். சீசன் காலத்தில் குற்றாலத்தில் இட்லிகளுக்குக் கூடத் தனிருசி வந்துவிடுகிறது. அதுவும் தண்ணீராக ஒடும் சாம்பாரை, சட்னியைத் தொட்டு சாப்பிடுவது அவ்வளவு ருசியாக இருக்கும். ஒரு முறை இட்லிக் கடை ஐயர் சொன்னார்

“அது தண்ணி ருசி. அப்புறம் குளிர்ந்த உடம்புக்கு சூடான இட்லி ருசி குடுக்கத்தான் செய்யும்“

ஆளுக்குப் பனிரெண்டு இட்லி மூன்று வடை வரை சாப்பிடுவார்கள். எத்தனை முறை வந்தாலும் அருவியின் வசீகரம் குறைவதேயில்லை. அருவிக்கரையில் காணும் மனிதர்களின் வசீகரமும் அப்படித்தான். அருவியிலிருந்து ஈரம் சொட்ட வெளியே வரும் பெண்களில் அழகில்லாதவர்கள் யார். அருவி மனிதர்களை வயதைக் கரைத்துவிடுகிறது.

••

மதன் வருவதற்காக அவர்கள் பெட்ரோல்பங்க் முன்னாடி காத்துகிடந்தார்கள். போனவுடனே திரும்பிவருவதாகச் சொன்னவனைக் காணவில்லை. சங்கரன் ஒரு சிகரெட்டினை பற்ற வைத்துக் கொண்டான். கேசவன் சாலையோரம் பதநீர் விற்கிறவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

மதன் வந்தபோது மதியம் இரண்டு மணியாகியிருந்தது. மதன் குளித்துவிட்டுச் சிவப்பு வண்ண டீசர்ட் அணிந்திருந்தான்

“வீட்ல போயி குளிச்சிட்டா வர்றே“ என்று கோபமாகக் கேட்டான் சங்கரன்

“ஆமா. அருவியில் தண்ணி வராதே“ என்று சிரித்தான் மதன். அவன் போட்டிருந்த சார்லி செண்ட் வாசனையை நுகர்ந்தபடியே கேசவ் சொன்னான்.

“போறவழியில் சாப்பிட்டு கிடலாம்“

கானலோடிய நெடுஞ்சாலை முடிவற்று நீண்டு சென்றது. ஒரு லாரியைப் பின்தொடர்ந்தபடியே சங்கரன் பைக்கில் செல்ல ஆரம்பித்தான். மதன் அவர்களை முந்திச் சென்றான். மரங்களே இல்லாத நெடுஞ்சாலை. தார் உருகும் வெயில்.

வானிலிருந்து பேரருவியென வெயில் வழிந்து கொண்டிருந்தது. அவர்களின் பைக் வேகமெடுத்தது. தண்ணீருக்குள் நீந்தும் மீனைப் போல வெயிலைப் பொருட்படுத்தாமல் அவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்தார்கள்.

சின்னஞ்சிறிய கிராமங்கள் வெயிலில் உலர்ந்து கொண்டிருந்தன. கடந்து செல்லும் பேருந்துகளில் வாடிய முகங்கள். சுண்ணாம்பு உதிர்ந்து போன தூரத்துக் கட்டிடங்கள். சாலையோர மின்கம்பிகளின் விநோத ஊசலாட்டம். ஆள் இல்லாத பேருந்து நிறுத்தங்கள். தலையில் முக்காடு போட்டபடி டிராக்டரில் செல்லும் ஆட்கள். சாலையைக் கடக்க முயன்று நடுவழியில் ஒரு நாய் அடிபட்டு செத்துப் போயிருந்தது. அந்த ரத்தம் உறைந்த தார்சாலையினைக் கடந்தார்கள்.

இரண்டு மணி நேரப் பயணத்தின் பின்பு செக் போஸ்டினை அடுத்த ஹனீபா பரோட்டா கடையில் நிறுத்திச் சாப்பிட்டார்கள். பரோட்டாவிலும் வெயில் கலந்திருந்தது. ஹோட்டல் ரேடியோவில் மலேசியா வாசுதேவன் ஆகாயக் கங்கைபூந்தேன் மலர் சூடி எனப் பாடிக் கொண்டிருந்தார். அந்தப் பாடலை அங்கே கேட்கப் பிடித்திருந்தது.

பரோட்டா சாப்பிட்டபடியே கேசவன் கேட்டான்

“தர்மயுத்தம் தானே“

“ஆமா சென்ட்ரல் தியேட்டர்ல பாத்தோம்“ என்றான் மதன்

“ எம்.ஜி.வல்லபன் எழுதின பாட்டு “ என்றான் சங்கரன்.

அந்தப் பாடல் வெயிலைத் தாண்டிய குளிர்ச்சியை அவர்களிடம் கொண்டு வந்திருந்தது. பாடலை முணுமுணுத்தபடியே மதன் தன் பைக்கை எடுத்துக் கொண்டான்..

அவர்கள் தென்காசிக்கு வந்து சேர்ந்த போது மணி நான்கரையாகியிருந்தது வேகமாக வந்துவிட்டோம் என்றபடியே ஒரு இளநீர் கடையின் முன்பு நிறுத்தி ஆளுக்கு ஒரு இளநீர் குடித்தார்கள். உப்பேறிய இளநீர். சீசனில் குடித்த இளநீர் நினைவில் வந்து போனது. தென்காசி உலர்ந்து வெயிலேறி இருந்தது. சீரற்ற சாலைகள். நகரப் பேருந்து கடந்து செல்லும் போது ஆள் உயரத்திற்குப் புழுதி பறந்தது

“இந்த பக்கம் எல்லாம் சம்மர்ல குடி தண்ணீர் கிடைக்காது. பயங்கரத் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். குற்றாலத்தில் குடியிருக்கிறவங்க பாடு திண்டாட்டம் தான்“.

“எல்லா வீட்லயும் போர் போட்ருப்பாங்க. ஆனாலும் அருவி தண்ணி மாதிரி வருமா“ எனக்கேட்டான் கேசவ்

அவர்கள் குற்றாலத்தை நோக்கிச் செல்லும் போது தூரத்துப் பொதிகை மலை தெரிய ஆரம்பித்தது. சீசனில் தென்படும் நீலமேகங்களில்லை. குளிர்ச்சியில்லை. அறுவடைக்குப் பிந்திய வயலைப் போன்ற வெறுமை. பசுமையின் தடயமேயில்லை. காய்ந்து போன நத்தைக் கூடு போலிருந்துது குற்றாலம்

குற்றாலத்தின் நுழைவாயிலில் பேருந்து நிலையம். அதன் முன்னே சீசனில் எவ்வளவு டீக்கடைகள். ஜனக்கூட்டம். இன்றைக்கு ஒரு ஆள் தென்படவில்லை. பேருந்து நிலையமே காலியாக இருந்தது. அருவியை நோக்கிச் செல்லும் பாதையில் அவர்கள் பைக் போன போது ஒரு கிழவர் குப்பைக் கூடையோடு நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒன்றிரண்டு டீக்கடைகளைத் தவிர அந்தப் பகுதி வெறிச்சோடியிருந்தது

குற்றாலநாதர் கோவிலின் முன்னே இரண்டு இளம்பெண்களைக் காணமுடிந்தது. சங்கரன் நினைவில் செண்பக மலர்கள் வந்து போயின நான்கு குரங்குகள் பாலத்தை ஒட்டிய மரத்தில் அமர்ந்திருந்தன.

கேசவன் சொன்னது போல மொட்டைப் பாறை தானிருந்தது. அது தான் பேரருவி என்றால் நம்ப முடியாது. தண்ணீர் வடிந்துவடிந்து பாறையின் வடிவம் நீர்கோடுகளாக மாறியிருந்தது. அவர்கள் பைக்கை அருவியின் ஆர்ச் வழியாக உள்ளே போய் நிறுத்தினார்கள். முன்பு ஒரு காவலாளி இருப்பார். அன்றைக்கு அவரையும் காணவில்லை. பைக்கை நிறுத்திவிட்டு சங்கரன் கிழே இறங்கி நடந்தான்.

ஆள் இல்லாத அருவியைக் காணுவது சங்கரனுக்குப் பிடித்திருந்தது.

யானையை வேடிக்கை பார்ப்பது போல அந்தப் பாறையைச் சங்கரன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“இதுல பாக்குறதுக்கு என்னடா இருக்கு“ என்று கேட்டான் மதன்

“ஒரு துளி ஈரமில்லை பாரேன். “

பாறை இடுக்கில் முளைத்திருந்த சிறுசெடி ஒன்றை காட்டியபடியே கேசவன் சொன்னான்

“கண்ணுக்குத் தெரியாமல் ஈரமிருக்கு“

“கண்ணுக்குத் தெரியாமல் அருவியே இருக்கு“ என்று கைகளை உயர்த்திக் காட்டினான் சங்கரன்/ அவன் என்ன சொல்கிறான் எனப்புரியாமல் கேசவ் சிரித்தான்.

அருவியின் முன்னால் நிற்கிறோம் என்ற உணர்வே எழவில்லை. இடிந்து கிடந்த அரண்மனை ஒன்றின் முன் நிற்கும் போது ஏற்படும் உணர்வு போலவே இருந்தது.

மதன் ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டான்.

“அடுத்த வருஷ சீசனுக்கு நான் வரமாட்டேன். டெல்லி போயிருவேன்“ என்றான் சங்கரன்

“நீயில்லாட்டி நாங்களும் வரமாட்டோம்“ என்றான் மதன்

“ டெல்லிக்கு போயிட்டா நான் திரும்பி ஊருக்கே வரமாட்டேன். எனக்கு இங்கே இருக்கப் பிடிக்கவேயில்லை. அப்படியே நார்த் இந்தியாவில செட்டில் ஆகிடுவேன். “

“உனக்கு என்னப்பா உங்க அக்கா ஹெல்ப் பண்ணுவாங்க. நான் எங்க போறது “என்று கேட்டான் கேசவன்

“வேலை .சம்பாத்தியம், கல்யாணம், குடும்பம் இவ்வளவு தானா வாழ்க்கை. எரிச்சலா இருக்குடா. இதைத் தான் எங்கப்பா செய்தார். எங்க தாத்தா செய்தார். நானும் இதே செக்கைத் தான் சுத்திக்கிட்டு இருக்கணுமா“

“வேற என்ன செய்ய முடியும் சொல்லு“

“தெரியலை. ஆனா கடுப்பா இருக்கு“

“இதை பேசுறதுக்குத் தானா குற்றாலம் வந்தோம். வேற ஏதாவது பேசுவோம்டா. வேலை வேலைனு கேட்டுச் சலிச்சி போச்சு“ என்றான் மதன்

சங்கரன் எதையும் பேசவில்லை. அவன் பாறையைக் கைகளால் தொட்டுத் தடவி கொண்டிருந்தான். என்ன தேடுகிறான். எதை அடைகிறான் என்று தெரியவில்லை. கல்லில் செதுக்கபட்டிருந்த சிவலிங்கத்தைத் தொட்டுப் பார்த்தான். அருவியின் வேகத்தில் தரையில் ஏற்பட்டிருந்த குழிகளைத் தன் கால்விரல்களால் நோண்டினான் . குரங்குகள் தாவிப் போவது போலத் தாவித்தாவி அருவியின் உச்சியை அடைய வேண்டும் போலிருந்தது.

கிழே கிடந்த சிகரெட் பாக்கெட் ஒன்றினை எடுத்துக் கேமிரா போலச் செய்து அதைக் கொண்டு சங்கரனை கிளிக் கிளிக் எனப் போட்டோ எடுத்தான் கேசவன். அந்த விளையாட்டினை ரசிப்பவனைப் போலச் சங்கரன் போஸ் கொடுத்தான்

“நீங்க விளையாண்டுகிட்டு இருங்க. நான் ஐந்தருவி வரைக்கும் போயிட்டு வர்றேன்“ என்றான் மதன்

அவன் பைக் கிளம்பியதும் சங்கரனும் தன் பைக்கை எடுத்துக் கொண்டான்.

அவர்கள் பைக்கில் ஐந்தருவிக்கு போய் வந்தார்கள். அங்கும் தண்ணீர் இல்லை. சீசனுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருந்தன. ஐந்தருவி சாலையில் இருந்த காலியான விடுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடப்பதை காண முடிந்தது. ஊரைச்சுற்றியிருந்த மாந்தோப்புகளில் ஆட்கள் தென்பட்டார்கள்.

தண்ணீர் இல்லாத போது அருவிகள் யாவும் ஒன்றுபோலவே தோற்றம் அளிக்கின்றன. இந்தப் பெயர்கள் எல்லாம் வெறும் அடையாளங்கள். திருவிழாக்கூட்டத்தில் நம் அடையாளம் அழிந்துவிடுவது போன்றது தான் இதுவும்.

பழைய குற்றால அருவியின் முன்பு அவர்களைத் தவிர யாருமேயில்லை. கூந்தலை மழித்துக் கொண்ட இளம்பெண்ணைப் போலிருந்தது அந்த அருவி. ஒருமுறை அங்கே தன்னுடைய வாட்சைத் தொலைத்திருக்கிறான் மதன். அதை நினைவு கொண்டபடியே சொன்னான்

“இந்த இடத்துல தான் சட்டையும் வாட்சையும் கழட்டி வைத்தேன்“

“குரங்கு தூக்கிட்டு போயிருக்கும்“ என்று கேலியாகச் சொன்னான் கேசவ்

“இத்தனை வருஷம் கழிச்சும் அதை நீ மறக்கலையா“ எனக்கேட்டான் சங்கரன்

“நீ கூட ஒரு தடவை போலீஸகார்ன்கிட்டே அடி வாங்கினயே, அதை மற்ந்துட்டயா “என்று கேசவனை நோக்கி கேட்டான் மதன்.

“ஆள் தெரியாமல் அடிச்சிட்டான்“

“பொம்பளை பிள்ளை குளிக்கிற இடத்துக்குப் போனதுக்குத் தானே அடி வாங்குனே. அதை ஏன்டா மறைக்குறே“ என்றான் சங்கரன்

கேசவன் சிரித்தபடியே சொன்னான்

“அது ஒரு பொண்ணு கூப்பிட்ட மாதிரி இருந்துச்சி“

மூவரும் சிரித்தார்கள். இருட்டும் வரை அவர்கள் பழைய குற்றாலத்தின் படியில் அமர்ந்தபடியே பேசிக் கொண்டிருந்தார்கள்

இரவு ஒன்பது மணி அளவில் செங்கோட்டைக்குப் போய்ச் சாப்பிட்டார்கள்.

“ஊருக்கு கிளம்புவமா “எனக்கேட்டான் மதன்

“நாம திரும்ப மெயின் பால்ஸ்க்கு போவோம்“ என்றான் சங்கரன்

“அங்கே போய் என்னடா செய்றது“ எனக்கேட்டான் கேசவ்

“அருவி விழுகிற இடத்துல நைட் புல்லா படுத்துகிடப்போம். “

“அதுல என்னடா சந்தோஷம் இருக்கு“

“அருவி விழும் போது அப்படி நம்மாலே படுக்க முடியுமா. இப்போ படுத்தால் தான் உண்டு. நம்மளை தவிர யாரும் அப்படிப் படுத்து தூங்கி இருக்க மாட்டாங்க“

சரி போவோம் என அவர்கள் மீண்டும் குற்றாலத்திற்குத் திரும்பினார்கள். இரவில் குற்றாலம் ஒடுங்கி உருமாறியிருந்தது. மலைகள் இருளினுள் புதைந்திருந்தன. மரங்களில் அசைவேயில்லை. பேருந்து நிலையத்தை ஒட்டி இரண்டு காவலர்கள் நிற்பதைக் கண்டான் மதன். அவர்கள் ஒரு வேன் டிரைவரோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.

கோவில் நடை சாத்தப்பட்டிருந்தது. பாலத்தை ஒட்டிய இரவு விளக்கு விட்டுவிட்டு மினுக்கியபடியே எரிந்து கொண்டிருந்தது. அவர்கள் அருவியின் அடியில் போய் உட்கார்ந்து கொண்டார்கள். சிறுவயதில் தாத்தாவிடம் கதை கேட்கும் போது அரக்கனின் பெரிய வாயை பற்றித் தாத்தா விரிவாகச் சொல்லுவார் .நீரற்ற அந்தப் பாறையைக் காணும் போது அந்த நினைவு வந்து போனது.

சங்கரன் அருவி விழும் இடத்தில் படுத்துக் கொண்டான். அவன் அருகில் மதனும் கேசவனும் உட்கார்ந்து கொண்டார்கள்.

“தரையில்படுத்துக் கொண்டு அருவியைப் பார்ப்பது ரொம்ப விசித்திரமாக இருக்கு“ என்றான் சங்கரன்

“பாலச்சந்தர் படத்துல அருவி பின்னாடி போற ஒரு ஷாட் இருக்கு“ என்றான் கேசவ்

“அருவி ஒரு போதும் பின்னாடி போகாது. “ என்றான் மதன்

“திடீர்னு அருவி பொங்கி வந்துட்டா எப்படியிருக்கும்“ என்று கேட்டான் கேசச்

“நாம காலி“ என்றான் மதன்

சங்கரன் அதைப் பொருட்படுத்தியது போலத் தெரியவில்லை. அருவி வழியத் துவங்கியது போல வானை பார்த்தபடியே இருந்தான். பூமியில் ஒரு சிறுசெடி போலாகிவிட்டது போல உணர்ந்தான். வேண்டுமென்றே முகம் தரையில் படப் புரண்டு படுத்துக் கொண்டான். அவனைத் தொந்தரவு செய்யாமல் மதனும் கேசவனும் அருகில் படுத்துக் கொண்டார்கள். பின்பு அவர்களும் உறங்கத் துவங்கினார்கள்.

பின்னிரவு மணி மூன்றைத் தொடும் போது அவர்கள் எழுந்து கொண்டு பைக்கை எடுத்துக் கிளம்பினார்கள். வழியில் எங்காவது டீக்கடை தென்படுமா எனப் பார்த்தபடியே வந்தான் மதன்

தென்காசியைக் கடக்கும் போது ரோந்து நிற்கும் போலீஸ் ஜீப் தெரிந்தது. இந்த நேரம் எதற்காக நிற்கிறார்கள் என்பது போலப் பைக்கை மெதுவாக ஒட்டினான். லாரிகளை நிறுத்திச் சோதனை செய்து கொண்டிருந்தார்கள்

அவர்களின் பைக்கை கண்டதும் ஒரு கான்ஸ்டபிள் கையைக் காட்டி நிறுத்தினார்

குடித்திருக்கிறார்களா என்று ஊதிப் பார்த்தார்.

“ குடிக்கவில்லை“ என்று மதன் சொன்னான்

“எங்கே போயிட்டு வர்றீங்க“என்று கேட்டார் அந்தக் கான்ஸ்டபிள்

“குற்றாலத்துக்கு“ என்றான் கேசவ்

“தண்ணீயே வரலையே.. குற்றாலத்துல் உங்களுக்கு என்ன ஜோலி. பிகர் எதையாவது கூட்டிகிட்டு வந்தீங்களா“ எனக்கேட்டார் கான்ஸ்டபிள்

“சும்மா வந்தோம்“ என்றான் சங்கரன்

“எந்த ஊரு.. லைசன்ஸ் எடுங்க“ என்று கான்ஸ்டபிள் கடுமையான குரலில் சொன்னார்

சங்கரனும் மதனும் தன் பர்ஸில் இருந்து லைசன்ஸை எடுத்துக் காட்டினார்கள்

“இன்ஸ்பெக்டர் கிட்ட வந்து சொல்லுங்க“ என்றபடியே அந்தக் கான்ஸ்டபிள் இன்ஸ்பெக்டரை நோக்கி நடந்தார்

சங்கரன் பைக்கை நிறுத்திவிட்டு இன்ஸ்பெக்டரை நோக்கி நடந்தான். மதன் அவன் பின்னாடியே சென்றான்

இன்ஸ்பெக்டர் சங்கரனின் லைசன்ஸை பார்த்தபடியே கேட்டார்

“தண்ணியே வரலையே.. குற்றாலத்துல என்ன மசிரை பாக்க வந்தீங்க. உள்ளதை சொல்லுங்கடா“.

“சும்மா தான் சார் வந்தோம்“ என்றான் மதன்

“இவ்வளவு நேரம் எங்கே இருந்தீங்க“

“அருவிகிட்ட“

“அங்கே என்ன பண்ணிட்டு இருந்தீங்க“

“படுத்துக்கிடந்தோம்“

“கஞ்சா போடுவீங்களா“ என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்

“பழக்கமில்லை சார். “

“பிறகு எதுக்கு அங்கே படுத்துகிடந்தீங்க. “

சங்கரன் பதில் சொல்லவில்லை

“நீ எங்க வேலை பாக்குறே“ என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்

“வேலை தேடிகிட்டு இருக்கேன்“ என்றான் சங்கரன்

“வேலை வெட்டி இல்லாத மசிரு.. வீட்ல பொத்திக்கிட்டு இருக்க வேண்டியது தானே. திங்குறது தண்டச் சோறு. இதுல ஊர் சுத்துறதுக்கு வெட்கமாயில்லை“

சங்கரனுக்கு அது அவனது அப்பாவின் குரல் போலவே கேட்டது.

“இவங்க மூணுபேரையும் ஸ்டேஷனுக்குக் கூட்டிகிட்டு போங்க. காலையில விசாரிப்போம்“ என்றபடியே இன்ஸ்பெக்டர் தன்னுடைய ஜீப்பில் கிளம்பிப் போனார்

“என் பின்னாடியே வாங்க“ என்றபடியே கான்ஸ்டபிள் தன் பைக்கை எடுக்க முனைந்தார். மதன் அந்தக் கான்ஸ்டபிளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். அவர் மறுத்துக் கோவித்துக் கொண்டார். பிறகு அவன் தன் பர்ஸில் வைத்திருந்த இரண்டாயிரம் ரூபாயினையும் எடுத்துக் கான்ஸ்டபிளிடம் கொடுத்தான்.

அவர் இனிமேல் அவர்கள் குற்றாலம் பக்கவே வரக்கூடாது என்று எச்சரிக்கை பண்ணி விரட்டிவிட்டார்.

“பைக்கை எடுறா “என்று கோபமாகச் சொன்னான் மதன்

சங்கரன் பைக்கை எடுத்தான். பாலத்தை ஒட்டி வந்த போது மதனின் பைக் நின்றது. அவன் கோபத்துடன் சொன்னான்

“உன்னாலே தான்டா தேவையில்லாமல் பிரசச்னை“

“நான் என்னடா செய்தேன். “ என்றான் சங்கரன்

“ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு போயிருந்தா.. ரிமாண்ட் பண்ணியிருப்பாங்க“

“நாம என்னடா தப்பு பண்ணிணோம். “

“உனக்கு சொன்னா புரியாது. பட்டு அவமானப்பட்டா தான் தெரியும். நாங்க கிளம்புறோம். நீ வந்து சேரு “என்றபடியே மதன் தன்னுடைய பைக்கில் கேசவனை ஏறிக் கொள்ளச் சொன்னான்.

அந்த பைக் கண்ணை விட்டு மறையும் வரை சங்கரன் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு ஒரு சிகரெட்டை பற்றவைத்து இழுத்தான். ஒரு லாரி அவனைக் கடந்து போனது. ஏதோ நினைத்துக் கொண்டவன் போலக் குற்றாலத்தை நோக்கி மறுபடியும் தன் பைக்கில் கிளம்பத் துவங்கினான்.

••

0Shares
0