தஸ்தாயெவ்ஸ்கியின் ஐரோப்பியப் பயணம்.

WINTER NOTES ON SUMMER IMPRESSIONS  தஸ்தாயெவ்ஸ்கியின் ஐரோப்பியப் பயண அனுபவம் குறித்த நூலாகும்.

1862 ஆம் ஆண்டு, தஸ்தாயெவ்ஸ்கி மேற்கு ஐரோப்பாவுக்குப் பயணம் சென்றார். அப்போது அவருக்கு வயது 41. சைபீரியாவில் சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டு பீட்டர்ஸ்பெர்க் திரும்பியிருந்தார். மிகுந்த மனச்சோர்வும் உடல் வேதனையும் கொண்டிருந்த அவர் அதிலிருந்து விடுபட வேண்டி நீண்ட பயணத்தை மேற்கொள்ள விரும்பினார். இதுவே அவரது முதல் வெளிநாட்டுப்பயணமாகும்.

7 ஜூன் 1862 இல் பயணத்தினை மேற்கொண்டார். இதில் , கொலோன், பெர்லின், டிரெஸ்டன், வைஸ்பேடன், பெல்ஜியம் மற்றும் பாரிஸ் ஆகிய இடங்களுக்குச் சென்றார். லண்டனில், அவர் ஹெர்சன் என்ற பத்திரிக்கையாளரைச் சந்தித்து அவருடன் ஒரு வாரக் காலம் தங்கினார். பின்பு நிக்கோலே ஸ்ட்ராக்கோவுடன் இணைந்து சுவிட்சர்லாந்து வழியாகவும், டுரின், லிவோர்னோ மற்றும் புளோரன்ஸ் உள்ளிட்ட வட இத்தாலிய நகரங்கள் வழியாகவும் பயணம் செய்தார்.

இந்தப் பயணத்தில் அவர் ஒரு மாதகாலத்திற்கும் மேலாகப் பாரீஸ் நகரில் தங்கியிருந்தார். லண்டன் நகரம் அளவிற்கு அவருக்குப் பாரீஸ் பிடிக்கவில்லை. லண்டனின் அழகை வியந்து எழுதியிருக்கிறார்.

ஐரோப்பிய வாழ்க்கை மற்றும் பண்பாடு ரஷ்ய மேல்தட்டு வர்க்கத்தில் ஏற்படுத்திய பாதிப்பு மிக அதிகம். தான் படித்த புத்தகங்கள் வழியாகவே அவர் ஐரோப்பியா குறித்த எண்ணங்களை உருவாக்கியிருந்தார். இந்த எண்ணங்கள் சரியானதே என்பதை அவரது பயணம் உறுதிப்படுத்தியது .

எதற்காக ரஷ்யர்கள் தங்களது சொந்தப் பண்பாட்டினை விட்டு இப்படி ஐரோப்பிய மோகம் கொண்டு அலைகிறார்கள் என்ற கேள்வியைத் தஸ்தாயெவ்ஸ்கி தொடர்ந்து எழுப்புகிறார்

பயண அனுபவத்தை விவரிக்கும் ஒன்பது கட்டுரைகள் கொண்ட நூல் என்றபோதும் இதில் பயணியின் கண்ணோட்டத்தில் புகழ்பெற்ற இடங்கள். கலைக்கூடங்கள். வரலாற்றுச் சின்னங்கள் பற்றி எதுவும் எழுதப்படவில்லை. உண்மையில் தனது புனைகதை போலவே இதிலும் தஸ்தாயெவ்ஸ்கி தானே கேள்விகளை எழுப்பித் தானே பதிலைக் கண்டுபிடிக்கிறார். அல்லது குறிப்பிட்ட சமூக வெளிப்பாட்டினை ஆராய்ந்து விவாதிக்கிறார். ரஷ்ய இலக்கியம் மற்றும் ஆளுமைகளின் நினைவுகளுடன் அவரது பயணத்தில் கண்ட அனுபவங்களும் ஒன்று சேர்ந்திருக்கின்றன.

பொதுவாக உல்லாசப் பயணிகள் தான் செல்லும் நகரிலுள்ள புகழ்மிக்க இடங்களைக் காணுவது வழக்கம். லண்டனுக்குச் செல்பவர்கள் அவசியம் St Paul தேவாலயத்திற்குச் செல்வார்கள். ஆனால் தான் லண்டனில் ஒரு வாரம் இருந்த போது அந்தத் தேவாலயத்திற்குப் போக விரும்பவில்லை என்கிறார். காரணம் அவர் ஒரு உல்லாசப்பயணியில்லை. உண்மையில் அவர் என்ன தேடுகிறார். பயணத்தின் வழியே எதைக் கண்டறிந்தார் என்ற விசாரணையைத் தனக்குத் தானே தஸ்தாயெவ்ஸ்கி நிகழ்த்திக் கொள்கிறார்.

கட்ரையின் ஊடாக நிஜமான உரையாடல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அப்படி எழுதுவது அந்த நாளில் புதுமையானது.

அவரது புனைகதைகளில் காணப்படும் மொழியின் அடர்த்தியும் கவித்துவ வெளிப்பாடும் இதில் கிடையாது. பத்திரிக்கை மொழியில் தான் எழுதியிருக்கிறார். ஆனால் பின்னாளில் தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளில் மையம் கொண்ட சமூகப்பார்வைகள். அரசியல், சமயப் பிரச்சனைகள் இங்கே முளைவிடுவதைக் காணமுடிகிறது.

ரஷ்யப் பண்பாட்டின் மீது ஐரோப்பா செலுத்திய ஆதிக்கம் மிகப்பெரியது. ரஷ்யப் பிரபுக்கள் வீட்டிலும் விருந்திலும் பிரெஞ்சு மற்றும் ஜெர்மனியே பேசினார்கள். ஐரோப்பிய இலக்கியங்கள். இசை, நாடகம், உடை இவையே ரஷ்யாவில் புகழ்பெற்று விளங்கின. ஜெர்மன் இசை ஆசிரியர்களிடம் இசை கற்றுக் கொண்டார்கள். மேல்மட்டத்தில்ரஷ்யத்தன்னமையைப் புறக்கணிப்பது மேலோங்கியிருந்தது. இதனாலே அவர்கள் புஷ்கினை புறந்தள்ளினார்கள்.

இந்த விஷயத்தைத் தனது பயண அனுபவத்தின் ஊடாகத் தஸ்தாயெவ்ஸ்கி கேள்வி கேட்கிறார்.

தஸ்தாயெவ்ஸ்கி ஒரு வாரம் லண்டனிலும், மூன்று பாரீஸிலும் கழித்தார்; இந்த நகரங்களில் அவருக்குக் கிடைத்த அனுபவங்களை அவரே ஒப்பீடு செய்கிறார். பாரீஸ் நகரில் வசித்த போது நடந்த ஒரு நிகழ்வை குறிப்பிடும் தஸ்தாயெவ்ஸ்கி ரயிலில் வெளிநாட்டுப் பயணிகளைப் போலீஸ் ரகசியமாகக் கண்காணிப்புச் செய்தார்கள்.என்று எழுதுகிறார். இது போலவே அவர் தங்கியிருந்த விடுதி உரிமையாளர் அவரது உயரம், தலைமுடியின் நிறம். கண்களின் நிறம் மற்றும் அவரது வருகையின் நோக்கம் உள்ளிட்ட அத்தனையும் விசாரணை செய்து பதிவேட்டில் பதிந்து கொண்டார் என்பதையும் அரசாங்கத்தின் கண்காணிப்பு அதிகமிருந்தது சங்கடத்தை உருவாக்கியதாகச் சொல்கிறார்.

ஆனால் லண்டனில் இது போன்ற அனுபவம் எதுவும் ஏற்படவில்லை. பாரீஸை விடவும் லண்டன் உயிர்ப்புடன் இயங்குகிறது. இரண்டு நகரங்களிலும் ஏழைகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். பணக்காரர்கள் உல்லாசமாக வாழுகிறார்கள். ரஷ்யாவைப் போலின்றி இளம் பெண்கள் சுதந்திரமாக பாரீஸ் வீதிகளில் நடந்து போகிறார்கள். இரவில் பயமின்றித் தனித்துச் செல்கிறார்கள். இது ரஷ்யாவில் சாத்தியமில்லை என்று குறிப்பிடுகிறார். ஆனால் திருமண விஷயத்தில் பாரீஸில் வசிப்பவர்கள் மணப்பெண்ணின் வங்கிக் கணக்கும் மணமகன் வங்கிக் கணக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஏற்ற தாழ்வு இருந்தால் அந்தத் திருமணம் நடைபெறுவது எளிதில்லை என்கிறார்கள். பிரெஞ்சுக்காரர்களின் சிறப்பான பண்பாக இருப்பது பாசாங்குத்தனம் என்று தஸ்தாயெவ்ஸ்கி குறிப்பிடுகிறார்.

தஸ்தாயெவ்ஸ்கி ஜெர்மனி வழியாகப் பயணம் செய்தார், அவர் ஒரேயொரு நாள் பெர்லினில் தங்கினார். அவரை அந்த நகரம் கவரவில்லை. அது பீட்டர்ஸ்பெர்க் போலவே இருக்கிறது. அதே நீண்ட வீதிகள். அதே வாசனை. எந்த நகரை விட்டு தப்பிவந்தேனோ அதே நகருக்குத் திரும்பி விட்டது போலிருந்தது என்று எழுதுகிறார்

கொலோன் நகரில் உள்ள புதிய பாலத்தைப் பற்றி ஊரே பெருமை பேசுவதைக் கண்டு அவர் எரிச்சலடைந்தார், அதிலும் வெளிநாட்டுக்காரர்களுக்கு மட்டும் பாலத்தைக் கடக்கக் கட்டணம் வசூலிக்கப் படுவதைப் பற்றிக் கண்டித்து எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரைகளை தஸ்தாயெவ்ஸ்கி உரையாடுவது போன்ற ஒரு தொனியிலே எழுதியிருக்கிறார்.

இலக்கிய விஷயங்களை எழுதிவிட்டு இதற்கும் தனது பயணத்திற்கும் ஒரு தொடர்புமில்லை. ஆனால் இந்த நினைவுகளை விட்டு எப்படிப் பயண அனுபவத்தைப் பேச முடியும் என்று வாசகரை நோக்கி நேரடியாகக் கேட்கிறார். அத்துடன் ஒரு உல்லாசப்பயணி போலச் சுவாரஸ்யமாக, மிகத் துல்லியமான தகவல்களைத் தர தன்னால் முடியாது என்று ஒப்புக்கொள்கிறார்.

தனது கல்லூரி படிப்பின் போது கட்டிடக்கலை பயின்றவர் என்பதால் தஸ்தாயெவ்ஸ்கி தேவாலயத்தின் வரைபடங்களைப் பாடமாக வரைந்திருக்கிறார். நேரில் புகழ்பெற்ற தேவாலயத்தைக் காணும் போது அது மிகப்பெரிய பேப்பர் வெயிட் போலத் தோன்றியதாகச் சொல்கிறார். அப்படித் தோன்றியதற்குக் காரணம் சலிப்பான தனது மனநிலை. மற்றும் அலுப்பூட்டும் நீண்ட தூரப்பயணம் எனும் தஸ்தாயெவ்ஸ்கி திரும்பிச் செல்லும் வழியில் எத்தனை அழகாகத் தோற்றம் கொண்டிருக்கிறது என்று தேவாலயத்தை வியந்தும் போற்றுகிறார்

அவரது நாவலில் வரும் நாயகர்கள் போலவே பயணத்திலும் பதற்றமும் குழப்பமும் சுயபரிசோதனை செய்து கொள்ளும் மனிதராகவே தஸ்தாயெவ்ஸ்கி வெளிப்படுகிறார்

வார இறுதி நாட்களில் லண்டனின் வீதிகள் உழைக்கும் மக்களால் நிரம்பி வழிகிறது என்பதைக் கண்டு தஸ்தாயெவ்ஸ்கி வியப்படைகிறார், எல்லாப் பிரெஞ்சுக்காரர்களும் கச்சிதமான உடற்கட்டுக் கொண்டிருக்கிறார்கள் உல்லாசமாக வாழ விரும்புகிறார்கள். இனிப்பாகப் பேசி எந்தப் பொருளையும் உங்கள் தலையில் கட்டிவிடுவார்கள். சுதந்திரமான நகரமாக பாரீஸினை உணரவில்லை என்றும் குறிப்பிடுகிறார். டால்ஸ்டாய் தனது பயணத்திலும் இது போன்ற அபிப்ராயத்தையே பதிவு செய்திருக்கிறார்.

இந்தப் பயணம் தஸ்தாயெவ்ஸ்கிக்கு ஐரோப்பாவின் சிறப்புகளை அறிந்து கொள்ளச் செய்ததை விடவும் ரஷ்யாவினை புரிந்து கொள்ளவும் . ரஷ்யர்கள் ஏன் இப்படி அந்நியமோகம் கொண்டிருக்கிறார்கள். ரஷ்யாவின் ஆன்மாவை ஏன் எவரும் புரிந்து கொள்ளவில்லை.என்பது குறித்து அதிகம் யோசிக்கச் செய்திருக்கிறது.

தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களைப் போல இந்தக் கட்டுரைத் தொகுப்பு புகழ்பெறவில்லை

தஸ்தாயெவ்ஸ்கி காலத்தில் இப்படி வெளிநாட்டுப் பயண அனுபவங்களை எழுதுவது விரும்பி படிக்கப்படும் விஷயம் என்பதாலே இந்தக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

எந்த ஒரு தேசத்தையும் சில நாட்கள் கண்ணில் பார்த்துவிட்டு எழுதிவிட முடியாது. அது ஒரு பருந்து பார்வையில் நாம்பெற்ற அனுபவத்தை மட்டுமே பதிவு செய்வதாக இருக்கும். அப்படியான ஒரு முயற்சியாகவே இதை எழுதுகிறேன் என்று தஸ்தாயெவ்ஸ்கி தனது அறிமுகவுரையிலே குறிப்பிடுகிறார்.

கையில் குறைவான பணத்துடன். இரண்டாம் தரமான விடுதிகளில் தங்கிக் கொண்டு போலீஸ் எங்கே சந்தேகப்பட்டுக் கைது செய்துவிடுவார்களோ என்ற மறைமுக அச்சத்துட்ன், தெரிந்த நண்பர்கள் உதவியோடு ஐரோப்பாவினுள் பயணம் செய்திருக்கிறார். பீட்டர்ஸ்பெர்க்கை விட்டு நீங்கி வெளிநாடு போயிருந்த போதும் அவரது மனதிலிருந்து அந்த நகரம் விலகிப்போகவில்லை. அதன் சாயல்களைப் பல இடங்களில் காணுகிறார். இரண்டு மாதங்களுக்கும் மேலான இந்தப் பயணத்தில் எங்கும் அவர் மகிழ்ச்சி அடையவில்லை. மிகுந்த உற்சாகமாக நடந்து கொள்ளவில்லை. மறக்கமுடியாத அனுபவம் எதையும் பெறவில்லை.

இன்று அதே ஐரோப்பிய நகரங்களில் தஸ்தாயெவ்ஸ்கி மாபெரும் ஆளுமையாக கொண்டாடப்படுகிறார். ஆனால் அன்று அடையாளம் தெரியாத ஒரு நபராக நிழலைப் போல அலைந்து திரிந்திருக்கிறார்.

பணம் உள்ளவர்கள் ஒரு நகரைக் காணுவதும் பணமில்லாதவன் ஒரு நகரைக் காணுவதும் ஒன்றில்லை என்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி அது என்றைக்கும் உண்மையான விஷயம்

••

0Shares
0