தஸ்தாயெவ்ஸ்கியின் மனைவி அன்னா கிரிகோரினாவின் நினைவு குறிப்பை அடிப்படையாக கொண்ட சிறிய நாடகமிது. இரண்டு முதன்மை பாத்திரங்களின் சந்திப்பே இந்நாடகம்.
இரண்டு இடையீட்டு பாத்திரங்கள் ஊடாடுகின்றன. பீட்டர்ஸ்பர்க் நகர தனியறையொன்றில் குழப்பமும், தண்டனை பயமும், கடன் பத்திர நிபந்தனை படி முப்பது நாட்களுக்குள் முடிக்க வேண்டிய நாவலின் கெடுவும், என பிரச்சனைகளுக்கிடையே தஸ்தாயெவ்ஸ்கி, தோல்வியுற்ற சூதாடியைப்போல நடுங்கியபடி புகையும் சிகரெட்டுடன் தனிமையில் தன்னுடனே உரையாடிக் கொண்டிருக்கிறார்.
கதைகள் கற்பனையானவை மட்டும் தானா என்ற கேள்வியுடன் தஸ்தாயெவ்ஸ்கியின் காதலை சொல்கிறது இந்த நாடகம்,
கதாபாத்திரங்கள்
தஸ்தாயெவ்ஸ்கி. 45 வயது. நடுத்தர உயரமிக்கவர்
அன்னா. 20 வயது .சுருக்கெழுத்தாளர்.
பதிப்பாசிரியர் 50 வயது. குள்ளமான உருவம்.
பாதிரி. 50 வயது. மெலிந்தவர்
காலம். அக்டோபர் 1866
காட்சி 1.
அடுக்கு மாடி வீட்டின் தனியறை . மெழுகுவர்த்தியின் ஒளியில் எதையோ எழுதிக் கொண்டிருக்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி. இறுகிய முகம். கருத்த தாடி. நீண்ட விரல்கள். நாற்பத்தைந்து வயது தோற்றம். நீண்ட கோட் அணிந்திருக்கிறார். அறை மேஜையில் பெண்ணின் புகைப்படம் உள்ளது. எழுதப்படாத காகிதங்கள். தொட்டு எழுதும் பேனா. ஆஸ்ட்ரே. சில கடிதங்கள். சிறிய வெண்கலமணி. மூக்கு கண்ணாடி தனது சகோதரனுக்கு எழுதிய கடிதம் ஒன்றை கையில் வைத்து படித்துக் கொண்டிருக்கிறார் எழுதிக் கொண்டிருக்கிறார்.
பதட்டமும் வேதனையுமாக தனக்கு தானே பேசிக் கொள்கிறார்.
தஸ்தாயெவ்ஸ்கி. :
மிகையில்..
உனக்கு நினைவிருக்கிறதா. நம் பால்ய நாட்களை. நேசிப்பார் எவருமின்றி நோய்மையால் பீடிக்கப்பட்டு தனக்குள்ள ஒரே நண்பனாக நம் தகப்பனை மட்டுமே ப்ரியம் செய்தபடி அவமானத்தையும் கசப்பையும் தாங்கிகொண்டு
வெற்றுக்கோப்பையென உலர்ந்து போயிருந்த அம்மாவின் கடைசி நாட்களை
மறந்துவிட முடியுமா என்ன ?,
ஒவ்வொரு நாளும் அவள் நம் ஐவரையும் அழைத்து படுக்கையின் விளிம்பில் உட்காரச் சொல்லி இமைக்காது பார்த்தபடியிருந்தாளே… அது எதற்காக?
அந்த கண்கள் உலர்ந்த தானியத்தை போலயிருந்தன,
அவளது பெருமூச்சு உஷ்ணமிக்கது
எதையோ பேச விரும்பினாள், ஆளால் வார்த்தைகள் துளிர்க்கவேயில்லை
எத்தனை இரவுகள் தகப்பனின் காலைக்கட்டிக்கொண்டு தன்னை நேசிக்க கூடாதாஎன்று கண்ணீர் விட்டிருக்கிறாள்.
தாயின் பார்வைக்குள் நம்முடைய பால்யகாலம் குவளையில் அடுக்கப்பட்ட மலர் போல ஒன்றாக கூடியிருந்தது நினைவிருக்கிறதா.
யாருமற்றவர்களாக, வளர்கப்பட்டவர்கள் என்ற நினைவே நம்மை கொல்கிறதல்லவா. மிகையில்.
பச்சை சாராயம் ஊற்றி தகப்பன் கொல்லப்பட்டதாக சேதி வந்த உடன் எனது உடல் நடுங்கி வாயில் நுரை தள்ளி வலிப்பு வந்து விழுந்த போது பல்வெட்டி ஏற்பட்ட காயம் இன்னமும் என் உதட்டில் உள்ளது.
தாயும் தகப்பனும் இல்லாதவர்கள் துயரத்தை தவிர வேறு எதையும் கொண்டிராவதர்கள் என்று அன்று இரவில் நீ கூறியது இப்போதும் கேட்டுக் கொண்டேயிருக்கிறது .
மிகையில் .. உயிர்வாழ்வதே நமக்கு பெரிய அதிர்ஷடம் என்பது போலாகிவிட்டதே
இப்போதும் தனிமையில் எரியும் மெழுகு வர்த்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அம்மாவின் நினைவுகள் சுவரில் ஊர்ந்து நகர்கின்றன
சைபீரியாவின் பனியில் சூரியன் ஒளிர்வதை பார்க்கும் போது அம்மா இறந்து போன துக்கம் தான் மேலிடுகிறது
மிகையில். நான் ஏன் எழுத்தாளனாக மாறினேன்.
தனிமை மிக சோகமானது .
மனதில் வார்த்தைகள் மட்டும் இல்லாமல் போய்விட்டால் மனிதர்களால் வாழமுடியாமல் போய்விடும்.. மிகையல்
சிறையில் என்னோடு இருந்த சிலந்தியை போல மிக நட்பாக இதுவரை யாருமேயிருந்ததில்லை
அந்தச் சிலந்தி பகைமையற்றது. எனது வேதனைகளையும் சந்தோஷங்களையும் மறுப்பின்றி கேட்டுக் கொள்ளகூடியது.
அந்த சிலந்திக்கு நான் பேசியது புரிந்திருக்கும் மிகையில்.
மனிதர்கள் தான் எதையும் புரிந்து கொள்ள அதிகம் சிரமபடுபவர்கள்
சகோதரா..பீட்டர்ஸ்பர்க் ஒரு நரகம்.
இங்கு வாழ்வது என்னால் இயலாது போய்விட்டது
துôக்கமில்லாத இரவுகள். சைபீரிய சிறைச்சாலைகளின் மணியோசை இத்தனை தொலைவு தாண்டியும் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. கைதிகளின் உதடுகள் எதையாவது முணுமுணுத்துக் கொண்டேதானிருக்கின்றன.
தண்டனை கூடம் எல்லா இடங்களிலும் திறந்தேயிருக்கிறது.
கடன் பத்திரங்களுக்கு பதிலாக எல்லா காகிதங்களிலும் கையெழுத்து போட்டு விட்டேன். என் நாவல்கள், கதைகள் இனி யாவும் அவர்களுக்கே உரிமை யானது . மூவாயிரம் ரூபிள் பணம் என் எழுத்தை முடக்கி கொண்டது.
கடன் பத்திரத்தின் படி முப்பது நாட்களுக்குள் ஒரு நாவலை முடித்து தரவேண்டிய கட்டாயம் உள்ளது.
நாவலை முடிக்காவிட்டால் திரும்பவும் போலீஸ்விசாரணை, தண்டனை, சிûற்ச்சாலை. தனிமை.
துயரத்தின் சாயைகளே என் வீட்டு கதவை தட்டுகின்றன. நெஞ்சுக்குள் தீப்பிடித்து எரிவது போல இருக்கிறது.
மிகையில்… நீ இறந்துபோபிறகும் உன்னிடம் தவிர மனதில் உள்ளவைகளை சொல்வதற்கு எனக்கு யாருமேயில்லை..
( புகைக்க துவங்குகிறார். எங்கிருந்தோ நடன இசை கேட்கிறது.ஜன்னல் அருகே நடக்கிறார்.)
நடனஅரங்கில் உற்சாகம் ததும்புகிறது. குதிரைகள் பனியில் கனவு கொள்கின்றன. முகம் தெரியாத பெண்களின் சிரிப்பொலி தெருவை கடந்து செல்கின்றன. அங்கே நிழலை போல தெரிகிறதா?
குடிவெறியில் தள்ளாடி அலையும் கிழவனின் காலை பற்றிக் கொண்டு எதையோ கெஞ்சும் சிறுமியின் விரல்கள்… அவை என்னை பதற்றம் கொள்ள செய்கின்றன.. நீருற்று போல அந்த சிறுமி எப்போதும் தனிமையிலே இருக்கிறாள் நகரத்தின் மீது எதையோ உழறியபடி எரிகின்றன நட்சத்திரங்கள்.
(மீண்டுமொருமுறை எழுதிய கடித்தை எடுத்து படித்துவிட்டு அதை சுடரில் காட்டி எரிக்கிறார்.)
மிகையில் என்னை மன்னித்துவிடு.. ஒரு நல்லவனாகவோ, அயோக்கியனாகவோ, மாவீரனாகவோ, ஒரு பூச்சியாகவோ ஆக கூட எனக்கு தெரியவில்லை. எனக்கு கனவுகளே போதும். நான் கனவுலகவாசி.
(எரிந்த காகிதத்தை வீசியெறிந்துவிட்டு இருளில் மறைகிறார்).
காட்சி 2.
கதவை திறந்து கொண்டு ஒரு பெண் உள்ளே வருகிறாள். மெலிந்த உடல் அமைப்பு கொண்டவள் தஸ்தாயெவ்ஸ்கியின் அறையை வியப்புடன் பர்க்கிறாள். கையில் குறிப்பு புத்தகம் உள்ளது. நிசப்தமாக அறை உள்ளது. காகிதங்கள் சிதறிக் கிடக்கின்றன. குனிந்து எடுத்து வைக்கிறாள். எரிந்த காகிததுண்டுகள் கிடக்கின்றன. எடுத்து பார்க்கிறாள். யாரோ வரும் சப்தம் கேட்கிறது.நிமிரும் முன்பாக தஸ்தாயெவ்ஸ்கி வருகிறார் அவள் கைகளில் காகிதங்களை கண்டதும் கோபப்படுகிறார். அவளை பார்க்காமலே சொல்கிறார்.
தஸ்தா. : அவற்றை விட்டு விடுங்கள். உங்களை யார் எடுக்க சொன்னது. (அவள் கைகள் நடுங்குகின்றன).
பெண் : .. நான்.. நான்.. சுருக்கெழுத்து வேலைக்காக வந்தவள்
(அவளை ஏறிட்டு பார்க்க கூட தயங்கியவராக படபடப்புடன்சொல்கிறார்)
தஸ்தா :… முன் பயிற்சி இருக்கிறதல்லவா. நான் சொல்வதை வேகமாக குறிப்பு எடுத்து எழுதவேண்டும். 50 ரூபிள் சம்பளம். சம்மதம் தானே. நிற்க வேண்டாம். டீ குடிக்கிறீர்களா. உங்கள் பெயரை சொல்லவில்லை, புதிய நாவலை எழுத திட்டமிட்டு இருக்கிறேன் வேகமாக எழுத வேண்டும்.
பெண் .: பெயர் அன்னா கிரிகோரினா.
தஸ்தா:. புகை பிடிக்கிறீர்களா. விருப்பமில்லையா, புஷ்கின் கதையில் சில வரிகளை சொல்கிறேன் எழுதிகாட்ட முடியுமா. உங்கள் பெயர் என்ன சொன்னீர்கள்..
(ஏதோ புத்தகத்தை தேட மேஜையிலிருந்த கடிதங்கள் கீழேவிழுகின்றன. அவள் குனியும் முன்பாக கோபபட்டு கத்துகிறார்.)
எதையும் தொட வேண்டாம் .. உங்கள்கவனம் எழுதுவதில் மட்டும் தானிருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் எனக்கு பிடிக்காது..போய்விடுங்கள் நாளைக்கு வாருங்கள். போய்விடுங்கள்
அவரது கோபத்தை கண்டு பயந்து அவசர அவரமாக வெளியேறிப்போகிறாள்
காட்சி 3.
தஸ்தாயெவ்ஸ்கியின் அறை மறுநாள், காலை நேரம்
அன்னாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார் அவள் வரதாமதமாகிறது. குறுக்கும் நெடுக்குமாக நடக்கிறார். பதற்றம்தொற்றிய கண்கள்..மேஜையருகே உள்ள கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொள்கிறார்
தஸ்தா. : அப்படி நேற்று நடந்திருக்க கூடாது. பெண்ணின் முன்பாக கூச்சப்படுகிறவன் நான். அவளை கோபத்தில் திட்டியிருக்ககூடாது. பயந்து போயிருப்பாள்.. திரும்பவும் இங்கே வராமலே போகலாம். சின்னஞ்சிறு பெண்ணோடு கூட பரிச்சயம் கொள்ள தெரியவில்லையே.. என என் இதயம் கூச்சலிடுகிறது. என்னை உதறி தள்ள வேண்டாமென்று அவளிடம் நிச்சயம் இன்று மன்றாடுவேன்.
என் வேண்டு கோளை காது கொடுத்து கேட்பது பெண் என்ற முறையில் அவளது கடமையாகும்.
உண்மையில் அவள் என் அறைக்குள் வந்த போது என் இதயம் பலவீனமாகி நடுங்கியது.
என்ன இது மடத்தனம் இவள் பெயர் கூட ஞாபகமில்லையே ஏன் இப்படி நடக்கிறது என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்.
யாரோ வாசலில் வரும் சப்தம் கேட்கிறது. (கூர்ந்து கேட்கிறார்)
பெண்ணின் பாதஒலியல்லவே.. எதோ காவல்காரனின் நடைச்சப்தம் எதற்காக இங்கே வருகிறான் யார் வீட்டிற்கு.
கதவை தட்டும் சப்தம் கேட்கிறது. வேகமாக போகிறார். பாதிரியொருவர் உள்ளே வருகிறார்.
பாதிரி. காலைவணக்கம் பியோதர்.
(யாரென அடையாளம் தெரியாதவரை போல திகைப்புடன் பார்த்தபடியே)
தஸ்தா. :நீங்கள்.. யாரென நினைவில்லையே
பாதிரி. :முன்னொரு காலத்தில் கைதியாக இருந்தவன்
தஸ்தா :உங்கள் முகத்தில் உள்ள வடு நினைவுபடுத்துவது கைதி சிமியோவை. சரிதானா?
பாதிரி.: சரியாகவே சொன்னாய். சிமியோ தான். சைபீரியாவில் இருந்து விடுவிக்கபட்டுவிட்டேன். எனினும் குற்றத்தின் நிழல் என் கூடவே விலகாது தொடர்ந்து வருகிறது இளைப்பாறுதலுக்காக ஒதுங்கிவிட்டேன். பியோதர்.
தஸ்தா. :சிமியோ.. இப்போது ஏன் வந்தாய் சிமியோ.. இது அவள் வரும் நேரமல்லவா.. ..கைதிகளை பெண்கள் நேசிப்பார்களா .. சிமியோ
சிமியோ: எந்த பெண்ணை பற்றி பேசுகிறாய் பியோதர்
தஸ்தா : ஒரு கதாபாத்திரத்தை பற்றி.. நாவலில் வரும் ஒரு பெண்
(யாரோ நடந்து வரும் சப்தம் கேட்கிறது.)
தஸ்தா. :சிமியோ போய்விடு..தயவு செய்து போய்விடு.
தஸ்தா.: இல்லை. நீ போய்விடு. நான் கைதியல்ல.. நிரபராதி.. கடந்த காலத்தின் நிழல் என் வீட்டில் விழவே கூடாது சிமியோ என் கைகள் நடுங்குகின்றன. ஒரு குற்றம் மனிதனை எவ்வளவு துôரம் நடுங்க செய்யும் என்பதை உணர்ந்து கொண்டேயிருக்கிறேன்.. போய்விடு சிமியோ.. கைதிகள் எதையும் நினைவில் வைத்துக் கொள்ள கூடாது. ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளவே கூடாது.. சிமியோ.. மன்னித்துக் கொள்.. ஒரு கதாபாத்திரத்திடம் கூட கடுமையாக நடந்து கொள்பவனில்லை நான்.. போய்விடு..
(பாதிரி புறப்படுகிறார், வழியில் அன்னா வருகிறாள் . பாதிரி திரும்பி தஸ்தாயெவ்ஸ்கியை பார்க்கிறார்
உள்ளே வரும் அன்னாவை வரவேற்று சொல்கிறார்)
தஸ்தா.: தினப்பிரார்தனைக்காக வந்துள்ள பாதிரி.. அன்னா நீங்கள் உள்ளே வாருங்கள்
அன்னா. : மன்னிக்கவும் … தாமதமாகிவிட்டது.
தஸ்தா.: வேகமாக எழுத வேண்டியுள்ளது. 160 பக்கங்கள் குறைந்தது தேவை. உங்கள் பெயரை மறந்துவிட்டேன்..
அன்னா.: அன்னா கிரிகோரினா.
நாற்காலியில் அமரச் சொல்கிறார். அன்னா உட்காருகிறாள். குறிப்பு பத்தகத்தை பிரித்து கொள்கிறாள்.
எங்கோ பார்ப்பது போல யோசிக்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி.
தஸ்தா. : சொல்ல சொல்ல எழுதிக் கொள்கிறீர்களா.. காகிதங்கள் தயாராகயிருக்கிறதா.
அன்னா தலையாட்டுகிறாள்.
(கடகடவென சொல்கிறார்)
சூதாட பணமில்லை. ஹோட்டலின் மாடியில் அறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஜெனரலுடன் ருலெட்டன்பர்கிற்கு வந்து சில நாட்களே ஆகின்றன. சூதாட்டஅறையில் பலர் வந்து போகின்றனர். பேராசையும் அசம்பாவிதமும்கூடி நடனமிட அந்த ரூலட் கூடம் மாறிக் கொண்டி ருக்கிறது. விருப்பமில்லாமலே நான் சூதாட அமர்கிறேன்.. எண்கள் சுழன்று கொண்டேயிருக்கின்றன. அதிர்ஷடத்தை நோக்கியபடி ஆயிரம் கண்கள் வெறித்துக் கொண்டிருக்கின்றன.
(அன்னா எழுதிக் கொண்டிருக்கிறார். அருகில் நின்று அதை கவனிக்கிறார்
திடீரென அருகில் நின்றபடி அவளிடம் சொல்கிறார்)
தஸ்தா : நேற்று நான் மிக மோசமானவனாக நடந்து கொண்டேன் எனக்கு பெண்ணோடு பேசி பரிச்சயமில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்
(அவள் நிமிர்ந்து பார்க்கிறாள். தன்னை அவள் கவனிப்பது தெரிந்ததும் பேச்சை மாற்றுகிறார்)
தஸ்தா : என்ன சொன்னேன். சூதாட்டம்தானே.. எழுதியதை வாசிக்க முடியுமா. வேகமாக சொல்கிறேனா.
(அன்னா வாசிக்கிறாள். திகைத்துப்போய் விடுகிறாள்).
தஸ்தா.: ரூலட் ஆட உங்களுக்கு தெரியுமா,
அன்னா: கேள்விபட்டிருக்கிறேன்.ஐரோப்பாவில் நடக்கிறதென்பார்கள்.
தஸ்தா.: என்ன சொல்லியிருக்கிறேன் நான் சூதாடுகிறேன் என்றா? வேண்டாம் நானில்லை. அவன் என மாற்றி விடுங்கள். நான் சூதாடியில்லை. ஒரு வேளை நான் சூதாடி என்று எவராது நினைத்துகொண்டு புகார் கொடுப்பார்களேயானால் திரும்பவும் சிறைச்சாலைக்கே போக வேண்டியிருக்கும்
அன்னா. : ஏன் இத்தனை பதட்டமடைகிறீர்களா இது கதை தானே.
தஸ்தா : வாசகர்கள் கதையை நிஜமாக மாற்றிவிடக்கூடியவர்கள்.. பெயரை உடனே மாற்றிவிடு.
அன்னா. : வேண்டுமானால் அவன் என்று போட்டுக் கொள்கிறேன். போதுமா
தஸ்தா : ஏதாவது செய்து என்னை காப்பாற்றிவிடு.. இன்றைக்கு போதும் வேறு ஏதாவது பேசிக் கொண்டிருக்கலாம்
(குறிப்பைமூடி வைத்துவிடுகிறாள் அன்னா.)
தஸ்தா.: அன்னா நீ எங்கேயிருந்து வருகிறாய்.
அன்னா:. புறநகர் பகுதியில் இருந்து.
தஸ்தா.: உன் வீட்டில் யார் இருக்கிறார்கள்
அன்னா.: தாயுடன் வாழ்கிறேன். தந்தை இறந்து போய்விட்டார்.
தஸ்தா. :என் தந்தை. கிராமத்தில் விவசாயிகளுடன் சண்டையிட்டவர். விவசாயிகள் ஒரு நாள் அவரை வழிமறைத்து தாக்கி பச்சை சாராயத்தை ஊற்றி துணியால் வாயை கட்டி.. கொன்றுவிட்டார்கள். துர்மரணம் ( கைகள் நடுங்குகின்றன.) பெற்றோர் இல்லாவிடால் இறந்து போய்விடுவோம் என தங்கைகள் பயந்து முணங்கிகொண்டேயிருந்தார்கள்.
(அன்னா முணுமுணுக்கிறாள்)
அன்னா.. இதே வாசகம் ரஸ்கோல்னிக்கோ பேசுகிறான்
தஸ்தா. என்ன சொல்கிறாய். திரும்ப சொல்.
அன்னா:. குற்றமும் தண்டனையும் நாவலின் கதாநாயகன் இதே வார்த்தைகளை சொல்கிறான்.
தஸ்தா :. என் நாவலை வாசித்திருக்கிறாயா?
அன்னா.: என் அம்மாவிற்கு ரொம்பவும் பிடித்த புத்தகம்.
தஸ்தா. : என்னைப்பற்றி என்ன சொல்கிறார்?
அன்னா. :ருஷ்ய இலக்கியத்தின் உயர்வான எழுத்தாளர் நீங்கள்.
தஸ்தா. :அப்படி எதுவுமில்லை. அன்னா உனக்கு நண்பர்கள் இருக்கிறார்களா?
அன்னா. : இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள். ஒருவன் மருத்துவ கல்லுôரி மாணவன். அவன் ஒவ்வொரு நாளும் உங்களை சந்திக்க ஆசைபடுவதாக சொல்லிக் கொண்டேயிருக்கிறான் அழைத்துவரட்டுமா.
(சட்டென முகம் மாறிவிடுகிறது.)
தஸ்தா.: வேண்டாம்.. எவரையும் சந்திக்க நான் விரும்பவில்லை
அன்னா.: உங்கள் எழுத்தின் மீது மரியாதை கொண்டவன்.
தஸ்தா.: நீ அவனை தினமும் சந்திக்கிறாயா?
அன்னா.: மாலைவேளைகளில் அவனே தேடி வந்து விடுவான். அவன் தான் அன்று இந்த வீட்டை அடையாளம் காட்டியது.
(சட்டென முகம் மாறியவராக)
தஸ்தா.: காகிதங்களை எடுத்துவைத்தவிட்டு கிளம்பு .. உனக்கு நேரமாகி விட்டது.
அன்னா. :குறிப்புகளை வீட்டிற்கு எடுத்துசென்று எழுதிவரட்டுமா?
தஸ்தா.: வேண்டாம் நீ புறப்படலாம்.
அவள் தயங்கிய படி எழுந்து கொள்கிறாள்.
அன்னா. ::அவன் ஒருமுறை மட்டும் உங்களை சந்திக்க அனுமதிக்க முடியாதா?
(கோபத்துடன் கத்துகிறார்)
தஸ்தா.: எதற்காக.. என்னை அவமான படுத்துவதற்கு தான் நீ ஆசைபடுகிறயா.. .போய்விடு..
தனியே புகைக்க துவங்குகிறார். அன்னாவை பார்க்கவேயில்லை. அவள் பயத்துடன் வெளியே செல்கிறாள்
காட்சி.4
நான்கு மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருக்கின்றன.. எழுதப்பட்ட காகிதங்களை பாôத்துக் கொண்டிருக்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி. ஒருமெழுகுவர்த்தி அணைந்து போகிறது. அன்னா வருகிறாள்.கையில் காகிதங்கள்.
அன்னா:. 100 பக்கங்கள் முடித்துவிட்டன. இனி எட்டு நாட்களே மீதமுள்ளன.
தஸ்தா. :உனக்கு கனவுகளில் நம்பிக்கையிருக்கிறதா. நான் ஒரு கனவுலகவாசி. ஒவ்வொரு நாளும் கனவுகள் மீன்களை போல கண்களுக்குள் நீந்திக் கொண்டிருக்கின்றன .
அன்னா. :கனவுகளுக்கு பலன் எதிர்மறையாகதானிருக்கும் என்பார்கள்.
தஸ்தா:. நிச்சயமாகயில்லை. கனவுகள் முன்கூட்டியே எதையும் சொல்லிவிடுகின்றன. என் மனைவியின் மரணத்தின் முன்பாகவே என் கனவில் அவள் கைவிரல்கள் மூடிக் கொண்டுவிட்டன.
இப்போது ஒரு கனவு தினமும் தோன்றி மறைகிறது.
எழுதப்பட்ட காகிதமொன்றின் வரிகளுக்குள் ஒரு சிறிய ஒளியொன்று எட்டிப் பார்க்கிறது.
வெண்ணிற வெளிச்சம் கலைந்த காகிதங்களுக்கு ஊடே ஒரு வைரம் ப்ரகாசிக்கிறது. அதன் ஒளி வரிகளில் விழுகின்றது. குனிந்து அருகாமை செல்லும் போது காகிதம் மறைந்துவிடுகிறது வரிகள் தெரியவேயில்லை.
அன்னா.: விசித்திரமான கனவு.
தஸ்தா. : என் வாழ்வே விசித்திரம் தான். நான் எப்போதும் குழப்பத்தில் இருக்கிறேன். எனக்காக மூன்று கதவுகள் திறந்திருக்கின்றன.
ஒன்று துறவியாகி ஜெருசலம் சென்றுவிடுவது,
அல்லது ஐரோப்பா சென்று சூதாடியாவது.
அதுவுமில்லாவிட்டால் யாரையாவது திருமணம் செய்து கொண்டு இங்கேயே சந்தோஷமாக இருந்துவிடுவது. இதில் எதை தேர்வு செய்வது உன் ஆலோசனை என்ன?
அன்னா:. துறவியோ,சூதாடியாவதோ தற்காலிகமான வழிகளே. நீங்கள் யாரையாவது மணந்து கொள்ளலாமே?
தஸ்தா:. நிஜமாகவா சொல்கிறாய்.. அன்னா ..நான் சாவை முத்தமிட்டவன். சுடப்படுவதற்காக மூன்று வரிசைகளாக நிற்கிறோம் முதல் வரிசையாளர்கள் துôணில் கட்டப்பட்டு சுடப்படுகிறர்கள். நான் எட்டாவது ஆள். என்வரிசை வருகிறது. வாழவேண்டும் என்ற ஆசை பெருகுகிறது. துப்பாக்கியின் இழுவிசை கேட்கிறது கண்கள் கட்டபடுகின்றன. நினைவு திறக்கபடுகிறது. வாழ்வின் ருசி நாவில் அரும்புகிறது. முடிவற்று வாழ்ந்து கொண்டேயிருக்க ஏங்குகிறது மனம். சுடப்படவேண்டிய தருணம் நெருங்கி நழுவுகிறது. தோட்டாவிற்கு பதிலாக ஏதோ வார்த்தைகள் வாசிக்கபடுகின்றன. எனது மரணதண்டனை ரத்து செய்யபட்டது . அந்த ஒரு நிமிஷத்தின் சந்தோஷம் தாள முடியாதது. என்னால் பீறிட்டு அழமட்டுமே முடிந்தது.
அன்னா.: எப்போதும் இதை நினைவு கொண்டபடியே இருக்கிறீர்கள்..கசப்பானநிகழ்ச்சிகள் மட்டுமேதானா உங்கள் வாழ்வு.
தஸ்தா.: அவை மட்டும்தான் மனதில் தங்கியிருக்கின்றன . உண்மையில் நான் காத்துக்கொண்டேயிருக்கிறேன். சந்தோஷமும் கொண்டாட்டமும் என் அறைக்கு வந்து சேர காத்திருக்கிறேன். அன்னா என்னை உன் வீட்டிற்கு அழைக்க மாட்டாயா?
அன்னா.: நிஜமா உங்களால் என்வீட்டிற்கு வர முடியுமா. நாளை வருகிறீர்களா.
தஸ்தா.: கட்டாயமாக வருகிறேன்.
(பேசிக்கொண்டிருக்கும்போது கதவுதட்டப்படுகிறது. குள்ளமான பருத்த நபர் வருகிறார்அவரைக்கணடதும் தஸ்தாயெவ்ஸ்கி முகம் மாறி விடுகிறது.
பதிப்பாளர்.: பியோதர் நாவலை முடித்து விட்டீர்களா. எட்டு நாட்களே மீதமுள்ளன.
தஸ்தா.: முடிந்து விட்டது.
பதிப்பா:. உங்களால் முடியும். உங்கள் வாசகர்கள் புதிய நாவலுக்காக காத்திருக்கிறார்கள். தாமதமானால் நான் காவல் நிலையத்தில் கடன் பத்திரங்களை காட்ட வேண்டியது வரும்.
தஸ்தா. : இதைப்பற்றி பேசுவதற்காகவா வந்தீர்கள்.
பதிப். : உங்கள் நாவல்களின் புதிய பதிப்புகள் வருகின்றன அதற்கு முன்னுரை வேண்டும் அதற்காகதான் வந்தேன்.
தஸ்தா.: இப்போது எதுவும் எழுத முடியாது.
பதிப்.: நீங்கள் மறுக்க முடியாது.. இதற்கும் சேர்த்து தான் கடன் பத்திரம் எழுதி வாங்கியிருக்கிறேன். நீங்கள் மறுத்தால் தண்டனை கிடைக்க கூடும்..அதுசரி.. யார் இந்த பெண்.
தஸ்தா.: எழுதி தந்துவிடுகிறேன் ..நீங்கள் புறப்படலாம்.
பதிப்.: உறவுகார பெண்ணா, வேலையாளா? வாசகரா?
தஸ்தா.: இவள் மீது அதிகாரம் செய்ய உங்களுக்கு எந்த கடன் பத்திரமும் நான் எழுதி தரவில்லை. போய்விடுங்கள்
பதிப்.: மூவாயிரம் ரூபிள் கடன் தரப்பட்டிருக்கிறது. நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லிதான் ஆகவேண்டும்
(குறுக்கிட்டு சொல்கிறாள்)
அன்னா. :மிக குறைந்த தொகை. ஏமாற்றுவேலை.
பதிப். : இந்த விசயங்கள் சட்டபூர்வமானவை. இதில் நீங்கள் தலையிட முடியாது. பியோதர் இந்த ஒப்பந்தத்தைமறுத்தால் மீண்டும் சைபீரியா போக வேண்டியதுதான்.
அன்னா.: மிரட்டாதீர்கள். சட்டம் உங்கள் கையில் உள்ளகுதிரை சவுக்கல்ல… வேண்டியபடி வீசி அடிப்பதற்கு.. எனக்கும் சட்டம் தெரியும்
பதிப்:. பியோதர் எனக்கு தெரியாமல் ஏதேனும் வழிகளை முயன்றால் நாளையே கடன் பத்திரங்களை காவலர்களிடம் ஒப்படைத்துவிடுவேன். தண்டனை தப்பாது
(உணர்ச்சிவசப்பட்ட தஸ்தாயெவ்ஸ்கி காக்காய் வலிப்பு கண்டவராகி வெடுக்வெடுக்கெ துள்ளி விழுகிறார். பயந்துபோய்வெளியேறுகிறான் பதிப்பாளர்.. தஸ்தாவெஸ்கி மருந்து தருகிறாள் அன்னா ).
காட்சி 5
சில நாட்களுக்கு பிறகு
மாலை . பியோதர் அறை
தஸ்தாயெவ்ஸ்கி எழுதி முடித்தத நாவலை கையில் வைத்திருக்கிறார்.
தஸ்தா. :கேவலமான அந்த ஒட்டுண்ணியின் வேலை இன்றோடு முடிந்து போனது. நாவலை அவனிடம் ஒப்படைத்துவிட்டால் கடன் தொல்லை நீங்கிவிடும்
(அன்னா வருகிறாள்.)
அன்னா.: வழக்கறிஞர்களிடம் ஆலோசனை கேட்டுவிட்டேன். நாவலின் பிரதியை சாட்சியோடு காவல் அதிகாரியிடம் ஒப்படைத்து விடலாம்.
தஸ்தா.: அதை உரியபடி கொடுத்துவிடலாம் . ஆனாலும் அன்னா நாவல் முடிந்து விட்டதுதானா?
அன்னா.: முடிந்துவிட்டதுதான். ஏன் கேட்கிறீர்கள்.எதையும் திருத்தி எழுதவேண்டுமா?
தஸ்தா. :இல்லை ..கதைதானே..எங்காவது முடிந்துதானே ஆகவேண்டும்.. வெறும்கதைதானே…..
அன்னா கதைகள் நிஜமென நீ நம்புகிறயா?
கதைகளில் ஏன் இத்தனை சம்பவங்கள் வருகின்றன என்று யோசித்திருக்கிறாயா?
அன்னா: கதை வெறும் கற்பனை தானே
தஸ்தா: வெறும் கற்பனை தான்.. கற்பனை.. அன்னா நான் வயதானவன். நாற்பது வயதை கடந்த பிறகு உயிர் வாழ்வது தேவையற்றது தான். இல்லையா
அன்னா:. ருஷ்ய இளைஞர்கள் உங்களுடன் தானே பேச ஆசைப்படுகிறார்கள்.
தஸ்தா.: நான் சூதாடியாவதென முடிவுவெய்து விட்டேன். ஐரோப்பா போகபோகிறேன்.
அன்னா.: வேறு நாவல் எழுதும் திட்டமில்லையா..
தஸ்தா.: புதிய நாவலை தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன் அதன் கதாநாயகன் தோற்றுப்போன கலைஞன். அவன் சந்திக்கும் பெண்ணோ உணர்ச்சிகரமானவள்.
அவர்கள் விரும்புகிறார்கள். அவன் நேசத்தை வெளிப்படுத்தவேயில்லை. தன்மேல் பரிதாபம் கொண்டு காதலிக்கிறாளோ என தயங்குகிறான். இப்படி செல்கிறதுகதை அந்த கதாநாயகனை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
அன்னா. :அவன் தோற்றுபோனவனில்லை. மகத்தானவன். அவன் அன்பு எவராலும் ருசிக்கப்படாதது.
தஸ்தா. உனக்கு அவன் மேல் நேசமுண்டாகிறதா.
அன்னா.: தீராத பிரியமுண்டாகிறது.
தஸ்தா. : நிஜமாகவா.. கதை நிஜமென்றால்கூட அப்படித்தானா?.
அன்னா. அப்போதும் அப்படியே. நாளை உங்களது பிறந்த தினம். நினைவிருக்கிறதா?
தஸ்தா.: ஒவ்வொரு நாளும் எனக்கு வயதாகிóகொண்டே வருகிறது. இதில் பிறந்த தினம் மட்டும் எப்படி நினைவிலிருக்கும்
(தயக்கத்துடன் சொல்கிறாள்)
அன்னா:. பியோதர் உங்கள் காதலுக்கு நான் அருகதையற்றவள் நான்.
தஸ்தா.: இல்லை அன்னா.. நான் தனிமையால் களைப்படைந்து விட்டேன். ஒரு சிலந்தி கூட இல்லாத தனிமையான அறை என்னுடையது.. ஒரு நிமிஷம்…
(அறையினுள் ஒடி ஒரு இறகு தொப்பி ஒன்றை கொண்டு வருகிறார்).
தஸ்தா. :அன்னா இந்த இறகுதொப்பியை ஏற்றுக்கொள். இதில் உள்ள ஒரு இறகை போல உன் மனதில் நான் இருந்தால் கூடபோதுமானது .
அன்னா..: பியோதர்..கதைகள் கற்பனையல்ல என்றே தோணுகிறது.. கதைகள் விநோதமானவை .
தஸ்தா.: அன்னா என் தனிமையின் பள்ளதாக்கில் நீ ஒரு பருந்தாக சுழல்கிறாய்.
(அவள் கைகளை பற்றிக் கொள்கிறார்).
தஸ்தா : என்னை ஏற்றுக் கொள்வாயா?.. கதைகளை விடவும் வியப்பானது வாழ்க்கை. அன்னா என் தாயை போல மண்டியிட்டு வேண்டிக் கொள்கிறேன்.. நீ காதலிப்பதாக இருந்தால் மட்டுமே நான் துயரத்திலிருந்து வெளியேற முடியும்.. அன்னா.. ஏற்றுக் கொள்கிறயா
அன்னா ..பியோதர்..உயிர்வாழ்வது மட்டுமே பெரிய அதிர்ஷடம் என்று தோணுகிறது.. போதும் பியோதர்.. உன் அன்பின் முன்னால் நான் எளியவள்.. என்னிடமல்ல.. யாரிடமும் நீங்கள் யாசிக்க கூடாது பியோதர்.. . .
இருவரும் கட்டிக்கொள்கிறார்கள்.
மேடையில் தனியே ஒரு குரல் ஒலிக்கிறது.
கடன் பத்திரத்திற்காக எழுதிய சூதாடி நாவல் பியோதர் தஸ்தாவெஸ்கியின் வாழ்விற்கு அன்னாவை பரிசாக வழங்கியது. பியோதர் ஒரேயொரு முறை தான் காதலித்தார். அந்த சூதாடியின் காதல் நடுக்கமும் பிதற்றமும் நிறைந்தது. தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களை போலவே அவரது வாழ்வும் ஒரு விசித்திரமான கதையை போல அமைந்துவிட்டது..
***
இந்நாடகம் 2004ம் ஆண்டு சென்னையில் நிகழ்த்தபட்டது,