தஸ்தாயெவ்ஸ்கி எனும் சூதாடி

சூதாடி நாவலை(The Gambler) எழுத பியோதர் தஸ்தாயெவ்ஸ்கிக்கு விருப்பமேயில்லை. கட்டாயத்தின் பெயரால் தான் அந்த நாவலை எழுதினார். அதுவும் ஒரு மாத காலத்திற்குள் எழுதித் தர வேண்டும் என்று பதிப்பாளர் ஸ்டெல்லோவ்ஸ்கி ஏற்படுத்திய நெருக்கடியே நாவலை எழுத வைத்தது. ஒருவேளை இதை எழுதித் தராமல் போயிருந்தால் கடனுக்காகக் கைது செய்யப்பட்டுச் சிறைபட நேரிடும் என்ற அச்சம் அவரை விரைவாக எழுத வைத்தது.

இன்று எழுத்தாளர்கள் தங்களின் புதிய நாவலை எழுதுவதற்கு இயற்கையான இடங்களைத்தேடிச் செல்கிறார்கள். அதுவும் ஆங்கிலத்தில் எழுதும் புகழ்பெற்ற நாவலாசிரியர்கள் கோடிக்கணக்கில் முன்பணம் வாங்கிக் கொண்டு தனித்தீவிலோ, எழுத்தாளர் உறைவிடத்திலோ அமர்ந்து நாவலை எழுதி முடிக்கிறார்கள். ஆனால் தஸ்தாயெவ்ஸ்கியோ கடன்காரனின் நெருக்கடிக்குப் பயந்து தனது நாவலை எழுதியிருக்கிறார். இதற்காக அன்னா என்ற இளம்பெண்ணை உதவியாளராக வைத்துக் கொண்டார். சூதாடி நாவல் பெரிய இலக்கிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அவருக்கு நல்லதொரு வாழ்க்கைத் துணையை ஏற்படுத்திக் கொடுத்தது

சூதாடி நாவலை இப்போது வாசிக்கும் போதும் அதன் தொடர்ச்சியற்ற தன்மையை, தாவலை உணர முடிகிறது. அவரது நாவல்களில் மிகவும் கட்டுக்கோப்பானது கரமசோவ் சகோதரர்கள். அதற்கு அடுத்த நிலையில் இடியட். பிற நாவல்கள் சற்றே தளர்வான கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன. அலெக்சி இவானவிச் வழியாகத் தஸ்தாயெவ்ஸ்கி சூதாட்டத்தின் உளவியலை விசாரணை செய்கிறார்.

1866ல் இந்த நாவலை எழுதிய போதும் சூதாட்டத்தை முன்வைத்து ஒரு நாவலை எழுத வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு முன்னதாகவே இருந்தது. 1863 இல் இந்த நாவலுக்கான சிறுகுறிப்பை எழுதியிருக்கிறார். 1859ல் சூதாடி நாவல் பற்றிய எண்ணத்தைத் தனது டயரியில் எழுதியிருக்கிறார். ஆகவே இந்த நாவலுக்கான விதை முன்னதாகவே அவரிடமிருந்திருக்கிறது.

இந்த நாவலை எப்போது வாசிக்கும் போதும் மனதில் புஷ்கினின் The Queen of Spades சிறுகதையே வந்து போகிறது. இரண்டிற்கும் நெருக்கமான ஒற்றுமைகள் இருக்கின்றன. புஷ்கின் கதையில் வரும் மேஜிக் தஸ்தாயெவ்ஸ்கியிடம் இல்லை.

அபோலினாரியா சுஸ்லோவா எனும் இளம்பெண்ணுடன் தஸ்தாயெவ்ஸ்கிக்கு ஏற்பட்ட காதல் மற்றும் நெருக்கத்தை இந்த நாவலில் மாற்று வடிவமாகக் காணமுடிகிறது. போலினா எழுதிய டயரிக்குறிப்பில் இந்த நாவலின் நிஜ நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன

ரூலெட்டன்பர்க் என்ற கற்பனையான நகரை தஸ்தாயெவ்ஸ்கி உருவாக்கியிருக்கிறார். சூதாட்டத்திற்கென்றே பிரத்யேக நகரம் இருப்பது வியப்பளிக்கிறது. ரூலெட்பலகையில் எண்களுடன் எழுத்துகளும் காணப்படுகின்றன. ஒருவன் தான் பந்தயம் வைக்க வேண்டிய எண்களைக் குறிக்க இரண்டு எழுத்துகளைச் சொல்லலாம். எண்கள் சங்கேதம் போலப் பயன்படுகின்றன என்று நாவலில் தஸ்தாயெவ்ஸ்கி குறிப்பிடுகிறார்.

சூதாட்டத்திற்கும் காதலுக்கும் இடையே ஒருவன் ஊசலாடுவதையே நாவலில் வெளிப்படுத்துகிறார். Three Loves of Dostoevsky என்றொரு புத்தகம் வெளியாகியிருக்கிறது. அதில் தஸ்தாயெவ்ஸ்கியின் மூன்று காதலிகளைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள். அதில் போலினாவின் காதலும் விவரிக்கபட்டுள்ளது

பாரீஸிலிருந்த போலினாவைக் காணுவதற்காகப் பயணம் மேற்கொண்டார் தஸ்தாயெவ்ஸ்கி. அதற்கு முன்பாக மே 1863 இல் தஸ்தாயெவ்ஸ்கி நடத்தி வந்த பத்திரிகை மூடப்பட்டது. கடன் சுமையிலிருந்து விடுபடப் போராடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் சூதாடுவதற்காகவே வைஸ்பேடன் மற்றும் பேடன்-பேடனில் உள்ள சூதாட்டவிடுதிகளுக்குச் சென்றார். வைஸ்பேடனில் சூதாடி 10,400 பிராங்குகளை வென்றார் . அந்த அதிர்ஷ்டமே அவரைத் திரும்பத் திரும்பச் சூதாட வைத்தது.

சூதில் வென்ற பணத்தில் பாதியை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வசித்த அவரது மனைவியின் உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார். பாடன்பாடனில் சூதாடி நிறையப் பணத்தை இழந்தார். தனக்காகக் காத்திருக்கும் காதலி போலினாவைக் காணுவதற்காகப் பாரிஸிற்குச் சென்றார். அங்கே அவள் வேறு காதலனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். தஸ்தாயெவ்ஸ்கி தன்னைச் சந்திக்க வரவேண்டாம் என்று கடிதம் எழுதினாள். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. அவளைக் காணச் சென்று அவமானப்பட்டார். காதலில் தோற்ற மனநிலையே அவரை மீண்டும் சூதாட்டவிடுதிக்குக் கொண்டு சென்றது.

ஒரு போதும் தன்னால் பெரும்செல்வத்தை அடைய முடியாது என்று அறிந்த போதும் தஸ்தாயெவ்ஸ்கி ஏன் தொடர்ந்து சூதாடுகிறார். பாடன்பாடனிலிருந்த காசினோவில் அவர் சூதாடியதைப் பற்றிய குறிப்புகளை வாசிக்கும் போது விடுபடமுடியாத போதையைப் போலவே சூதாட்டம் அவரைப் பற்றிக் கொண்டிருப்பதை உணரமுடிகிறது

மகாபாரதத்தில் வரும் யுதிஷ்ட்ரன் அறிந்தே சூதாடுகிறான். தோற்றுப் போகிறான். அவனால் பாதியில் விளையாட்டிலிருந்து எழுந்து கொள்ள முடியவில்லை. அதே மனநிலை தான் தஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றிக் கொண்டிருக்கிறது. உண்மையில் தனது கடனிலிருந்து விடுபடுவதற்கு அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்புகிறார். அதற்குச் சூதாட்டமே இலக்காக நினைக்கிறார்.

சூதாட்டவிடுதிக்குள் நுழைந்தவுடன் அவர் நிழல் போலாகிவிடுகிறார். கடந்தகாலம் தான் அவரைச் சூதாட அழைத்துப் போகிறது. தோற்று திரும்பும் போது அவரது நிழல்கூட அவரைக் கேலி செய்கிறது. சூதாட்ட மேசைகளில் இரட்சிப்பிற்கு இடமில்லை. அங்கே அவர் தனது விதியுடனே சூதாடுகிறார்.

ரூலெட் எனப்படும் சூதாட்டம் 17 ஆம் நூற்றாண்டில் உருவானது. இது பண்டைய சீன பலகைவிளையாட்டை அடிப்படையாகக் கொண்டது என்று நம்புகிறார்கள், அதில் 37 விலங்குகளின் உருவங்களை மொத்தம் 666 எண்கள் கொண்ட ஒரு மாயச் சதுரத்தில் அடக்கியிருந்தார்கள்

இந்த விளையாட்டு டொமினிகன் துறவிகளால் ஐரோப்பாவிற்கு, சிறிய மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தபட்டது. சதுரத்தை ஒரு வட்டமாக மாற்றியவர்கள் துறவிகளே

அந்தக் காலத்தில் பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகளில் இது சட்டவிரோதமாகக் கருதப்பட்டது. சில நாடுகளில் இதற்காகவே புதிய சூதாட்டச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன,

மொனாக்கோவின் இளவரசர் சார்லஸ் தனது கடன்பிரச்சனையிலிருந்து மீளுவதற்காக ரூலெட்டைப் பிரபலமாக்கினார். இதன்காரணமாக மொனாக்கோவில் பல சூதாட்ட அரங்குகளைத் திறந்தார். பிரபுகள் மற்றும் உயர்தட்டு மக்களின் சூதாட்டமாக ரூலெட் மாறியது.

ரூலெட்டின் சுழலும் பலகை எந்த எண்ணில் வந்து நிற்கும் என்ற ரகசியங்களைப் பெறுவதற்காகப் பிசாசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் என்ற கதையும் அப்போது தான் உருவானது. உண்மையில் இந்த ரூலெட் விளையாட்டு தான் பிசாசு. அது ஒருவரை பிடித்துக் கொண்டுவிட்டால் அதிலிருந்து விடுபடவே முடியாது.

ஃபிராங்கோயிஸ் மற்றும் லூயிஸ் பிளாங்க் என்ற இரண்டு சூதாடிகள் தான் ரூலெட்டின் பெரும் வெற்றியாளராக இருந்தார்கள். அப்போது பிரான்சில் ரூலெட் சட்டவிரோதமான விளையாட்டாக அறிவிக்கபட்டிருந்தது. ஆகவே அவர்கள் ஜெர்மனியின் ஹாம்பர்க் நகருக்குச் சென்று, அங்கு ரூலெட் விளையாட்டை அறிமுகப்படுத்தினார்கள்.  ரூலெட் வழியாக நிறையப் பணம் சம்பாதித்தார்கள்.

அலெக்ஸி சூதில் வென்ற பணத்துடன் வரும் போது போலினா தன்னைப் பணம் கொடுத்து வாங்க விரும்புகிறானா என்று கோவித்துக் கொள்கிறாள். அந்தப் பணத்தை அவன் முகத்திலே வீசி எறிகிறாள். சுயமரியாதையின் முன்பு பணம் தோற்றுப்போகிறது என்பதை வாசகனால் உணரமுடிகிறது.

கேசினோவில் சூதாடுகிறவர்களில் பலர் அது தரும் உச்சகட்ட விளைவிற்காகவே விளையாடுகிறார்கள். அது ஒருவகைக் காமத்தூண்டுதல். அலெக்ஸி அதை நாவலின் ஒரு இடத்தில் விவரிக்கிறான். சூதாட்டப்பலகைக்குக் கடந்த காலம் கிடையாது. கடந்தகால வெற்றிகளைக் கொண்டு இன்றைய வெற்றியை அடைய முடியாது. அது போலவே யார் பந்தயம் வைக்கிறார்கள் என்பதும் சூதில் முக்கியமில்லை. நொடிக்கு நொடி மாறும் எண்களின் முன்பு அமர்ந்திருக்கிறவனின் நிலை துப்பாக்கி முனையில் அமர்ந்திருப்பவனைப் போன்றதே. சூதாடுகிறவன் குறைவான பகுத்தறிவையும் ஏராளமான ரகசிய நம்பிக்கைகளையும் கொண்டிருக்கிறான்.

நாவலில் வரும் ஜெனரல். பாட்டி. மற்றும் அலெக்ஸி மூவரும் ஆரம்பத்தில் சூதாட்டத்தில் வெற்றிபெறுகிறர்கள். பின்பு அதே சூதாட்டத்தில் தங்களுடைய மொத்த‌ சொத்துக்களையும் இழக்கிறார்கள். இதில் ஜெனரல் மற்றும் அலெக்ஸியை சூதாட்டம் நோக்கி கொண்டு செல்வது அவர்களின் காதலே

அலெக்ஸி ரஷ்ய ஜெனரலின் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரும் ஆசிரியராகப் பணியாற்றுகிறான். ஜெனரலின் சகோதரர் மகள் போலினாவைக் காதலிக்கிறான். ஜெனரல் மனைவியை இழந்தவர். அவரது பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டு அதே வீட்டில் வாழ்ந்து வருகிறாள் போலினா. ஜெனரல் தனது கடனிலிருந்து மீட்க பாட்டி இறந்தவுடன் பணம் வரும் எனக் காத்திருக்கிறார். இந்நிலையில் அவர் பிளாஞ்சேயைக் காதலிக்கிறாள். அவள் பணத்திற்காகவே அவரைக் காதலிக்கிறாள். பாட்டியிடமிருந்து பணம் வரவில்லை. ஆனால் பாட்டியே நேரில் வந்துவிடுகிறாள். அவள் சூதாட ஆரம்பிக்கிறாள். அதில் பெரும்பொருளைத் தோற்கிறாள். எது பாட்டியை சூதில் சிக்க வைக்கிறது.

காதலின் பொருட்டே அலெக்ஸி சூதாடச் செல்கிறான். இரண்டு லட்சம் ரூபிள் வெற்றிப் பெறுகிறான். சூதில் வெல்லும் அலெக்ஸியை பிளாஞ்சே ஏமாற்றுகிறாள். முடிவில் காதலுக்காகவே மீண்டும் சூதாடுகிறான் அலெக்ஸி. நாவலின் அடிநாதமாக ஒலிப்பது அலெக்ஸியின் தவிப்பே. பணத்தால் மட்டுமே உறவுகள் ஏற்படுகின்றன என்ற உண்மையைத் தஸ்தாயெவ்ஸ்கி உணர்ந்திருக்கிறார். நிஜமான அன்பையும் நேசத்தையும் தேடி அலைகிறார். சூதாடி நாவலின் வடிவம் ரூலெட் பலகை போலவே மாறிமாறிச் சுழல்கிறது.

தஸ்தாயெவ்ஸ்கியின் சூதாட்டம் பற்றிய அவதானிப்புகள் நுண்மையானவை. சூதாட்ட அரங்கின் துல்லியமான விவரிப்பு. அங்கு வரும் நபர்களின் நடத்தை. போலித்தனமான பாவனைகளை நுட்பமாக எழுதியிருக்கிறார். சூதாட்ட மாயை ஒருவரை எப்படி விழுங்கிவிடுகிறது என்பதைத் துல்லியமாக அறிந்திருக்கிறார். சூதாடித் தோற்ற ஒருவர் மறுநாள் திரும்ப வருவதற்கு என்ன காரணம் என்பதையும் சொல்கிறார். அது போல வென்றவர்கள் தன்னால் மறுநாளும் வெல்ல முடியும் என்று கற்பனை செய்து கொள்வதைப் பற்றியும் குறிப்பிடுகிறார். அதிர்ஷ்டம் , துரதிர்ஷ்டம் எனத் தராசின் தட்டுகள் மாறி மாறி உயர்வதும் தாழ்வதும் பற்றி எழுதும் போது அது சூதின் கதையாக மட்டுமில்லை. மாறாக உலகம் தர மறுத்த அதிர்ஷ்டத்தை ஒருவன் தானே உருவாக்கிக் கொள்ள எத்தனிக்கும்  கடவுளுக்கு எதிரான சவாலாகவும் தோன்றுகிறது.

அன்னா தனது நாட்குறிப்பில் தஸ்தாயெவ்ஸ்கிக்கு இருந்த சூதாட்டப்பித்துப் பற்றி எழுதியிருக்கிறார். அவர்களுக்குத் திருமணமான புதிதில் மேற்கொண்ட ஐரோப்பிய பயணத்தில் தஸ்தாயெவ்ஸ்கி எவ்வாறு தினமும் சூதாடச் சென்றார் என்பதையும் பணத்தைத் தோற்றுத் திரும்பும் போது அவருக்குள் ஏற்பட்ட குற்றவுணர்வையும் எழுதியிருக்கிறார் குறிப்பாகச் சூதாடப் பணமில்லாத போது தனது குளிர்காலக் கோட், பூட்ஸ் மற்றும் கடிகாரத்தை அடகு வைக்கத் தயங்கவில்லை என்பதைக் குறிப்பிடுகிறார். அவளுடைய திருமண ஆடையும் கூட அடமானம் வைத்திருக்கிறார். இவான் துர்கனேவிடம் கடன் வாங்கிச் சூதாடியிருக்கிறார். கையில் பணமில்லாமல் சூதாட்ட அரங்கிலிருந்து துரத்தியடிக்கப்பட்டிருக்கிறார்.

சூதாட்டம் இல்லாமல் போயிருந்தால் தஸ்தாயெவ்ஸ்கி ஒருபோதும் தஸ்தாயெவ்ஸ்கியாக மாறியிருக்க மாட்டார் என்று ஓவியர் பிளெச்மேன் கூறுகிறார். அது உண்மையே

சூதாட்டம் என்பது வெறும் விளையாட்டில்லை அது நிச்சயமின்மையின் முன் அமர்ந்திருத்தல். வெற்றி அல்லது தோல்வி என்பதற்கு மேலாக அது சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. அதிர்ஷ்டம் தவிர்க்க முடியாமல் மாறிவிடும் என்பது மாயையான நம்பிக்கை.. நாவலில் சூது எனும் “பைத்தியக்காரத்தனமான அபாயத்தை” அலெக்ஸி அறிந்தே தொடுகிறான்.

நாவலில் வரும் அலெக்ஸி வழியாகத் தஸ்தாயெவ்ஸ்கி தனது சொந்த வாழ்வின் அனுபவங்களைத் துல்லியமாகப் பகிர்ந்து கொள்கிறார். ஆனால் இவை ஒருவரின் வாக்குமூலமாக மட்டும் சுருங்கிவிடாமல் கலை நேர்த்தியுடன், உளவியல் விசாரணையென உருவாக்கியிருப்பது நாவலுக்குத் தனித்துவத்தை ஏற்படுத்துகிறது.

0Shares
0