தாராசங்கர் ஆவணப்படம்

சாகித்ய அகாதமி சார்பில் தயாரிக்கப்பட்ட எழுத்தாளர்களின் ஆவணப்படங்கள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன.

இன்று வங்காள எழுத்தாளர் தாராசங்கர் பந்தோபாத்யாய் பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்தேன்.

அவரது ஆரோக்கிய நிகேதனம். கவி போன்ற நாவல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

தாராசங்கர் 65 நாவல்கள் எழுதியிருக்கிறார். இதில் பல திரைப்படமாக வெளியாகியுள்ளன. அவரே ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். ராஜ்யசபாவின் நியமன எம்பியாகப் பணியாற்றியிருக்கிறார்.

தாராசங்கர் பந்தோபாத்யாயின் இல்லம் பிர்பூம் மாவட்டத்தின் லாப்பூரில் அமைந்துள்ளது. தாராசங்கரின் வீடு இன்று அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

தாராசங்கர் பந்தோபாத்யாய் ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தவர். ஜல்சாகர் என்ற அவரது சிறுகதையைத் தான் சத்யஜித்ரே திரைப்படமாக உருவாக்கினார். ஜல்சாகர் திரைப்படம் வங்காளத்தில் வசித்த பிஸ்வம்பர் ராய் என்ற நலிந்த ஜமீன்தாரின் இசை ஆர்வத்தையும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்ட போதும் குடும்பக் கௌரவத்தை நிலைநிறுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் சித்தரிக்கிறது. இந்திய சினிமாவின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இதனைக் கருதுகிறேன்.

தாராசங்கர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார். அவரது காலத்துப் பத்திரிக்கையுலகம், அன்றைய அரசியல் சூழ்நிலை, வங்கப்பஞ்சம், பாரம்பரியத்துடன் நவீனத்துவத்தின் மோதல், தாராசங்கரின் ஓவியத்திறமை போன்றவையும் இந்த ஆவணப்படத்தில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

0Shares
0