திரைநாயகன்

ஹிந்தி சினிமாவின் உச்ச நட்சத்திரமான திலீப்குமாரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தேன்.

Dilip Kumar: The Substance and the Shadow என்ற நூல் யூசுப்கான் என்ற பெஷாவரைச் சேர்ந்த இளைஞன் திலீப்குமார் என்ற நட்சத்திரமாக உருவான கதையை மிக அழகாகப் பதிவு செய்துள்ளது.

சினிமாவோடு எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு குடும்பத்திலிருந்து உருவானவர் திலீப்குமார். அவர் சினிமாவில் நடிக்கிற விஷயம் அவரது தந்தைக்குக் கூடத் தெரியாது. போஸ்டரில் திலீப்குமாரின் படத்தைப் பார்த்தபிறகே தந்தை அது பற்றி விசாரித்து உண்மையை அறிந்திருக்கிறார்.

பெஷாவரில் பழவியாபாரம் செய்து வந்தவர் யூசுப்கானின் தந்தை. வீட்டில் பனிரெண்டு குழந்தைகள். அதில் ஒருவராக வறுமையான சூழலில் வளர்ந்தவர் யூசுப்கான்.

வாழ்க்கை ஒருவரை எங்கே அழைத்துச் செல்லும், எதைச் செய்ய வைக்கும் என்பதை எவராலும் முன்னறிந்துவிட முடியாது. யூசுப்கானிற்கு நடந்ததும் அப்படியே.

படித்து அரசாங்க வேலைக்குப் போக வேண்டும் என்று குடும்பத்தினர் கொண்டிருந்த கனவை நிறைவேற்ற முயன்ற யூசுப்கானிற்குத் திடீரென ஒரு வாய்ப்பு உருவாகிறது. அது அவரைத் திரையுலகை நோக்கி அழைத்துப் போகிறது. கிடைத்த வாய்ப்பை உறுதியாகப் பற்றிக் கொண்டு நட்சத்திரமாகிறார் திலீப்குமார்

பள்ளி வயதில் மும்பைக்கு வந்து சேர்ந்த யூசுப்கானிற்கு நெருக்கமான தோழர் ராஜ்கபூர். அவருடன் கல்லூரியில் படித்தவர். விளையாட்டு தோழன். ராஜ்கபூரின் தந்தை பிரபல நடிகர். ஆகவே அவருக்குச் சினிமாவோடு தொடர்பு இருந்தது. ஆனால் யூசுப்கானிற்குச் சினிமா பார்ப்பதில் கூட அதிக ஆர்வம் கிடையாது.

இளைஞர்களாக இருந்த இருவரும் ஒன்றாக மும்பை வீதியில் சுற்றியலைந்தார்கள். இளம் பெண்களை ரசித்தார்கள். அப்போது இருவருக்கும் இருந்த கனவு கால்பந்தாட்ட வீரராக மாற வேண்டும் என்பதே. ஆனால் காலம் இருவரையும் திரை நட்சத்திரங்களாக்கி வாழ்வைத் திசைமாற்றியது

பிரபல நடிகையும் ஸ்டுடியோ உரிமையாளருமான தேவிகா ராணியின் அழைப்பின் பேரில் ஒரு நாள் அவரைச் சந்திக்கச் சென்றார் யூசுப்கான்.

உருது, இந்தி, ஆங்கிலம் சரளமாகப் பேசவும் எழுதவும் தெரிந்தவர் என்பதால் அது சார்ந்த வேலை ஏதாவது கிடைக்கக் கூடும் என நினைத்தார். ஆனால் தேவிகா ராணி அவரது தோற்றத்தைக் கண்டு நடிப்பதற்கு ஆர்வம் இருக்கிறதா என விசாரித்தார். இல்லை என மறுத்த போதும் தேவிகாராணி விடவில்லை. அவரை நடிக்க வைப்பதாக உறுதியளித்தார். தேவிகாராணியே யூசுப்கானின் பெயரை திலீப்குமராக மாற்றியவர்.

திலீப் குமார் தன்னை ஒரு நடிகராக எப்படி உருவாக்கிக் கொண்டார் என்பதை விரிவாக விளக்கியிருக்கிறார். கூடவே படத்தின் கதை, இசை, தயாரிப்பு விஷயங்கள் என அத்தனையிலும் தன்னை முழுமையாக ஈடுபத்திக் கொண்டதையும் கூறுகிறார். அவர் எவ்வாறு திரைக்கதையை எழுதினார் என்பதை உதாரணங்களுடன் விளக்குகிறார்.

1930களில் அவர் கண்ட காட்சி ஒன்றை நூலில் பதிவு செய்திருக்கிறார். பெஷாவரிலிருந்து ரயிலில் பயணம் செய்து வரும் போது சிறிய ரயில் நிலையங்களில் தேநீர் விற்பவர்கள் இந்து தேநீர், முஸ்லீம் தேநீர் என்று கூவிக் கொண்டு இரண்டுவிதமான கேன்களில் டீ விற்பனை செய்வார்கள். பொதுவாக இந்துக்கள் எவரும் இஸ்லாமியர்களுக்கான தேநீரை வாங்கிக் குடிக்க மாட்டார்கள். அது போலவே இஸ்லாமியர்களும். ஆனால் தாங்கள் அது போன்ற பேதம் எதையும் பார்க்கவில்லை. இரண்டினையும் குடிப்போம் என்று எழுதியிருக்கிறார்

வைஜெயந்திமாலாவோடு நடித்த படங்கள் பற்றியும் வைஜெயந்தி மாலா தனது நடிப்பை மெருகேற்றிக் கொள்ள எவ்வளவு தீவிரமாக ஒத்திகை பார்த்துக் கொள்வார் என்பதையும் விளக்கியிருக்கிறார்.

சென்னையில் எஸ்.எஸ். வாசன் தயாரிப்பில் Paigham திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். இந்தப் படப்பிடிப்பின் போது ஒரு நாள் பண்டித நேரு அவர்கள் படப்பிடிப்பைக் காண வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்பு அரங்கமே பரபரப்பானது.

எஸ். எஸ். வாசன் திலீப்குமாரை அழைத்து நேருவிற்கு வைஜெயந்தி மாலா முன்னதாக அறிமுகமானவர். வைஜெயந்தி மாலாவின் நடனத்தை நேரு ரசித்துப் பாராட்டியிருக்கிறார். ஆகவே அவர் முன்வரிசையில் நின்று நேருவை வரவேற்கட்டும் என்று கூறினார். இதே விஷயத்தை வைஜெயந்தியின் பாட்டி யதுகிரியம்மாள் முன்னதாகப் படப்பிடிப்பில் திலீப்குமாரிடம் சொல்லியிருந்தார். ஆகவே திலீப்குமார் நேரு வருகை தரும் நாள் அன்று முன்வரிசையில் நிற்கவில்லை.

நேருவின் கார் ஸ்டுடியோவிற்குள் வந்தது. எஸ். எஸ்.. வாசன் வரவேற்றார். வைஜெயந்தி மாலா புன்னகையோடு மாலை அணிவித்தார். நேருவின் கண்கள் கூட்டத்தில் யாரையோ தேடின. வரிசையின் கடைசியில் நின்ற திலீப்குமாரை தேடி வந்து யூசுப் உங்களைப் பார்ப்பதற்காகவே வந்தேன் என்று சொல்லி நேரு அவரது தோளில் கைபோட்டுக் கொண்டு ஒரு தோழனைப் போல நெருக்கமாக உரையாடத்துவங்கினார். தன் மீது நேரு கொண்டிருந்த அன்பால் நெகிழ்ந்து போனார் திலீப்குமார் . நேருவோடு அவருக்கிருந்த நெருக்கமான நட்பை நூலில் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்.

இது போலவே எஸ்.எஸ்..வாசனுடன் மதுரைக்குப் பயணம் சென்றதையும் பயணத்தின் போது அவர்களுக்குள் நடந்த உரையாடல்களையும் சுவாரஸ்யமாகப் பதிவு செய்திருக்கிறார்.

திலீப்குமார் தன்னோடு நடித்த நடிகை சாயிரா பானுவைத்திருமணம் செய்து கொண்டார். இது அவரது இரண்டு சகோதரிகளுக்கும் பிடிக்கவில்லை. ஆகவே சாயிராவை மிக மோசமாக நடித்தினார்கள். அவரை விட்டு பிரிக்கவும் முயன்றார்கள். அதை தான் எவ்வாறு சமாளித்தேன் என்பதை திலீப்குமார் உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்.  அது போலவே திருமணத்திற்கு முன்பாக தான் மதுபாலாவை காதலித்த விஷயத்தை வெளிப்படையாகவே ஒத்துக் கொள்கிறார்.

ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லீன் அவரை லாரன்ஸ் ஆப் அரேபியா படத்தில் நடிக்க வைக்க முயன்றதையும் சிறிய வேஷம் என்பதால் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் திலீப்குமார் கூறுகிறார்.

வாழ்க்கை வரலாறு என்ற போதும் இந்நூல் திலீப்குமாருக்கு விருப்பமான அவரது சில படங்களையும் அதன் நினைவுகளையும் மட்டுமே பதிவு செய்துள்ளது.

பின் இணைப்பாகத் திலீப்குமார் குறித்து ஹிந்தி திரையுலகின் பிரபலங்கள் அளித்துள்ள பாராட்டுகளும் இணைக்கப்பட்டுள்ளன.

0Shares
0