அகிரா குரசேவாவின் திரைப்படங்கள்
இயக்குனர் பாலு மகேந்திரா மிகச்சிறந்த திரைப்பட நூல்களைத் தனது நூலகத்தில் வைத்திருந்தார். ஒருமுறை அவரிடம் எந்தப் புத்தகத்தை மிகவும் அதிகமான தடவை வாசித்திருக்கிறார் என்று கேட்டபோது அவர் Hitchcock -François Truffaut என்று சொல்லி அதன் பிரதியைக் கையில் கொடுத்தார். அது ஹிட்ச்காக்கோடு பிரெஞ்சு இயக்குனர் பிரான்சுவா த்ருபோ நடத்திய உரையாடல்களின் தொகுப்பு. அதை வாசித்திருக்கிறேன் என்று பாலுமகேந்திராவிடம் சொன்னேன்.
அவர் உற்சாகத்துடன் அதே நூலின் இரண்டு மூன்று பிரதிகள் தன்னிடமிருக்கின்றன. வீட்டில், அலுவலகத்தில், ஏன் கழிப்பறை அலமாரியில் கூட அதன் பிரதி இருக்கிறது. ஒவ்வொரு இயக்குனரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகமது. ஹிட்ச்காக்கின் படங்களை மட்டுமின்றி ஒரு திரைப்படத்தின் பல்வேறு தளங்களை, இழைகளை, குறியீடுகளை, அறிந்து கொள்வதற்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது என்றார். பின்பு அதே நூலைப் பல்வேறு இயக்குனர்களின் அறையிலும் நான் பார்த்திருக்கிறேன். தமிழில் அந்நூல் முழுமையாக வெளியாகவில்லை. சில பகுதிகளை முன்பு நிழல் சினிமா இதழ் வெளியிட்டிருந்தது.
இது போல உலகத் திரைப்படங்களைப் புரிந்து கொள்வதற்குச் சில ஆதார நூல்கள் உள்ளன. அவற்றின் வழியே திரை அழகியலை, நுட்பங்களை நாம் ஆழ்ந்து அறிந்து கொள்ளலாம்
திரைப்படம் குறித்து எழுதப்பட்ட நூல்களை நான்கு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று கோட்பாடுகள் மற்றும் தத்துவம் சார்ந்து சினிமாவை அணுகி ஆழ்ந்து விமர்சிக்கும் வகையில் எழுதப்பட்டவை. இரண்டாவது சினிமா எப்படி உருவாகிறது என்று அதன் திரைக்கதை, கேமிரா, எடிட்டிங், இயக்கம் என்று தொழில்நுட்ப விஷயங்களை விளக்கிச் சொல்லும் புத்தகங்கள். மூன்றாவது திரையுலக வாழ்க்கை, திரை அழகியல் சார்ந்த ரசனை மற்றும் திரைப்படம் குறித்த சிந்தனைகள் கொண்ட நூல்கள். நான்காவது பத்திரிக்கைகளில் வெளியான திரைப்பட விமர்சனங்களின் தொகுப்பு. பரிந்துரைக்கும் படங்கள், மற்றும் இயக்குனர்கள் பற்றிய அறிமுக நூல்கள்.
உலக அளவில் கல்விப்புலம் சார்ந்த ஆய்வாளர்கள் திரைப்படம் பற்றி நிறைய நூல்களை எழுதியிருக்கிறார்கள். அதுவும் அமெரிக்கப் பல்கலைகழகங்களில் திரைப்படம் பயிலுகிறவர்கள், ஆய்வு செய்கிறவர்கள் இந்தியத் திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு தேசங்களின் திரையுலகம் குறித்து விரிவாக எழுதி வருகிறார்கள்.
உலக சினிமாவின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய நூல்கள் எனச் சில நூல்கள் தொடர்ந்து பட்டியலிடப்படுகின்றன. என் வாசிப்பில் முக்கியமானவை என நான் கருதும் சில புத்தகங்களைச் நேரம் கிடைக்கும் போதெல்லாம் திரும்பத் திரும்ப வாசிப்பது வழக்கம். அதில் முதன்மையானது டொனால்டு ரிச்சி(Donald Richie) எழுதிய The Films of Akira Kurosawa.
அகிரா குரசேவா படங்களின் கட்டமைப்பு, திரைமொழி, குறியீடுகள். தொழில்நுட்ப சாதனைகள் என்று பல்வேறு தளங்களையும், அழகியலையும் இயக்குனரின் தனித்துவத்தையும் அறிந்து கொள்வதற்கு உதவும் மிகச்சிறந்த புத்தகமது.
1965 பிப்ரவரி 1ம் தேதி இந்நூல் வெளியானது. குரசோவாவின் திரைப்படங்களைப் புரிந்து கொள்வதற்கு இன்றுவரை இதுவே சிறந்த நூலாகக் கருதப்படுகிறது. அகிரா குரசேவா பற்றி விரிவாக ஆங்கிலத்தில் வெளியான முதற்நூலாகவும் இது கருதப்படுகிறது.
அமெரிக்கரான டொனால்டு ரிச்சி 1947ல் ஜப்பானுக்குச் சென்றார். சின்னஞ்சிறு வேலைகள் செய்து கொண்டு அங்கேயே வசிக்கத் துவங்கினார். ஜப்பானிய கலை மற்றும் சினிமா மீது அவர் கொண்டிருந்த ஆர்வம் காரணமாக ஸ்டுடியோக்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் வழியாக இயக்குனர் ஒசுவின் நட்பு உருவானது. ஜப்பானிய சினிமாவை உலக அரங்கில் கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்த செயல்பாடுகள் துவங்கிய காலமது. ரிச்சி அதற்கு முக்கிய உறுதுணையாக விளங்கினார். இன்று உலக அரங்கில் ஜப்பானிய சினிமா பெற்றுள்ள இடம் ரிச்சியின் தொடர் செயல்பாட்டின் விளைவே.
ஜப்பான் முழுவதும் பயணம் செய்து அதன் பண்பாடு மற்றும் கலைகள் குறித்துத் தொடர்ந்து எழுதி வரத்துவங்கினார் ரிச்சி. குறிப்பாக மரபுக்கலைகள். ஒவியங்கள். இசை நாடகம் குறித்து விரிவாக அறிந்து கொண்டார். அது போலவே டோக்கியோ நகரின் வாழ்க்கை மற்றும் பெருநகர வளர்ச்சியின் அடையாளங்கள் குறித்தும் விரிவாக ஆராயத் துவங்கினார்.
ஜப்பானிய சினிமாவின் முக்கியத்துவம் மற்றும் அழகியல் குறித்து ரிச்சி அமெரிக்க இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். ஒசுவின் திரைப்படங்கள் குறித்த அவரது கட்டுரைகள் மிகுந்த பாராட்டினைப் பெற்றன. மேற்கத்திய திரைப்படங்களுக்கு மாற்றான அழகியலை ஜப்பானிய சினிமா எவ்வாறு உருவாக்கியது என்பதை விமர்சகர்கள் புரிந்து கொள்ளத் துவங்கினார்கள்
சினிமாவைப் பற்றி எழுதியதோடு மட்டுமின்றி நேரடியாக ஜப்பானிய சினிமாவிலும் பங்களிப்பு செய்யத்துவங்கினார். திரைக்கதை ஆசிரியராகவும் ஆவணப்பட இயக்குனராகவும் விளங்கினார். Akira Kurosawa வின் Throne of Blood (1957), Red Beard (1965), Kagemusha (1980) and Dreams (1990) ஆகிய படங்களுக்கு ஆங்கிலச் சப்டைட்டில் உருவாக்கத்தை ரிச்சியே மேற்கொண்டார். தனது 86 வது வயதில் ரிச்சி இறந்த போது ஜப்பானிய திரையுலகமே ஒன்று கூடி தனது அஞ்சலியை செலுத்தியது.
ஜப்பானிய சினிமாவின் வரலாற்றையும். சமகால ஜப்பானிய திரைப்படங்கள் பற்றியும் முக்கியமான புத்தகங்களை எழுதியிருக்கிறார். A Hundred Years of Japanese Film – A Concise History, Ozu His Life and Films, The Japanese Movie. An Illustrated History Japanese Cinema: Film Style and National Character ,The Donald Richie Reader: 50 Years of Writing on Japan போன்றவை அவரது முக்கியமான பிற நூல்கள்.
••
டொனால்டு ரிச்சியின் புத்தகத்தினைத் திறந்தால் ஒரு பக்கம் கையில் வாளுடன் அகிரா குரசேவா படம். அதன் கிழே அதே போஸில் கையில் வாளுடன் தொஷிரே மிபுனே படம். ஒரு இயக்குனரை நடிகர் எவ்வளவு துல்லியமாகப் பிரதிபலிக்க முடியும் என்பதன் உதாரணம் போல அந்தப் புகைப்டம் இருக்கிறது. எத்தனை முறை பார்த்தாலும் அப்படம் தரும் பரவசம் அப்படியே இருக்கிறது. இரண்டு படங்களில் குரசேவா உதட்டில் மெல்லிய புன்னகை ஒளிர்கிறது. ஆனால் மிபுனேயிடம் தீவிரமான கண்கள் மற்றும் இறுக்கமான உதடு காணப்படுகிறது. குரசேவாவின் தொப்பி அவரது அடையாளங்களில் ஒன்று.
முகப்புப் பக்கம் ஒன்றில் அகிரா குரசேவா எப்படிபட்டவர் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ள சிறிய உரையாடல் ஒரு பக்கம் அளவிற்குப் பதிப்பிக்கபட்டிருக்கிறது. அதை எழுதியிருப்பவர் அவரது திரைக்கதையாசிரியர் சியாகி (Chiaki). செவன் சாமுராய் படம் பொருளாதாரச் சிக்கலில் மாட்டி எடுக்கப்படாமல் போய்விடுமோ என்ற நிலை ஏற்பட்ட போது அவர்களுக்குள் நடந்த உரையாடலது. அதன் கடைசிப்பத்தியில் குரசேவா கோல்ப் விளையாடும் போது பந்தை வேகமாக அடிக்கிறார். அது இலக்கற்றுப் போகிறது. ஆனால் சியாகி கச்சிதமாகப் பந்தை அடிக்கிறார். “ஏன் தன்னால் அப்படிப் பந்தை சரியாக அடிக்க முடியவில்லை“ என்று குரசேவா கேட்கிறார் அதற்குச் சியாகி தரும் பதில்
“சினிமா இயக்கும் போது நீங்கள் ஒரு வேதாளம் போலச் செயல்படுகிறீர்கள். ஆனால் மற்ற நேரங்களில் அந்தச் சக்தி எங்கே மறைந்து போகிறது என்று தெரியவில்லை. ஒரு சிறுமியை போல கோல்ப் பந்தை அடிக்கிறீர்கள்“ என்று சொல்கிறார்.
அதற்குக் குரசேவா சொல்லும் பதில்
“எல்லாவற்றிலும் நான் முழுத் திறமையைக் காட்டமுடியாது தானே. ஏதாவது ஒன்றில் தான் முழுமையாகத் தன் திறமை வெளிக்காட்ட முடியும்“ என்கிறார். சினிமா தான் அகிரா குரசேவாவின் முழுமையான திறமை வெளிப்பட்ட இடம். திரையில் அவர் உருவாக்கிய விந்தை இன்றும் அப்படியே தொடருகிறது. காலத்தால் பின்தள்ளமுடியாத கலைப்படைப்புகளாக அவை ஒளிர்கின்றன.
குரசேவாவின் சினிமா என்பது ஜப்பானிய பண்பாட்டின், வரலாற்றின். நினைவுகளின் தொகுப்பு. ஜப்பானிய வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை அவர் தனது திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். சாமுராய்கள் என்ற போர் வீரர்கள் குறித்து உலகம் அறிந்து கொண்டதும் கொண்டாடியதும் குரசேவாவின் சினிமாவிற்குப் பிறகே.
குரசேவாவின் முதற்படம் துவங்கி ரெட்பியர்டு வரை இதில் ஆராயப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையிலும் ஆரம்பமாக அந்த திரைப்படம் குறித்த அறிமுகம் அதன் தொடர்ச்சியாக STORY AND TREATMENT என்ற பகுதி, அடுத்து CHARACTERIZATION என்று கதாபாத்திரங்களை எப்படி உருவாக்கியுள்ளார் என்பதை விரிவாக ஆராய்கிறார். கடைசியாக CAMERA. INFLUENCES. STYLE என அதன் திரைமொழி மற்றும் வெளிப்பாட்டு முறைகள் குறித்த ஆய்வினை மேற்கொள்கிறார். இந்தப் பகுதிகளுக்கு உரிய புகைப்படங்கள், ஒவியங்கள் இணைக்கபட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு.
1954ல் செவன் சாமுராய் வெளியானது. சாமுராய்கள் பற்றிய படங்கள் ஜப்பானில் முன்னதாகவே வெளிவந்துள்ளன. ஆனால் அவற்றில் சாமுராய்கள் சில காட்சிகளில் மட்டுமே சித்தரிக்கபட்டார்கள். ஒன்றிரண்டு திரைப்படங்கள் அவர்களின் காதல் மற்றும் பகையை முதன்மைப்படுத்தி உருவாக்கபட்டிருக்கின்றன. ஆனால் அகிரா குரசேவா வறுமையில் வாடும் சாமுராய்களை முதன்மைப்படுத்தித் தனது படத்தை உருவாக்கியிருக்கிறார்.
பசி தான் அவர்களை வழிநடத்துகிறது. உணவு கிடைக்கும் என்பதற்காகத் தான் அவர்கள் கிராமத்தைக் காப்பாற்ற போகிறார்கள். விவசாயிகளுக்கும் பசித்த சாமுராய்களுக்கும் இடையில் நட்பு உருவாகிறது. ஏழு சாமுராய்களும் ஏழு வகையான மனிதர்கள்.
சாமுராய்களை யதார்த்தமாகக் காட்டவேண்டும். குறிப்பாக அவர்களைப் பற்றிய பொதுபிம்பத்தை மறுஉருவாக்கம் செய்ய வேண்டும், சரித்திரப்படங்கள் என்றாலே போர்களம். மன்னர்கள் என்ற எண்ணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றே குரசேவா விரும்பினார்.
படத்தில் சாமுராய்கள் தான் வித்தியாசப்படுத்தபட்டு அறிமுகமாகிறார்கள். கொள்ளைக்காரர்களுக்குத் தனித்துவமில்லை. அவர்கள் கூட்டமாகவே வருகிறார்கள். சண்டையிடுகிறார்கள்.
சிமுரா என்ற மூத்த சாமுராய் ஒரு துறவியைப் போலவே படம் முழுவதும் நடந்து கொள்கிறார். நிதானம். அனுபவத்திலிருந்து திட்டமிடுவது. கவனமாகச் செயல்படுவது. விவசாயிகள் தங்களை மறந்துவிட்டார்கள் என்ற போதும் அது குறித்து வருத்தபடாத மனநிலை. தாங்கள் பிழைத்திருப்பதே பெரிய விஷயம் என நினைப்பது என அவர் போர்வீரனும் துறவியும் கலந்த மனிதராகவே சித்தரிக்கபடுகிறார்.
கிராமத்திலுள்ள பார்வையற்ற முதியவர் காலத்தின் அடையாளம் போலவே சித்தரிக்கபடுகிறார். அவரிடம் தான் கிராமவாசிகள் ஆலோசனை கேட்கிறார்கள். அவரது முகம் க்ளோசப் காட்சிகளில் கிரேக்க தெய்வம் போல தோற்றம் அளிக்கிறது.
கொள்ளையர்களிடம் இருந்து விவசாயிகளைக் காப்பாற்ற முயலும் சாமுராய்கள் அவர்கள் மீது பரிதாபம் கொள்வதில்லை. ஒரு காட்சியில் மிபுனே கிராமத்து விவசாயிகள் நம்மை ஏமாற்றுகிறார்கள். தானியத்தை வைத்துக் கொண்டே இல்லை என்று பொய் சொல்லுகிறார்கள். அவர்கள் நம்மை திட்டமிட்டே ஏமாற்றுகிறார்கள் என்று கோபம் கொள்கிறான்.
இறுதியில் கொள்ளையர்களுடன் சாமுராய்கள் சண்டையிடும் காட்சிகளில் எவ்வளவு ஷாட்டுகள் உள்ளன, எப்படி அந்தச் சண்டையின் வேகத்தைக் குரசேவா அதிகப்படுத்தினார். எத்தனை மாறுபட்ட கோணங்கள் காட்டப்படுகின்றன என்று ரிச்சி அழகாக விளக்குகிறார்.
படத்தின் இறுதிக்காட்சியில் விவசாயிகள் மீண்டும் நடவு நடத்துவங்குகிறார்கள். படத்தின் மிகவும் உயிர்ப்புமிக்கக் காட்சியது. விவசாயிகளின் சந்தோஷமும் இசையும் ஒன்று சேருகின்றன. கிராமம் தன் இயல்பிற்குத் திரும்புகிறது. கவிதையின் உச்சநிலை போன்ற காட்சியது. இனி அந்தக் கிராமத்திற்குச் சாமுராய்கள் தேவையில்லை. அவர்கள் விடைபெறுகிறார்கள். வழக்கமான திரைப்படங்கள் கொள்ளையர்களைக் கொன்று முடிப்பதுடன் முடிந்துவிடக்கூடியவை. அதற்குப் பிறகான இக்காட்சிகளே படத்தின் தனித்துவம். அது தான் குரசேவாவின் கலைவெளிப்பாடு.
செவன் சாமுராய் படம் இருநூறு நிமிசங்கள் ஒடக்கூடியது. முழுமையான அந்தத் திரைப்படம் 1954 சில இடங்களில் மட்டுமே காட்டப்பட்டன. அதன்பிறகு அதன் சுருக்கபட்ட வடிவம் (160 நிமிஷங்கள்) ஜப்பான் முழுவதும் திரையிடப்பட்டன. பின்பு அதையும் சுருக்கியே வெளிநாடுகளுக்கு அனுப்பினார்கள்.
ரிச்சி அகிரா குரசேவாவின் மறக்கமுடியாத திரைமனிதர்களை. அவர்களின் உலகை, அதை உருவாக்கிய விதத்தை மிக விரிவாக, ஆழமாக விளக்குகிறார்.
டொனால்டு ரிச்சி போன்ற ஒருவரால் ஒரு தேசத்தின் சினிமாவையே தூக்கி நிறுத்திவிட முடிகிறது. உலக அங்கீகாரத்தைப் பெறவைக்க முடிகிறது. ஐம்பது ஆண்டுகாலம் தொடர்ந்து ஜப்பானிய சினிமாவை. கலைகளை முதன்மைப்படுத்தி எழுதியும் பேசியும் வந்தார் ரிச்சி. அதுவே அவரது ஆளுமையின் அடையாளம்.