திறக்கப்படாத கதவு

The Door என்ற ஹங்கேரியத் திரைப்படம் ஒன்றினைப் பார்த்தேன்,  இஸ்த்வான் ஸாபோ (István Szabó)இயக்கியது, ஸாபோ ஹங்கேரியின் மிக முக்கியமான, மூத்த தலைமுறை இயக்குனர். இவரது திரைப்படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கின்றன, இவரது மெபிஸ்டோ திரைப்படம் சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதினைப் பெற்றுள்ளது,

ஸாபோவின் திரைமொழி கவித்துவமானது, புறக்கணிப்பும் அதனால் உருவாகும் அவமானமும் தான் அவரது படங்களின் மையப்பொருள், அடக்கிவைக்கபட்ட மனஉணர்ச்சிகளின் கொந்தளிப்பையும், உறவுகளின் ஊசலாட்டத்தையும் ஸாபோ மிகவும் திறமையாகக் கையாளக்கூடியவர். அவரது திரைப்படங்களில் வரும் பெண்கள் அழுத்தமான கதாபாத்திரங்களாக இருக்கிறார்கள், சிம்பொனி இசை போல பல்வேறு எழுச்சிகளும் ஊடுகலவையும் கொண்ட  திரைக்கதை வடிவமே இவரது திரைப்படங்களின் தனித்துவம்

sunshine என்ற இவரது படம் அபூர்வமானது, ஹங்கேரியின் நூறு வருஷ வாழ்க்கையை மூன்றரை மணிநேரத் திரைப்படமாக உருவாக்கியுள்ளார், ஒரு தேசத்தின் அரசியல் மற்றும் அதிகாரம் ஒரு தனிமனிதனின் குடும்பத்தில் என்ன விளைவுகளை உண்டுபண்ணுகிறது என்பதை இப்படம் துல்லியமாக விவரிக்கிறது, சமகால உலகத்  திரைப்படங்களில் இப்படம் மிகவும் முக்கியமானது

அவரது சமீபத்தைய படமான The Door, ஹங்கேரியின் புகழ்பெற்ற எழுத்தாளரான மாக்தா ஸாபோவின் நாவலை மையமாகக் கொண்டது, திறக்கப்படாத ஒற்றை கதவு என்ற குறீயீட்டினை முன்வைத்து இரண்டு பெண்களுக்கு இடையிலான உறவினை படம் முதன்மைபடுத்துகிறது.  1960களில் நடக்கும் கதையிது

எமரென்ஸ் எனப்படும் வேலைக்காரப் பெண்ணுக்கும் மாக்தா என்ற பெண் எழுத்தாளருக்கும் இடையிலான உறவும் நெருக்கமும் பரஸ்பர புரிந்து கொள்ளலும் தான் இப்படம், இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களுக்கு இடையில் நகரும் கதையின் ஊடே கடந்த கால நினைவுகள் ஒருவரின் வாழ்வை எவ்வளவு பாதிக்கின்றன என்பதை ஸாபோ மிக அழகாக சித்தரித்திருக்கிறார்

எமரென்ஸாக நடித்திருப்பவர் ஹெலன் மிரன்,  துணிதுவைத்துக் கொண்டிருக்கும் ஆரம்பக் காட்சி துவங்கி மருத்துவமனையில் அனுமதிக்கபடும் இறுதிக் காட்சிகள் வரை எமரென்ஸ்ஸின் கொந்தளிக்கும் மனநிலை தான் படத்தின் சிறப்பம்சம், ஸாபோவின் திரைப்படங்களில் மிக அழுத்தமாக உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் எமரென்ஸ், எத்தனை விதமான உணர்ச்சி நிலைகள், மேகம் கலைந்து போவது போல முகம் மாறிக் கொண்டேயிருக்கிறது, கோபம், வெறுப்பு, அழுகை, சிரிப்பு, அமைதி, ஆத்திரம். இயலாமை, தவிப்பு என்று ஹெலன் மிரன் தனது ஆகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்,

இங்கிலாந்தின் ராணியாக இவர் நடித்த The Queen திரைப்படம் இவரது மற்றொரு சாதனை, இது போலவே ஹெலன் மிரனின் சிறந்த நடிப்பில் உருவான படம் டால்ஸ்டாயின் இறுதிநாட்களை விவரிக்கும் The Last Station. இதில் சோபியா டால்ஸ்டாயாக நடித்திருக்கிறார் ஹெலன், சமகால உலகசினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகை இவர், தனது மற்றபடங்களில் இருந்து The Door படத்தில் முற்றிலும் மாறுபட்டதொரு கதாபாத்திரத்தை ஹெலன் ஏற்று நடித்திருக்கிறார், இப்படத்தின் வெற்றிக்கு இவரது நடிப்பு முக்கியக் காரணம்

மார்டினா கீடெக் எழுத்தாளர் மாக்தாவாக நடித்திருக்கிறார், இப்படத்தினை பார்க்க துவங்கியதும் எனக்கு லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான ஜோர்ஜ் லூயி போர்ஹேயின் நினைவு வந்த்து. இவரது வீட்டில் பணியாளராக வேலை செய்த அலெசாந்ரோ உவேதா என்ற பெண்,  போர்ஹே பற்றி எழுதிய நினைவு குறிப்பான El Señor Borges  என்ற புத்தகம் ஒரு எழுத்தாளருக்கும் 34 வருஷங்கள் அவரது வீட்டில் வேலை செய்த ஒரு வேலைக்காரப்பெண்ணிற்குமான பரஸ்பர அன்பை, புரிதலைப்பற்றியது, அது போர்ஹே பற்றி இருந்த பிம்பங்களை முற்றிலும் மாற்றி அமைத்த்த ஒன்று.

இது போலவே  தத்துவஞானி ஜே, கிருஷ்ணமூர்த்தியின் சமையற்காரர் Michael Krohnen எழுதிய The Kitchen Chronicles: Lunches with J. Krishnamurti  என்ற சுவாரஸ்யமான நினைவுக்குறிப்பும் முக்கியமானது. இந்த இரண்டு புத்தகங்களுக்கும் நாம் அறிந்த ஆளுமைகளின் சுவாரஸ்யமான மறுபக்கத்தை நமக்கு காட்டுகின்றன. அது போன்ற ஒரு முயற்சியே இப்படம்

மாக்தா ஸாபோ அரசியல் காரணங்களாக புறக்கணிக்கபட்ட ஒரு எழுத்தாளர், எழுதுவதற்கு ஏற்றது போல தனிமை நிரம்பிய புதுவீட்டிற்குக் குடியேறுகிறார், மாக்தாவிற்கு குழந்தைகள் இல்லை,  அவளது கணவர் மனைவியின் எழுத்துபணிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார், மாக்தாவின் புதுவீடு மிகப்பெரியது, அதை தினசரி சுத்தம் செய்யவும், துணிகளைத் துவைக்கவும், சமையல் பணிகளில் உதவி செய்யவும் ஆள் தேடும் மாக்தா, எமரென்ஸ் பற்றி கேள்விபடுகிறாள், அவளை வேலைக்கு வைத்துக் கொள்ள அழைக்க செல்வதில் இருந்து படம் துவங்குகிறது

முதற்காட்சியிலே எமரென்ஸின் இயல்பு சிறப்பாக வெளிப்பட்டுவிடுகிறது, அவள் துணி துவைப்பதிலே முழுக்கவனத்துடன் இருக்கிறாள், தனக்கு புதிய வேலை கிடைத்திருப்பதை பற்றி அவள் கண்டுகொள்ளவேயில்லை, மாக்தாவிற்குள் இந்த பெண் முரட்டுதனம் கொண்டவளாக இருக்கிறாளே என்ற பயம் உருவாகிறது, ஆனாலும் உதவிக்கு ஆள் வேண்டுமே என்று பரிவாகப் பேசுகிறாள், எமரென்ஸ் வீட்டுவேலைகள் செய்வதில் கில்லாடி, ஆனால் அவள் அதற்காக மற்றவர்களிடம் பணிந்து போகிறவள் இல்லை, தனது வேலையை அவள் ரசித்து ரசித்து செய்கிறாள், கடவுளை வணங்குவதற்கு தேவாலயத்திற்குப் போவதை விட தெருவை சுத்தம் செய்வது மேலான செயல், இயேசு அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறார் என்று ஒரு காட்சியில் எமரென்ஸ் சொல்கிறாள், அது தான் அவளது இயல்பு,

முன்கோபம், முரட்டுதனம், பிடிவாதம் கொண்ட எமரென்ஸிற்குள் அன்பும் ஏக்கமும் கொண்ட இன்னொரு பெண் இருப்பதை மாக்தா புரிந்து கொள்கிறாள்,  எமரென்ஸ் மாக்தாவின் கணவரிடம் மிடுக்காக நடந்து கொள்ளும் முறை,  வீட்டில் எந்த பொருள் எந்த இடத்தில் வைக்கபட வேண்டும் என்பதில் காட்டும் கறார்தன்மை, உணவை வீணடிக்க்கூடாது என்பதில் அவள் காட்டும் தீவிர அக்கறை, தன்னை அவமதிக்கிறார்கள் என்று அறிந்தவுடன் மீதமான உணவுகளை கழிப்பறையில் தூக்கிப்போட்டு ஷாம்பெயின் பாட்டிலை ஆத்திரத்துடன் உடைக்கும் வெறி என எமரென்ஸின் தீவிர மனக்கொந்தளிப்புகளே படத்தின் முக்கிய காட்சிகளாக விரிகின்றன,

அதே நேரம் அவள் தனது தவறுகளை உணருகிறாள், அதற்காக மன்னிப்பு கேட்க அவள் தயங்குவதேயில்லை, ஒரு நாள் எமரென்ஸைத் தேடி  மாக்தா அவளது வீட்டிற்குப் போகிறாள், எமரென்ஸ் கதவைத் திறக்கமறுக்கிறாள், தனது வீட்டிற்குள் இன்னொரு ஆள் நுழைவதை தன்னால் அனுமதிக்கமுடியாது என்று கத்துகிறாள், மூடப்பட்ட அந்த கதவின் பின்னால் என்ன இருக்கிறது என்ற புதிர் படம் முழுவதும் தொடர்கிறது

மாக்தாவின் கணவர் திபோர் உடல்நலமற்று மருத்துவமனையில் இருக்கும் போது அவருக்காக விஷேச உணவு தயாரித்து கொண்டுவருகிறாள் எமரென்ஸ், கவலையில் சாப்பிட மறுத்து படுத்துகிடக்கும் மாக்தாவிற்கு வலுக்கட்டாயமாக உணவை வாயில் புகட்டிவிடுகிறாள், அந்த நிலையில் எமரென்ஸ் ஒரு கருணை மிக்க தாதி என்பதை மாக்தா உணர்ந்து கொள்கிறாள், இரண்டு பெண்களும் பரஸ்பரம் மனம் விட்டுப் பேசிக் கொள்கிறார்கள்,

எழுத்து, இலக்கியம், சமூக அக்கறை கொண்ட மாக்தாவின் உலகம் ஒரு பக்கம், துணி துவைப்பது, சமையல் செய்வது, கொட்டும் பனியைச் சுத்தம் செய்வது என அடுத்தவருக்காகவே வாழ்வதான எமரென்ஸின் வாழ்க்கை மறுபக்கம், இரண்டுக்குமான இடைவெளியும், அதன் காரணங்களும் துல்லியமாக காட்சிபடுத்தபட்டிருக்கின்றன,

இரண்டு பெண்களும் மன அளவில் தாங்கள் ஒன்றே என்று உணர்கிறார்கள், இருவருமே புறக்கணிப்பை, அவமானத்தை உள்ளுக்குள் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள், அவரவருக்கான உலகம் என்று சிறிய வட்டத்திற்குள் வாழ்கிறார்கள், திறக்கபடாத அவர்களின் மனக்கதவு மெல்லத் திறந்து பரஸ்பரம்  அந்தரங்க உலகிற்குள் பிரவேசிக்கிறார்கள், உண்மையில் மாக்தா எமரென்ஸிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கிறாள்,

ஒரு நாள் இடியுடன் பலத்த மழை பெய்கிறது, எமரென்ஸ் அதைக் கண்டு பயந்து அலறி ஒடுகிறாள், ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்று மாக்தா கேட்கும் போது தனது சிறுவயதில் இடி விழுந்து தனது தங்கைகள் கருகிப்போன கதையைச் சொல்கிறாள் எமரென்ஸ், படத்தின் மறக்கமுடியாத பகுதியது, கருகிப்போன அந்த குழந்தைகளின் உருவம் கண்ணை விட்டு அகல மறுக்கிறது, வலியும் வேதனையுமான அந்த நிகழ்வு படத்தின் முக்கியப்புள்ளி,  அந்த சம்பவத்தின் எதிரொலி தான் இன்றைய எமரென்ஸின் வாழ்க்கை

எமரென்ஸ் நாயை, பூனைகளை மிகவும் நேசிக்கிறாள், அன்போடு உணவு தருகிறாள், கட்டிக் கொண்டு அழுகிறாள், மனிதர்கள் அவளைக் கைவிட்ட போது விலங்குகளின் வழியே மட்டுமே அவள் ஆறுதல் அடைகிறாள், மாக்தாவிற்கு தனது நாய் தன்னை விட எமரென்ஸை அதிகம் நேசிக்கிறது என்பது ஆச்சரியமளிக்கிறது

எமரென்ஸின் நெருக்கம் மாக்தாவிடம் நிறைய மாற்றங்களை உண்டாக்குகின்றன, அவளை ஒரு தோழியைப் போல நடத்துகிறாள், தனது வீட்டினை முழுமையாக அவளிடம் ஒப்படைக்கிறாள், இது மாக்தாவின் கணவன் திபோருக்கு பிடிப்பதில்லை, தனது புத்தக அலமாரியில் யார் சீனக் களிமண் பொம்மைகளை வைத்தது என்று கத்துகிறான், அந்த பொம்மை அங்கே தான் இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறாள் எமரென்ஸ், மாக்தாவின் கணவன் அதை தூர எறிந்துவிடும்படியாக கத்துகிறான்,

மாக்தாவிற்கு என்ன செய்வது என்று தெரியாத தடுமாற்றம் ஏற்படுகிறது, அதை கண்ட எமரென்ஸ், நீ உனக்காக வாழ மாட்டாயா, நீ அடுத்தவர் பேச்சை கேட்கும் ஒரு அடிமை தானா என்று கோவித்துக் கொண்டு, ரசனை கெட்ட குடும்பத்தில் என்னால் வேலைக்காரியாக பணியாற்ற முடியாது என்று வெளியேறி போய்விடுகிறாள்

மாக்தா அவளை சமாதானம் செய்து அழைத்துவந்து அந்த நாய்பொம்மையை அதே இடத்தில் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறாள் நாய் பொம்மையை புதிய இடத்தில் வைத்து பார்த்து சந்தோஷப்பட்ட எமரென்ஸ், அடுத்த விநாடி அதை தானே தூக்கி போட்டு உடைத்துவிட்டு தனது எஜமானருக்கு பிடிக்காத ஒன்று வீட்டிற்குள் இருக்க்கூடாது என்று தனது உரிமையை நிலைநாட்டிய பின்பு பணிவான வேலைக்காரியாக நடந்து கொள்கிறாள், இந்த எதிர்நிலை தான் எமரென்ஸை முக்கியமான கதாபாத்திரமாக மாற்றுகிறது

முடிவில் உடல்நலமற்றுப் போன எமரென்ஸை காப்பாற்ற மாக்தா மேற்கொள்ளும் முயற்சிகளும், அதில் அவள் அடையும் குற்றவுணர்ச்சியும், உடைக்கப்பட்ட கதவின் பின்னால் இருந்த ரகசியமும் பார்வையாளனை ஆழமான மனப்பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றன

ஸாபோ இப்படத்தினை ஆங்கிலத்தில் உருவாக்கியிருக்கிறார், இரண்டு பெண்களுக்கு இடையில் நடைபெறும் உரையாடல்கள் தான் படத்தின் பலம், அதிலும் எமரென்ஸ்  சாட்டையடி போல பேசுகிறாள்,  பனிபெய்யும் வீதிகள், அலங்காரமான வீடு, வேலைக்காரியின் சிறிய குடியிருப்பு. ஒரு தேவாலயம் இவையே முக்கியமான கதை நிகழுமிடங்கள், பெரும்பான்மை காட்சியில் அவர்களின் மௌனத்தின் தூவல் போலவே பனி பெய்து கொண்டிருக்கிறது

கடந்தகாலத்தின் நினைவுகள் எமெரென்ஸைத் துரத்திக் கொண்டேயிருக்கின்றன, அன்பிற்கான ஏக்கம் அவளை அலைக்கழிக்கிறது, அவள் மற்றவர்களை நேசிப்பதை போல தன்னை மற்றவர்களும நேசிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்,  மாக்தாவின் அன்பு அவளுக்கு ஆறுதல் தருகிறது, இரண்டு பெண்களின் கடந்தகாலமும் ஒரு புள்ளியில் ஒன்றுகலந்துவிடுகின்றன,

தனது எழுத்துப்பணிக்கு பெரிதும் உந்துசக்தியாக இருப்பவள் எமரென்ஸ் என்று தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவிக்கிறாள் மாக்தா, இது வெறும் நன்றியுணர்ச்சியில்லை, மாறாக எமரென்ஸை அவள் புரிந்து கொண்டதன் வெளிப்பாடு,

திறக்கபடாத கதவு என்ற படிமம் படத்தில் சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது, பனியில் மாக்தா நடந்துவருவது, வீதியை சுத்தம் செய்யும் எமரென்ஸ், அவளது கடந்தகாலக் காட்சிகள், துணிதுவைக்கும் எமரென்ஸின் தோற்றம் என காட்சிகளை ரெம்பிராண்டின் ஒவியங்களை போல உருவாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் Elemér Ragályi, உணர்ச்சிகளின் நகர்வே படத்தின் ஆதார இயக்கம் என்பதால் அதற்கு கூடுதல் துணை செய்வது போல அமைந்திருக்கிறது பின்னணி இசை,

புரிந்து கொள்ளபடாத பெண்ணின் அன்பு மிகுந்த துயரமானது என்பதையே படம் விவரிக்கிறது, இஸ்த்வான் ஸாபோ எவ்விதமான திடுக்கிடும் திருப்பங்கள், ஆரவாரங்கள் எதுவுமின்றி, ப்யானோ இசை கேட்பது போல சீராக, இயல்பாக, அழுத்தமாக இத்திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார், அது தான் இப்படத்தின் வெற்றிக்கான முக்கிய காரணம்

••••

0Shares
0