1993 ஆக இருக்கலாம். The Marriage of Maria Braun படம் திரையிடுவதைக் காணுவதற்காகச் சென்னை பிலிம்சேம்பர் சென்றிருந்தேன். அங்கே படம் பார்ப்பதற்காக வந்திருந்த மொழிபெயர்ப்பாளர் சதாசிவம் கன்னட எழுத்தாளர் எஸ்.திவாகரின் சிறுகதைகளை அறிமுகம் செய்து உரையாடினார்.
அரைமணி நேரத்திற்கும் மேலாகத் திவாகரைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். திவாகர் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வேலை செய்வதாகச் சொல்லி நாம் ஒரு நாள் சந்திப்போம் என்றார்.
சில ஆண்டுகளுக்குப் பின்பு எஸ்.திவாகரின் சிறுகதைகளை அந்தரத்தில் நின்ற நீர் என மொழியாக்கம் செய்து சதாசிவம் வெளியிட்டார். அந்த நூலை விரும்பி வாசித்தேன்.

திவாகரின் சிறுகதைகள் மிகவும் பிடித்திருந்தன. காஃப்காவை நினைவுபடுத்து எழுத்துமுறை. குறிப்பாக மேஜிகல் ரியலிச பாணியில் எழுதப்பட்ட அவரது சிறுகதைகள் தனித்துவமாக இருந்தன.

திவாகர் சென்னையைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். அவரது பெரும்பான்மைச் சிறுகதைகள் சென்னையில் நடக்கின்றன.
1970 -80களின் சென்னை வாழ்க்கையைத் திவாகர் அசலாகப் பதிவு செய்திருக்கிறார்.
சென்னைப் பற்றி தனது மகாமசானம் கதையில் புதுமைபித்தன் சொல்வது இன்றும் மாறவேயில்லை.
நாகரிகம் என்பது இடித்துக் கொண்டும் இடிபட்டுக் கொண்டும் போகவேண்டிய ரஸ்தா என்பதைக் காட்டும்படியாகப் பட்டணம் மாறி விடுகிறது. அதிலும் தேகத்தின் நரம்பு முடிச்சுப் போல, நாலைந்து பெரிய ரஸ்தாக்களும், டிராம் போகும் ரஸ்தாக்களும் சந்திக்கும் இடமாகிவிட்டாலோ தொந்தரவு சகிக்கவே முடியாது. எல்லாம். அவசரம், அவசரம், அவசரம்
அதே சென்னையின் பரபரப்பும். மக்கள் நெரிசலும், சினிமாவின் மினுமினுப்பும், சாக்கடை வழிந்தோடும் குறுகிய தெருக்களும், கூவம் ஆற்றின் துர்நாற்றமும், புறக்கணிக்கபட்ட குடிசைகளும், சிறுவணிகர்கள் மற்றும் நடைபாதை வாசிகளும், அரசியல் சினிமா கட்அவுட்களும் நடுத்தர வர்க்க அவலங்களும் திவாகரின் சிறுகதைகளில் பதிவாகியுள்ளன.
சதாசிவம் மறைந்துவிட்டார். திவாகரும் ஓய்வு பெற்றுக் கர்நாடகா சென்றுவிட்டார். அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனாலும் தனது கதைகளின் வழியாகத் திவாகர் இன்றும் மதராஸில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது

சமீபத்தில் இதிகாசம் என்ற அவரது சிறுகதைகளின் தொகுப்பினை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. கே. நல்லதம்பி மொழியாக்கம் செய்துள்ளார். இத் தொகுப்பிலுள்ள பெரும்பான்மைக் கதைகள் சென்னையை மையமாகக் கொண்டதே.
••
கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் மதராஸை பின்புலமாகக் கொண்டு சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. பழைய மதராஸ் ராஜஸ்தானியின் பிரஜைகள் தானே அனைவரும். ஆகவே தென்னிந்திய எழுத்தாளர்களில் பலர் மதராஸில் கல்வி பயின்றிருக்கிறார்கள். வேலை பார்த்திருக்கிறார்கள். பத்திரிக்கை, சினிமா, இசை, நாடகப் பணிகளுக்காகச் சென்னைக்கு வந்திருக்கிறார்கள். சென்னையில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் நினைவில் பதிந்துள்ள சென்னை வேறுவிதமானது. இது போன்ற மதராஸ் கதைகளைத் தொகுத்து தனி நூலாகக் கொண்டு வர வேண்டும் என்பது எனது ஆசை.
எஸ்.திவாகர் 1970களின் சென்னையை எழுதியிருக்கிறார். குறிப்பாகத் தி.நகர், பாண்டிபஜார், கோடம்பாக்கம். ராயப்பேட்டை. கோட்டூர்புரம், திருவல்லிக்கேணியைப் பின்புலமாகக் கொண்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.
திவாகர் இந்தச் சிறுகதைகளை எழுதிய அதே காலகட்டத்தில் இதே தி.நகரை, மேற்குமாம்பலத்தை, பாண்டிபஜாரை தனது கதைகளில் எழுதியவர் அசோகமித்ரன்.
அசோகமித்ரனின் பாண்டிபஜார் பீடா சிறுகதையில் பாண்டிபஜாரின் சித்திரம் மறக்க முடியாதது. பாண்டிபஜார் என்பது சினிமா உலகின் குறியீடு. தி.நகரில் தான் புகழ்பெற்ற சினிமா தயாரிப்பாளர்கள். இயக்குநர்கள், நடிகர்களின் வீடு, அலுவலகங்கள் இருந்தன. பாண்டிபஜாரின் புகழ்பெற்ற கீதா கபேயும், சினிமா கம்பெனிகளும், வாழ்ந்து கெட்ட மனிதர்களும் கதையில் இடம்பெறுகிறார்கள்.
அந்தக் கதையில் ஒருவர் தனது பழைய காரை ஆயிரம் ரூபாயிற்கு விற்கப் போவதாகச் சொல்கிறார். அது தான் அந்தக் காலத்தின் பணமதிப்பு.
வெங்கையா என்ற புகழ்பெற்ற சினிமா நடிகர் தனது வாய்ப்புகள் இழந்து போன காலத்தில் ரசிகர் ஒருவரைச் சந்தித்து உரையாடுவதே கதையின் மையம். இடைவெட்டாக அன்றைய தமிழ் தெலுங்கு திரைப்பட உலகையும் அதன் தயாரிப்பாளர்களையும் கிண்டல் செய்திருக்கிறார் அசோகமித்ரன்.
இந்தக் கதையில் சென்னையைப் பற்றி இப்படி ஒரு வரியை அசோகமித்ரன் எழுதியிருக்கிறார்.
இளைஞர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் சினிமா என்றால் அவ்வளவு பைத்தியம்.
இதே வரியை திவாகரின் கதையிலும் காண முடிகிறது. அவரது சிறுகதை ஒன்றில் எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியான நாட்கள் பதிவாகியிருக்கிறது. நகரம் முழுவதும் எம்.ஜி.ஆருக்காக வைக்கபட்டிருந்த விளம்பரங்கள். அவரது கட்அவுட் இரண்டு தென்னை மர உயரம் இருந்தது என்று திவாகர் எழுதுகிறார்.
அசோகமித்ரனின் கதைகளில் வரும் கதாபாத்திரம் போன்ற பெண்களே திவாகரிடமும் காணப்படுகிறார்கள். ஒரே வித்தியாசம் அசோகமித்ரன் கதைகளில் கொலை நடக்காது. குற்றத்திற்கு இடமேயில்லை.
திவாகரின் சிறுகதை ஒன்றில் அலமேலு என்ற இளம்பெண் கோடம்பாக்கத்தில் கத்தியால் குத்தப்படுகிறாள். கத்திக்குத்துபட்டு வீழ்ந்துகிடக்கும் பெண்ணின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. அவளது தந்தை ஒரு தத்துவப் பேராசிரியர். அவர்கள் வீட்டை திவாகர் கோட்டோவியம் போலத் துல்லியமாக விவரித்திருக்கிறார்.
முதிர்கன்னியான அலமேலுவின் ரகசிய காதல். அவள் தந்தையின் கண்டிப்பு. அவளது அம்மாவின் பாராயணங்கள். அலமேலு நடந்து செல்லும் கோடம்பாக்கம் ரயில் நிலையப் பாதை. அதை ஒட்டிய குடிசைகள். சென்னை வெயிலின் உக்கிரம். தூசி அடைந்து போன மரங்கள், எனக் கோடம்பாக்கத்தை துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார்.
கத்திக்குத்துபட்டு மயங்கி கிடக்கும் அலமேலுவிற்கு உதவி செய்ய வரும் குடிசைவாசிகள். அவளை தூக்கிவிடும் மனிதன். அவனது நெருக்கம் தரும் இத்த்தை உணரும் அலமேலு, கத்தியை ரகசியமாகச் சாணத்தில் மறைக்கும் பெண். அலமேலுவின் பர்ஸைத் திருடிச் செல்லும் இன்னொரு பெண் என காட்சி நுணுக்கமாக விவரிக்கபடுகிறது.
இவர்கள் யாவரும் அசோகமித்ரனின் கதைகளில் வரக்கூடியவர்களே. ஆனால் சாதுவான அலுமேலு மீது கத்தி பாய்வதைப் பற்றி அசோகமித்ரானால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
திவாகர் அங்கே தான் வேறுபடுகிறார். நகரம் குற்றத்தின் விளைநிலம் என்பதை உணர்ந்திருக்கிறார். எதிர்பாராத விபத்து போலக் குற்றங்களும் சட்டென நிகழ்த்துவிடுகின்றன. சாமானியர்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அலுமேலு ஏன் கத்தியால் குத்தப்படுகிறாள். உண்மையில் அந்தக் கத்தி என்பது குறியீடு தானா.
முதல்வரியிலே கதை நம்மை உள்ளிழுத்துக் கொண்டுவிடுகிறது. மயங்கிக் கொண்டிருக்கும் அலமேலுவின் கண்களில் தன்னைச் சுற்றிலும் குவிந்துள்ள மனித தலைகள் விநோதமாகத் தெரிகின்றன. சினிமாவில் கோணங்கள் மாறிமாறிக் காட்சி வேகமடைவது போன்ற எழுத்துமுறை திவாகருடையது.
இன்னொரு கதை ராயப்பேட்டையில் நடக்கிறது. மிருத்யுஞ்சயன் என்பவனைப் பற்றியது. அவன் ஒரு குறியீடே. மார்ச்சுவரியில் வேலை செய்யும் இளைஞன், தனக்கு வந்த பிணத்தைக் குறித்து கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டுத் தேடுதலை மேற்கொள்கிறான்
மிருத்யுஞ்சயனுடன் நெருக்கமாகப் பழகி வயிற்றில் பிள்ளையைச் சுமந்த இளம்பெண் தனது கர்ப்பத்தைக் கலைக்கும் போது அதிக உதிரப்போக்காகி இறந்துவிடுகிறாள். மிருத்யுஞ்சன் யார். அவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்பதன் வழியே திவாகர் மரணத்தை விசாரணை செய்கிறார். மதராஸின் பொதுமருத்துவமனை, ராயப்பேட்டை ஒண்டுக்குடித்தன வீடுகள். காதலுக்கும் மரணத்திற்குமான ஊசலாட்டம் எனக் கதை சுழற்புதிர்பாதையில் நடப்பது போன்ற அனுபவத்தை ஏற்படுத்துகிறது.
கிராமவாழ்க்கை பிடிக்காமல் நகரத்திற்கு வரும் முதியவர்கள் பற்றிய கதையில் தம்பதிகள் கிராமத்தில் வசித்த போது நகர வாழ்க்கையை நினைத்து ஏங்குகிறார்கள். பணம் சேர்த்து நகரில் ஒரு வீடு வாங்குகிறார்கள். நகர இன்பங்களைத் தேடித்தேடி அனுபவிக்கிறார்கள்.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் அவர்கள் அங்கே வசிப்பவர்களின் விசித்திர நடத்தையால் பாதிக்கபடுகிறார்கள். அவர்களை அன்போடு அழைக்கும் இளைஞன் நடந்து கொள்ளும் முறை ஒரு சான்று.
குடியிருப்பில் வசிக்கும் நீதிபதியின் மனைவி அனைவரையும் அதிகாரம் செய்கிறாள். அவளைப் பற்றி வாசிக்கும் போது பால்சாக்கின் கதை நினைவிற்கு வருகிறது.
ஒரு மழை நாளில் அவர்கள் நீதிபதியின் மனைவியைச் சந்திக்கச் செல்கிறார்கள். அவள் அந்தக் குடியிருப்பில் வசிப்பவர்கள் அத்தனை பேரையும் திருடர்கள் என்று திட்டுகிறாள். அத்தோடு முகத்திற்கு நேராக இது போலத் தன்னைத் தேடி வந்து தொல்லை செய்யக்கூடாது என்று அவர்களிடம் எச்சரிக்கை செய்கிறாள்.
நகர வாழ்க்கையில் அவர்களால் யாரையும் நம்ப முடியவில்லை. யாருடனும் நட்பாக இருக்க முடியவில்லை. ஆனாலும் நகரம் அவர்களுக்குப் பிடித்தேயிருக்கிறது. அதற்குக் காரணம் கிராமம் ஏற்படுத்திய தனிமை. அந்தத் தனிமை அவர்களை உறையச் செய்துவிட்டிருக்கிறது. இது போலவே இன்னொரு கதையில் ஒரு கதாபாத்திரம் சிற்றூர்களின் தனிமையை தாங்க முடியாது என்கிறான்.
ஒரு நாள் முதியவர்கள் மிருக காட்சி சாலையைக் காணச் செல்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையும் அது போன்ற கூண்டிற்குள் அடைபட்டதே என்பதை உணருகிறார்கள். அவர்கள் பேசிக் கொண்டே வீடு திரும்பும் காட்சி அழகானது.
கதையின் முடிவில் கிராமத்திலிருந்து வரும் போஸ்ட் மாஸ்டரை சந்திக்கிறார்கள். வீட்டிற்கு அழைத்துப் போகிறார்கள்.தங்களின் கிராமம் எப்படி உள்ளது என்பதைப் பற்றி விசாரிக்கிறார்கள். நீங்கள் நகரில் சந்தோஷமாக இருக்கிறீர்களா என அவர் கேட்டதற்குத் தயக்கத்துடன் தலையாட்டுகிறார்கள்.
திவாகரின் இந்தக் கதையில் மதராஸ் என்ற பெயரில்லை. ஒருவேளை பெங்களூராக, மும்பையாகக் கூட இருக்கலாம். ஆனால் இது மதராஸிற்கும் பொருந்த கூடியதே.
அவரது கதை ஒன்றில் எதற்காக இந்த நகரத்திற்கு வந்தோம் என நினைத்து வருந்தும் ஒரு பெண்ணைக் காண முடிகிறது. இதே வருத்தம் அசோகமித்ரன் சிறுகதைகளில் வரும் பெண்களிடமும் உள்ளது. ஆனால் அவர்கள் அதை வெளிப்படுத்துவதில்லை. அதற்காகப் புலம்புவதில்லை. மாறாக நகர வாழ்க்கையின் நெருக்கடிகளை எதிர்கொண்டு வெல்லவே முற்படுகிறார்கள்.
விடிவதற்கு முன் என்ற அசோகமித்ரன் சிறுகதை சென்னையின் தண்ணீர் பஞ்சம் பற்றியது. இதில் விடிவதற்கு முன்பாகத் தண்ணீர் பிடிக்க வேண்டும் என்பதற்காக வாளி குடத்தோடு அலையும் பெண்களின் அவலம் பற்றி அசோகமித்ரன் எழுதியிருக்கிறார். ஒரு குடம் தண்ணீர் வேண்டி பங்கஜம் படும் அவமானங்களைக் காணும் போது நகரவாழ்வென்பது வெறும் பொய்கனவு என்பது புரிகிறது.
தெருவில் அப்போதுதான் யாரோ கைவண்டியில் எங்கிருந்தோ தண்ணீர் பிடித்துக் கொண்டு போயிருக்கிறார்கள். சிந்திய தண்ணீர் தெரு நடுவில் பட்டையாகக் கோடிட்டிருந்தது.
என்ற அசோகமித்ரனின் வரியை ஒருவரால் கற்பனையாக எழுதிவிட முடியாது. அனுபவத்தின் உண்மையும் கலைநேர்த்தியும் ஒன்று கூடிய எழுத்து அசோகமித்ரனுடையது.
எஸ்.திவாகரிடமும் இதே இரண்டு சரடுகள் காணப்படுகின்றன. அவர் தனது வாழ்பனுபவத்தையும் கற்பனையினையும் இணைத்து எழுதும் போது புதிய கதைகள் பிறக்கின்றன. நாடகீயமான தருணங்களைக் கூடத் திவாகர் உணர்ச்சி கொந்தளிப்புகள் இன்றி நிதானமாக, குரலை உயர்த்தாமல் எழுதுகிறார்.
திவாகர் காட்டும் மதராஸின் சித்திரம் ஒளிவுமறைவில்லாதது. இருளும் ஒளியும் கலந்தது. வீடு தான் அவரது மையவெளி. அங்கே ஒருவரையொருவர் அடக்கியாண்டு கொண்டு தனக்கான மீட்சியில்லாமல் வாழுகிறார்கள். நகரில் யாரும் சந்தோஷமாக இல்லை, ஆனால் எவரும் நகரைவிட்டு வெளியேறிப் போகமாட்டார்கள். நகரம் என்பது ஒரு சிலந்திவலை. அதில் சிக்கிக் கொண்டவர்கள் தாங்களே சிலந்தியாகி விடுகிறார்கள். பின்பு அதிலிருந்து மீள முடியாது என்பதையே அவரது கதைகள் உணர்த்துகின்றன.
சர்வதேச இலக்கியங்களைத் தொடர்ந்து கன்னடத்தில் அறிமுகப்படுத்தி வரும் திவாகர் நிறைய மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். குறிப்பாக உலகின் மிகச்சிறந்த குறுங்கதைகளை அவர் தொகுத்து மொழிபெயர்த்திருக்கிறார். நோபல் பரிசு பெற்ற கதைகளை மொழியாக்கம் செய்துள்ளார்.
இந்தச் சிறுகதைகளை சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ள கே.நல்லதம்பி திவாகர் தொகுத்துள்ள உலகின் மிகச்சிறிய கதைகளின் தொகுப்பையும் தமிழுக்கு கொண்டு வர வேண்டும்.
.