தீவிற்கு வரும் பறவை

புத்தக வாசிப்பாளர்களையும் இலக்கிய ஈடுபாட்டினையும் கொண்டாடும் திரைப்படங்கள் உலகெங்கும் வெளியாகியுள்ளன. ஹாலிவுட்டில் ஆண்டிற்கு ஒரு படம் இந்த வகைமையில் உருவாக்கபட்டு வெற்றியடைகிறது. இரண்டாயிர வருடப்பழமையான தமிழ் இலக்கியத்தில் அதன் முக்கிய நாவல்கள் காப்பியங்கள் இன்றும் திரைப்படமாக்கபடவில்லை. இந்த இலக்கியங்களைக் கொண்டாடுவதை வாழ்க்கையாகக் கொண்ட மனிதர்கள் பற்றியோ, இலக்கிய அமைப்புகள் பற்றியோ எவ்விதமான ஆவணப்பதிவுகளும் கிடையாது

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆய்வுப்பணிக்காகத் தமிழகத்திலுள்ள இலக்கிய அமைப்புகளைத் தொகுக்க முற்பட்டேன். தொல்காப்பியம் திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற நூல்களைத் தொடர்ந்து பேசியும் விவாதித்தும் வரும் அமைப்புகள் நூற்றுக்கும் மேலிருக்கின்றன. பாரதி. பாரதிதாசன். பெயரில் நிறைய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. நவீன இலக்கியத்தினைக் கூடி விவாதிக்கும் அமைப்புகளும் ஐம்பதுக்கும் மேலிருக்கின்றன. இவை மட்டுமின்றிக் கல்லூரி மற்றும் பல்கலைகழக அளவில் உள்ள இலக்கிய அமைப்புகள். நூலகத்தில் செயல்பட்டு வரும் வாசகர் வட்டம். திருவள்ளுவர் மன்றம், போன்றவையும் அறக்கட்டளைகள் மூலம் நடத்தப்படும் இலக்கிய நிகழ்வுகள். கருத்தரங்குகள் என அன்றாடம் ஏதாவது ஒரு இலக்கிய நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டேதானிருக்கின்றன. சனி ஞாயிறு என்றால் ஐந்தோ பத்தோ நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இப்படி ஆண்டு முழுவதும் இலக்கியம் பேசப்பட்டு வருவது தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்கிறது என்பேன்.

இலக்கிய அமைப்புகளில் சில ஐம்பதாண்டுகள் நூறு ஆண்டுகள் பழமையானதாக இருக்கின்றன. அவர்கள் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். விருதளிக்கிறார்கள். இவர்களைப் பற்றிய முழுமையான பதிவுகள் நம்மிடமில்லை.

ஆனால் உலகம் முழுவதும் இலக்கிய அமைப்புகளின் செயல்பாடுகள் முறையாக ஆவணப்படுத்தபடுகின்றன. அது குறித்த நூல்களும், ஆவணப்படங்களும், திரைப்படங்களும் உருவாக்கப்படுகின்றன. அப்படியான ஒரு திரைப்படத்தை தான் நேற்று பார்த்தேன்.

The Guernsey Literary and Potato Peel Pie Society திரைப்படம் இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மன் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த கார்ன்சி தீவில் செயல்பட்டு வந்த ஒரு இலக்கிய அமைப்பின் கதையை விவரிக்கிறது.

மைக் நியூவெல் இயக்கிய டான் ரூஸ் மற்றும் டாம் பெசுச்சா ஆகியோரால் எழுதப்பட்ட இந்தத் திரைப்படம் ஒரு எழுத்தாளரின் வழியே கடந்தகால நிகழ்வுகளை விவரிக்கிறது.

1941 ஆம் ஆண்டில், கார்ன்சி தீவில் கதை துவங்குகிறது. அந்தத் தீவு, ஜெர்மன் ஆக்கிரமிப்பின் கீழுள்ளது. போர்காலம் என்பதால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஒரு நாள் இரவு ஊரடங்கினை மீறியதற்காக நான்கு நண்பர்கள் ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். அவர்களை ராணுவத்தினர் விசாரணை செய்யும் போது தாங்கள் ஒரு புக் கிளப்பை சேர்ந்தவர்கள். ஒன்று கூடி புத்தகம் பற்றி விவாதித்துவிட்டு வருவதாகச் சொல்கிறார்கள்.

உங்கள் புத்தக அமைப்பின் பெயரென்ன என்று கேட்கையில் மனதில் தோன்றிய ஒரு பெயரை சட்டெனச் சொல்கிறார்கள். அப்படி உருவானது தான் The Guernsey Literary and Potato Peel Pie Society . கைது செய்யப்படாமல் தவிர்ப்பதற்காக உருவாக்கபட்ட இந்த இலக்கிய அமைப்பு எப்படி வளர்ந்த்து என்பதைப் படம் விவரிக்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி 1946 இல், எழுத்தாளர் ஜூலியட் ஆஷ்டன் அறிமுகமாகிறார் அவரது புதிய புத்தகம் அப்போது வெளியாகியிருக்கிறது. The Times Literary Supplement இதழுக்காக அவர் இலக்கியத்தின் நன்மைகள் குறித்து வாழ்வியல் கதைகள் எழுதி வருகிறார். இவரது கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்த Charles Lamb’s Essays of Elia மீது அபிமானம் கொண்ட டாவ்ஸி ஆடம்ஸிடமிருந்து அவளுக்கு ஒரு கடிதம் வருகிறது. அதில் தான் சார்ல்ஸ் லாம்ப்பின் இன்னொரு புத்தகத்தை வாங்க விரும்புவதாகவும் அது லண்டனில் எந்தப் புத்தக் கடையில் கிடைக்கும் என்று விசாரித்து எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் கடித்த்தில் வாரம் வெள்ளிக்கிழமை இரவு தங்கள் அமைப்பு ஒன்று கூடி படித்த புத்தகங்கள் பற்றி விவாதிப்பதாக டாவ்ஸி ஆடம்ஸ் எழுதியிருக்கிறார்.

இந்த இலக்கிய அமைப்பினை பற்றித் தெரிந்து கொள்ள ஜூலியட் ஆர்வம் காட்டுகிறாள். அத்தோடு டாவ்ஸி ஆடம்ஸ் கேட்டிருந்த புத்தகத்தை அவளே விலைக்கு வாங்கிப் பரிசாக அனுப்பி வைக்கிறாள். இதற்காக நன்றி தெரிவித்துப் பதில் கடிதம் எழுதுகிறான் டாவ்ஸி ஆடம்ஸ்.

கார்ன்சி என்பது பிரிட்டனின் நார்மண்டி கடற்கரையில் உள்ள சேனல் தீவுகளில் இரண்டாவது பெரியது ஆகும்.

கார்ன்சி தீவில் செயல்பட்டு வரும் புத்தக அமைப்பினை பற்றி எழுதுவதற்காக அந்தத் தீவிற்குப் பயணம் மேற்கொள்கிறார் ஜுலியட். இது அவளது பதிப்பாளருக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அவன் ஏற்பாடுகளைச் செய்து தருகிறான். அவள் பயணம் துவங்கும் நாளில் மார்க் என்ற அமெரிக்கக் காதலன் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கிறான். அதை ஜுலியட் ஏற்றுக் கொள்கிறார்

கார்ன்சி தீவிற்கு வரும் ஜுலியட் அங்கே செயல்பட்டு வரும் புத்தக அமைப்பின் உறுப்பினர்களைச் சந்திக்கிறாள். தீவிற்கு வரும் புதிய பறவையை போலிருக்கிறது அவளது வருகை.

அவளை ஒரு நட்சத்திர எழுத்தாளர் போன்று நடத்துகிறார்கள். அங்கே டாவ்ஸி ஆடம்ஸ் மகளைச் சந்திக்கும் ஜுலியட் அவனுடன் ஒன்றாக அறைக்குத் திரும்புகிறாள். புத்தக அமைப்பினைப் பற்றி எழுதுவதை அமெலியா விரும்பவில்லை என்று அவளுக்குப் புதிராக இருக்கிறது

இந்நிலையில் இந்த அமைப்பினை உருவாக்கிய எலிசபெத் என்ற பெண் ஜெர்மானியர்களால் முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்ட விஷயத்தை ஜுலியட் அறிந்து கொள்கிறாள். அவளுக்கு என்ன நடந்த்து என்பதைப் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறாள். எதிர்பாராத உண்மைகள் வெளிப்பட ஆரம்பிக்கின்றன. இதற்கிடையில் டாவ்ஸி ஆடம்ஸ் அந்தப் பெண்ணின் உண்மையான தந்தையில்லை என்பதும் அவளுக்குத் தெரிய வருகிறது.

The Guernsey Literary and Potato Peel Pie Society அமைப்பின் வரலாற்றை ஆராயத்துவங்கி ஜெர்மானிய ஆக்ரமிப்பின் போது நடைபெற்ற கசப்பான அனுபவங்களை, நினைவுகளை அறிந்து கொள்கிறாள். அவற்றை ஒரு நூலாக எழுத முற்படுகிறாள். இதற்கிடையில் தீவிற்கு வருகை தரும் காதலன் மார்க் அவள் திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை விரலில் அணிந்து கொள்ளவில்லை என்பதற்காகக் கோவித்துக் கொள்கிறான். அவள் மார்க்கை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறாள். அவள் அறிந்து கொண்ட உண்மைகளை அவளை எவ்விதமாகப் பாதித்தன என்பதைப் படம் அழகாக விவரிக்கிறது

படம் முடியும் போது நாம் உடனே சார்ல்ஸ் லாம்ப் கட்டுரைகளை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் உருவாகிறது. பள்ளி பாடப்புத்தகத்தில் லேம்ப்பின் கட்டுரைகளை நம்பில் பலரும் வாசித்திருப்போம். சிறந்த கட்டுரையாளர். நகைச்சுவையாக எழுதக்கூடியவர்

ஒரு சிறிய தீவில் உயிருக்குப் பயந்த சிலர் ஒன்றுகூடி நடத்தும் இலக்கிய அமைப்பு என்பது அவர்களுக்கான நம்பிக்கையின் வெளிச்சம் . புத்தக வாசிப்பு என்பது அவர்களுக்கான மீட்சி. வெள்ளிகிழமை இரவு தோறும் அவர்கள் ஒன்றுகூடுகிறார்கள். அது வெறும் சந்திப்பில்லை. மாறாகக் கூட்டு நம்பிக்கையின் அடையாளம்

இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களைக் கைது செய்து முகாமில் அடைத்து சித்ரவதை செய்தார்கள். அந்த நிலையிலும் சிலர் ரகசியமாக ஒன்று கூடி புத்தக வாசிப்பினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவில் நடக்கும் கதைவாசிப்பின் வழியே அவர்கள் உயிர்வாழ்வதற்கான நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள்.

ஜூலியட் ஆஷ்டன் போரினால் பாதிக்கபட்டவள். அவளது பெற்றோர் போரில் மடிந்து போனார்கள். லண்டனின் உயர்தட்டு வாழ்க்கையினை வாழ்ந்து வரும் அவளுக்கு வரும் ஒரு கடிதம் அவள் வாழ்க்கையை மாற்றிவிடுகிறது. ஒத்தரசனை கொண்ட ஒருவரைப் புரிந்து கொள்ளும் ஆஷ்டன் அவனுக்காகத் தானே புத்தகத்தைத் தேடி வாங்குகிறாள். கார்ன்சி தீவிற்குச் செல்லும் அவள் ,

டாவ்ஸி ஆடம்ஸ் பற்றிய கற்பனையோடு செல்கிறாள். தனக்குத் திருமணம் நிச்சயமாகி விட்டதை அவள் மறைந்து கொள்கிறாள். டாவ்ஸி ஆடம்ஸ் அவளை வரவேற்கும் விதமும் பழகும் விதமும் மிக அழகாக உருவாக்கபட்டுள்ளது.

ஒவ்வொரு புத்தகமும் உண்மையில் ஒரு தீவே. அந்தத் தீவிற்குள் வாசகன் பயணம் செய்து புதிய மனிதர்களை அடையாளம் காணுகிறான். அவர்களின் கடந்தகாலத்தைப் புரிந்து கொள்கிறான். அவர்கள் மீது அன்பு காட்டுகிறான். பிரியும் தருணத்தில் அந்த உலகிலிருந்து எளிதாக விடுபடமுடியவில்லை. அப்படியான ஒரு அனுபவத்தைத் தான் மொத்த படமும் நமக்குத் தருகிறது

••

0Shares
0