துப்பாக்கி முனையில் ஒரு பயணம்

இரண்டாம் உலகப்போரின் போது மலேயா மீது ஜப்பானியர் படையெடுத்த சமயத்தில் நடந்த உண்மை நிகழ்வினைப் பற்றிய படம் A Town Like Alice. நெவில் ஷட்டின் நாவலைப் படமாக்கியிருக்கிறார்கள்.

மலேசியாவில் வசித்த வந்த பிரிட்டிஷ்காரர்கள் 1942 இல் ஒரு நாள் ஜப்பானிய ராணுவத்தின் ஆக்கிரமிப்பு காரணமாக வெளியேறும்படியான சூழல் உருவாகிறது. சிங்கப்பூருக்குத் தப்பிப் போக முயல்கிறார்கள்.

கோலாலம்பூரில், ஜீன் பேஜெட் என்ற இளம்பெண் வேலை செய்த அலுவலகம் மூடப்படுகிறது. அவளது உயரதிகாரி ஹாலந்து உடனடியாக ஊரைவிட்டு வெளியேறும்படி சொல்கிறான். அவர்கள் ஒரு காரில் தப்பிப் போகிறார்கள். ஆனால் வழியில் கார் ரிப்பேராகி நின்று விடுகிறது. பிரிட்டிஷ் துருப்புகள் வந்த வேனில் அவர்கள் ஏற்றிக் கொள்ளப்படுகிறார்கள். தற்காலிக முகாம் ஒன்றில் தங்க வைக்கப்படுகிறார்கள். கப்பல் வந்தவுடன் சிங்கப்பூர் போகலாம் என்ற கனவுடன் அவர்கள் காத்திருந்த போது ஜப்பானிய ராணுவம் அவர்களைச் சுற்றி வளைக்கிறது. எதிர்ப்பவர்கள் சுடப்படுகிறார்கள்.

அங்கிருந்த ஆண்கள் தனியே பிரிக்கப்பட்டு லாரிகளில் ஏற்றி வதை முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்

பெண்கள் குழந்தைகள் தனியே பிரித்துக் கால்நடையாக நடத்தி அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

35 பேர் கொண்ட அந்தப் பெண்கள் குழுவின் முடிவற்ற பயணமே படத்தின் மையக்கதை.

ஜப்பானிய ராணுவ அதிகாரி அவர்களை ஐம்பது மைல் தூரம் நடந்து செல்லும்படி முதலில் கட்டளையிடுகிறார். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் துரத்தப்படுகிறார்கள். இப்படி முடிவேயில்லாமல் அவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

மைல் கணக்கில் நீளும் இந்தப் பயணத்தில் கரடுமுரடான சாலையில் நடந்து செல்கிறார்கள். வழியில் குடிநீர் கிடைப்பதில்லை. நல்ல உணவு கிடைப்பதில்லை. நடந்து நடந்து கால்கள் வீங்கி களைத்து விழுகிறார்கள். அவர்களைத் துப்பாக்கி முனையில் வீரர்கள் ஆடுமாடுகள் போல அடித்து நடக்க வைக்கிறார்கள்.

கிராமப்புற சாலையில் நீண்ட தூரம் நடந்து அவர்களின் புழுதி படிந்த தோற்றம் வேதனை தருகிறது. பலருக்கும் நடக்க முடியாமல் பாதங்கள் வீங்கிப் போகின்றன. ஹாலந்தின் மனைவி நோயுற்று வழியில் இறந்து போகிறாள். அவளது கைக்குழந்தையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஜீனிடம் வந்து சேருகிறது.

குழந்தையுடன் அவள் பகலிரவாக நடக்கிறாள். வழியில் குழந்தைக்குத் தேவையான பால் கிடைப்பதில்லை.. தனது உடைகளைக் காலணியை அடகு வைத்து பால் பவுடர் வாங்க முயல்கிறாள். மொழி புரியாத கடைக்காரன் பால் பவுடர் தர மறுக்கிறான். அந்தக் கடைக்காரனின் மனைவி அவளது துயரைப் புரிந்து கொண்டவள் போலப் பால்பவுடர்களைத் தருகிறாள். குழந்தையோடு அவர்கள் நடந்து ஒரு துறைமுகத்தைச் சேருகிறார்கள். அங்கே கப்பலில் அவர்களை ஏற்றிப் போக மறுக்கிறார்கள். இன்னொரு துறைமுகத்தைத் தேடி இன்னும் நூறு மைல் நடக்கிறார்கள்

டஜன் கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் ஏழு மாத காலம் இந்த யாத்திரையை ஓய்வில்லாமல் மேற்கொள்கிறார்கள். சேறு சகதியுமான சாலையில் பெண்கள் ஊன்றுகோலுடன் நடந்து செல்லும் காட்சி மறக்க முடியாதது

பயண வழியில் ஜப்பானியர்களுக்காக லாரியை ஓட்டி வரும் போர் கைதியான இருவர் ரகசியமாக அவளுக்கு உதவி செய்கிறார்கள். உணவு மற்றும் மருந்துகளைத் திருடிக் கொடுக்கிறார்கள்.

யுத்த கைதியான பெண்கள் இறுதியாக ஒரு மலேயா கிராமம் ஒன்றை அடைகிறார்கள். நிர்க்கதியான சூழலில் தவிக்கும் ஜீனை கிராமப்புற மக்கள் ஆதரித்துத் தேவையான உணவும் உடையும் இருப்பிடமும் தந்து காப்பாற்றுகிறார்கள். அந்தக் குழுவினர் கிராமத்திலே தங்கி வாழ ஆரம்பிக்கிறார்கள்.

யுத்தம் முடிந்தபிறகு தன்னுடைய உயிரைக் காப்பாற்றிய கிராமவாசிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து மலேசியா திரும்பும் ஜீன் கிராமவாசிகளின் அடிப்படைத் தேவையான குடிநீர் கிணறு ஒன்றை ஏற்படுத்தித் தருகிறாள்

படம் இங்கேயிருந்து தான் துவங்குகிறது. யுத்த நினைவுகளின் வழியே தான் கடந்து வந்த வேதனையான காலத்தை ஜீன் ஞாபகம் கொள்கிறாள். .

மலேயா மக்களுக்கு உதவி செய்த பிறகு அவளைக் காப்பாற்றிய சார்ஜென்ட் ஜோ ஹார்மனைத் தேடி ஆஸ்திரேலியா செல்லும் ஜீன் அங்குள்ள வாழ்க்கை நிலையை அறிந்து கொள்கிறாள். இதன் மறுபக்கம் போல ஹார்மன் ஜீனை லண்டனில் தேடிக் கொண்டு வருகிறான். காலம் இவர்களைப் பகடையாக உருட்டி விளையாடுகிறது. இருவரும் எப்படி இணைந்தார்கள் என்பதே படத்தின் மீதக்கதை.

ஜீனின் மனவுறுதியும் அவள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தையைக் காப்பாற்றும் முயற்சியும் குழுவை வழிநடத்தும் தைரியமும் அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பயணவழியில் அவர்கள் ஒவ்வொரு முறையும் ஏதாவது இடிந்த கட்டிடம் அல்லது ஒரு முகாமில் தங்க வைக்கப்படுகிறார்கள். அப்படிக் கைவிடப்பட்ட மாளிகை ஒன்றில் அவர்கள் தங்கும் போது ஆசை தீர குளிக்கிறார்கள். அந்தக் காட்சியில் பெண்களிடம் வெளிப்படும் சந்தோஷம் மறக்கமுடியாதது. துரத்தப்பட்டுக் கொண்டேயிருக்கும் அவர்கள் நான்கு மாதங்களுக்குள் நூற்றுக்கணக்கான மைல்களைக் கடந்து போகிறார்கள். பயண வழியில் பலர் இறக்கின்றனர்.

இந்த உண்மை சம்பவம் சுமத்ராவில் நடந்திருக்கிறது. அதை மலேசியாவில் நடப்பது போல நெவில் ஷட் நாவலில் எழுதியிருக்கிறார்.

ஜப்பானிய கேப்டன் சுகமோ செய்யும் சித்ரவதைகள் குரூரமானவை. பெண்களின் நெடும்பயணத்திற்குப் பாதுகாவலனாக வரும் ஜப்பானியன் மெல்ல அவர்களைப் புரிந்து கொள்வதும் அவனது மரணமும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன

ஜப்பானிய ராணுவ அதிகாரி பார்வையிட வரும் போது அந்தப் பெண்கள் வணங்கி அவரை வரவேற்க வேண்டும் என்பது விதி. அவரது உத்தரவை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. மீறினால் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். ஒரு பெண் எங்களை இப்படி எங்கே அழைத்துப் போகிறீர்கள். நீண்ட தூரம் எங்களால் நடக்க முடியாது என்கிறார். நீங்கள் இப்போது கைதிகள். நாங்கள் சொல்வது போலத் தான் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களைக் கொன்றுவிடுவேன் என்கிறான் ஜப்பானிய ராணுவ அதிகாரி. ஒரே நாளில் தங்கள் வாழ்க்கை இப்படித் திசைமாறிப்போய்விடும் என அறியாத பெண்கள் வேதனையுடன் குழந்தைகளை வெறித்துப் பார்க்கிறார்கள். எங்கே போகிறோம் எப்போது மீட்சி எனத் தெரியாத அந்தப் பயணம் யுத்தத்தின் குரூரத்தை அவர்களுக்கு முழுமையாகப் புரிய வைக்கிறது

போரில் கலந்து கொண்ட வீரர்களின் சாகசத்தையும் வீரமரணத்தையும் திரையில் கண்டுவந்த நமக்குப் போரின் இன்னொரு முகமாகப் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலையைக் காணும் போது போர் ஏற்படுத்தும் ஆழமான பாதிப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது. பெண்களின் போராடும் உணர்வு படத்தில் நேர்த்தியாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. வர்ஜீனியா மெக்கென்னா ஜீனாகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இந்தப் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது சேவியர் 1998 ஆம் ஆண்டு வெளியான படம் மனதில் வந்து போனது.. போஸ்னியப் போரின்போது செர்பியப் பெண்ணையும் அவரது கைக் குழந்தையையும் அழைத்துச் செல்லும் ராணுவ வீரனின் கதாபாத்திரம் ஜீனின் மறுவடிவம் போலத் தோன்றியது

முதற்காட்சியிலே ஜீன் அலுவலகத்திலிருந்து நேரடியாக வெளியேறிப் போகாமல் ஹாலந்தின் வீட்டிலிருந்து வரும் தொலைபேசி அழைப்பிற்கு இணங்க அவர்கள் வீட்டிற்குப் போகிறாள். அவள் பிறருக்காக உதவி செய்யக்கூடியவள். தனது பொறுப்புகளை அவள் ஒரு போதும் மறப்பதில்லை என்பதைத் துவக்கக் காட்சியில் சொல்லிவிடுகிறார்கள்

ஒரு ஜப்பானிய ராணுவ அதிகாரி அவளது அழகில் மயங்கி தனது ஆசைநாயகியாக இருந்துவிடும்படி அவளை அழைக்கிறான். ஜீன் அதை ஏற்க மறுக்கிறாள். வேறு ஒரு பெண் சம்மதிக்கிறாள். அவளைத் தனது ஜீப்பில் ஏற்றிக் கொண்டு அந்த அதிகாரி சந்தோஷமாகப் போகிறான். உயிர்பிழைக்க வேண்டும் என்ற ஆசை எப்படி அவனது ஆசைக்குப் பலியாகச் செய்தது என்பதைச் சிறு நிகழ்வின் வழியே உணர்த்திவிடுகிறார்கள்

நெருக்கடியின் போது தான் உண்மையான வலிமை ஒருவருக்குள்ளிருந்து வெளிப்படுகிறது. அந்த உண்மையை நாம் ஜீன் வழியாக அறிந்து கொள்கிறோம். அந்நியப்பெண்ணாக அறிமுகமாகி மெல்ல அவள் மலேயா பெண்ணாக மாறிவிடுகிறாள். இந்த மாற்றம் தோற்ற அளவில் மட்டுமின்றி மனதளவிலும் நடந்தேறுகிறது. அது தான் கதையின் தனிச்சிறப்பாக எனக்குத் தோன்றுகிறது

••

0Shares
0