துயரத்தின் சாலை.

சமகால சீனப்படங்கள் ஒரு பக்கம் ஹாலிவுட் படங்களோடு போட்டியிடும் ஆக்சன் படங்களாக வெளியாகின்றன. இன்னொரு பக்கம் மிக யதார்த்தமாக வாழ்வின் பன்முகங்களை நெருக்கமாக சித்தரிக்கின்றன. சமீப காலத்தில் நான் பார்த்த மிக சிறந்த படங்களில் பாதி சீனப்படங்களே.


சீனாவின் புதிய தலைமுறை சினிமா என்று கொண்டாடப்படும் இந்த படங்கள் உலக திரைப்பட விழாக்களில் தனிகவனம் பெற்று வருகின்றன. பெரும்பான்மை படங்களின் அடித்தளம் எளிய மக்களின் வாழ்க்கையும் அதில் ஏற்படும் சிக்கல்கள் சிதைவுறும் கனவுகள் பற்றியதே.2007ம் ஆண்டிற்கான பெர்லின் திரைப்பட விழாவின் சிறந்த படம் விருதை பெற்ற சீனத்திரைப்படம் Getting Home .பிழைக்க போன இடத்தில் இறந்து போன ஒருவனை அவனது நண்பன் சொந்த கிராமத்திற்கு  கொண்டு செல்லப் போராடுவதே படத்தின் மையம். சாவின் முன்னால் வாழ்க்கை குறித்த பல்வேறு எண்ணம் கொண்ட மனிதர்களை, அவர்களது போராட்டத்தை சாலை பயணத்தின் வழியே  விவரிக்கிறது. லியூ மற்றும் ஜியோ இருவரும் கட்டிட தொழிலாளிகள். தனது சொந்த கிராமத்தை விட்டு கட்டிட தொழில் செய்தவற்காக பல நூறு மைல் கடந்து சென்று  வேலை செய்கிறார்கள். கடுமையான பணிச்சுமை. குடும்பத்தை பிரிந்த தனிமை அவர்களை வருத்துகிறது. தினமும் இருவரும் ஒன்றாக குடிக்கிறார்கள்.அப்படி ஒரு நாள் குடிக்கும் போது லியூ தங்கள் இருவரில் யார் முதலில் இறந்து போய்விட்டாலும் மற்றவர் அந்த உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டு போக வேண்டும் என்று வாக்குறுதி செய்கிறான். அதை ஜியோ ஏற்றுக் கொள்கிறான்.ஒரு நாள் லியூ எதிர்பாராமல் மதுபோதையில் இறந்து விடுகிறான். போதையில் செய்துகொடுத்த சத்தியம் தானே என்று புறக்கணிக்காமல் தனது நண்பனின் இறந்த உடலை சொந்த ஊருக்கு எடுத்து கொண்டு கையில் காசில்லாமல் பயணம் செய்ய துவங்குகிறான் ஜியோ. அந்த பயணமே இப்படம்.பிணத்தோடு ஒரு மனிதன் செல்லும் பயணத்தை இவ்வளவு சுவாரஸ்யமாகவும் அபத்த நாடகம் போலவும் சொல்ல முடியுமா என்பதற்கு இப்படமே ஒரு உதாரணம். பிணத்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு  முறையான அனுமதியின்றி கொண்டு போவது சீனாவில் சட்டவிரோதம். அதே நேரம் நட்பிற்காக செய்த வாக்குறுதியை மீற முடியாது.  இந்த அவதிகளுக்கு நடுவில் ஜியோ பிணத்துடன் மாறி மாறிச் செல்கிறான். பல நேரங்களில் புறச்சூழல் அவனை சிக்க வைக்கிறது. அதிலிருந்து தப்பி போகிறான்.வழிப்பறி கொள்ளையர்கள் அவனை மடக்குகிறார்கள். இறந்து போன நண்பனுக்காக தான் மேற்கொள்ளும் இறுதியாத்திரை பற்றி எடுத்து சொல்கிறான் ஜியோ. அதை கேட்ட திருடர்கள் மனம்மாறி அவனுக்கு தன்னால் முடிந்த உதவி செய்கிறார்கள். இந்த பயண வழியில் ஒரு பணக்காரனை சந்திக்கிறான் ஜியோ. அவன் தனது இறப்பிற்கு பிறகு என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள மரணஒத்திகை பார்த்தபடியே இருக்கிறான்.
ஒரு பெண் தனது ரத்தத்தை விற்று வாழ்க்கை நடத்துகிறாள். இப்படியாக தினசரி வாழ்விற்காக எளிய மனிதர்கள் எவ்வளவு போராடுகிறார்கள் என்பது படம் முழுவதும் அடியோசையாக கேட்டபடியே இருக்கிறது.நட்பிற்காக மேற்கொள்ளும் பயணமே உலகில் மிக முக்கியமானதும் அர்த்தபூர்வமானதுமானது. என்பதையே படம் உணர வைக்கிறது.
இன்னொரு தளத்தில் படம் இறந்து போன மனிதன் எளிமையான கிராமப்புற வாழ்வின் குறியீட்டை போலவே  இருக்கிறான் . இன்றைய சீனாவில் கிராமப்புற வாழ்வும் அதன் எளிமையும் மாறிப்போய்விட்டது. தொழில் வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கம் மனிதர்களை அவர்களதுவேர் நிலத்திலிருந்து துண்டாடுகிறது என்று படம் விமர்சிக்கிறது.உதிர்ந்த இலை மரத்தின் அடிக்கே சென்று சேர்கிறது என்கிறது சீனப்பழமொழி அதை தான் படம் தனது ஆதார கருவாக கொண்டிருக்கிறது.வேதாளத்தை விக்ரமாதித்யன் தனது தோளில் தூக்கி கொண்டு அலைவது போன்று பிணத்தை தனது தோளில் தூக்கி கொண்டு அலைகிறான் ஜியோ. சாலையோரம் அதை படுக்கவைக்கிறான். பேருந்தில் அதை கட்டிக் கொண்டு தூங்குகிறான். வயல்வெளியில் அதற்கு வைக்கோல் தொப்பி போட்டுவிடுகிறான். பலநேரம் அதோடு பேசுகிறான். அலங்காரம் செய்கிறான். எப்பாடு பட்டாவது அதை ஊருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற முயற்சி வேடிக்கையாக இருக்கிறது. அதே நேரம் நட்பு எவ்வளவு வலிமையானது என்பதையும் காட்டுகிறதுஇந்த படம் பார்க்கும் போது மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் பிணமாக நடிப்பார். அவரை தூக்கி கொண்டு செல்ல பெண்கள் பட்ட பாடுகள் நினைவிற்கு வந்தது. அதுபோன்ற காட்சிகளே இப்படத்தின் பிரதான விவரிப்புகள். ஆனால் அத்துடன் வழிநெடுக ஜியோ சந்திக்கும் மனிதர்கள், அவர்களது ஆசைகள் சிதைவுற்ற கனவுகள் யாவும் ஊடுகலக்கின்றன.படத்தை இயக்கியுள்ளவர் Yang Zhang  . இவரது முந்தைய படமான Sunflower சிறந்த ஒளிப்பதிவு மற்றும் திரைப்படமாக ஸ்டாக்ஹோம் திரைப்படவிழாவில் விருது பெற்றிருக்கிறது. சாலைபயணத்தின் வழியே நீளும் கதைகள் வகை படங்களில் கெட்டிங் ஹோம் தனித்துவமானது. மறக்கமுடியாத நினைவாக படம் நமக்குள் ஒடிக்கொண்டேயிருக்கிறது,


••

0Shares
0