துயரை ஆடையாக நெய்பவள்

ஹோமரின் இதிகாசங்களான இலியட் மற்றும் ஒடிஸி ஆகிய இரண்டும் பல்வேறு முறை திரைப்படமாக்கபட்டுள்ளன.

டிராய் வீழ்ச்சிக்குப் பிறகு இத்தாக்காவின் மன்னரான ஒடிஸியஸ் தனது வீட்டிற்குத் திரும்பும் நீண்ட கடற்பயணத்தையும் அதில் சந்தித்த இன்னல்களையும் ஒடிஸி விவரிக்கிறது

1955 இல் கிர்க் டக்ளஸ் நடித்த யுலிஸஸில் இருந்து மாறுபட்டு தி ரிட்டர்ன் உருவாக்கப்பட்டுள்ளது. உபெர்டோ பசோலினி இயக்கிய இந்தப் படத்தில் முந்தைய யுலிஸஸில் இருந்த கடலின் சீற்றம் மற்றும் அரக்கர்கள். சூனியக்காரிகள். போதை தரும் தாவரங்கள், நரமாமிசம் உண்பவர்களை எதிர்த்த சாகசங்கள் எதுவும் கிடையாது.

மாறாக இப்படத்தில் கடற்பயணத்தில் ஏற்பட்ட இடர்களால் உருக்குலைந்துப் போன ஒடிஸியஸ் வீழ்ச்சியுற்றவனாக இத்தாகா வந்து சேருகிறான். போரின் காரணமாகத் தனது குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்த நாட்களை நினைத்து வருந்துகிறான். டிராயின் வெற்றி உண்மையில் அவனுக்குப் பெரிய மகிழ்ச்சியைத் தரவில்லை.

இன்னொரு புறம் அவனது மனைவி பெனிலோப் கணவனின் வருகைக்காக நீண்டகாலம் காத்திருக்கிறாள். துயரை மறைத்துக் கொண்ட அவளது மனவுறுதியை படம் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

பிரிந்த குடும்பம் ஒன்று சேர்வது எப்போதும் சினிமாவிற்கான வெற்றிகரமான கதையாகக் கருதப்படுகிறது. அதைத் தான் உபெர்டோ பசோலினியும் முதன்மைப்படுத்தியிருக்கிறார்.

ஒடிஸியஸ் இதிகாச வீரனாக மட்டுமின்றி வேலைக்காக குடும்பத்தைப் பிரிந்து செல்லும் மனிதனின் அடையாளமாகவும் மாறிவிடுகிறான். பெனிலோப் தனித்து வாழும் பெண் எதிர்கொள்ளும் நெருக்கடியின் அடையாளமாக இருக்கிறாள். அது தான் இந்த இதிகாச கதாபாத்திரங்களை இன்றைய மனிதர்களைப் போல புரிந்து கொள்ள வைக்கிறது.

குடும்பத்தைப் பிரிந்து சென்று பல ஆண்டுகளுக்குப் பின்பு திரும்பி வருகிறவனின் மனநிலையை இந்திய இலக்கியங்கள் நிறையவே பேசியிருக்கின்றன. குறிப்பாக சாமியார் ஆவதற்காக வீட்டை விட்டுச் சென்றவன் பல ஆண்டுகளுக்கு பின்பு வீடு திரும்புவதை பல கதைகளில் காண முடிகிறது. புதுமைப்பித்தனின் கதை ஒன்றிலும் இது போன்ற நிகழ்வு சித்தரிக்கபடுகிறது

இதில் வரும் ஒடிஸியஸ் ஒரு மாவீரன். போரே அவனை மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. ஆனால் வீடு திரும்பும் போது அவன் தனக்காக காத்திருப்பவர்களின் அன்பை உணரத் துவங்குகிறான். வெறுமையும் வலியும் மட்டுமே அவனிடம் மிஞ்சியிருக்கின்றன.

இழந்த அனைத்தையும் மீண்டும் பெற தனது பலத்தை ஒடிஸியஸ் நிரூபிக்க வேண்டியுள்ளது. அதற்கான போராட்டமே படத்தின் மையக்கதை.

ஒடிஸியஸ் நிர்வாணமாக, காயமடைந்த நிலையில் இத்தாக்கா தீவில் கரையொதுங்கும் காட்சியோடு படம் துவங்குகிறது. ஒளிரும் கடலும் அலைகளின் சீற்றமும் அடையாளம் தெரியாத மனிதனாக மணலில் ஒதுங்கி கிடப்பதும் அத்தனை அழகாகப் படமாக்கபட்டிருக்கிறது.

இத்தாகாவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தேசமே மன்னருக்காகக் காத்திருக்கிறது. ஆனால் காப்பற்றப்பட்ட ஒடிஸியஸ் அரண்மனைக்குச் செல்லவில்லை. தனது உடலும் மனமும் நலமடையும் வரை பாதுகாப்பாகக் குகையில் வசிக்கிறான். எதிரிகளிடமிருந்து தனது தேசத்தைக் காப்பதற்காகப் பிச்சைக்காரனாக வேடமிடுகிறான்.

போரில் ஒடிஸியஸ் இறந்துவிட்டான் என ஊரார் சொல்வதை ராணி பெனிலோப் நம்ப மறுக்கிறாள் ஒடிஸியஸ் நிச்சயம் வீடு திரும்புவான் என்று காத்திருக்கிறாள்

அவளை மறுமணம் செய்து கொள்ள விரும்பிய வீர்ர்கள் பலரும் அவளது அரண்மனையினுள் காத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கணவராகத் தேர்ந்தெடுக்காவிட்டால் அவளையும் இத்தாக்காவையும் வலுக்கட்டாயமாகக் கைப்பற்றப் போவதாக மிரட்டுகிறார்கள்.

பெனிலோப் தனது சொந்த வீட்டில் கைதியைப் போலிருக்கிறாள். தனது மகனுடன் சேர்ந்து கொண்டு அரியணையைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள்.

பெனிலோப் தனது மாமனார் லார்ட்டஸுக்கு அளிப்பதற்காக இறுதிச் சடங்கில் சுற்றப்படும் ஒரு ஆடையை நெய்து கொண்டிருக்கிறாள். மூன்று ஆண்டுகள் அந்த நெசவுப்பணி நடக்கிறது. அந்தப் பணி முடிந்தபிறகே அவள் மறுமணம் செய்து கொள்வதாக அறிவித்திருக்கிறாள்.

பெனிலோப்பின் நெசவு எதிர்ப்பின் வடிவமாக மாறுகிறது: ஒவ்வொரு நாளும், பகலில் அந்த ஆடையை நெய்கிறாள், இரவில் நெய்த இழைகளை அவிழ்த்துப் பிரித்து விடுகிறாள். இப்படியாக அவள் தனது திருமணத்தை மூன்று ஆண்டுகள் தள்ளிப் போட்டு வருகிறாள்.

வேற்றுருவில் வந்தாலும் பணிப்பெண் ஒடிஸியஸை அடையாளம் கண்டுவிடுகிறாள். பெனிலோப்பின் காத்திருப்பையும் மனத்துயரையும் அவருக்கு உணர்த்துகிறாள். தனது வளர்ந்த மகனையும் மனைவியையும் ஒடிஸியஸ் சந்திக்கிறான். ஆனால் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

ஒடிஸியஸாக ரால்ஃப் ஃபியன்னெஸ், பெனிலோப்பாக ஜூலியட் பினோ சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மரியஸ் பாண்டுருவின் ஒளிப்பதிவு அபாரமானது.

ஒடிஸியஸின் கதையை விடவும் தனது துயரத்தை ஆடையாக நெய்யும் பெனிலோப்பின் தனிமையே நம்மை அதிகம் கவருகிறது. இதிகாசத்தை இன்றும் நமக்கு நெருக்கமாக்குவது அதில் வெளிப்படும் உணர்ச்சி வெளிப்பாடும், தனித்துவமான நிகழ்வுகளுமே. அதில் ஒன்றே பெனிலோப்பின் விசித்திரமான நெசவு .

••

0Shares
0