துயிலும் பெண்

எனது முந்தைய பதிவில் எனக்கு பிடித்த கதை என்று The Sleeping Woman : Zakaria Tamer  இணைப்பை தந்து இதை யாராவது தமிழில் மொழிபெயர்த்தால் சந்தோஷம் கொள்வேன் என்று குறிப்பிட்டிருந்தேன். நண்பர் அனுஜன்யா அதை சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். அவருக்கு என் நிறைந்த மகிழ்ச்சியும் நன்றியும்.


***


துயிலும் பெண் – ஜகரியா தமேர் 


தன் தந்தை, தாய் மற்றும் மூன்று இளைய சகோதரர்கள் முன் தலை தாழ்த்தி சுவாத் அழுதாள். தான் அவமானத்தால் களங்கப்பட்டதை துடைத்திட வேண்டி, தன்னை வெட்டிப்போட்டு விடும்படி அழுதபடியே, இறைஞ்சினாள். அவள் தந்தை கண்டிப்பான தொனியில் அவளுக்கு நடந்ததை முழுவதும் விவரமாகக் கூறும்படி கோரினார். சுவாத் உடைந்த குரலில்எனக்கு நடந்தது நம்பமுடியாதது; நம்பமுடியாதது எனினும் அது நடந்தேறியதுஎன்றாள்.


தந்தை மேலும் கண்டிப்பான குரலில் எதையும் மறைக்காமல் தங்களுக்குச் சொல்லும்படி ஆணையிட, அவள் எல்லாவற்றையும் சொல்லத் துவங்கினாள்.


முந்தைய இரவில் வழக்கம் போல் கதவை இறுகச் சாத்தி, தாளிட்டபின் தனது அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். துயுலுகையில், யாருமற்ற பூங்காவில் தான் நடந்து சென்றதைக் கண்டாள். திடீரென்று ஒரு இளைஞன் அவளைத் தாக்கினான்; அவன் யாரென்றோ, அவன் எங்கு மறைந்திருந்தானென்றோ அவளுக்குத் தெரியவில்லை; அவளைக் கீழே தரையில் வீசி, அவள் ஆடைகளைக் கிழித்தபடி அவள் மேல் மடிந்து, அவளிடம் தனக்குத் தேவையானதை பிடுங்கிக்கொண்டான்; அவளது கெஞ்சல்களையும், கேவல்களையும், அவர்கள் இருவரின் முகத்தையும் மூழ்கடித்த அவளது கண்ணீரையும் அவன் சற்றும் பொருட்படுத்தவில்லை.


பிறகு அவள் இரண்டாவது கனவு கண்டாள். ஒரு நெரிசல் மிகுந்த சாலையில் அவள் நடந்து கொண்டிருக்கையில் திடீரென அதே இளைஞன் அவள் மீது பாய்ந்து, அங்கிருந்த அனைவர் முன்னிலையிலும் கற்பழித்தான். ஒருவர் கூட என்ன நடக்கிறது என்று நின்று கவனிக்கவில்லை.


இப்போது அவள் மூன்றாவது கனாக் கண்டாள். அவள் பாட்டனாரின் கல்லறைக்குச் சென்றிருந்தாள்; குரானின் துவக்க அதிகாரமான `சுரா அல் ஃபதிஹா` படித்து, இறந்த ஆன்மாவுக்குப் பிரார்த்திக்கையில், அதே இளைஞன் அவளைத் தாக்கி, மூன்று முறை வன்புணர்ந்ததில் திடுக்கிட்டாள். சிரித்தபடியே, சுற்றியிருக்கும் சூழலின் அழகு தனக்கு இத்தகைய சக்தி தருவதாகச் சொன்னான். 


அந்தத் தந்தை கேட்டார்யார் இந்த இளைஞன்?”


அவள் சொன்னாள்எனக்கு அவனைத் தெரியாது; இதற்கு முன் என் வாழ்வில்  அவனை நான் பார்த்ததே இல்லை; கனவில் மட்டும் கண்டிருந்த அவனை நான் எங்ஙனம் அறியக்கூடும்? ஆனால், அவனைத் திரும்பக் காண நேர்ந்தால், உடனே அவனை அறிவேன்; ஏனெனில் என்னால் அவன் முகத்தை மறக்க இயலாது 


தந்தைநீ விழித்ததும் உனக்கு என்ன ஆயிற்று?” என்றார்


அவள்கிழிக்கப்பட்ட உடைகளுடனும், சிராய்ப்புகளுடன் குருதி தோய்ந்த உடலில் நகங்களும் பற்களும் ஏற்படுத்திய தழும்புகளுடன் படுக்கையில் வீழ்த்திருந்தேன்என்றாள்.


அவள் தாய்இந்தப் பெண் என்னுடைய மகள்; அவளை எனக்கு நன்றாகத் தெரியும். இவள் பீரங்கிக் குண்டுகள் வெடித்தாலும் விழிக்காத ஆழ்துயில் பயில்பவள். உறக்கமும் கனவுகளும் ஆன விதயமில்லை இது.  இந்த சந்தில் திரிகின்ற இளைஞர்களில் ஒருவன் இவள் அறையில் புகுந்து, இவள் துயில்கையில் சேதப்படுத்தியிருக்க வேண்டும்.”


தந்தையார்இப்படி நான்கு ஆண்மகன்கள் இருக்கும் வீட்டில், இரவில் நுழையக்கூடிய புத்தி கெட்டவன் யார்?” என்றார்.


சுவாதின் சகோதரர்கள் கோபத்துடன் கூச்சலிடத் துவங்கினர். அவர்கள் அந்த இளைஞன் யார் என்று தெரிந்தால் அவனைக் கொன்று, அவனைக் கண்டந்துண்டமாக்கி விடுவதாகச் சூளுரைத்தனர்.


சுவாத் தான் தாயிடம்நீங்கள் சொல்வது சரியானால், எனக்கு அந்த இளைஞனைத் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் இந்த சந்தில் இருக்கும் ஒவ்வொரு இளைஞனையும் எனக்குத் தெரியும்என்றாள்.


பிறகு தந்தையார்ஒரு கண்ணியமான பெண் செய்ய வேண்டியதான மறுப்பைக் காட்டினாயா?” என்று கேட்டார்.


சுவாத்நான் மறுக்கவும், சப்தமாகக் கூச்சலிடவும் செய்தேன்; ஆனால் அவன் சிரித்தபடியே நாங்கள் கனவுலகில் இருப்பதாகவும், விழித்திருப்பவர்கள் உறங்குபவர்களின் உலகை அறிய முடியாது என்றான்என்று பதிலளித்தாள்.


அவள் தந்தை நெடுநேரம் யோசித்து, பின்னர் நடுங்கும் குரலில் தனக்கு நேர்ந்ததை யாருக்கும் சொல்லக்கூடாதென்று மகளை எச்சரித்தார்.


ஆனால் சுவாதுக்கு நடந்தது அந்த சந்திலிருந்த மேலும் பல பெண்களுக்கும் நடக்கும்; ஆண்கள் ஒன்றும் செய்வதறியாது முழிப்பர்; அவர்களின் கர்வத்திற்கு பங்கம் விளைவித்தவர்களை பழி வாங்க இயலாதவர்களாக இருப்பார்கள்; தங்கள் பெண்டிரை உறங்கவிடாது தடுக்க முனைவர்;


ஆயினும் அவர்கள் முயற்சி தோல்வியுறும்; அப்பெண்கள் துயிலுற்றே தீர வேண்டும்; கற்பழிப்புக்கும் ஆளாக வேண்டும்; பிறகு கிழிக்கப்பட்ட தங்கள் உடைகளுடன் விழித்தெழுவார்கள்


மொழிபெயர்ப்பு : அனுஜன்யா


***

0Shares
0