துயில் – நாவலும், நோய்மை பற்றிய புரிதலும்

கடந்த சனிக்கிழமை டிஸ்கவரி புக் பேலஸ் நடத்திய துயில் பற்றிய விமர்சனக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது, நிறைய வாசகர்கள் துயில் குறித்து ஆர்வமான கேள்விகளைக் கேட்டார்கள், நேரலையின் வழியாகவும் இந்த நிகழ்ச்சி நிறைய நண்பர்களால் கேட்கப்பட்டிருக்கிறது.

முனைவர் இராம குருநாதன் அவர்கள் துயில் விமர்சனக்கூட்டத்திற்கு தலைமையேற்று நாவல் குறித்து விரிவான அறிமுகவுரையை நிகழ்த்தினார் , தமிழின் மரபு இலக்கியங்களைப் பற்றிய நுண்மையான புலமை கொண்ட இராம குருநாதன் அவர்கள், நவீன இலக்கியப்படைப்புகளையும் ஆழ்ந்து வாசித்து பல்வகை விமர்சனக்கோட்பாடுகளைக் கொண்டு துல்லியமான விமர்சனப்பார்வைகளை வெளிப்படுத்துகிறார், அவருக்கு என் மனம் நிறைந்த நன்றி.

எனது துயில் நாவல் குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையிது

••

துயில் – நாவலும், நோய்மை பற்றிய புரிதலும் -ஒரு மேலோட்டப் பார்வை –

இராம.குருநாதன்

All Roads Lead To Rome என்பதுபோல  நாவலில் வரும் பாத்திரங்கள் தெக்கோடு தேவாலயத் திருவிழாவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். நாவலில் நோய்மையைப் பற்றியே பெரிதும் சிலாகிக்கப்படுகிறது. நோயில்லாத மனிதன் இருக்கமுடியாது. ஏதாவது ஒருவகையில் மனித மனம் நோயிருப்பதாகவே கற்பனை செய்துகொண்டு நலிவடைவதும், அதனை எதிர்கொள்ளத் தயங்குவதும் மனத்தின் இருப்பாகவே இருந்துகொண்டிருக்கிறது. நோய்மை பற்றிய விரிவாகப் பேசும் இந்நாவல் தமிழ் இலக்கிய உலகிற்குப் புதிய வரவாக அறிமுகமாயிருக்கிறது.

தொடக்கமும் இறுதியும் -ரயில் பயணத்தில் தொடங்கி ரயிலுக்காகக் காத்திருத்தலில் நிறைவடையும் உத்தி புதியதில்லை எனினும், கதாநாயகன் தான் ரயிலுக்காகக் காத்திருக்காது தன் பார்வையை வேறுதிசையில் திருப்பிக் கொள்கிறான். இருப்பினும், ரயில் பயணியமாய் மக்கள் வாழ்க்கை  தொடர்ந்து பயணித்துக்கொண்டுதான் இருக்கிறது என்பதைப் பூடகமாகத் தெரிவித்துள்ளார் ஆசிரியர்.

மேலைநாட்டு x மருத்துவம் கீழைத் தேய மருத்துவம், மேலைநாட்டுக் கலாச்சாரம் (உள்ளூர்) x  கீழைநாட்டுக் கலாச்சாரம், மதம் x மருத்துவம், கீழ்ச்சாதி x  மேல்சாதி ஆகியவற்றை  நாவல் இரட்டை எதிர்மையாக(binary opposite)ஆங்காங்கே விளக்கிச் செல்வதும் அதற்கான சூழ்நிலையை உ.ருவாக்கிக் கொண்டும் காட்சியும் களமுமாக நகர்ந்து செல்கிறது நாவல்.

நாவல் நிகழ்ச்சியின் பின்னணியில் சில சமயம் போஸ்ட் மார்டனிஸமும், மிகச் சிலவிடத்து மாஜிக் ரியலிஸமும் (சிறுமி செல்வி அறியாமையாலும், ஆர்வத்தாலும்  வினாத் தொடுத்தல், நத்தை, ஒட்டகச்சிவிங்கி, ஓணான் கிழவி, அண்டரண்ட பட்சி போன்று வரும் நிகழ்ச்சிகள் பற்றித் தன் ஒத்த சிறுவர்களிடமும்  பெரியவர்களிடமும் விவாதிக்கும் இடங்கள்) பின்னோக்கு உத்தியும் ஆங்காங்கே தலைஎடுப்பதைக் காணமுடிகிறது.

பாத்திரங்களின் வார்ப்பில்  பிராய்டியப் போக்கும்(டீ மாஸ்டர் சௌடையாவின் சேட்டை, கடை வைத்திருக்கும் கிட்ணனின் மனைவியோடு அழகரின் அப்பா முத்திருக்கை படுத்துச்சுகம் காண்பது, சீயன்னா சூயின் மனைவி மியாவிடம் உறவு கொள்வது) சிற்சில இடங்களில் ஜென்னின் வார்ப்பும்( கொண்டலு அக்காவின் அருளுரை, ஏலன் பவரின் சில வார்த்தைகள்)  இருக்கத்தான் செய்கின்றன. நாவலை வளர்த்துச் செல்ல ஆசிரியருக்கு அவை கைக்கொடுத்திருக்கின்றன.

கவர்ச்சி என்ற ஒன்றின் மீதே நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கவர்ச்சி என்ற ஒன்றில்தான் அனைவரின் கவனமும் ஈர்ப்புடையதாகிறது போலும். காமம் கடந்து செல்வதற்கு அரிது. ஆசிரியர் சொல்வது போல, ‘காமத்தில் மனிதன் தோற்றுப்போகிறான் அல்லது அதனை வேட்டையாடுகிறான்’

அழகரின் மனைவி சின்னராணி போடும் கடற்கன்னி வேடம் அதனைத்தான் நினைவூட்டுகிறது. அவளைக் கொண்டு பிழைப்பு நடத்தும் அழகருக்குச் சாத்திய மாவதோடு, கடற்கன்னி பற்றி நிலவும் தொன்மமும் ஊடிழையாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. கடற்கன்னியாக அவளைப் பார்த்துப் ‘பிளைமவுத் கார்’ வைத்திருக்கும் பணக்காரன் ஒருவன் தன் பணியாளான குருடன் ஒருவனோடு அவளது புற உறுப்பைப் பற்றிய கற்பனையில் தொட்டுப் பார்க்க நினைப்பதும்,  அரப்பளி என்ற மலைக் கிராம வாசியான மூப்பக் கிழவன் மலைத்துப் போய்த் தன் ஆயுளில் அப்படிப்பட்ட ஒருத்தியைப் பார்த்து ஈடேற்றம் அடைந்துவிட்டதாக நினைப்பதும், ஆசைவலையில் அழகரை விழவைக்கும் மாஜிக் கண்ணாடி ஷோ நடத்தும் தம்பான் கடற்கன்னியாக இருப்பவளைப் புணர்ந்து பார்த்துவிடுதான  வெறியில் அவளிடம் வன்புணர்ச்சி கொள்வதும் கடற்கன்னி பற்றிய தொன்ம நம்பிக்கை ஒரு காரணமாக இருக்குமோ என்று  தோன்றுகிறது.

அழகரின் கதை, கூடவே ஜக்கியின் கதை, வெளிநாட்டிலிருந்து தெக்கோட்டுக்கு மருத்துவச் சேவை செய்ய வந்த ஏலன் பவர், நோயாளிகளுக்குப் பணிவிடை செய்து அன்பையும் அருளுரையும் தரும் கொண்டலு அக்கா ஆகிய நால்வரைச் சுற்றித்தான் நாவல் நடைபோடுகிறது. இவர்களின் நிகழ்ச்சியினூடே உதிரிப் பாத்திரங்களும், கதைக்குள் கதையாக உலவும் சில நிகழ்வுகளும்  நாவலின் கட்டுக்கோப்புக்கு உறுதுணையாக இருக்கின்றன.

கதைப்பின்னலை ஆசிரியர் அமைத்துக்கொண்ட களமும், கதைசொல்லும் விதமும் நேர்த்தியான நெசவில் அழகுறப் பின்னப்பட்டுள்ளன. ஒரு வகையில் முன்பின் அமையும் மாற்றுக் காட்சியும், கதையின் பின்னணிப்புலமும், தேவாலயம் உருவாகி வளர்ந்த வரலாறும், ஆசிரியரின் அகல வாசிப்பில் விளைந்த விளைச்சலாகவே கருதத்தக்கன.

அழகரின் கதையில் வாழ்க்கையின் முழுமையும் அர்த்தப்பட்டு விடுவதான ஒரு தோற்றம் கொள்கிறது. ஒவ்வொரு சமயமும் கடற்கன்னியாக வேஷம் போடுவதில் நாட்டமில்லாத சின்னராணி, (அவள்  மெலிந்த தோற்றமும், கருமை நிறமும் கொண்டிருப்பவள்) கணவனை விட்டுப் பரிமளம் சித்தி வீட்டில் தஞ்சம் புகுந்த அவளை அடித்து உதைத்து இழுத்துவரும் அழகர், அவளிடத்துத் தன் கஷ்டநட்டங்களை எடுத்துச் சொல்லி மீண்டும் பிழைப்புக்கு வழிதேட முயலுதல், கால் சூம்பிப்போய் இழுத்து இழுத்து நடக்கும் அவர்களின் பெண் செல்வி ஆகியோர் தெக்கோடுக்குச் செல்லும் ரயிலில் பயணிக்கும் போது அதில் சந்திக்கும் (நோய் தீரவேண்டியும், நேர்த்திக்கடன் செலுத்தவும் துயில் தரு மாதாவைக் காணச் செல்லும்) மனிதர்கள், உப்பாற்றுப் பாலம், பனையூர், அச்சம் பட்டி, ஈச்சங்காடு, திருவேலம், தெக்கோடு விலக்கு ஆகிய இடங்கள் சிலவற்றில் அழகர் கடற்கன்னி ‘ஷோ’ நடத்துதல், பொன்னியை ரயிலில் சந்தித்து அழகர் தன் காமத்தைத் தீர்த்துக்கொள்ள நினைப்பது. திருமணத்திற்கு முன் பேரின்ப விலாஸில் பாலியல் தொழிலில் முக்கிய பங்கு வகிக்கும் ஜிக்கியைச் சந்தித்து அவள் சார்ந்த பெண்களான டோலி, ராமி ஆகியவர்களின் உறவும், ராமி உடலுறவை அழகருக்குக் கற்றுத்தருதலும், அவள் நாகக்கன்னி வேடமிட்டுச் சம்பாதித்துக்கொடுப்பதும், பின்னர் அவனைப் புறக்கணிப்பதும் அழகரை இயல்பானதொரு சூழ்நிலக்கு ஆளாக்குகிறது.

திருமணம் ஆகிச் சில ஆண்டுகள் கழிந்த பின்னாலும் ஜிக்கியை நினைத்தலும், நாவலின் இறுதிக்கட்டத்தில் தம்பான் ஜிக்கி பற்றிய தகவலைச்சொன்னதும் அவளைத் தேடிப்போவதுமாகக் கதை நீள்கிறது.  தான் நடத்திவந்த மாயக்கண்ணாடியை அழகருக்கே கொடுக்க நினைத்து அவன் மனைவியைத்தன் வசமாக்கும் முயற்சியில் தம்பான் அழகரை மதுரைக்கு அனுப்பிவிட்டுச் சின்ன ராணியைத் தன்னுடன் வந்துவிடச் சொல்வதும், அவள் மறுத்ததும், அவளை மச்சான் உதவியால் வன்புணர்ச்சி செய்வதும் அவள் அச்சாணியால் தம்பானைக் குத்திக் கிழித்துக் கொலை செய்துவிடுவதும், அவள் சிறை செல்துவதுமான கதை பயணித்து முடிகிறது.  இதற்கிடையில் செல்வியிடம் அழகரும், சின்னராணியும் அவளைத் தேடி அலைகிறார்கள். அவள் மார்ட்டின் என்ற சிறுவனோடு தட்டைக்காடு செல்லும் வழியில் திசையறியாது காணாமல் போவதும் அவளைத் தேடித்திரியும் அழகர்,  அச்சம்பட்டியில்  அவள் கிடைத்ததும் அவளோடு தெக்கோடு திரும்பிய நிலையில் ஒரு பிச்சைக்காரன் மூலம் சின்ன ராணி தம்பானைக் கொலை செய்த விவரத்தை அழகர் அறிகிறான். செல்விக்காகவாவது இனி வாழவேண்டும் என்ற நினைப்பில் தெக்கோட்டிலிருந்து திரும்பிப் போக இரயில் நிலையத்தில் காத்திருக்கிறான். வாழ்க்கையில் எப்படியாவது சம்பாதித்து முன்னுக்கு வர நினைக்கும் அழகர் பாத்திரம் பல்வேறு சூழ்நிலைகளில் அலைபாய்ந்திருப்பினும் அவன் இறுதியிலாவது தன் நிலையை உணர்கிறான். செல்வியின் எதிர்காலம் குறித்த வினாக்குறி அவனைச் சிந்திக்கவைக்கிறது. நடைமுறைப்  பாத்திரத்தின் வெளிப்பூச்சுச் சிறிதுமற்றவனாகக் கதையில் உலவுகிறான்.

கதையின் பிரதானப் பாத்திரம் இவர்கள் என்றால், இதில் வரும் கொண்டலு அம்மா  அன்னை தெரஸாவை நினைவூட்டும் வகையில் நோயாளியிடம் பரிவும் பாசமும் காட்டும் தொண்டுள்ளம் மிக்கவளாக விளங்குகிறாள். கதைக்குள் கதையாகப் பல நிகழ்ச்சிகள்( மெட்டா ஃபிக்ஷன்) எட்டூர் மண்டபத்தில் வந்து தங்கும் நோயாளிகள்  வழியே அறியப் படுகின்றன. எட்டூர் மண்டபம் ஒருகாலத்தில் குதிரைகள் தங்கும் இடமாக இருந்ததைச் சீர்ப்படுத்தி அங்கேயே தங்கிப்பணிவிடை செய்யும் பண்பு மிக்கவளாகத்திகழ்கிறாள்.

எட்டூர் மண்டபம் இளைப்பாறும் ஆரோக்கியத்தலமாக விளங்குகிறது.  நோயை விட நோயாளி முக்கியம். மருந்து மாத்திரைகள் நோயைத் தணிப்பதை விட மனத்துக்கு ஆறுதலாகச் சொல்வதுதான் நோய்தீர்க்கும் ரகசியம் என்பதை அறிந்துவைத்திருக்கும் சமுதாய மருத்துவராக விளங்கும் பாத்திரம்  கொண்டலு அக்காளுடையது.  நோயாளி தனித்து விடப்படுபவன் அல்லன். அவன் அனைவரோடும்  ஒன்று சேர்ந்து  இருக்கவேண்டும் என்று நினைப்பவள் அவள். தன்னிடம் வரும் நோயாளிகள், அவர்களின்  வாழ்க்கை வேரில் மறைந்துகிடக்கும் பின்னணியை அவர்கள் அவளிடம் சொல்லும் கதைகள் விசித்திரமானவை. கதையை நீட்டிருப் பதற்கும், கிளைக்கதைகளை அமைத்துக் கொள்ளவும் எட்டூர் மண்டபம் ஆசிரியருக்குக் கைக்கொடுத்திருக்கிறது.  அந்த வகையில், தாணிக்குடி மாரியம்மன் திருவிழா, வழிமறிச்சான் மேட்டில், தாழ்ந்த சாதியில் கஞ்சி வாங்கிக் குடித்ததற்காகத் தன் மருமகளை ஒதுக்கிவைத்ததோடு, அவள் தலை மீது கல்லைப் போட்டுக் கொன்றுவிடும் மாமியார்க் கிழவி, பர்மாவில்  கடை நடத்திய சீயன்னா சூயி என்ற பர்மாக்காரன் மனைவி மியாவிடம் தவறாகப் பழகிய சீயன்னாவின் கதை,  சரவண முத்துவின் மனைவி அமுதினி தன் கணவனையும், அவன் சார்ந்த உறவுகளையும் வ¬த்ததுப் பார்ப்பதில் ஆனந்தம் அடையும் ஒரு ‘மெசோகிஸ்ட்’ மனோபாவம் கொண்டவளின் கதை,  விரல் பிரிக்க முடியாத நிலையில் அழுகிய நாற்றத்துடன் பிறர் நெருங்க அஞ்சும் சிவராமன் கதை, செருப்புத்திருடன் கதை, கோமகள் கதை, பிறருக்கு எடுத்துக்காட்டான அறவாழ்க்கையில் காலம் கழித்த தானப்பன், ரமணன் ஆகிய இரட்டையர் கதை, மற்றும் சாந்தியாகு, ஆஸ்டின், பெஞ்சமின், பர்னாபாஸ், கரோலினா, டோலாஸ்( ‘நார்ஸிஸ்ட்’ மனோபாவம் கொண்டவள்), தியோடர், முதலியோர் எட்டூர் மண்டபத்தில் தஞ்சம் புகுந்து அங்கிருந்து தெக்கோடு செல்ல நினைத்து அங்கு இளைப்பாறுகிறர்கள். அங்கு இறுதியாக வந்து தங்கும் ஐந்து நோயாளிகளிடமும் காணப்படும் விசித்திரங்கள் கதையை  மேலும் விரிக்கப் பயன்பட்டுள்ளன.

கதையின் முக்கிய அம்சமாக விளங்குபவள்  ஏலன் பவர். 1873 இல் தெக்கேட்டிற்கு ஞானத்தந்தை லகோம்பாவால் மருத்துவப்பணி புரிய அனுப்பப்பட்டவள். அழகர் கதையோடு அவளுக்குத் தொடர்பில்லை என்றாலும், நாவலில்  அவள் பங்கு இன்றியமையாததாய் இருக்கிறது. ஆசிரியரின் நோக்கத்தையும், கிறித்துவ மதம், கிறித்துவ கலாச்சாரம் பற்றிய புரிதல், மேலைநாட்டு மருத்துவமும், கீழை நாட்டு மருத்தவமும், மதமும், மருத்துவமும் பற்றி உள்ளூர் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை முதலியவற்றிற்கு அவள் ஆற்றும் பங்கு மிக முக்கியம். மனிதன், மதம், கடவுள் பற்றிய தத்துவார்த்த விசாரணை, தான் கற்ற மருத்துவப் படிப்பு, ஆண்களைப் பற்றிய மதிப்பீடு, உள்ளூர் வாசிகளின் கலாச்சாரம் பற்றி அவள் அறிந்துகொண்டவை, மருத்துவ சிகிச்சையில் உள்ளூர் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை, அவள் மேற்கொண்ட வைத்தியமுறைகள் முதலியன நாவலில் அவளுக்குள்ள இடத்தை நிறைவு செய்வன.  அவள் மேற்கொண்ட வைத்தியத்தில் ஆட்டுத் திருடனின் கைவிரலுக்கு மருத்துவம் பார்த்தது, புளியந் தோப்புப் பூசாரி இருள்ளப்ப சாமியின் மூர்க்கத்தனமான நடவடிக்கையை வெறுப்பது,  நாகலாவின் தலைப்பிரசவத்தில் தாயையும், குழந்தையையும் தன் வைத்தியத்தால் காப்பாற்ற முடியாமை, கிழவரைக் காது கேட்க வைத்தல் முதலானவற்றில் ஏலன் பவர் பங்காற்றிருப்பதும் அவள் மீது உள்ளூர் மக்கள் பகையும். நட்பும் கொண்டிருத்தல் ஆகிய நிலைகளில் அவள் பாத்திரம் ஒருவகையில் ஒட்டுப்பாத்திரமாகவே நாவலில் உலா வந்தாலும் நோய்மை பற்றிய கருத்தாங்கங்களுக்கும், இந்திய மருத்துவம் குறிப்பாக நாட்டுப் புறமருத்துவம் பற்றிய அறிதலுக்குமாய், கடவுளைக் காட்டி நோய் தீர்வதற்குப் பதில் கற்ற கல்வியைப் பயன்படுத்தி நோய் தீரக்கவேண்டும் என்ற உணர்விற்குமாகப் படைக்கப்பட்டிருப்பதாகவே அவளது வருகை இடம் பெற்றிருக்கிறது.  அவள் மதநம்பிக்கைக்கு எதிராகச் செயற்படுவதாய்ப் பாதிரியார் புகார் அளிக்கவும், அவள் அதனை எதிர்கொள்கிறாள். கல்கத்தாவிலிருந்து ஏலன் பவரை விசாரிக்கத் தனிக்குழு வருகிறது. பவர் தன் மீது குற்றம் இல்லை என்று மெய்பிக்கத் தன் சார்பில் கருத்தினை எடுத்துமுன் வைக்கிறாள். தன் மீது குற்றம் இல்லை எனவும் எடுத்துரைக்கிறாள்.நாவலில் அவள் பங்கு அவளை அறிவுசார் பாத்திரமாக அமைத்துவிடுகின்றது.  குற்றமற்றறவள் நிரூபித்தல், கல்காத்தாவிலிருந்து வந்த விசாரணைக்குழு குற்றமற்றவள் எனத் தீர்மானித்தல். தேவாலயத்தின் அருகில் புதிய மருத்துவ மனையை ஊர்மக்களின் உதவியோடு உருவாக்கவும் செய்கிறாள்.  பவரிடம் குதிரை வண்டிக்காராகச் சேர்ந்த கிக்கிலி என்பவன் அவளது கொலைக்குக் காரணமாக  இறுதியில் சொல்லப்படுகிறது. மேல் சாதிக்கார ர்களின் தூண்டுதல் காரணமாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. சாட்சிகளாக, கிடாத்திருக்கை,  சசிவர்ணம்,  சவலை, மாரியம்மாள், கனகவல்லி, சீயாளி, அந்த்ரேயா, எலன் பவரின் கொலை குறித்து முறையாக விசாரிக்கப்படுதல் ஒரு பரபரப்பை ஊட்டுவதாய் உள்ளது. கடித உத்தி மூலமே அவளின் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வது புதிய உத்தியில்லை.

இன்றுள்ள சூழ்நிலையில் பெண்ணும் பேசப்படவேண்டிய வாகிறாள். தனக்கு ஊறு நேரும்போது அதனை எதிர்க்கொள்ளவும் தயாராக இருக்கிறாள். கால மாற்றம் பெண்களுக்கான புதிய வீரியத்தை அளித்திருக்கிறது என்பதன் அடையாளமாகத் தான் சின்னராணி தம்பானைக் கொலை செய்கிறாள். அதே போழ்தில் சமூகத்தின் நோயாக இருப்பதை அடையாளப்படுத்த ஜிக்கி கதை இயல்பாகச் சொல்லப் பட்டிருக்கிறது. சமூக சேவையில் எந்தச் சுயநலமுமின்றித் தங்களைக் கரைத்துக் கொள்பவர்களாக எலன் பவரும், கொண்டலு அக்காவும் மறக்கமுடியாதவர்களாக விளங்கிப் பிறருக்காக வாழும் வாழ்வை மேற்கொள்கிறார்கள். சின்ன ராணி கணவனைச் சில நேரங்களில் புறக்கணித்தாலும் அவன் பிழைப்புக்காகத் தன்னைத்,தியாகம் செய்யவேண்டியவளாகிறாள். இப்படிப் பெண்களின் பங்கு முக்கியமான வார்ப்பில் அமைந்து இருக்கிறது.

பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் நாட்டில் கிறித்தவம் பரவலாகப் பரவத் தலைப்படுவதையும், ஆங்கில மருத்துவத்தின் வருகை மக்களை எதிர்கொள்ள வைத்த விதத்தையும் இந்த நாவல் வெளிப்படுத்தியுள்ளது. சாதிய ஆதிக்கம் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பதையும் ஆசிரியர் காட்டத் தவறவில்லை.

நோய்மை பற்றிய புரிதலும், மனம் சார்ந்த நிலையில் அதனை நோயாளி எதிர்கொள்ளும் விதமும், பரிவும் கருணை மொழியும் கொண்டு அணுகினால் நோய் பாதி தீர்ந்தது போலத்தான் என்ற தகவலைச் சொல்லும் நோக்கமும் துயில் நாவலை நமக்கு  மிக நெருக்கமாகக் கொண்டுவருகிறது.  அதன் மூலம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

எஸ். இராமகிருஷ்ணனின் துயில் கடந்த காலத்தின் புனைவுதான். ஆனால் அது இன்றைக்கும் நிகழ்காலத்தின் நிஜமாக இருப்பதுதான் இந்த நாவலுக்கான வெற்றி.

••

0Shares
0