துரத்தும் நினைவுகள்

1970களின் மத்தியில் அர்ஜென்டினாவின் சர்வாதிகாரத்தால் நடத்தப்பட்ட உண்மை சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டே இத் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது

 1976 முதல் 1983 வரை அந்த நாட்டை ஆண்ட பயங்கரமான இராணுவ ஆட்சியின் போது அரசியல் காரணங்களுக்காக அப்பாவிகள் பலர் கைது செய்யப்பட்டுச் சித்திரவதை செய்து விமானத்தில் ஏற்றிக் கொண்டு போய் நடுக்கடலில் தள்ளிவிட்டு கொல்லப்படுகிறார்கள்.

அப்படி ஒரு கடற்படை விமானத்தின் விமானியாக இருக்கும் கோப்லிக் இந்த இழிசெயலை செய்யமுடியாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார். அவரை ராணுவ சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறார்கள். தன்னையும் சர்வாதிகாரம் பழிவாங்க கூடும் என்பதால் அவர் தலைமறைவாகிறார்.

அவரது தலைமறைவு வாழ்க்கையினைத் தான் Koblic திரைப்படம் விவரிக்கிறது. செபாஸ்டியன் போரென்ஸ்டீன் இயக்கியுள்ளார்.

தொலைதூர கிராமத்தில் பழைய நண்பரின் வீட்டில் தங்கிக் கொள்ளும் கோப்லிக் அவரது மருந்து தெளிக்கும் விமானத்தின் பைலட்டாகப் பணியாற்றுகிறார்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து விரிந்து கிடக்கும் தென் அமெரிக்கப் பாம்பாஸின் நிலப்பரப்புகளுக்கு இடையே கதை நிகழுகிறது.

அந்த ஊரின் காவல்துறை அதிகாரி வெலார்டே மிக மோசமானவர். ஊழல் பேர்வழி. அவர் கோப்லிக்கை சந்தேகப்படுகிறார். இதனால் அவரை ரகசியமாகக் கண்காணிக்கிறார். கோப்லிக்கின் மனசாட்சி கடந்த கால நிகழ்ச்சியை நினைவுபடுத்தி அவரைத் தொந்தரவு செய்கிறது.

அந்தக் கிராமத்தில் சாலையோரக் கடை நடத்திவரும் நான்சி அறிமுகமாகிறாள். அவளுடன் கோப்லிக் நெருங்கிப் பழக ஆரம்பிக்கிறார். மோசமான கணவனிடமிருந்து தப்பிக்க முயலும் நான்சி கோப்லிக்கை தீவிரமாகக் காதலிக்கிறாள். அதை அறிந்த அவளது கணவன கோப்லிக்கை கொல்வதென முடிவு செய்கிறான். இதனை எதிர்கொள்ளக் கோப்லிக் எடுக்கும் முடிவும் அதன் தொடர் விளைவுகளும் எதிர்பாராதவை.

படத்தின் துவக்காட்சியிலே காயம்பட்ட நாயை குணப்படுத்தித் தன்னுடன் கோப்லிக் வைத்துக் கொள்கிறான். அந்த நாய் அவனது வாழ்க்கையின் மறுவடிவம் போலிருக்கிறது. நான்சியின் மீது உருவாகும் ஈர்ப்பு. அவர்களின் ரகசிய சந்திப்பு. அவர்களுக்குள் நடக்கும் ஆவேசமான கூடல் எனக் காட்சிகள் கவித்துவமாக விரிகின்றன. நேர்த்தியான ஒளிப்பதிவு படத்தின் தனிச்சிறப்பு. மாறிக் கொண்டேயிருக்கும் வானிலை படத்தின் மைய உணர்வை வெளிப்படுத்துகிறது.

ஒளிந்து வாழும் ஒருவனின் நாட்களை விவரிக்கும் படம் என்றாலும் அது தனி ஒருவரின் கதை மட்டுமில்லை என்று உணர்த்துகிறது. ஒருவகையில் நான்சியும் ஒளிந்து தான் வாழுகிறாள். அவளது கடந்தகாலம் ஒரு காட்சியில் மட்டுமே சொல்லப்படுகிறது. அது போலவே உள்ளூர் காவல்துறை அதிகாரிக்கும் கடந்தகாலமிருக்கிறது. ராணுவ ஆட்சி நடைபெற்ற செயல்களும் இது போல உலகம் அறியாதவையே.

வெஸ்டர்ன் திரைப்படங்களைப் போலவே இப்படமும் உருவாக்கபட்டிருக்கிறது. குறிப்பாக மதுவிடுதிக் காட்சிகள். நான்சிக்கும் கோப்லிக்கிற்குமான காதல் மிக நுட்பமாக விவரிக்கபடுகிறது. அவள் ரகசிய சந்திப்பிற்காகக் குதிரையில் வரும் போது கடந்து செல்லும் நிலப்பரப்பு கண்கொள்ளாதது. அவர்கள் இருவரும் விமானத்தில் சுற்றிவரும் காட்சியும் சிறப்பானது. அது ஹிட்ச்காக்கின் “North by Northwest” படத்தின் ஒரு காட்சியினை நினைவுபடுத்தியது.

கதை நடக்கும் விசித்திரமான ஊரும் அதன் மனிதர்களுமே படத்திற்குத் தனித்துவத்தைத் தருகிறார்கள்.  கோப்லிக்கை காதல் தான் மீட்கிறது. அது புதிய வாழ்க்கையை நோக்கி அவனைப் பயணிக்க வைக்கிறது.

0Shares
0