துரோகத்தின் வெளிச்சம்

ஃபிளெமிஷ் ஓவியர் பீட்டர் பால் ரூபன்ஸ் வரைந்த சாம்சன் மற்றும் டிலீலா ஓவியம் நிகரற்ற அழகுடையது.

அந்த ஓவியத்தில் டிலீலாவின் மடியில் தலைவைத்து சாம்சன் துயில்கிறான். அப்போது அவன் தலைமயிரை துண்டிப்பதற்காகக் காட்டிக் கொடுக்கிறாள் டிலீலா. வாசலுக்கு வெளியே பெலிஸ்திய வீரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓவியத்தில் டிலீலாவின் இடது கை சாம்சனின் வலது தோள்பட்டையின் மேல் உள்ளது, மறுகை விலகி இருக்கிறது. தனது செயலை முழுமனதோடு அவள் செய்யவில்லை என்பதன் அடையாளம் போலவே சித்தரிக்கபட்டுள்ளது.

டிலீலாவின் திறந்த மார்பகங்கள். குனிந்த தலை. கவிழ்ந்த பார்வை. அவளது ஆடையின் வனப்பு. ஆழ்ந்து உறங்கும் சாம்சன் திடகாத்திரமான உடற்கட்டுடன் காணப்படுகிறான். ஆனால் அவன் துயிலும் நிலை தாயின் மடியில் உறங்கும் சிறுவனைப் போலிருக்கிறது.

இந்த ஓவியத்தில் மெழுகுவர்த்தி ஏந்திய முதியவள் நிற்கிறாள். அவள் காட்டும் வெளிச்சத்தில் தான் தலைமயிரை துண்டிப்பது நடக்கிறது. அந்தச் சுடர் துரோகத்தின் வெளிச்சமாக ஒளிர்கிறது. முதியவளின் முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகளை மிகத்துல்லியமாக ரூபன்ஸ் வரைந்திருக்கிறார்.

பழைய ஏற்பாட்டுக் கதையிலிருந்த சாம்சன் டிலீலா காதலின் காட்சியை ரூபன்ஸ் வரைந்திருக்கிறார். இணையற்ற வீரனான சாம்சனின் பலம் அவனது தலைமயிரில் இருக்கிறது. அதைத் துண்டிக்கவே டிலீலா உதவி செய்கிறாள். பழைய ஏற்பாட்டில் விளக்கு ஏந்திய முதியவள் இடம்பெறவில்லை. ஆனால் அவளை வரைந்திருப்பதன் மூலம் காட்சிக்கு உயிர்கொடுத்திருக்கிறார் ரூபன்ஸ்

இத்தாலிய ஒவியர் கரவாஜியோ பாணியில் ஒளியை வரைந்திருக்கிறார். வெளியே நிற்கும் காவலர்கள் ஏந்திய மெழுகுவர்த்தியிலிருந்து வரும் வெளிச்சம் எத்தனை அழகாக இருக்கிறது. சாம்சன் கிரேக்க சிற்பம் போல உடற்கட்டுக் கொண்டிருக்கிறான். அவன் தனது இடையில் மிருகத்தோலை மட்டுமே அணிந்திருக்கிறான் டிலீலா வெள்ளை நிற ஆடையுடன் சிவப்பு நிற சாடின் ஆடையை அணிந்துள்ளார் டிலீலாவின்உ தடுகள் எதையோ சொல்ல முயலுவது போலிருக்கின்றன. அவளது பொன்னிறக் கூந்தல். ஏறிட்ட நெற்றிமேடு. மூக்கின் சிறுவளைவு, உதட்டுக்குழி, கழுத்துமடிப்பு, தளர்ந்த மார்பகங்கள். கால்விரலின் நகலட்சணம். டிலிலாவின் ரம்மியமான சிவப்பு உடை, விலையுயர்ந்த கம்பளம் மற்றும் ஊதா நிற ஆடைகள், அதே போல் மென்மையான வெளிச்சம் என அனைத்தும் மகிழ்ச்சியின் உணர்வையும் சூழ்நிலையையும் உருவாக்குகின்றன.. பின்புலத்திலுள்ள இரண்டு கண்ணாடி குடுவைகள் மிகத்துல்லியமாக வரையப்பட்டுள்ளன. அறையின் இடதுபுறத்தில் வீனஸ் மற்றும் மன்மதன் சிலை இருப்பது குறிப்பிடத்தக்கது.

தனது கணவனைக் காட்டிக் கொடுக்கும் டிலீலாவின் முகத்தில் மகிழ்ச்சியில்லை. ஆனால் அவள் பின்னால் நிற்கும் முதியவள் முகத்தில் விசித்திரமான மகிழ்ச்சி தென்படுகிறது. குறிப்பாகக் கிழவின் ஒற்றைப்பல். ஒளிரும் கண்கள் சுருக்கம் விழுந்த முகம், அவளது நரைக்காத கேசம் வெளிச்சத்தைக் கையால் மறைத்து சாம்சன் தலைபக்கம் அவள் காட்டும் விதம் என முதியவள் தனித்துவமாக ஒளிருகிறாள்.

கத்திரிக்கோலுடன் நிற்கும் பெலிஸ்திய முடிதிருத்துபவன், சாம்சனின் மயிர்கற்றையை இரண்டு விரல்களால் பிடித்துக் கொண்டிருக்கிறான். ஏதோ கனவில் ஆழ்ந்திருப்பவன் போலச் சாம்சனின் கண்கள் சொருகியிருக்கின்றன. உறக்கத்தில் கைவிரல்கள் மடங்கியிருப்பதை வரைந்திருக்கிறார் ரூபன்ஸ். காதலும் துரோகமும் இணைந்த அந்த இரவிற்குள் நாமும் சாட்சியமாக நிற்கிறோம். இந்தக் காட்சி அமைதியானதாகத் தோன்றினாலும் அதன் அடியில் பதற்றம் மறைந்திருக்கிறது. ஒருவேளை சாம்சன் துயில் கலைந்து எழுந்துவிடுவானோ என நமக்கே தோன்றுகிறது. டிலீலா அவன் முதுகில் கைவைத்திருப்பவது உறக்கத்திலிருந்து அவன் விழித்துவிடாமல் இருக்கத்தானோ..

ரூபன்ஸ் தனித்துவமான நிறம், இயக்கம், மற்றும் ஒளியமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து தனக்கென ஓவிய பாணியை உருவாக்கியவர். பதினாறாம் நூற்றாண்டினை சேர்ந்த இந்த ஓவியம் தற்போது லண்டனில் உள்ள நேஷனல் கேலரியில் உள்ளது

0Shares
0