ஹெர்மன் ஹெஸ்ஸேயின் நாவல்கள் யாவும் இரண்டு முக்கியச் சரடுகளைக் கொண்டிருக்கின்றன. ஒன்று துறவின் பாதை. மற்றது கலையின் பாதை. இரண்டும் சந்தித்துக் கொள்ளும் தருணங்களையும். துறவும் கலையும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற வேட்கையினையும் ஹெஸ்ஸே தொடர்ந்து முன்வைக்கிறார். தனது நாவல்களில் நட்பினை முதன்மையான உறவாகக் கொண்டாடுகிறார் ஹெஸ்ஸே.

ஞானத்தை அடையும் முன்பு சித்தார்த்தா உலகியல் இன்பங்களில் திளைக்கிறான். ஆனால் கோவிந்தன் துறவின் பாதையில் சென்று இயற்கையிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டுவிடுகிறான். இரண்டு பாதைகளும் சந்தித்துக் கொள்ளும் இடம் முக்கியமானது.
சித்தார்த்தா தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு மாதநாவலாகக் கூட வெளியாகியிருக்கிறது. இந்தியில் திரைப்படமாக எடுக்கபட்டிருக்கிறது. ஆயினும் அந்த நாவலை விடவும் நார்சிசஸ் மற்றும் கோல்ட்மண்ட் மிகச் சிறந்தது என்பேன். கலை மற்றும் துறவு வாழ்வு குறித்துத் தீவிரமான கேள்விகளை நாவல் முன்வைக்கிறது.

1930ல் வெளியான நாவலிது. ஹெஸ்ஸேயின் மூன்றாவது நாவல்.
வாழ்வின் உண்மையான அர்த்தம் எதுவென்ற கேள்விக்கு இந்த நாவலில் இரண்டு கதாபாத்திரங்களை முன்னுதாரணமாக காட்டுகிறார். சீனாவின் யின் மற்றும் யாங் போல சமமான இருபகுதிகள். பிரிக்க முடியாதவை.

நார்சிசஸ் கிரேக்க தொன்மத்தில் வரும் கதாபாத்திரம். தொன்மத்தின் படி அவன் சுயமோகம் கொண்டவன். ஆனால் நாவலில் இந்த அடையாளத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவன். சிந்தனையாளன். தீவிர எண்ணங்களால் வழிநடத்தப்படுகிறவன். ஆன்மீக வழிகாட்டி போல நடந்து கொள்கிறான்.
கோல்ட்மண்டிற்கு உணர்ச்சிகளே முக்கியம். அவன் எதையும் தீவிரமாக, முழுமையான ஈடுபாட்டுடன் செய்கிறான். இன்பத்தைத் தேடி செல்வது போலவே துன்பத்தையும் தேடி ஏற்கிறான். முடிவில்லாத காதலே அவனது வாழ்க்கைப் பாதை..
நார்சிசஸ் இளமையைத் தனது அகத்திலிருந்து வெளிப்படும் வெளிச்சமாகக் கருதி மற்றவர்களுக்கு வழிகாட்டுகிறான். காதலோ, காமமோ. குடியோ கொண்டாட்டங்களோ எதுவும் அவனிடம் இல்லை. இவற்றைத் தீமையாக நினைக்கவில்லை. வெறுத்து ஒதுக்கவில்லை. அந்த இன்பங்கள் தனக்கானதில்லை என்று நம்புகிறான். விலகிச் செல்கிறான்.
ஒருவகையில் அவன் வயதில் மட்டுமே இளமையானவன். மனதளவில் முதிர்ச்சியானவன். ஞானியைப் போலவே நடந்து கொள்கிறான்.
கோல்ட்மண்ட் கலையின் வழியே உன்னதங்களை உருவாக்க முடியும் என்று நம்புகிறான். சிற்பியிடம் கலை பயிலும் போது அதை முழுமையாக வெளிப்படுத்துகிறான்.
நார்சிசஸ் பிறர் துன்பத்திற்காக வருந்தக்கூடியன். துறவு என்பதைச் சுயநலமற்ற பொறுப்புணர்வு என்று நம்புகிறவன். நண்பனின் மீட்சிக்காக எதையும் செய்ய முற்படுகிறான்.
வெளித்தோற்றத்தில் எதிரெதிர் துருவமாகத் தெரியும் இவர்கள் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்கிறார்கள். இரண்டு சமநிலையற்ற இயல்புகள் ஒன்று சேர்ந்திருப்பதன் அடையாளம் போலவே அவர்கள் சித்தரிக்கபட்டிருக்கிறார்கள்
நாவலின் துவக்கத்தில் கோல்ட்மண்ட்டை அவனது தந்தை வட ஜெர்மனியிலுள்ள மடாலயத்தில் கல்வி கற்க விட்டுச் செல்கிறார்.
கத்தோலிக மடாலயத்திற்குச் சொந்தமான மரியாப்ரான் உறைவிடப்பள்ளியது.
இந்தப் பள்ளியில் ஹெர்மன் ஹெஸ்ஸே படித்திருக்கிறார். ஆகவே பள்ளி வளாகத்தைத் துல்லியமாக விவரித்துள்ளார்.

முதல் ஐம்பது பக்கங்கள் மரியப்ரான்னில் அவர்கள் இருவரும் எப்படிச் சந்தித்துக் கொள்கிறார்கள். நட்பாகப் பழகுகிறார்கள் என்பது விவரிக்கபடுகிறது. அதில் கோல்ட்மண்ட் தனது குதிரையைச் சந்தித்து விடைபெறுவது சிறப்பான பகுதி
மடாலயத்தின் கட்டுப்பாடுகள் அவனுக்குப் பிடிக்கவில்லை. விதிகளை மீறி நடந்து கொள்கிறான், மடாலயத்திலுள்ள பெரிய பையன்கள் இரவில் வளாகத்தை விட்டு வெளியே அருகிலுள்ள கிராமத்திற்குச் செல்கிறார்கள். , அங்கு அவர்கள் மது அருந்திவிட்டு ஒரு விவசாயியின் அழகான மகளுடன் அரட்டையடிக்கிறார்கள். இதைப் பற்றிக் கண்டிக்கும் நார்சிசஸிடம் மதகுரு போலப் பேசாதே என்று கோவித்துக் கொள்கிறான். அவர்களின் உரையாடலின் போது கோல்ட்மண்டின் இதயத்திற்குள் ஒரு ஏவாள் ஒளிந்திருக்கிறாள் என்பதை நார்சிசஸ் கண்டு கொள்கிறான்.
கோல்ட்மண்ட் ஜிப்ஸி லிசா மீது காதல் கொள்கிறான். அவள் பின்னாடி நாடோடியாக அலைகிறான். . செல்லும் இடங்களில் எல்லாம் கோல்ட்மண்ட் பெண்களால் விரும்பப்படுகிறான் அவனைக் காதலிப்பதில் பெண்களுக்குள் போட்டி நடக்கிறது. காதலின் காரணமாகவே தண்டிக்கபடுகிறான்.
பிளேக்கின் போது மரணத்தை அருகில் சந்திக்கிறான். பிரசவ வலியால் துடிக்கும் பெண்ணைக் காணுகிறான். கோல்ட்மண்ட் உருமாறிக் கொண்டேயிருக்கிறான். வாழ்க்கை எங்கும் எதிலும் நின்றுவிட அனுமதிக்கவில்லை. சந்தோஷத்தை அதிகமாக அனுபவிக்கும் அவன் மறுநிமிஷமே வேதனைக்குள் தள்ளப்படவும் செய்கிறான். அவமானங்களை அவன் பெரிதாக நினைக்கவில்லை. முடிவில் போக்கிடமின்றி துரத்தப்பட்டு வீழ்ச்சி அடைகிறான்.
சிற்பக்கலை பயிலும் போது தான் காதலித்த பெண்களின் ஒட்டுமொத்த நினைவையும் ஒன்றாக்கிச் சிற்பம் செய்ய முயலுகிறான் கோல்ட்மண்ட். அது விசித்திரமான அனுபவத்தை ஏற்படுத்துகிறது.
சிற்பி வீட்டிலும் அவனது காதலே முக்கியப் பிரச்சனையாகத் தலை தூக்குகிறது. கடைசி வரை சுதந்திர மனிதனாக நடந்து கொள்கிறான். முடிவில்லாத கோல்ட்மண்ட்டின் காதலை ஆன்மாவிற்கும் உடலிற்கும் இடையே நடக்கும் போராட்டமாக ஹெஸ்ஸே சித்தரிக்கிறார்.
அவர்களின் விசித்திரமான நட்பு குறித்து நாவலின் ஒரிடத்தில் உரையாடுகிறார்கள். அதில் நிலமும் கடலும் போல என்றொரு உவமை வருகிறது. அது உண்மையே. நார்சிசஸ் நிலம் போல அமைதியாக இருக்கிறான். கோல்ட்மண்ட் கடல் போலக் கொந்தளிக்கிறான்.
” We are sun and moon, dear friend; we are sea and land. It is not our purpose to become each other; it is to recognize each other, to learn to see the other and honor him for what he is: each the other’s opposite and complement.”
பிறந்தவுடன் தாயை இழந்துவிடுகிறான் கோல்ட்மண்ட். நாவல் முழுவதும் அவன் தாயைத் தேடுகிறான். அவன் காதலிக்கும் பெண்களுக்குள் தாயின் அன்பிருப்பதாக உணருகிறான். நாவலின் முடிவில் தாயின் வடிவமாக நார்சிசஸ் இருப்பதை அறிந்து கொண்டு அவனிடமே அடைக்கலமாகிறான்.
‘நான் இறப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன், காரணம் நான் என் அம்மாவிடம் திரும்பிச் செல்கிறேன் என்பது எனது நம்பிக்கை அல்லது என் கனவு, மரணம் எனக்கு பெரிய மகிழ்ச்சியை அளிக்கும் என நம்புகிறேன் – என் முதல் பெண் அளித்த மகிழ்ச்சியைப் போல என்கிறான் கோல்ட்மண்ட்
ஹெஸ்ஸேயிடம் வெளிப்படும் கவித்துவமான உரையாடல்கள் நாவலுக்குத் தனி அழகைத் தருகின்றன.
நாவலில் உயர்வான லட்சிய வாழ்வினை வாழும் நார்சிசஸை விடவும் அலைந்து திரிந்து தன்னை அழிந்து கொண்ட கலைஞனாக வாழும் கோல்ட்மண்ட்டே அதிகம் கவருகிறான் .
இந்த இருவரில் நாம் யாராக இருக்கிறோம் என்ற கேள்வியை நமக்குள் நாவல் எழுப்புகிறது. சிலருக்கு நாம் நார்சிசஸாக இருக்கிறோம். சிலரிடம் நாம் கோல்ட்மண்ட்டாக நடந்து கொள்கிறோம். உண்மையில் இந்த இருவரும் நமக்குள்ளே இருக்கிறார்கள். வெளிப்படும் இடமும் தருணமும் தான் மாறிக் கொண்டேயிருக்கிறது.