துறவியும் மீனும்


துறவியும் மீனும் (The Monk and The Fish )என்ற ஐந்து நிமிச குறும்படம் ஒன்றை இணையத்தில் பார்த்தேன். பிரெஞ்சில் உருவாக்கபட்ட அனிமேஷன் படமது. சிறந்த இசை, காட்சிபடுத்துதல், படத்தொகுப்பு என்று பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறது. 1994ல் தயாரிக்கபட்ட இந்த குறும்படத்தைஇயக்கியவர் Michaël Dudok de Wit


ஜென் கதை போன்ற சிறிய கதையது. அதன் வழியே பௌத்த சாரத்தினை நுட்பமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். அனிமேஷன் முறையும், இரவு காட்சி கோணங்களும்  அற்புதமாக உள்ளன.



பௌத்த மடாலயம் ஒன்றின் அருகில் ஒரு நீர்தேக்கமிருக்கிறது. ஒரு நாள்  குள்ளமும் பருமனுமான பிக்கு ஒருவன் அந்த நீர்தேக்கத்தில் ஒரு மீன் துள்ளிக் கொண்டிருப்பதை காண்கிறான். உடனே அதை பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு மடாலயத்திற்குள் சென்று தூண்டிலை எடுத்து கொண்டு வருகிறான்.



தூண்டில் போட்டு காத்திருக்கிறான். அந்த மீன் தூண்டலில் சிக்கவேயில்லை. அது துள்ளித் துள்ளி விளையாடியபடியே இருக்கிறது. அதை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று வெறி கொண்டு தூண்டிலுக்கு பதிலாக ஒரு பிடிவலையை கொண்டுவருகிறான் பிக்கு. அந்த வலையிலும் மீன் மாட்ட மறுக்கிறது.



இரவெல்லாம் உறக்கமற்று மீனைப் பற்றியே நினைத்து கொண்டிருக்கிறான். அதை பிடிக்க ஏதாவது வழியிருக்கிறதா  என்று புத்தகங்களை தேடிப் படிக்கிறான். இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அதை பிடிக்க முயற்சிக்கிறான். எதிலும் மீன் சிக்கவேயில்லை.



உடனே தனது சக துறவிகளை அழைத்து கொண்டு வந்து கூட்டு முயற்சியாக அதை பிடிக்க பார்க்கிறான். அப்போதும் மீன் அகப்பட மறுக்கிறது. ஆத்திரமான பிக்கு அந்த மீனை துரத்துகிறான். அது தப்பி தப்பியோடுகிறது. மீனை கொல்வதற்காக ஒரு வில்லை கொண்டு வருகிறான்.



அம்பு எய்து அதை பிடிப்பது என்று முயற்சிக்கிறான். அந்த மீன் அவனோடு விளையாட்டு காட்டுவது போல நீர்த்தேக்கத்திலிருந்து துள்ளி அடுத்த நீர்நிலைகளுக்கு போகிறது. தண்ணீருக்குள் விழுந்து புரண்டு அதை பிடிக்க முயற்சிக்கிறான். மீன் தப்பியபடியே இருக்கிறது. அதை பின்தொடர துவங்கிய பிக்கு அலைக்கழிப்பின் பிறகு சட்டென ஒரு உண்மையை புரிந்து கொள்கிறான்.



மீனை பிடிக்க நினைப்பது முட்டாள்தனம். அதன் போக்கில் நாமும் ஒன்று கலந்துவிட வேண்டும் அதுவே மீனை புரிந்து கொள்ள வழி என்று நினைக்கிறான். மறுநிமிசம் அவனும் மீனும் நெருக்கமாகிவிடுகிறார்கள். மீன் அவனோடு சேர்ந்து நீந்துகிறது. துள்ளுகிறது. இவரும் ஒன்றாக முடிவற்ற புள்ளி நோக்கி  சந்தோஷமாக வானில் தாவி மறைகிறார்கள்



படம் மீனைத் துரத்திசெல்லும் பிக்குவை ஒரு உருவகமாகவே விளக்குகிறது.  சத்தியம் அல்லது உண்மை தான் அந்த மீன். உண்மையை எப்படியாவது தன்வசமாக்கிவிட வேண்டும் என்று முயற்சிக்கும் பிக்குவின் போராட்டமே இப்படம். உண்மையை எப்படி புரிந்து கொள்வது தன்வயமாக்குவது. அதற்கு என்னவழிகள் இருக்கின்றன. அது ஏன் மனிதனை அலைக்கழிக்கிறது. அத்தனை போராட்டத்தின் பிறகு உண்மையின் அவசியம் என்ன? அதை எப்பிடி புரிந்து கொள்வது.



இந்த படம் உண்மை எனும் மீன் மீது ஆசை கொண்டு பௌத்தபிக்கு அலைக்கழிவதை சிறப்பாக சித்தரித்துள்ளது. இந்த பயணம் ஏதோவொரு துறவியின் தேடுதல் அல்ல. விழிப்புணர்வு கொண்ட எல்லா துறவிக்குள்ளும் இந்த வேட்கைதானிருக்கிறது. இந்த மீன் விழிப்புணர்வின் குறீயிடாகவும் மாறுகிறது. பல துறவிகளில் ஏதோவொரு துறவி மட்டுமே சத்தியத்தின் மீதான தேடுதலில் முழுமையாக ஈடுபடுகிறான், அவன் அந்த தேட்டத்தில் உறக்கமற்று போகிறான். தன்னை அறிய ஆரம்பிக்கிறான். அந்த அகசிக்கல் நிஜமானது.



இரவில் உறக்கமில்லாமல் மீனை பற்றியே நினைத்துக் கொண்டிருந்த பிக்கு மீனை பிடிப்பதற்கான ஆயுதங்களை மாற்றிக் கொண்டேயிருக்கிறான். எதிலும் மீன் சிக்க மறுக்கிறது. முற்றான உண்மையும் அந்த மீன் போலதான். அதை வசமாக்க மனிதன் மேற்கொள்ளும் முயற்சிகள் வேடிக்கையாகவே முடிந்துவிடுகின்றன. முடிவில் உண்மையை அறிந்தவன் தான் அதோடு ஒன்று கலந்துவிடுகிறான். பரபரப்பு. வேட்கை யாவும் ஒடுங்கிவிடுகிறது. பின்பு அகமகிழ்வுமிக்க ஒரு பயணம் துவங்குகிறது. அங்கே மீன் பிக்கு இருவரும் ஒன்று கலந்துவிடுகிறார்கள்.



இவ்வளவு எளிமையாக புத்த போதனையை ஒரு குறும்படத்தினால் விளக்க முடிகிறது என்பது பெரிய சாதனை. பிக்குவும் மீனும் இரண்டு குறியீடுகளாக மாறிவிடுகிறார்கள். அது பௌத்தம் தாண்டி எதை எதையோ நினைவுபடுத்தியபடியே இருக்கிறார்கள்.



இதே இயக்குனரின் இன்னொரு படம் அப்பாவும் மகளும். (Father & Daughter)  இதுவும் எட்டு நிமிசங்கள் ஒடக்கூடியதே. ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படமிது. காட்சிபடுத்துதல் கவித்துவமாக உள்ளது. கதாபாத்திரத்தின் மனநிலை காட்சியின் மீது எவ்வளவு இறுக்கமாக கவ்விக் கொள்ளும்என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். அது போலவே எளிய சித்திரங்களின் வழியே ஆழமான மனவலியை இப்படம் உருவாக்கிவிடுகிறது.



ஒரு ஏரியின் கரையில் அப்பாவும் மகளும் ஆளுக்கொரு சைக்கிளில் பயணம் செய்கிறார்கள். அந்த பயணத்தில் சிறுமியாக உள்ள மகள் மீது அப்பாவின் நெருக்கம் அழகாக காட்டப்படுகிறது. அப்பா ஒரு மரத்தடியில் சைக்கிளை நிறுத்துகிறார். மகள் தானும் இறங்கி நிற்கிறாள். அப்பா மகளை கட்டிக் கொண்டு தான் போய்வருவதாக கிளம்புகிறார்.



ஏரியில் ஒரு படகு காத்திருக்கிறது. அப்பா படகில் ஏறி போவதை மகள் பார்த்தபடியே இருக்கிறாள். பிறகு தன் சைக்கிளில் ஏறி வீடு திரும்புகிறாள். சில மாத காலமாகிறது. பருவநிலை மாறுகிறது. எதிர்காற்றில் அதே சிறுமி அப்பா திரும்பி வரக்கூடுமோ என்று பார்ப்பதற்காக ஏரிக்கரைக்கு வருகிறாள். அப்பா வரவில்லை. அவள் முகம் வாடிப்போய்விடுகிறது. சைக்கிளில் மெதுவாக வீடு திரும்புகிறாள்.



நாட்கள் கடந்து போகின்றன. அப்பாவைத் தேடி அதே இடத்திற்கு மகள் வருவதும் ஏமாந்து போவதுமாக இருக்கிறாள். மழை காற்று பனி என்று மாறிக் கொண்டேயிருக்கிறது நிலக்காட்சி. அவள் ஆதங்கத்துடன் அப்பா திரும்பிவந்துவிடுவார் என்ற எதிர்ப்பார்ப்புமிக்க கண்களுடன் அலைந்து கொண்டேயிருக்கிறாள். பறவைகள் கடந்து போகின்றன. வானம் நிறம் மாறுகிறது. காட்சிகள் உருமாறுகின்றன. ஏமாற்றத்தின் சாலையில் அவளது சைக்கிள் உருண்டபடியே இருக்கிறது.



மகளுக்கு வயதாகிறது. அவள் பெரியவளாகிறாள். அப்போதும் அதே சைக்கிளில் அப்பாவை தேடி வருகிறாள். அப்பா பிரிந்து போன அதே இடத்தில் நின்று ஏரியை வெறித்து பார்க்கிறாள். அப்பா வரவில்லை. அவளது முகத்தில் துயரம் கொப்பளிக்கிறது. ஏமாற்றத்துடன் திரும்பி போகிறாள்.



இன்னும் கொஞ்சம் வயதாகிறது. நடுத்தரவயது பெண்ணாகிறாள். எதிர்காற்றில் சைக்கிள் மிதித்து வர முடியவில்லை. ஆனாலும் அப்பாவை தேடி போகிறாள். அவளை கடந்து சிறுமிகள் உற்சாகமாக ஏரி நோக்கி போகிறார்கள். அதே மரம். அதே இடம். அப்பாவை காண காத்திருக்கிறாள்.அப்பா வரவில்லை. ஏரி தண்ணீர் சலனமடைகிறது. பறவைகள் கடந்து போகின்றன. அவள் விவரிக்க முடியாத துயருடன் மிக மெதுவாக வீடு திரும்புகிறாள்.



முடிவில் அவளுக்கும் வயதாகிறது. அவளால் சைக்கிளை மேட்டில் ஒட்ட முடியவில்லை. உருட்டியபடியே வருகிறாள். சைக்கிளை நிறுத்த கூட முடியவில்லை. அது அடிக்கடி கிழே விழுகிறது. அவள் அதே மரத்தடியில் நின்று பார்க்கிறாள். ஏரி முழுவதும் பனி உறைந்து போயிருக்கிறது.
ஆசையோடு பனிக்குள் இறங்கி ஏரியை கடந்து மறுபக்கம் பார்க்க போகிறாள். பனியில் அவள் கால்கள் வேகமாக அப்பாவை தேடி நடக்கின்றன.  ஏரி முடிவற்று பனிபாளமாக உறைந்து கிடக்கிறது.



முடிவில் அவள் ஒரு இடத்தில் அப்பா பயணம் செய்த படகு உடைந்து கிடப்பதை காண்கிறாள். அதுவும் பனியில் உறைந்து போயிருக்கிறது. படகினுள் அவள் சுருண்டு படுத்து கொள்கிறாள்.  அப்பா இல்லாத வெறுமை அவள் முகத்தில் தெளிவாக புலப்படுகிறது. அங்கிருந்து சோர்வுடன் நடக்க துவங்கும் போது அப்பாவின் உருவம் தென்படுகிறது. அவள் சிறுமி போல ஆசையாக அவரை நோக்கி ஒடுகிறாள். அப்பா சலனமில்லாமல் அவளை கட்டிக் கொள்வதோடு படம் நிறைவு பெறுகிறது



ஒரு மிகப்பெரிய நாவல்  அளவு எழுதப்படவேண்டிய ஒரு பிரிவின் கதை எட்டு நிமிச குறும்படத்தில் செறிவோடும், நிறைவோடும் சொல்லப்பட்டிருக்கிறது.
அப்பா படகில்  போகிறார் என்பது சாவின் குறியீடே. அப்பா இறந்து போய்விடுகிறார். அதை அறியாத மகள் அப்பா திரும்பி வரக்கூடும் என்று வாழ்நாள் முழுவதும் காத்திருக்கிறாள். முடிவில் ஏரி உறைந்து போயிருப்பதும் அதை அவள் கடப்பதும் உருவகமான காட்சிகளே. அவளும் இறந்து போய்விடுகிறாள். சாவின் முடிவற்ற பனிவெளியில் அவள் தன் அப்பாவை மறுபடி சந்திக்கிறாள். சாவு தான் அவளை அப்பாவோடு ஒன்று சேர்ந்து வைக்கிறது.



அப்பாவிற்கும் மகளுக்குமான அன்பையும், அப்பா என்ற படிமம் உருவாக்கும் மனஎழுச்சியும் உயர்கவித்துவமாக படமாக்கபட்டிருக்கிறது.
இந்த படத்தில் பின்புல இசையும் மகள் அப்பாவை தேடி செல்லும் போது உருமாறும் பருவநிலை மாற்றங்களும் மகளின் சொல்லற்ற உணர்ச்சிவெளிப்பாடும் உலகின் சிறந்த குறும்படம் இது என்பதற்கான சான்றுகள்.



மைக்கேல் டுடாக் ஐம்பது வயதை கடந்த அனிமேஷன் இயக்குனர். ஒவியக்கல்லூரியில் பயின்ற இவர் குறும்பட தயாரிப்பில் முன்னோடி கலைஞர், தற்போது லண்டனில் வசிக்கிறார். உரையாடல்கள் இல்லாமல் இசையும் காட்சிகளும் ஒன்று கலந்த இந்த வகை அனிமேஷன் படங்கள் நவீன சினிமாவின் உயர்சாத்தியங்களை வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் மிக சிறந்த இரண்டு குறும்படங்கள் இவை.



இணைப்பு


The Monk and The Fish : https://www.youtube.com/watch?v=Y37cWnjdhdM


Father & Daughter : https://www.youtube.com/watch?v=GhieqAEi2r4


 

0Shares
0