இரண்டு பெண்களை பலவருடமாக நான் என் நினைவிலே தேக்கி வைத்திருக்கிறேன். அவர்கள் என் கனவிலும் தனிமையிலும் எப்போதும் சப்தமின்றி இலை அசைவதை போல அசைந்து கொண்டேயிருக்கிறார்கள். ஒன்று புத்தரின் மனைவி யசோதரா. மற்றவள் சங்க இலக்கியத்தின் கவிதாயிணி வெள்ளிவீதியார். அவர் எழுதியதில் நான்கோ ஐந்தோ பாடல்கள் மட்டுமே சங்க இலக்கியத்தில் வாசிக்க கிடைக்கின்றன.
ஆனால் அந்த பாடலின் ஊடாக வெளிப்படும் காமம் தொடர்பான அவளது ஏங்குதலும் உணர்ச்சி வெளிப்பாடும் வெகு அலாதியானது.
கையில்லாத ஊமை கண்ணால் காவல் காக்கின்ற வெயில் ததும்பி வழியும் பாறையின் மீது வைக்கபட்ட வெண்ணையை போல தன்னுள் காமம் படர்ந்து வழிகிறது என்ற அவரது வரிகள் என்றும் மறக்க முடியாதவை.
கௌதம புத்தரின் மனைவி யசோதரா உறங்கிக் கொண்டிருக்கும் போது புத்தர் அவள் அறையிலிருந்து எழுந்து துறவறம் புறப்பட்டு போய்விடுகிறார். தூங்கும் தன் குழந்தை ராகுலனுக்கு முத்தம் தர தெரிந்த புத்தருக்கு யசோதரையின் முகத்தை காணகூட முடியவில்லை. எதற்காக இந்த புறக்கணிப்பு. சமீபத்தில் பார்த்த நேபாள படமான சம்ஸாராவிலும் இக்கருத்து எதிரொலித்தது. உறங்கும் மனைவியை பிரிந்து துறவியாக போகும் கணவனை வழிமறித்து அவனது மனைவி கேட்கிறாள்.
ஒரு பெண்ணை கூட சமாதானம் செய்ய முடியாமல் ரகசியமாக வெளியேறும் நீ எப்படி உலகின் ஆசைகளை மறுத்து துறவியாக போகிறாய். ஒரு வேளை நான் இப்படி இரவில் ரகசியமாக வெளியேறியிருந்தால் நீ அதை எப்படி ஏற்றுக் கொள்வாய். நிச்சயம் தூங்கும் போது குழந்தையை விட்டுச் செல்ல என்னால் முடியாது காரணம் நான் ஒரு பெண்.
செங்கலும் மரமும் கொண்டு கட்டப்பட்ட கட்டிடமாகயிருப்பதை ஒரு பெண் தான் சுவாசம் தந்து வீடாக்குகிறாள்.. பெண்கள் இல்லாவிட்டால் அது வீடில்லை. வெறும் அறை. ஒரு வீட்டினை உருவாக்குவது என்பது சிலந்தி வலை போன்று மெல்லியதாக ஆயிரம் இழைகள் சேர்த்து பின்னக் கூடியது
ஜிகினா உடைகளாலும், அடுக்கு தொடர் வசனங்களாலும் கலர் கலராக புகைகிளம்பும் தேவலோகாட்சிகளாலும். பழிக்கு பழிவாங்கும் ஆக்ரோஷ அதிசாகச கதாநாயகர்களாலும் பூமியில் கால்பாவாமலே அந்தரத்தில் உலவிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை தரையில் நடக்க செய்து யதார்த்தமான மத்தியதர வாழ்க்கையையும் அதன் பிரச்சனைகளையும் அவர்களின் இயல்பான பேச்சுமொழியையும் பதிவு செய்த பெருமை கே. பாலசந்தர் அவர்களையே சாரும்.
என் கல்லுரி நாட்களின் இரவுகள் இவரது திரைப்படங்களை பற்றியும் அது காட்டும் நிஜத்தையும் பற்றிய சர்ச்சைகளால் தான் நிரம்பியிருந்தது. அபூர்வ ராகங்களில் வரும் பிரசன்னாவாக தன்னை கருதிக் கொண்ட நுறு இளைஞர்கள் அப்போது ஒவ்வொரு கல்லுரியிலும் இருந்தார்கள். மாடிப்படி மாது எல்லா குடியிருப்புகளிலும் வாழ்ந்து கொண்டுதானிருந்தான்.
கே.பாலசந்தரின் குறிப்பிடத்தக்க சில திரைப்படங்கள் வெறும் பொழுது போக்கிற்கானவை மட்டும் அல்ல. அவை ஒரு விவாதத்தை, எதிர்ப்பு குரலை முன்வைத்தவை. குறிப்பாக அவரது கதாபாத்திரங்கள் மனதில் தோன்றும் உண்மைகளை யாரைப்பற்றிய பயமும் இன்றி தைரியமாக வெளிப்படுத்த கூடியவர்கள். தைரியசாலிகள் பிரச்சனைகளை நேர்கொண்டு சந்திப்பவர்கள். வாழ்வை நேசிப்பவர்கள்.
தமிழ்சினிமாவில் காலம்காலமாக சில வழக்குகள் இருந்து வருகின்றன. அதில் ஒன்று கதாநாயகன் படித்தவனாக இருக்க கூடாது. அவன் ஒரு மெக்கானிக்காக, மாட்டுகாரனாக, விவசாயியாக, காரோட்டியாக, ரிக்ஷாகாரனாக யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் படித்த விஞ்ஞானியாக, அறிவாளியாக, பேராசிரியராக இருக்கவே கூடாது. ஒருவேளை அவன் படித்திருந்தால் கூட ரிக்ஷா ஒட்டவோ வண்டி இழுக்கவோ தான் செய்யவேண்டும். அத்தோடு அவனுக்கு அப்பா இருக்க கூடாது. அம்மா மட்டும் தான் இருக்கவேண்டும். அதுவும் வயதாகி தலைநரைத்த அம்மாவாக இருக்க வேண்டும். (கதாநாயகனுக்கு இருபத்தைந்து வயதாகும் போது அவனது அம்மாவிற்கு மட்டும் எப்படி எழுபது வயதாகிறது என்று நிறைய நாட்கள் யோசித்திருக்கிறேன்.)
இதை விடவும் கதாநாயகி படித்தவளாக இருக்கவே கூடாது. ஒருவேளை அவள் படித்தவளாக சித்திரிக்கபட்டால் கர்வமானவளாக ஒரு வில்லி போல நடந்து கொள்ள வேண்டியதிருக்கும். படிக்காத கிராமத்து பெண்ணாகவோ, குடிசை தொழில் செய்பவளாகவே, அல்லது விதிவிலக்காக டீச்சராகவோ இருப்பதற்கு அனுமதிக்கபடுவார்கள். தமிழ்சினிமாவிற்கு படித்தவர்கள் என்றாலே எப்போதும் ஒரு அதிருப்தியிருக்கிறது
ஆனால் நான் பார்த்தவரை கே.பாலசந்திரின் திரைப்படங்கள் கல்வியை, அறிவை சுய சிந்தனையை தொடர்ந்து பேசிவருகின்றன. மாது படிப்பதற்காக எல்லா அவமானங்களையும் சந்திக்கிறான். அரங்கேற்றத்தில் சகோதரன் மருத்துவ கல்லுரி படிப்பதற்காக தன்னையே இழக்கிறாள் ஒருத்தி. இப்படி அவரது படங்களிலிருந்து நுறு உதாரணங்களை சொல்லலாம். அத்தோடு கே.பி.யின் படங்களில் வரும் பெண்கள் சுயசிந்தனை மிக்கவர்கள். தேவையற்ற கட்டுபாடுகளை விலக்கி சுயமாக செயல்படக்கூடியவர்கள். குடும்ப பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு அதன் பாடுகளை நிறைவேற்றுகின்றவர்கள்.
அவள் ஒரு தொடர்கதை 1974ல் வெளியாகியிருக்கிறது 1974 வருடம் ஒரு கொந்தளிப்பாக காலகட்டம். இந்திய அளவில் மிக முக்கியமான ஆண்டு அந்த வருடம் தான் மிகப்பெரிய ரயில்வே போராட்டம் வந்தது. இந்திய முழுவதும் ஆங்காங்கே சிறியதும் பெரியதுமான அரசியல் எதிர்ப்பு குரல்கள் துவங்கியிருந்தன. 1975ல் மிசா அறிமுகம் செய்யப்படுவதற்கு முந்தைய கொந்தளிப்பு அப்போதே நிகழ்ந்து கொண்டிருந்தது. தமிழ் சினிமாவில் எம்.ஜி. ஆரின் உரிமைகுரலும் சிவாஜிகணேசனின் தங்கப்பத்தகமும் வெளியாகி திரையரங்குகள் நிரம்பி வழிந்தன. இந்திய அளவில் ஷியாம் பெனகல் தனது முதல்படமான அங்கூரை வெளியிடுகிறார். மணிகௌலின் துவிதா படம் முக்கிய கலைப்படமாக பேசப்படுகிறது. சத்யஜித் ரே ஜனஆரண்ய படத்தை வெளியிடுகிறார்.
இத்தனை பரபரப்பிற்கும் இடையில் தனக்கென தனித்துவமானதொரு கதைசொல்லலையும் காட்சியமைப்புகளையும் கொண்டிருந்த அவள் ஒரு தொடர்கதை வெளியாகிறது. எனது அம்மாவும் சித்திகளும் முதல் நாளே படத்தை பார்த்துவிட்டு இரவெல்லாம் படுக்கையில் படுத்தபடி கவிதாவை பற்றி உறக்கமின்றி பேசிக் கொண்டிருந்தார்கள். சித்திகளில் ஒருத்தி கவிதாவை போலவே இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு அவளை போலவே மிடுக்காக பேசிக் காட்டினாள். படம்பார்த்துவிட்டு வந்த மாமாவோ நல்லபடம் ஆனா என்னாலே சில விசயங்களை ஒத்துகிட முடியலை என்று எதிர்வாதம் செய்தார்.
அந்த நாட்கள் ஈரம்உலராமல் அப்படியே நினைவில் இருக்கின்றன. நானும் பத்துமுறைக்கு மேலாக அவள் ஒரு தொடர்கதையை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு வயதிலும் அப்படத்தில் ஒவ்வொரு விசயம் புரியத்துவங்குகிறது. முந்தைய நாள் இதை பார்த்த போது கவிதாவை விடவும் அவளது அண்ணன் மனைவி மீது குவிந்தது வலி. அவள் ஒரேயொரு காட்சியில் தான் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறாள். அது ஒரு இக்கட்டான காட்சி. குடித்துவிட்டு வரும் கணவன் அழைப்பதற்காக அவனோடு படுத்துக் கொண்டுவிடும் போது குழந்தை அழுகிறது. கவிதா குழந்தையை துக்கி கொண்டு அண்ணியை தேடுகிறாள்.
மூடியிருந்த அறையில் இருந்து அண்ணி உடைகளை சரிசெய்துவிட்டு வரும் போது அண்ணன் தலைகவிழ்ந்தவனாக நிற்கிறான். அவனைப்பார்த்து கவிதா கோபமாக சொல்கிறாள்
பணப்பசியை தீர்க்கிறதுக்கு ஒரு தங்கச்சி, வயிற்றுபசியை தீர்க்கிறதுக்கு ஒரு அம்மா
உடற்பசியை தீர்க்கிறதுக்கு ஒரு மனைவி., மானங்கெட்ட ஜென்மம்.
அதைக்கேட்டுவிட்டுகண்கலங்கியபடி அண்ணி கவிதாவிடம் சொல்கிறாள். உடற்பசிக்காக இல்லை வெறும் இயந்திரமாக என்னை நானே பழக்கிகிட்டேன். எனக்கு உணர்ச்சிகளே இல்லை என்று விசும்புகிறாள். பிரம்பால் சிவனை முதுகில் அடித்த போது ஊரில் இருந்த யாவரின் முதுகிலும் அடிவிழுந்தது என்பார்களே அது போல அந்த வேதனை என் உடலிலும் தீராத வலியை உருவாக்கியது. இந்த மூன்று பெண்களின் மீதான ஈடுபாடும் அக்கறையும் தான் கே பாலசந்தர் அவர்களின் எல்லா படங்களின் அடிநாதம்.
அவள் ஒரு தொடர்கதை. கவிதாவின் கதை. சினிமா பெண்களை வெறும் அலங்கார பொம்மைகளாகவும் லக்ஸ்சோப் விளம்பர அழகிகளாகவும் மட்டுமே சித்தரித்த சூழலில் பெண் உடல் மட்டுமல்ல மனதும் சிந்தனையும் கொண்டவளாக கே.பியின் திரைப்படங்களில் வெளிப்படுகிறாள்.
கவிதாவின் கோபம் அவளது குடும்பத்தின் நிலையால் உருவானதில்லை. அவள் வாழும் சமூகத்தின் மீதான கோபம். பெண்கள் தங்களை தானே ஏமாற்றிக் கொள்கிறார்களே என்ற கோபம். அதனால் தான் அவள் வார்த்தைகளை பிரயோகிக்கும் போது அது கூர்மையான அம்பை போல எதிராளியின் குரல்வளையை அடைத்துவிடுகிறது.
காணமல் போய்விட்ட அப்பாவை தேடுவதற்காக 500 ரூபாய் கொடுத்து மைபோட்டு குறி கேட்கலாம் என்று அம்மா சொல்லும் போது அதற்கு பதில் கையில் 500 ரூபாய் வைத்திருக்கிறேன் என்று 50 ரூபாயில் விளம்பரம் போடு ஒரு அப்பன் இல்லை பத்து அப்பன் தானா தேடிவருவான் என்று சொல்லும் ஆவேசமாகட்டும். தன் எதிர்கால மாமியாரிடம் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பெண் கர்வமா இருக்கலாம் கர்ப்பமா தான் இருக்ககூடாது என்று சொல்லும் போதும் அவளது ஆவேசம் எத்தனை ஆழமான வேதனையுடையது என்று புரிகிறது. கவிதாவும் அந்த 9 கதாபாத்திரங்களும் கற்பனையானவர்களில்லை. நிஜமானவர்கள். குறிப்பாக இப்படத்தில் வரும் குழந்தைகள் வறுமையை சந்திக்கும் விதமும் அவர்களின் ஆசைகளும் மறக்கமுடியாதவை. வீட்டுக்கு வரும் விஜயகுமாருக்காக வாங்கி வைத்த டிபனில் உள்ள மீதத்தை சாப்பிட்ட படி அந்த குழந்தைகள் இது போல நாசுக்கான விருந்தாளிகள் அடிக்கடி வீட்டிற்கு வந்தால் நன்றாகயிருக்குமில்லையா என்று சொல்வது வெறும் வேடிக்கையில்லை. அது ஒரு வலி. சதுரங்கத்தின் காய்கள் போல இப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவம் கொண்டவர்கள். வாழ்க்கை அவர்களுக்கு பரிசுகளை வாறி வழங்கவில்லை. மாறாக அவர்களின் கனவுகளை பெருக்கிக் கொண்டேயிருக்கிறது. ஆனால் காலண்டர் தாளை போல கனவுகளும் அன்றாடம் உதிர்ந்து போய்விடுகின்றது. கவிதாவின் அப்பாவை போல வீட்டை விட்டு தங்களது சொந்த கஷ்டநஷ்டங்களுக்காக ஆசைகளுக்காக வெளியேறிப் போய்விடும் அப்பாக்கள் எல்லா வீடுகளிலும் இருந்திக்கிறார்கள். இலக்கியத்திலும் அரிச்சந்திரனும் நளனும் இதற்கு முன்னோடிகளாக இருக்கிறார்கள். குடும்ப சுமையை தாங்கமுடியாமல் வெளியேறி துறவியாகவிட்ட பெண்ணையோ காணமல் போய்விட்ட பெண்ணையோ நான் கேள்விபட்டதேயில்லை. நத்தைகள் ஒட்டினை சுமந்து செல்வதை போல பெண்கள் எங்கு சென்றாலும் வீட்டை சுமந்து கொண்டு செல்கிறார்கள். ஆண்களோ குருவிகள் மரத்தில் வந்து இருந்து சப்தமிட்டு கிடைத்த பழங்களை தின்றுவிட்டு பறந்துவிடுவதை போல வீட்டினை ஒரு தங்குமிடமாக மட்டுமே கருத்தில் கொண்டிருக்கிறார்கள். அவள் ஒரு தொடர்கதை வெளியாகி முப்பது ஆண்டுகள் முடிந்து விட்டன ஆனால் கவிதாவின் போராட்டம் முடியக்கூடியதில்லை. நம் காலத்தில் நம் தெருவில் அண்டைவீடுகளில் இதே போல ஒரு பெண் இன்றும் அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் ஈரத்தலையும் கலையாத துக்கமுமாக எங்கோ ஒருமணி நேர பயணத்தில் உள்ள அலுவலகம் செல்ல மின்சார ரயிலை பிடிக்க சென்று கொண்டுதானிருக்கிறாள் அவள் தொடர்கதையில் எனக்கு பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கின்றன குறிப்பாக கதை சொல்லும் முறை. வழக்கமான திரைப்படங்களில் கதைபோக்கு என்பது ஒரு நேர்கோட்டு தன்மை கொண்டது. வாழ்க்கை வரலாறு போல சம்பவங்களால் அடுக்கபட்டது. இப்படம் அதன் தலைப்பை போலவே ஒரு தொடர்கதை வடிவத்தை கொண்டிருக்கிறது. அத்யாயங்களாக கதை பின்னப்படுகிறது. 9 அத்தியாயங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளன. (ஒன்பது கதாபாத்திரங்கள் இருப்பதால் தானோ என்னவோ,.) மேலும் கதாநாயகன் சார்ந்து மட்டுமே கதை சொல்லப்பட்டு வந்த மரபான கதைசொல்லல் முறை முற்றிலும் விலக்கபட்டிருக்கிறது. இக்கதையில் நாயகன் என எவருமில்லை. சந்தர்ப்பம் ஒரு மனிதனை எப்படி உருவாக்குகிறது என்று மட்டுமே இருக்கிறது. அது போலவே உபகதாபாத்திரங்கள் தனித்து குறிப்பிடும்படியிருக்கிறார்கள். குறிப்பாக படாபட் ஜெயலட்சுமியின் அம்மாவின் கதை. அவள் தன்னை சுற்றி புத்தகங்களாலும் கதைகளாலுமான சுற்றுசுவர்களை எழுப்பியிருக்கிறாள். அச்சுவர் அவளது மனவுணர்ச்சிகளின் முன்பு எத்தனை மெல்லியது என்று சில காட்சிகளின் வழியாக உணர்த்தபடுவது முக்கியமானது இன்னொன்று இப்படம் முழுவதும் இடம்பெற்றுள்ள வெவ்வேறு புத்தகங்கள். கவிதா ஒரு இரவில் படுத்துக் கொண்டு great American short stories படிக்கிறாள். இன்னொரு இடத்தில் சோமன் படிப்பதற்கு d.h. Lawrence fox நாவலை எடுத்துக் கொண்டு போகிறார். சுயசிந்தனையுள்ள பெண்கதாபாத்திரங்களை உருவாக்கிய ஜெயகாந்தன் கூட ஒரு குறீயீடு போலவே படம் முழுவதும் பயன்படுத்தபடுகிறார். அவரது சிலநேரங்களில் சிலமனிதர்கள் நாவல் பல இடங்களில் பல அர்த்த தளங்களை உருவாக்குகிறது. வாழ்க்கையில் ஏற்பட்ட சூன்யத்தை புத்தகத்தால் நிரப்புகிறேன் என்கிறாள் படாபட்டின் அம்மா. காட்சிகளில் புத்தகங்களை காட்டுவது வெறும் தற்செயல் என்று நாம் கருதிவிட முடியாது திரைக்கதை அமைப்பிலும் இப்படம் தனித்துவமான முறையை கொண்டிருக்கிறது. கதையை இது நேர்கோட்டில் வளர்த்து எடுத்து செல்லவில்லை மாறாக ஒரு மரம் கிளைவிடுவது போன்று எல்லாபக்கமும் ஒரேநேரத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ஒரு சிறுவன் பன்பட்டர்ஜாம் சாப்பிட்டுவிட்டு காசில்லாமல் மாட்டிக் கொள்ளும் போது கவிதா பணம் தருவதும் பீச்சில் கண்தெரியாத சிறுவன் காசுகேட்கும் போது அவள் மறுப்பது அதற்காக காரணங்களும் விளக்கபடுகின்றன. அப்படியே அதன் அடுத்த காட்சியில் இந்த கண்தெரியாத சிறுவனும், ஹோட்டலில் பிடிபட்டவனும் அவளது சகோதரர்கள் என்று தெரியவரும் போது முந்தைய காட்சி இப்போது புதுஅர்த்தம் பெற்றுவிடுகிறது. திரைக்கதை அமைப்பில் இது ஒரு சிறந்த உதாரணம். முழுபடத்திலும் ஒரு இடத்தில் மட்டும் தான் கவிதா தன்னை மறந்து சந்தோஷமாக இருக்கிறாள். அது அவள் அப்பா வருவதாக கடிதம் வந்த நேரத்தில் அம்மாவும் மகளும் சகோதரிகளும் ஒருவர் முகத்தில் ஒருவர் கரியை பூசிக்கொண்டு சந்தோஷம் பூரிக்க கட்டிக்கொண்டு சுற்றுகிறார்கள். வயது கலைந்து அம்மா ஒரு இளம்பெண்ணை போல சந்தோஷம் கொள்ளும் அரிய நிமிடமது. ஒரு கவிதையை போல நுட்பமாக உள்ளது. ஆனால் தொடர்ந்து நடந்த சம்பவங்களால் அலைக்கழிக்கபடும் கவிதா முகத்தில் கண்ணுக்கு தெரியாத கறையொன்று படிந்திருப்பதை பார்வையாளர்கள் யாவராலும் உணர முடிகிறது. அது கண்ணீரின் கறை என்று மனம் உணர்வது தான் நிஜம். கூர்மையான வசனங்கள், அண்டைவீட்டு மனிதர்களை போல இயல்பாக தோற்றமளிக்கும் கதாபாத்திரங்கள், அன்றாட பிரச்சனைகள், சின்னசின்ன சந்தோஷங்கள், ஏமாற்றங்கள் இவை படம் முழுவதும் ஒரு இசைக்கோர்வை போல அழகாக ஒன்று சேர்ந்திருக்கின்றன. குறிப்பாக சுஜாதா தனது முதல் படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். இதே 1974 ஆண்டில் தான் ஷபனா ஆஸ்மியும் அங்கூர் படத்தில் அறிமுகமானார். சுஜாதா இந்திய அளவில் பேசப்பட வேண்டிய நடிகை, காலசுழல் அவரை குணசித்திர நடிகையாக சுருக்கிவிட்டிருக்கிறது கண்ணதாசனின் பாடல் வரிகள், குறிப்பாக தெய்வம் தந்த வீடு பாடல் கதையின் மையக்குறியீடு போலவும் தனித்து என்றுமே மறக்கமுடியாத பாடலாகவும் அமைந்திருக்கிறது. இந்த படம் ரித்விக் கடாக்கின் மேகே தாஹே தாரா என்ற படத்தின் தழுவல் என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். நான் இரண்டையும் பார்த்திருக்கிறேன். கதாநாயகி இரண்டிலும் ஒன்று போல இருக்க கூடியவள். ஆனால் ரித்விக் கடாக்கின் மையமாக இருந்தது இசையும் பெருநகர அவலமும். பாலச்சந்தர் படத்தில் அப்படி எதுவுமில்லை பாலச்சந்தரின் திரைப்படங்கள் நாடகத்தனம் அதிகம் கொண்டவை என்ற குற்றசாட்டு இருந்த போதும் அந்த நாட்களில் வெளியான வெகுசன திரைப்படங்களின் பிரதான போக்கினை விட்டு விலகி இவை மாற்று முயற்சியை முன்வைத்தவை என்ற அளவில் மிக முக்கியமானவை என்றே தோன்றுகிறது. இப்படத்தோடு ஒப்பிட்டு பேச சத்யஜித் ரேயின் மஹாநகரும் மிருணாள் சென்னின் ஏக்தின் பிரதின்னும் மட்டுமே உள்ளது. ஆனால் அப்படங்களுக்கு கிடைத்து வரும் அங்கீகாரமும் தொடர்ந்த கவனமும் கே.பாலசந்தர் அவர்களுக்கு கிடைக்காமல் போனதற்கு காரணம் தமிழில் படமெடுத்திருப்பது தானோ என்று தோன்றுகிறது |