தெற்கு நெடுஞ்சாலை

கதை எழுதுவதற்கான கருப்பொருள் என்பது அரிதான, அபூர்வமான, அல்லது விசித்திரமான நிகழ்வாகவோ, விஷயமாகவே இருக்க வேண்டும் என்று இளம் எழுத்தாளர்கள் பலரும் நினைக்கிறார்கள். எந்த ஒரு நிகழ்வையும் அழுத்தமான கலைப்படைப்பாக உருவாக்கிவிட முடியும். அது எழுத்தாளனின் படைப்பாற்றல் சார்ந்த விஷயம்.

லத்தீன் அமெரிக்கச் சிறுகதையாசிரியர்களில் ஹுலியோ கோர்தஸார் வித்தியாசமான எழுத்தாளர். அவரது சிறுகதைகள் புனைவின் புதிய எல்லைகளைத் தொடுகின்றன.

அடர்த்தியான மொழியும் சிதறடிக்கப்பட்ட கதை சொல்லல் முறையிலும் தொன்மத்தை மீள்வுருவாக்கம் செய்வதிலும், கனவுத்தன்மை கொண்ட நிகழ்வுகளைச் சித்தரிப்பதிலும் கோர்த்ஸார் சிறந்தவர்.

இவரது The Southern Highway என்ற சிறுகதை ,தெற்கு பிரான்சிலிருந்து பாரீஸிற்கு வரும் நெடுஞ்சாலையில் ஒரு ஞாயிறு மதியம் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியை விவரிக்கிறது.

பாரீஸிற்குள் நுழைவதற்கான முக்கியச் சாலையது. எப்போதும் வாகன நெருக்கடி அதிகமுண்டு. கதை துவங்கும் போது அந்தச் சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி உருவாகியுள்ளது. முன்பின்னாக உள்ள கார்களின் ஒட்டுனர்கள் எரிச்சல் அடைகிறார்கள். கதையை விவரிக்கும் என்ஜினியர் Peugeot 404 காரில் இருக்கிறான்.

எதற்காக இந்தப் போக்குவரத்து நெருக்கடி என்று தெரியாமல் ஆளுக்கு ஆள் சலித்துக் கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் அறிமுகமற்ற போதும் போக்குவரத்து நெருக்கடி அவர்களை ஒன்றிணைக்கிறது. அவர்களின் பொதுவிஷயமாகச் சாலைப் போக்குவரத்து, அரசின் பொறுப்புணர்வு. சட்டம் ஒழுங்கு ஆகியவை அமைகின்றன. எவ்வளவு நேரம் காத்துக்கிடப்பது என்று தெரியாமல் வயதானவர்கள் குழப்பமடைகிறார்கள். குழந்தைகளுக்கோ இந்தப் போக்குவரத்து நெருக்கடி வேடிக்கையான விளையாட்டாகிறது. உடல்நலமற்று போன ஒருவருக்கு யாரோ உதவி செய்கிறார்கள். குடிநீரும் உணவும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. எங்கோ பெரிய விபத்து நடந்துள்ளதாகப் பேசிக் கொள்கிறார்கள். காரை விட்டு இறங்கிய ஆண்கள் பக்கத்திலுள்ள பண்ணையைத் தேடி உதவி கேட்டுப் போகிறார்கள். சொற்ப உதவியே கிடைக்கிறது. இதற்குள் இரவாகிவிடுகிறது, அந்தச் சாலையில் தான் இரவை கழிக்க வேண்டுமா எனச் சிலர் சலித்துக் கொள்கிறார்கள். குழந்தைகள் பெண்கள் எங்கே உறங்குவது எனத் திட்டமிடப்படுகிறது. உறக்கம் வராதவர்கள் ஒன்று கூடுகிறார்கள். சிறிய விமானம் தடுமாறி மோதியதால் ஏற்பட்ட விபத்து என்றும் அதில் நிறையப் பேருக்குக் காயம் என்றும் பேசிக் கொள்கிறார்கள். எப்போது போக்குவரத்துச் சரிசெய்யப்படும் என்று தெரியவில்லை. நெருக்கடி அவர்களை ஒன்று சேர்க்கிறது. ஒரு குடும்பம் போலப் பழக வைக்கிறது. முடிவில் போக்குவரத்து சரிசெய்யப்படுகிறது.அவரவர் கார்களுக்குத் திரும்புகிறார்கள். அவசரம் தொற்றிக் கொள்கிறது. ஒருவரையொருவர் முந்திக் கொண்டு பாரீஸ் நகரினுள் பிரவேசிக்கிறார்கள்.

இதே அனுபவத்தைப் பலமுறை நானும் அடைந்திருக்கிறேன். வண்டலூரை தாண்டி மதுரை போவதற்காகத் தீபாவளிக்கு முந்திய இரவு நான்கு மணி நேரம் வாகனத்தில் காத்து கிடந்திருக்கிறேன். அது போலவே ஒருமுறை சாலை விபத்தின் காரணமாகத் திருச்சி நெடுஞ்சாலையில் இரவு இரண்டு மணியிலிருந்து காலை ஆறரை வரை காத்துக்கிடந்தோம்.

நெருக்கடி மனிதர்களை ஒன்று சேர்க்கிறது. இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வைக்கிறது. அந்தச் சூழலிலும் பிறருடன் பேசாத, எதிலும் கலந்து கொள்ளாத ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள்.

கோர்தஸார் போக்குவரத்து நெருக்கடியை முன்வைத்து நகரவாழ்க்கையின் நெருக்கடிகளை, மனித உறவுகளைப் பேசுகிறார். இக்கதை எந்த நாட்டில் நடக்கும் போக்குவரத்து நெருக்கடிக்கும் பொருந்தக்கூடியது.

இது போன்ற சம்பவத்தைப் பலரும் அனுபவித்திருந்த போதும் அதை ஒரு கலைப்படைப்பாக உருவாக்க முனையவில்லை. கோர்தஸார் பலரும் எரிச்சல் கொள்ளும் போக்குவரத்து நிகழ்வை மாபெரும் மானுட நாடகமாக உருவாக்கிக் காட்டுகிறார்

வேறுவேறு வகைக் கார்கள். அதில் பயணிக்கும் ஆண் பெண்கள். அவர்களின் வாழ்க்கைத் தரம், விருப்பு வெறுப்புகள் அத்தனையும் கதையில் வெளிப்படுகின்றன.

இரண்டு இடங்களை இணைப்பதற்காகவே சாலை உருவாக்கப்படுகிறது. சாலையின் அடையாளமே இணைப்பு தான்.. ஆனால் இன்றுள்ள நெடுஞ்சாலைகள் மனித உறவுகளைத் துண்டிக்கக்கூடியவை. எல்லோருக்கும் அவசரம். எல்லோரும் முந்திக் கொண்டு போகவே முயல்கிறார்கள். போக்குவரத்து விதிகளை ஒருவரும் பொருட்படுத்துவதில்லை.

இக்கதையில் நெருக்கடியின் போது ஒரு குழுவாக இணைந்து ஆட்கள் உதவி செய்ய ஆரம்பிக்கிறார்கள். தங்களால் முடிந்த விஷயங்களைச் சேகரித்துப் பகிர்ந்து தருகிறார்கள். இன்றுள்ள இளைஞர்களிடம் இந்த மனப்போக்கு அதிகமிருப்பதைக் காணுகிறேன்.

சாலைப்போக்குவரத்து ஏற்படுத்திய தற்காலிக உறவானது போக்குவரத்து சரியானதும் மறைந்து போய்விடுகிறது. நெருக்கடி இல்லாத போது ஏன் இப்படியான உறவுகள். பரஸ்பர உதவிகள் சாத்தியமற்றுப் போய்விட்டன என்ற கேள்வி கதை படிக்கையில் ஏற்படுகிறது.

1967ல் இக்கதையைக் கோர்தஸார் எழுதியிருக்கிறார். அன்றிலிருந்த போக்குவரத்து நெருக்கடி போல நூறு மடங்கு இன்று அதிகமாகிவிட்டிருக்கிறது. குறிப்பாகப் பண்டிகை நாட்களில் சாலையில் பயணித்துப் பாருங்கள். நரக வேதனையை நீங்கள் சந்திக்க நேரிடும்.

ஒவ்வொரு முறை சாலை நெருக்கடியைப் பற்றிக் கேள்விப்படும் போதும் சந்திக்கும் போதும் மனதில் இக்கதை மேலோங்குகிறது. கோர்தஸாரின் சில கதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் தனித்த தொகுதியாக இதுவரை வெளியாகவில்லை.

0Shares
0